Aran Sei

டெல்லி கலவரம் – முஸ்லீம்களை தாக்க கலவரக்காரர்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டதா?

பிரதீப்பும் நானும் சகோதரர்களைப் போல இருந்தோம். நாங்கள் ஒன்றாகவே வெளியே போவோம். உணவருந்துவோம். அவன் என்னுடைய தட்டிலிருந்து எடுத்து சாப்பிடுவான்,” என்கிறார் சமீர்.

சமீருக்கு, பிரதீப் ஐந்தாயிரம் ரூபாய் கடன் தர வேண்டி இருந்தது. இப்போது அதைப்பற்றி சமீர் கவலைப்படவில்லை. அது குடுபம்பத்திற்குள் உள்ளது. அது போலவே, அவர்கள் அதை இறுதியில் சரி செய்து கொள்வார்கள்.

ஆனால் அந்த செவ்வாய்க்கிழமை, 2020,  பிப்ரவரி 25 அன்று தனது நண்பன் வீடுகளுக்குத் தீ வைப்பதை கும்பல்களிடமிருந்து தப்பித்து மறைந்து நின்று பார்த்துக் கொண்டிருந்தார் சமீர்.

அன்று காலை சீமாபுரியிலிருந்து சிவ் விகாருக்குத் தனது ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்த சமீரை 30 பேர் கொண்ட கும்பல் கோகுல்புரி கால்வாய்க்கரையில் இருந்த மின்மயானத்திற்கு அருகில் துரத்திக் கொண்டு வந்தது. பீதி அடைந்த அவர் ஒளிந்து கொள்ள இடம் தேடினார். சாலைகள் பாதுகாப்பில்லை என்பதால் ஆட்டோவை விட்டுவிட்டு, தனக்குத் தெரிந்த ஒரு முஸ்லீம் வாழும் வீட்டிற்குள் ஓடினார். அந்த வீடு அவரது வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளி இருந்தது. மூன்றாவது மாடியில் இருந்த பால்கனிக்குள் குதித்து ஒரு சந்து வழியாக கீழே தெருவில் அந்த கும்பல் வன்முறையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டு இருந்தார்.

ஒரு ஆட்டோ ஓட்டநராக இருந்தாலும் சமீர், வர்ணம் பூசுவது, கட்டிடங்களுக்கு பூச்சு வேலை செய்வது போன்றவற்றையும் செய்து வந்தார். பக்கத்தில் வசித்து வந்த பிரதீப் ஒரு சக ஊழியராக இருந்தார். பல நாட்களை அவர்கள் ஒன்றாகவே கழித்தனர். “எங்களில் ஒருவருக்கு வேலை  கிடைத்தால் மற்றவரையும் உடன் அழைத்துக் கொள்வோம்,” என்கிறார் சமீர். சுமார் மூன்று ஆண்டுகளாக அவர்கள் ஒன்றாக வேலை செய்து வருகிறார்கள்.

சமீர், சிவ் விகார் / நன்றி: தி வயர்

“அவன், அவனது மாமா வீட்டில் குடிப்பது புகைப்பிடிப்பது ஆகியவற்றை செய்வான். இந்த கலவரத்திற்கு முன்பே அவன்  குண்டர் வேலைகளைச் செய்து வந்ததால், அவனுடைய தந்தை அவரை தனியாக ஒரு வீட்டில் இருக்கச் செய்தார். மேலும் 30 வயதாகியும் பிரதீப்பிற்கு  திருமணம் செய்து வைக்க அவரால் முடியவில்லை.” என்று  கூறுகிறார் சமீர்.

தனது முன்னாள் நண்பனைக் பற்றி கசப்புடன் விவரித்த சமீருக்கு இவையெல்லாம் முன்பு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

அந்த மதிய நேரத்தில், யாரோ ஒருவருடைய வீட்டில் இருந்து கொண்டு, கும்பல் தெருக்களில் ஓடுவதைப் பார்த்துக் கொண்டு இருந்த போது தற்செயலாக அந்த கலவரக்காரர்களில் பிரதீப்பும் இருப்பதைக் கண்டார். “அவர் செங்கல்களை உடைத்து மற்றவர்களுக்குக் கொடுத்து, தானும் வீசினார். நான், பரவாயில்லை, எல்லோரும் கற்களை வீசுகிறார்கள். இவன் நடுவில் மாட்டிக் கொண்டிருப்பான், அதனாலென்ன என்று நினைத்தேன்,” என்று நினைவு கூர்ந்தார் அவர்.

ஆனால் அந்தி சாயும் நேரத்தில் ஒரு வெள்ளை நிற ஜிப்சி கார் வந்து சாலை முனையில் நின்றதையும், அந்த மெல்லிய இருட்டில் அந்த கும்பல் காருக்கு அருகில் சென்றதையும், அந்தக் காரில் 20 க்கும் மேற்பட்ட எரிவாயு உருளைகளும், பாட்டில்கள் நிறைந்த கிரேட்டுகளும், கேன்களில் பெட்ரோலும் இருப்பதை பார்த்ததாக சமீர் கூறினார். மேலும், அந்த கும்பல் வீடுகளின் கதவுகளை உடைத்து, உள்ளே நுழைந்து, மதிக்கத்தக்கப் பொருட்கள் ஏதேனும் இருந்தால் அதை இழுத்து வந்து விட்டுப் பிறகு பெட்ரோல் குண்டுகளை அந்த வீடுகளுக்குள் எறிந்து விட்டு வீடு தீப்பற்றி எரிவதை பார்த்துக் கொண்டிருந்த தாகவும் சமீர் கூறுகிறார். பிரதீப் அந்த கலவரக்காரர்களில் ஒருவனாக இருந்தான். ” அவன்தான் அதை செய்தான் என்று எனக்குத் தெரியும். பின்னர் நான் நான் அவனோடு அது பற்றிப் பேசினேன்,” என்கிறார் அவர்.

‘முஸ்லீம்கள் ஒரு திட்டம் வைத்திருந்தார்கள்’

சிவ் விகாரின் 12 வது தெரு காரவால் நகர் முக்கிய சாலையிலிருந்து சில நிமிட தூரத்தில், அனுமன் கோவில் மார்க் பாலத்திற்கு  அருகில் துவங்கி மதீனா மஸ்ஜித்திற்கு  அருகில் முடிகிறது. பெரும்பாலான இந்துக்கள் கோவிலுக்கு அருகிலும், அதே போல் பெரும்பான்மையான முஸ்லீம்கள் மசூதிக்கு அருகிலும் வசித்து வந்தனர். அந்த மொத்த வீதியையும் பத்து நிமிடங்களில் கடந்து விடலாம். இடையிடையே சில குறுக்கு சாலைகளில் நுழைவாயில் கதவுகள் இருந்தன.

“இங்கு என்ன நடக்கப் போகிறது என்பது அது நடப்பதற்கு முன்பே முஸ்லீம்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் ஒரு திட்டம் வைத்திருந்தார்கள்,” என்று கூறும் காந்தா கோஸ்வாமி, தேதி பற்றி உறுதியாகத் தெரியவில்லை என்றாலும் 2020, பிப்ரவரி 24 என்று கூறுகிறார். ” எங்கள் வீட்டு ஆண்கள் வேலைக்குச் சென்று விட்டனர். நாங்கள் வீட்டில் இருந்தோம். டிஆர்பி பள்ளி அருகில் நிறைய சண்டை நடப்பதாக எங்களிடம் கூறினார்கள்,” என்று தெரிவிக்கிறார். இங்கே இரண்டு பள்ளிகள் உள்ளன. ஒன்று டிஆர்பி இடைநிலைப் பள்ளி, மற்றொன்று ராஜஸ்தானி பள்ளி. டிஆர்பி பள்ளி பங்கஜ் சர்மா என்னும் இந்துவால் நடத்தப்படும் ஆங்கிலவழிப் பள்ளி. இரண்டாவது பள்ளியை ஃபைசால் ஃபரூக் என்ற முஸ்லீம் நடத்தி வருகிறார். ” காலையில் முஸ்லீம் பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறினர். ஆசிரியர்கள் என்ன காரணம் என்று கேட்கும் போதே, பெற்றோர்கள்” எங்கள் குழந்தைகளைக் கொடுங்கள்.  எங்கள் குழந்தைகளைக் கொடுங்கள்.” என்று கூறிக் கொண்டே தங்கள் குழந்தைகளை வகுப்பிலிருந்து இழுத்துச் சென்றனர்,” என்கிறார் காந்தா. காந்தாவின் ஏழு வயதான பேத்தி ஜாக்ரிதி ,” சில முஸ்லீம் இன பள்ளி நண்பர்கள் எங்களிடம், இன்று எங்களை எங்கள் பெற்றோர்கள் வந்து முன்னரே அழைத்துச் சென்று விடுவார்கள்,” என்று கூறியதாக தெரிவித்தார். “அவர்களுக்கு முன்பே தெரியும்” என்கிறார் காந்தாவின் மருமகள் ரீட்டு.

“ராஜஸ்தானி பள்ளி எங்கள் பள்ளிக்கு அடுத்து உள்ளது. நாங்கள் செய்திகளை பார்த்த போது, அவர்கள் அங்கே கவண்களும், குண்டுகளும் இருப்பதாகக் கூறினார்கள். முகமதியர்கள் எங்களை அங்கே அழைத்துச் சென்றார்கள்,” என்கிறார் ஜாக்ரிதி. பள்ளியின் உரிமையாளருக்கு எதிரான வழக்கில் பள்ளியின் மொட்டை மாடியில் ஒரு பெரிய இரும்பு கவண் கண்டுபிடிக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

சிறிது நேரத்தில் ஒரு கும்பல் வந்தது. ” நான் பொய் கூற மாட்டேன். எங்கள் வீட்டிற்கு எதுவும் நடக்கவில்லை. இந்த வீதியில் எந்த வீட்டையும் அவர்கள் தொடவில்லை. நாங்கள் எல்லோரும் கூரையின் மேல் போய் நின்று கொண்டோம்,” என்கிறார் காந்தா.

சொத்துக்களை சேதப்படுத்துவது, இரண்டு வாகனங்கள் நிறுத்துமிடங்களை தீயிட்டுக் கொளுத்துவதில் ஆரம்பித்தது. அவற்றை இரு சமூகத்தினரும் பயன்படுத்தி வந்தனர். இருதரப்பினருக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ” இந்துக்கள் தங்கள் வீட்டைச் பாதுகாக்க வெளியே வந்தனர்

இல்லாவிட்டால் அந்த வீடுகளும் எரிந்திருக்கும்,” என்று கூறுகிறார் அவர். ” மிகப் பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் இருந்தனர். இராணுவப் படைகளும் கூட இருந்தன. ஆனால் அவர்கள்( கும்பல்) ஏராளமானவர்கள் காவல்துறையினர் மீது கற்களை வீசினர், அவர்களால் எதுவும் செய்யமுடியவில்லை,” என்கிறார் காந்தாவின் இன்னொரு மருமகள் திவ்யா.

“பின்னர் இங்கு இராணுவமும் நிறுத்தப்பட்டது. ட்ரம்ப் வந்த நாள் (பிப்ரவரி 24) அன்று இங்கு இராணுவம் இருக்கவில்லை. ஆனால் மறுநாள் அவர்கள் வந்தார்கள். அன்று இரவு நாங்கள் தூங்கவே இல்லை. அவர்கள் வராமல் இருந்திருந்தால் அவர்கள் (கும்பல்) என்ன செய்திருப்பார்களோ” என்று கூறுகிறார்.

“என்னால் பலரை நினைவில் கொண்டுவர முடிகிறது. கும்பல் மதீனா மஸ்ஜித்திற்குள் சென்ற போது மிகச் சிலரே உள்ளே இருந்தனர். கும்பல் வந்த சேர்ந்த போது  மெய்னுதீன் என்ற பாதுகாப்பாளர் உள்ளே இருந்தார். அவர்கள் கதவுகளை உடைத்தனர். ஒரு இரும்பு கிராதி உள்ளே இருந்தது. அதையும் அவர்கள் உடைத்தனர்.  பின்னர் எரியும் நெகிழிகளை அறைகளுக்குள் வீசினர். அவர்கள் வெல்டிங் கருவிகள் உதவியுடன் கதவுகளை வெட்டினர். நான் மஸ்ஜித்தின் மாடியில் இருந்தேன். வெடியினால் மஸ்ஜித்தின் சுவர்கள் ஆடுவதை அவர் உணர்ந்தேன். குறைந்தது இரண்டு எரிவாயு உருளைகளையாவது தரைதளத்தில் அவர்கள் வெடிக்கச் செய்தனர். இவை அங்கு கொண்டுவரப்பட்டவை. இவை எல்லாம் திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளன. இவர்கள் சிவ் விகாரைச் சேர்ந்தவர்கள்தான்.  வெளியிலிருந்து வந்தவர்கள் அல்ல. என்னால் அடையாளம் காண முடியாதவர்கள் என்றால் அவர்கள் வெளியிலிருந்து வந்தவர்களாக இருப்பார்கள். எனக்கு சிலரை நினைவிருக்கிறது அவர்கள் இங்கேதான் வாழ்கிறார்கள்.,” என்கிறார் மஸ்ஜித்தின் இமாம் ஹாஜி ஹசீம் அலி.

‘எந்த முழக்கமும் எழுப்பப்படவில்லை’

மஸ்ஜித்திற்கு அருகிலேயே உள்ள சமோசா, தேநீர் போன்றவற்றை விற்கும் கடையை நடத்தி வருகிறார் சுதா. அவர் குடும்பத்திற்கு சொந்தமான ஒரு ஆட்டோ  தீயில் எரிந்து விட்டது. ” அவர்கள் தலைக்கவசம் அணிந்திருந்ததால் யார் செங்கல்லை வீசினார்கள் என்று தெரியவில்லை. அதனால் அவர்கள் யாரென்று நான் சொல்ல முடியாது,” என்கிறார், கலவரம் துவங்கிய நாளில் நடந்ததைச் கூறும் சுதா. இந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு சில இந்துக்களுக்கும் தனிப்பட்ட முறையில் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. அந்த கும்பல் சில பொருட்களை உடைத்துவிட்டும், சிலவற்றை கொள்ளையடித்தும் சென்றன,” என்கிறார் சுதா. சேதமாக்கப்பட்ட மஸ்ஜித்திற்கு அருகில் உள்ள அவரது கடையும் அதே நேரத்தில் நாசமாக்கப்பட்டிருக்கும் போதும், அந்த சமயத்தில் எந்த முழக்கமும் சுத்தமாக எழுப்பப்படவில்லை என்று  அவர் கூறுவது வியப்பாக உள்ளது. இதற்கிடையே, அந்த கும்பல் வெளியே இருந்த போது மசூதிக்கு அடுத்தப் பக்கத்தில் உள்ள தன் வீட்டிற்குள் ஒளிந்திருந்தார் வகில் (Waqil) . வெளியேறி விடுவது பாதுகாப்பாக இருக்குமா என தனது வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்து சன்னல் வழியாக எட்டிப் பார்த்த போது ஒரு கண்ணாடி புட்டி அவர் முகத்தைத் தாக்கியது. அதிலிருந்த அமிலம், அவர் முகத்தில் பரவி, அவரை பார்வை இழக்கச் செய்துவிட்டது. ” ஜெய்ஸ்ரீ ராம்” கோஷம் ஒலிப்பதை அவர் கேட்டதாகக் கூறுகிறார்.

வக்கீல், சிவ் விகார் / நன்றி: தி வயர்

“காவல்துறை எங்களுக்கு அதிகமான பாதுகாப்பைக் கொடுத்தது. அவர்களுடைய வலிமையால் தான் நாங்கள் கலவரத்திற்கு பிறகு சில மாதங்கள் வாழ்ந்தோம். அந்த அளவு பாதுகாப்புக் கொடுத்தார்கள். பயத்தால் யாருமே வரவில்லை. ஒரு சிலர் மட்டுமே இங்கே தங்கி இருந்தனர். அவர்கள் எங்களுக்கு மறு உறுதி அளித்தனர். எங்களை ‘எங்கேயும் போக வேண்டாம். இங்கேயே இருங்கள் ‘ என்று கூறினார்கள்,” என்று கூறுகிறார் சுதா.  இப்போது முஸ்லீம்கள் தன்னைப் பார்த்து சிரிப்பதாக  உணர்வதாக கூறும் அவரால்  அதற்கான காரணத்தைக் கூற முடியவில்லை.

தன் சகோதரனைக் கொன்றவர்கள் யாரென்று கூறினால் தன்னைக் கொன்று விடுவார்கள்’

2020, பிப்ரவரி 25 ம் நாள் நிஜாமுதீன் உத்தரபிரதேசத்தில் ஒரு திருமண விழாவில் இருந்தார். ஆனால் அவர்கள் வீடு கொள்ளையடிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக செய்தி வந்ததும் தனது சகோதரன் ஜமாலுதீனை அழைத்துக் கொண்டு வழியில் தங்கள் வீட்டைச் பாதுகாக்க ஒரு பூட்டையும் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு  விரைந்தார். அவர்கள் வீட்டை அடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன் ஒரு கும்பல் அவர்களை தடுத்து நிறுத்தியது. அவர்களிடமிருந்து தப்பிப்பதற்குள், வன்முறையில் இறந்து போன 40 முஸ்லீம்களில் ஒருவராக ஜமாலுதீன் இறந்து போனார். ஜமாலுதீனின் விதவை மனைவி, நிஜாமுதீனுக்கு தன் சகோதரனைக் கொன்றவர்களைத் தெரியும். ஆனால் அவர் எங்கள் யாரிடமும் அதை சொல்ல மாட்டார். ஏனெனில் அவர் அவ்வாறு சொன்னால் அவரைக் அவர்கள் கொன்று விடுவார்கள்’ என்று கூறுகிறார்,” எனத் தெரிவிக்கிறார்.

அந்த கும்பல் இந்துக்கள், முஸ்லீம்கள் இருவரையும் தாக்கியது’

கலவரம் நடந்த நாளில் 14 ம் வீதியில் வசிக்கும் ராம் ரத்தன் காணாமல் போன தனது மகளைத் தேடி தெருவிற்கு வந்தார். “அந்த கும்பல் இந்து முஸ்லீம் என்று பார்க்காமல் அனைவரையும் தாக்கினார்கள். அப்போது வீதிகளில் முஸ்லீம்களே அதிகமாக இருந்தனர்.” என்கிறார் அவர். பிப்ரவரி 25 கலவரம் பற்றி பேசும் போது கோபமடைந்து,” எந்த முழக்கமும் எழுப்பப்படவில்லை. கார்களிலிருந்து  வாய்காலுக்கு இழுத்து வரப்பட்ட உடல்கள் இங்கே கிடந்தன. இந்து முஸ்லீம் இருவரது உடல்களும் இருந்தன. பெரும்பாலும் இந்துக்கள் உடல்களே இருந்தன,” என்கிறார் ராம் ரத்தன். ஒட்டு மொத்தமாக 12 இந்துக்கள் இந்த வன்முறையில் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஒரு காவல்துறை அதிகாரி கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் காயமடைந்தால் உயிரிழந்தார்.

ரத்தன் கண்ணோட்டத்தில், வெளியாட்களால்தான் வன்முறை துவங்கியது. அவர்கள் வெளியேறியதும் உள்ளூர் மக்கள்,” தவறான எண்ணத்திற்கு இரையாகி  தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டனர். எனினும் ரத்தன் எந்த  சண்டையிலும்  தான் ஈடுபடவில்லை என்றும், தனக்கு ஒரு காயமும் ஏற்படவில்லை என்றும் கூறினார்.

“காவல்துறை எவ்வளவு செய்ய முடியுமோ அவ்வளவு செய்தார்கள். அவர்கள் சண்டையை நிறுத்தினார்கள் தீயை அணைத்தார்கள், வீடிழந்த அனைத்து ஏழைகளுக்கும் உதவினார்கள். அவர்களால் முடியாத போது மற்றவர்களை உதவி செய்யக்கேட்டுக் கொண்டார்கள்.,” என்று கூறினார் ரத்தன்.

‘மணிக்கணக்கில் ஒரு காவலர் கூட வரவில்லை’

மசூதிக்கு பின்னால் ஒரு இளம் பெண், கடமை உணர்வோடு தனது வீட்டில் கொள்ளை அடிக்கப்பட்ட பொருட்களின் பட்டியலைத் தயாரித்துக் கொண்டிருந்த போது,  கழுத்தில் பணத்தால் ஆன மாலையை அணிந்து மணமகனுடன் ஒரு திருமண ஊர்வலம் கடந்து சென்றது. இந்த ஊர்வலத்தைப் பார்த்த ஈசான்,” இங்கு அக்கம்பக்கத்தில் இருக்கும் முஸ்லீம்கள் அனைத்தையும் இழந்து விட்டனர்,” என்று கூறினார். ஈசான் கடந்த 25 ஆண்டுகளாக இந்த மசூதியில் வேலை செய்து வருகிறார். ” இந்துக்கள் இங்கே சுதந்திரமாக வாழ்கிறார்கள். அவர்களுக்கு அச்சமும், பயங்கரமும் இல்லை. சிலர் இரவில் வருவார்கள். குடித்திருப்பார்கள். மசூதிக்கு பின்னால் நின்று கொண்டு ‘ ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கத்தி விட்டு எங்களை அவமானமாக பேசிவிட்டு சென்று விடுவார்கள். “(கலவரத்தில்) வெளியாட்கள் 10,20,50 பேர்தான் இருந்திருப்பார்கள். பெரும்பாலானவர்கள் இங்கே இருந்தவர்கள்தான். இப்போது இத்தகைய வேலையை செய்தவர்களும் இங்கே இருப்பவர்கள்தான்.” என்கிறார் ஈசான்.

இஹ்சான், சிவ் விகார் / நன்றி: தி வயர்

குடித்துவிட்டு வந்து வெறுப்பூட்டுவர்கள் பற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்ததிலிருந்து மீண்டும் அது போல நடக்கவில்லை என்று கூறினார் ஈசான்.

முன்பு தையற்காரராக இருந்த ஜமில் அகமத்,” ஒரு வாரத்திற்கு முன்பு,  தான் வீதியில் நடந்து செல்லும்போது ஒரு இந்துவை  தாண்டிச் சென்றேன். நான் சிறிது முன்னே சென்றதும், என்னை திரும்ப அழைத்து ,” நான் யாரென்று உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார். நான் அவர் குடித்திருப்பதை அறிந்து,  “தெரியாது” என்றேன். ” என்னை உனக்குத் தெரியாதா? நான் உன்னை வெட்டி வாய்க்காலில் வீசி விடுவேன்,” என்று கூறினார்

அந்த மனிதர் எங்கள் தெருவிலிருந்து மூன்று நான்கு தெருவுக்கு முன்னால் உள்ளவர் என்று ஜமில் கூறுகிறார்.

முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த பலரும்  அக்கம்பக்கத்தில் இருக்கும் இந்துக்கள் முஸ்லீம்களை பழிவாங்கி விட்டு தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள். ” அவர்கள் மனதில் வருவதை எல்லாம் பேசுகிறார்கள். நாங்கள் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். நாங்கள் எதுவும் சொல்ல மாட்டோம். நாங்கள் அதைத் தாங்கிக் கொள்வோம். ஏனென்றால் பாருங்கள். காவல்துறை இருக்கிறது. சட்டம் இருக்கிறது. அது எங்களோடு இல்லை. இதனால்தான் நாங்கள் அமைதியாக இருந்து விடுகிறோம். இந்த சட்டம் எங்களோடு இருந்தால் நாங்கள் தலைநிமிர்ந்து பேச முடியும். சட்டம் எங்களோடு இருந்தால் ஏன் இங்கு கலவரம் நடக்கப் போகிறது? எல்லாம் நடந்த பிறகும் ஒரு காவல்காரர் கூட இங்கு பல மணி நேரத்திற்கு வரவில்லை,” என்கிறார் ஜமில்.

இந்துக்கள் கொள்ளையடிப்பார்கள். ஆனால் முஸ்லீம்கள் கொலை செய்வார்கள்’ என்கிறார் உள்ளூர் பாஜக தலைவர்

“பாருங்கள், இந்துக்களின் பகுதிகளில் முஸ்லீம்கள் வாழ்கிறார்கள்” என்கிறார் சிவ் விகாரைச் சேர்ந்த வீட்டுமனை தரகரும், பாஜக சமூக தலைவருமான அணில் பாண்டியா. இந்துக்களுக்கு  முக்கியமான ஒன்று என்னவென்றால் நீங்கள் யாரையும் கொல்லாதீர்கள். வெறும் கொள்ளை அடித்து விடுங்கள். கொலை செய்யாதீர்கள். கொள்ளை அடியுங்கள். இந்துக்கள் அதை நம்புகிறார்கள். ஆனால் முஸ்லீம்கள் கொள்ளையும் அடித்து கொலையும் செய்வார்கள்,” என்கிறார். பாண்டியாவின் உலகப் பார்வையில் இந்துக்களும், முஸ்லீம்களும் ஒன்றாக அமைதியாக வாழ வேண்டும். ஆனால் அதற்கு அவர் ஒரு நிபந்தனை வைத்துள்ளார். அவர்கள்’ ஒழுங்காக’ இருந்தால்தான் ஒன்றாக சேர்ந்து வாழ முடியும். “முஸ்லீம் பகுதியில்  ஒரு  இந்து வாழ்கிறார் என்பதையும், அவர்கள் உங்கள் குழந்தைகளை தூக்கி வாய்க்காலில் வீசி எறிகிறார்கள் என்பதையும் கற்பனை செய்து பாருங்கள்.   அன்கிட் சர்மாவைப் போலவே தாஹீர் உசைனும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தவர்தான். ஏன் தாஹீர் அன்கிட்டை கொல்ல வேண்டும்?” என்று கேட்கிறார்.

ஜமீல், சிவ் விகார் / நன்றி: தி வயர்

புலனாய்வுத் துறையைச் சேர்ந்த அன்கிட் சர்மாவின் உடல் கலவரத்தின் போது   ஒரு கால்வாயிலிருந்து எடுக்கப்பட்டது. ஆம் ஆத்மி கட்சியின் வார்டு உறுப்பினரான தாஹீர் உசைன் இந்த கொலையில் முக்கிய குற்றவாளியாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சர்மாவின் சகோதரர் வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர், தனது வீட்டிற்கு வெளியே இருந்த கலவரக்காரர்கள் “ஜெய்ஸ்ரீ ராம்” என்று பாடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் இந்த வாக்கியம் இந்துத்துவா படைகளின் ஆவேசமான எதிர்ப்பு பரப்புரையால் பின்னர் திரும்பப் பெறப்பட்டது. ஆனால் அந்த செய்தித்தாள்  அந்த அறிக்கையில் ஊன்றி நிற்கிறது.

பாண்டியா தொடர்ந்து,” நிச்சயமாக எனக்கு முஸ்லீம்களின் மீது விரோதம் இல்லை. நமக்கு எல்லோருக்கும் ஒரே கடவுள்தான் இருக்கிறார். நாம் அவருக்கு வேறு வேறு பெயர்களை வைத்திருக்கிறோம். நாம் அனைவரும் ஒன்றுபட்டு அமைதியாக வாழ வேண்டும்,” என்று கூறுகிறார்.

பிப்ரவரி கலவரத்தின் போது பாண்டியா, சிவ் விகாரில் முஸ்லீம்களை விட இந்துக்கள்தான் அதிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறினார். கலவரத்தில் இந்துக்களின் சொத்துக்களும் பாதிப்படைந்தனதான். ஆனால் அறிக்கைகள் முடிவாக 80 விழுக்காட்டிற்கும் மேலான மதிப்புள்ள  பாதிப்படைந்த சொத்துக்கள் முஸ்லீம்களுடையது என்பதை திட்டவட்டமாகக் கூறுகின்றன.

இது குறித்து மேலும் வற்புறுத்தி விவரங்களை கேட்டபோது, பாலத்திற்கு அருகில் இருந்த ஒரு கருமானின் குடிசை எரிக்கப்பட்டுள்ளது. “ஒரு இந்து இதை செய்ய மாட்டான் இல்லையா?” என்று கேட்கிறார். அமைதியாக வாழ வேண்டும் என்றால்,  இப்போது ஒரு முகமதியரும் இதைச் செய்யக் கூடாது என்று நான் கூறுகிறேன்.” என்கிறார்.

‘நீங்கள் எதுவும் செய்ய முடியாது’

கலவரத்திற்குப் பிறகு சமீர் தனது நண்பன் பிரதீப்பைச் சந்தித்து,” நீ அதில் பங்கு கொண்டது ஏன்? ஏன் அந்த வீடுகளை தீயிட்டு அழித்தாய்?” என்று கேட்தற்கு பிரதீப் மன வருத்தத்துடன், சமீர் வீடு அருகில் இருக்கிறது எனக்குத் தெரியவில்லை என்றும், தனக்கு அதை செய்யச் சொல்லி பணம் கொடுத்தார்கள் என்றும், அதனால்தான் அதை செய்ததாகவும் அது தவறுதான் என்றும் தன்னிடம் கூறியதாக சமீர் கூறுகிறார். ” பிரதீப் என்னிடம் அவர்கள் பையன்களுக்கு பணத்தைக் கொடுத்து முஸ்லீம்களை அடிக்கவும் கொலை செய்யவும் கூறினார்கள்‌, அதனால் நானும் அங்கே போனேன்,” என்று பதிலளித்ததாக சமீர் கூறுகிறார்.

கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது புகார்களில் கலவரக்காரர்களை ஆதரித்தவர்களில், கலவரத்திற்கு சற்று முன் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஹாஜி யூனூஸ் அவர்களிடம் தோல்வியுற்ற முஸ்தஃபாபாத்தைச் சேர்ந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஜகதீஷ் பிரதானும் ஒருவர் என்று தெரிவித்துள்ளனர்.

தில்லி காவல்துறையிடம் பதிவு செய்யப்பட்ட புகார்களில் குறைந்தது மூன்றில், கலவரக்காரர்கள் முஸ்லீம்களைத் தாக்கும் போது” ஜக்தீஷ் பிரதான் வாழ்க” என்று முழங்கினர் என்றும், ஒரு புகாரில் கலவரக்காரர்கள் ‘ முஸ்லீம்களிடமிருந்து விடுபட வேண்டும் என்பது ஜகதீஷ் பிரதானின் உத்தரவு’ என்று கூறியதைக் கேட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

அன்றைய நிகழ்வுகள் குறித்து காவல்துறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யச் சென்ற போது கும்பலில் பிரதீப்பும் இருந்ததாக அவரது பெயரையும் குறிப்பிட்டு போது காவல் துறையினர் அதை ஏற்க மறுத்து விட்டனர். அதற்குப் பதிலாக, வன்முறைப் பற்றி பொதுவான தகவல்களை மட்டும் எழுதித் தருமாறு கூறி, அதனை மற்ற புகார்களுடன் சேர்த்து மொத்தமாக பரிசீலனை செய்வதற்காக வைத்து விட்டதாகவும் சமீர் கூறுகிறார்.

சமீர் ஒரு ஊடகவியலாளருடன் பேசி அவருடைய உதவியுடன், தான் கண்ட வன்முறையில் ஈடுபட்டவர்களில் பெயர்களைக் கொண்ட முதல் தகவல் அறிக்கையை மீண்டும் பதிவு செய்ததாகக் கூறினார்.

இறுதியாக, பிரதீப்  காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சில நாட்களுக்குப் பிறகு காவல் நிலையத்திலிருந்து திரும்பிய பிரதீப் சமீரை சந்தித்தார். சமீரை அச்சுறுத்திய பிரதீப், சமீரிடமிருந்து வாங்கிய ஐந்தாயிரம் ரூபாயை புலனாய்விலிருந்து அவரது பெயரை நீக்கம் செய்ய வைத்தால் ‘அன்புடன் திருப்பித் தரப்படும்’ என்று கூறியதாகவும் மேலும் சமீர் தொடர்ந்து பிரதீப்பும் கும்பலில் இருந்ததாகக் கூறினால் அவருக்கு அவருடைய பணம் கிடைக்காது என்றும், ஏனெனில் காவல் நிலையத்தில் அந்தப் பணத்தை செலவிட வைத்தது சமீர்தான் என்றும் கூறியதாக சமீர் தெரிவிக்கிறார். ” ஆனால் அது என்னுடைய பணம்” என்று சமீர் கூறியதற்கு,” அதற்கு இப்போது என்ன செய்யப் போகிறாய்? உன்னால் எதுவும் செய்ய முடியாது,” என்று பிரதீப் சமீரிடம் கூறியிருக்கிறார்.

(www.thewire.in இணைய தளத்தில் நவோமி பார்தன் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்