Aran Sei

கர்நாடகாவில் மதக்கலவரம் தொடர்பான 21 வழக்குகள் வாபஸ் – எம்பி, எம்எல்ஏக்கள் பரிந்துரையில் நடவடிக்கை

சு பாதுகாப்பின் பெயரில் நடந்த மதக்கலவரங்களோடு தொடர்புடைய 21க்கும் மேற்பட்ட வழக்குகள், கர்நாடக அரசு வழக்குகளை திரும்பப் பெறுவதாக அறிவித்த உத்தரவின் காரணமாக, விசாரணை நீதிமன்றங்களால் கைவிடப்பட்டிருக்கின்றன. இந்த வழக்குகள் அக்டோபர் 2019 முதல் டிசம்பர் 2021 வரையிலான காலத்தில் நடைபெற்றவை. ஆகஸ்ட் 31 ல் வெளியான இந்த உத்தரவில், அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டதால் 62க்கும் மேற்பட்ட வழக்குகளை திரும்ப பெறுவதாக அரசு அறிவித்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரசஸ்-ன் தகவல்படி, இந்த வழக்கு கைவிடுதலால், மைசூரு பாஜக எம்.பியான பிரதாப் சிம்ஹா, இந்து அமைப்பை சேர்ந்த 206 பேர் மற்றும் 106 இஸ்லாமியர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிகிறது.

2014க்கும் 2019க்குமிடையில் நடந்த இந்த கலவரங்கள் தொடர்புடைய வழக்குகளை எடியூரப்பா அரசு திரும்பப்பெறக்கூடாது என, காவல்துறை டைரக்டர் ஜெனரல், இன்ஸ்பெக்டர் ஜெனரல், சட்டத்துறை இயக்குனர் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகள் கேட்டுக்கொண்டதையும் மீறி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்கள் மற்றும் மக்கள் பிரநிதிகளின் கோரிக்கையையடுத்து, வழக்குகள் கைவிடப்படுவதற்கான விளக்கம் கேட்டு மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்) உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கையடுத்து, இந்த பிரச்சினை வெளிப்பட்டுள்ளது.

பியூசிஎல் மனுவை விசாரித்த நீதிமன்றம், அரசு இணக்க அறிக்கை (Compliance report) சமர்பிக்காததை காரணம் காட்டி, டிசம்பர் 21, 2020 ல் வழக்குகளை திரும்ப பெறுவதற்கு தடை விதித்தது. மேலும் டிசம்பர் 1, 2020 ல் அரசு தரப்பு வழக்கறிஞர், அரசின் தபால்காரர் போல நடந்துகொள்ளக்கூடாது அவர் நீதிமன்ற ஊழியர் என்பதால் அதற்கேற்றாற் போல நடந்து கொள்ள வேண்டுமென நீதிமன்றம் கடுமையாக சாடியிருந்தது.

மேலும் “குற்றவியல் நடைமுறைச் சட்டம் 321 பிரிவின் கீழ் வழக்குகள் திரும்ப பெற மனு அளிக்கப்பட்டிருந்தாலும், நீதிமன்றங்கள் அதற்கு கட்டுபட்டதல்ல. முதற்கட்ட விசாரணை முடியாவிட்டாலும் கூட, வழக்கு திரும்ப பெறும் உத்தரவை நிராகரிக்க நீதிமன்றத்துக்கு உரிமையுண்டு” என்று கூறியிருந்தது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, வழக்குகள் குறிப்பாக முன்னாள் சட்ட அமைச்சர் ஜெ.சி.மதுசாமி (தற்போது குறு பாசன அமைச்சர்), பட்கால் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுனில் நாயக் மற்றும் கால்நடை அமைச்சர் பிரபு சவான் ஆகியோர் கேட்டுக்கொண்டதற்காக கைவிடப்பட்டிருக்கின்றன எனத் தெரிய வருகிறது.

ஹுன்சுர்

2015-2018 க்கிடைப்பட்ட காலத்தில் மைசூரின் பதற்றமான பகுதியாகிய ஹுன்சூரில் நடந்த மத பிரச்சினை தொடர்பான 13 வழக்குகளை திரும்ப பெற மதுசாமி, அரசுக்கு கோரிக்கை வைத்தார். இதில் டிசம்பர் 2017ல் ஹனுமன் ஜெயந்தியின் போது காவல்துறை தடுப்பரண் மீது மைசூர் எம்.பி சிம்ஹா ஜீப்பை ஏற்றியதாக தொடரப்பட்ட வழக்கும் ஒன்று.

வேகமாக வாகனம் இயக்கியது, அரசு ஊழியரின் பணிக்கு இடையூறு செய்தது, பொது அமைதியை குலைத்தது, அரசு ஊழியரை தாக்கியது உள்ளிட்ட பிரிவுகளில் சிம்ஹா மீது வழக்கு பதியப்பட்டிருந்தது.

ஆகஸ்ட் 31ல் வெளியான அரசின் உத்தரவையடுத்து, ஹுன்சுர் நீதிமன்றம், வழக்கை அரசு திரும்ப பெற்றதை சுட்டிக்காட்டி, பிரிவு 321ன் படி சிம்ஹாவை விடுதலை செய்தது

இதே போன்று, மதப்பிரச்சினைகளுக்காக ஹுன்சூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த பிற வழக்குகளும் நவம்பர் 26, 2020 ல் திரும்ப பெறப்பட்டன. இதனால் 142 க்கும் மேற்பட்ட இந்து இளைஞர்களும், 40க்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்களும் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த வழக்குகளில் பெரும்பாலானவை, ஹனுமன் ஜெயந்தியின் போது இந்து-முஸ்லீம்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினைகளுக்காக தொடரப்பட்டவை.

ஹொனாவர்

2018 சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தின் போது, உத்தர கன்னடா மாவட்டத்தின் ஹொனாவர் பகுதியில் ஏற்பட்ட மதக் கலவரங்களோடு தொடர்புடைய 5 வழக்குகள் பட்கலை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுனில் நாயக் கேட்டுக்கொண்டதால் திரும்பப் பெறப்பட்டிருக்கின்றன.

கலவரம் ஒன்றில் 19 வயது இளைஞர் பரேஷ் மேஸ்தா, மர்மமான முறையில் இறந்ததை பாஜக கையெலெடுத்து போராடியதால், டிசம்பர் 2017ல் இந்த கலவரம் நடந்தது. இந்த மரணத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கை அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன், அப்போதைய பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பரேஷ் மேஸ்தாவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஹொனாவரிலுள்ள ஹனுமன் கோவில் வழியாக ஆண்டுதோறும் நடைபெறும் முஸ்லீம்களின் ஊர்வலம் ஒன்றை அமைதியான முறையில் நடத்துவதற்காக உள்ளூர் அதிகாரிகள் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பிரச்சினை வெடித்ததையடுத்து, இரு தரப்பும் மோதிக்கொண்டனர். இதற்கு சில நாட்களுக்குப் பிறகு பரேஷ் மேஸ்தா, குளம் ஒன்றில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த மோதல்கள் தொடர்பான 5 வழக்குகள், 2020 அக்டோபர் 13ல் முடித்துக்கொள்ளப்பட்டு 110 பேர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

வழக்கை முடித்து வைத்த குடிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதிகள், வழக்கை அரசு திரும்ப பெறுவதாக அறிவித்ததால், வழக்கை முடித்து வைப்பதாக தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.

பிடார்

இதே போல் கால்நடைத்துறை அமைச்சர் பிரபு சவான் கேட்டுக்கொண்டதால், பிடாரில் நடந்த மதக்கலவரங்கள் தொடர்பான இரண்டு வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

பிடாரில், பசுக்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றவர்களை தாக்கியதாக குற்றம்சாட்டப்பட்டவர்கள் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில், வேறு பகுதிகளில் இதே குற்றத்திற்காக 6 பேர் தொடரப்பட்ட வழக்குகள் திரும்பப் பெறப்படவில்லை. உள்ளூர் பிடார் நீதிமன்றம் இந்த வழக்குகளை விசாரிக்க இருக்கிறது.

சமீபத்தில் கர்நாடகாவில் இயற்றப்பட்ட பசுவதை தடுப்புச் சட்டம் நிறைவேறியதில் பிரபு சவானுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. கௌ ரக்சாக்களுக்கு (பசு பாதுகாவலர்கள்) எதிரான அனைத்து வழக்குகளும் விரைவில் திரும்பப் பெறப்படுமென பிரபு சவான் ஜனவரி 19ல் உறுதியளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், பிடாரில் 2018 ல் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதையடுத்து நடந்த மதக்கலவரம் தொடர்புடைய வழக்கிலிருந்து 8 இளைஞர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் தர்வாடை சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் அம்ருத் தேசாய் கேட்டுக்கொண்டதால், 2015ல் தர்வாடில் நடந்த மதப்பிரச்சினை தொடர்பான 10 பேர் அக்டோபர் 28, 2020ல் விடுவிக்கப்பட்டிருக்கின்றனர்.

(www.thewire.in இணையதளத்தில் வெளியான சிறப்புச் செய்தியின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்