Aran Sei

‘அதிகார மையத்தால் – தொடர் தாக்குதலுக்கு உள்ளாகும் ஊடகவியலாளர்கள்’

சாம் மாநிலம், மிர்சா நகரில், மின் கம்பத்தில் கட்டி வைத்து ஒரு பத்திரிகையாளர் தாக்கப்பட்டுள்ளார், பட்டப்பகலில் நடைபெற்ற இந்தச் சம்பவம்  சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

மிலன் மகாந்தா, அசாமியா நாளேடான பிரதிடினின் நிருபராகப் பணிபுரிந்து வந்துள்ளார்.  ஒரு கூட்டத்துக்குச் செய்து சேகரிக்கச் சென்ற மிலன்  வழியில் ஒரு பான் கடையில் நின்றுள்ளார் அங்கு 7 பேர் இணைந்து  அவரை தாக்கியுள்ளனர்.

தற்செயலாக, தேசிய பத்திரிகையாளர் தினத்தன்று (நவம்பர் 16) இந்தத் சம்பவம் நடந்துள்ளது. பாஜக ஆட்சியில் உள்ள அசாம் மாநிலத்தில் பணிபுரியும் ஊடகவியலாளர்களின் நிலை குறித்து பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.

மிலன் பாலாஷ் பாரி காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அதையடுத்து, குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாக, சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகள் குறித்து மிலன் செய்தி வெளியிட்டு வந்துள்ளார். இதனால், நில அபகரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒருவர் கோபமடைந்து சில ஆட்கள் மூலம் மிலனை தாக்கியுள்ளார்.

மிலனுக்கு காது, தலை, கழுத்து உள்ளிட்ட பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. “நான் பான் கடையில் நின்றேன். அப்போது, குண்டர்கள் சுத்திவளைத்து என்னை தாக்கினர். மின் கம்பத்தில் கட்டிவைத்து என்னை அடித்தனர். காவலர்கள் உட்பட யாரும் என்னை காப்பாற்ற முன்வரமாட்டார்கள் என்று அவர்கள் மிரட்டினர்” என மிலன் தெரிவித்துள்ளார்.

“பத்ரிக்கையாளர்களையோ காவலர்களையோ கண்டு அஞ்சமாட்டோம் என்று அவர்கள் பெருமையாகக் கூறினர். அவர்களுக்கு என்னை கொல்லும் திட்டம் இருந்தது. அங்கு இருந்தவர்கள் என்னை காப்பாற்றவில்லை என்றால் நான் உயிரிழந்திருப்பேன்” என்றும் அவர் கூறியுள்ளார்.

“நான் கடந்த 14 ஆண்டுகளாகச் செய்தி நிறுவனத்தில் பணிபுரிகிறேன். எனது குற்றம் என்ன? சட்ட விரோத நடவடிக்கை குறித்து செய்தி வெளியிட்டது எனது குற்றமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். “என்னை எனது நண்பர்கள் பாதுகாக்கிறார்கள். ஆனால், என்னை தாக்கியவர்கள் 24 மணி நேரத்தை  கடந்தும் சுதந்திரமாக நடமாடுகிறார்கள்” என்றும் மிலன் தெரிவித்துள்ளார்.

இன்று, மிர்சா மற்றும் குவஹாத்தியில் போராட்டங்கள் நடந்தன, ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் தற்போதைய ஆட்சியின் கீழ் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு பாதிக்கப்படுவதை குறித்து கேள்வி எழுப்பினர். உள்ளூர் பத்திரிகையாளர் அமைப்புகளும் இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அரசை கேள்விக்குள்ளாக்கும் ஊடகவியலாளர்கள் குறிவைக்கப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்களுக்கு விதிக்கப்படும் சிறை தண்டனை, எழுத்தாளர்கள் மீதான தாக்குதல் ஆகியவற்றால் ஆளும் பாஜக அரசை நோக்கி கேள்வி எழுப்பப்பட்டுள்ளன.

அசாம் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரான டெபப்ரதா சைக்கியா, “பாஜக அரசியல் அதிகாரம் பெற்றதிலிருந்து, ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகங்கள் மீது தாக்குதல்கள் நடப்பது வழக்கமாகி உள்ளன. கௌரி லங்கேஷோ மிலன் மகாந்தாவோ இவர்கள் ஒரே மாதிரி தான் செயல்படுகிறார்கள். எதனால் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்றது என்று மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜக தலைவர்களிடம் கேள்வி எழுப்புகிறோம், அவர்கள் இதை ஏன் தடுக்கவில்லை? குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்” என கூறியுள்ளார்.

(தி வயரில் வெளியான கட்டுரையின் சுருக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்