Aran Sei

‘இந்தியர்கள் பரிசோதனை எலிகளா?’ – கொரோனா தடுப்பு மருந்து குறித்து சுப்பிரமணியன் சாமி கேள்வி

லக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளிக்காத கொரோனா தடுப்பு மருந்தை, இந்தியாவில் பயன்படுத்த அனுமதியளித்தது யார் என்று, பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுப்பிரமணியன் சாமி, “இந்தியர்கள், பரிசோதனை எலிகளாக மாற்றப்பட உள்ளார்களா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்துடன் அஸ்ட்ராஜெனெகா என்ற நிறுவனம் இணைந்து உருவாக்கியுள்ள கோவிஷீல்ட் தடுப்பு மருந்துக்கு, மத்திய அரசு அமைத்த வல்லுநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத்தொடர்ந்து, இன்றை தினம் இந்தியா முழுவதும், கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை அவசர காலத்தில் பயன்படுத்த கூட, உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ள சுப்பிரமணியன் சாமி, இதுதொடர்பாக பல்வேறு இணையதளங்களில் வெளியான செய்திகளை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தத் தடுப்பு மருந்தை பயன்படுத்த அனுமதிப்பதற்கு முன்னர், இதுகுறித்த மேலும் பல தகவல்கள் திரட்டப்பட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் விஞ்ஞானி ஒருவர் கூறியதாக, எகனாமிக் டைம்ஸ் இணையதளத்தில் வெளியான செய்தியையும் சுப்பிரமணியன் சாமி மறுபதிவு செய்துள்ளார்.

அதேபோல், சில்ட்ரன்ஸ் ஹெல்த் டிஃபென்ஸ் (Children’s Health Defence) என்ற இணையதளத்தில் வெளியான செய்தி ஒன்றையும் சுப்பிரமணியன் சாமி மறுபதிவு செய்துள்ளார். அதில், டிப்தீரியா, டெட்டனஸ், பெர்யூசிஸ் ஆகிய தொற்றுகளுக்கு எதிராக, டிடிபி என்ற தடுப்பு மருந்து ஆப்ரிக்க குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பு மருந்து குறித்து, 2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட குழந்தைகள், தடுப்பு மருந்தை எடுத்துக்கொள்ளாத குழந்தைகளை விட 10 மடங்கு அதிகமாக உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது. பில்கேட்சும், அவருடைய சகாக்களும், ஆப்பிரிக்க மக்களை பரிசோதனை எலிகளாக பயன்படுத்திக்கொண்டார்கள் என்றும் அந்தச் செய்தியில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லியில் கொரோனா தடுப்பூசி வழங்கப்படும் மையத்தைப் பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். போலியோ தடுப்பூசி போடப்பட்டபோது இதே போன்று வதந்தி பரப்பபட்டதாகவும், தற்போது போலியோ முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளதாகவும் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்