Aran Sei

ஃபாசிஸ்ட் சினிமா – படம்காட்டி மக்களை ஏமாற்றி வந்த ஹிட்லர்

ன்றிலிருந்து சரியாக 75 ஆண்டுகளுக்கு முன் மே 8 ஆம் தேதி ஜெர்மனி சரணடைந்தது. இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்தது. எனினும் அந்த இறுதி நாள் வரை ஜெர்மானியர்கள் நாஜிக்களால் உருவாக்கப்பட்ட திரையரங்குகளில் திரைப்படங்களை ரசித்துக்கொண்டிருந்தனர்.

1933 முதல் 1945 வரை திரைப்படங்கள், தேசிய சோசலிசக் கட்சி (நாஜி) பரப்புரையில் முக்கியப் பங்காற்றின. பிற எல்லாக் கலைகளையும் விட திரையரங்குகளும் திரைப்படங்களும் ஆட்சியின் இறுதி நாள் வரை, ஹிட்லர் மற்றும் அவரது பரப்புரை அமைச்சர் கோயபல்ஸ் உள்ளிட்ட மேல்தட்டு நாஜிக்களின் பேராதரவைப் பெற்றிருந்தன. திரைப்படங்களில் கூட, ஒரு போருக்கான முழு முயற்சியும் இருந்ததாகத் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களின் அருங்காட்சியக இயக்குநர் ரெய்னர் ரோத்தர் கூறுகிறார்.

பரப்புரையும் திசைதிருப்பலும்     

“பெர்லின் உட்பட ஜெர்மனியின் பெரும்பாலான பகுதிகளும் பேரழிவில் இருந்த 1945 ஏப்ரல் இறுதியிலும் கூட திரையரங்குகளில் பொழுதுபோக்கு மற்றும் பரப்புரை திரைப்படங்கள் ஓடிக்கொண்டிருந்தன. நாஜிக்களின் பார்வையில் திரைப்படங்கள் மிக முக்கிய இடம் வகித்தன” என்கிறார், `காலத்தின் பதிவுகள்-தேசிய சோசியலிசத்தின் திரைப்படங்கள்’ என்ற திரைப்படத்தின் இயக்குநர் ரோத்தர்.

“தோல்வியின் விளிம்பிலிருந்த கடைசி சில மாதங்களில் கூட மக்களிடம் வெற்றி வாய்ப்பு இன்னும் இருப்பதாக பொய்யான நம்பிக்கையை ஊட்டினர். நாஜிக்களின் கட்டுப்பாட்டில் இருந்த வரை வெளியான திரைப்படங்கள் இந்த வேலையைத் திறம்படச் செய்தன” என்கிறார் ரோத்தர்.

ஜெர்மன் திரைப்படத் தயாரிப்பு 1944 வரை தொடர்ந்த போதும், பரப்புரை அமைச்சகத்திடமிருந்து போதுமான அளவு திரைப்படங்கள் இல்லை எனப் புகார்கள் வந்த வண்ணமே இருந்தன. “அடிப்படைத் தேவை  நிறைவு பெறும் வரை திரைப்படத் தயாரிப்பு தொடர்வதற்கும் அதனை உச்ச நிலையில் வைக்கவும் அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டன” என்கிறார் அவர்.

இதற்காக இரண்டு வகையான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டன. மக்களை பொழுதுபோக்கில் மூழ்கச் செய்து போரிலிருந்து திசை திருப்பும் வகையிலான திரைப்படங்கள் ஒருவகை; நாஜி பரப்புரைத் திரைப்படங்கள் மற்றொரு வகை.

 ஓரங்க நாடகங்களும் பிற நாடகங்களும்

மென்மையான மற்றும் பொழுதுபோக்கு திரைப்படங்களே அடிக்கடி திரையிடப்பட்டன. “போரின் கடைசி ஆண்டுகளில் முற்றிலும் பொழுதுபோக்கை மையமாகக்கொண்ட திரைப்படங்களே தயாரிக்கப்பட்டன. 1930 களில் இது வேறாக இருந்தது. போர் தொடங்கியதிலிருந்து 1942 வரை பரப்புரைப் படங்களே ஏராளமாக வந்தன.” என்று கூறுகிறார் ரோத்தர். போரில் நிலைமை தலைகீழாக மாறியதும், அத்தகைய திரைப்படங்கள் எதிர்விளைவுகளையும் திசை திருப்புவதாகவும் கூறப்பட்டன. அதாவது ஒப்பீட்டளவில் சில படங்களே பரப்புரைப் படங்கள் என்று பொய் கூறி பொழுதுபோக்குப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக மக்களை ஏமாற்றினர்.

அந்த நேரத்தில், திசை திருப்பும் தந்திரம் முழுவீச்சில் வேலை செய்தது. எனவே, சாவுக்கும் அழிவுக்கும் நடுவே , தேசிய சோசலிசத் தத்துவத்தைப் பல வருடங்களாக ஏற்று, பெருமளவில் தாமாகவே முன்வந்து போரிலும், நாசவேலையிலும் ஈடுபட்டு, இனவாதத்தையும், யூத இன எதிர்ப்பையும் நடைமுறைப்படுத்தி வந்த ஒரு மக்கள் கூட்டத்தை, போரின் கடைசி ஆண்டுகளில் ஓரங்க நாடகங்களிலும், உணர்ச்சியைத் தூண்டும் திரைப்படங்களிலும் மூழ்கச் செய்தனர்.

நினைவில் நின்றவை

இந்த இருண்ட காலத்தில் பல்வேறு வகைகளில் ஒரு சில படங்களே தப்பிப் பிழைத்தன. “அது ஒரு வண்ணக்கலவையாக இருந்தது”’ எனக் கூறும் ரோத்தர் ஹெல்மட், கூட்னரை எடுத்துக்காட்டாகக் காட்டுகிறார். `பாலத்திற்கு அடியில்’ என்ற அவரது சிறந்த படைப்பில், போரினால் சிதைந்த காதல் கதை அழகாகச் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், அது போர் முடிந்த பிறகே 1946ல் திரையிடப்பட்டது. ‘கனவுகளின் கன்னி’ 1944 ல் வெளிவந்த இசை மற்றும் ஓரங்க நாடக பாணியிலான மற்றொரு சிறந்த திரைப்படமாகும்.

எனவே, ஜெர்மன் திரைப்படத்துறை இறுதி வரை அழிவு, பொழுது போக்கு, திசைதிருப்புதல் ஆகியவற்றின் மீதே நம்பிக்கை வைத்திருந்தது. “ஸ்டாலின்கிராடு போரில் ஏற்பட்ட திருப்பத்திற்குப் பின், கூத்து வகையிலான திரைப்படங்கள் மீண்டும் வந்தன. பதவி விலகல், அழகியல், எளிமையான வசனங்கள் மற்றும் இசை ஆகியவை மீண்டும் எழுந்தன” என ‘ஜெர்மன் திரைப்படங்களின் வரலாறு’ எனும் பதிப்பில் எழுதுகிறார் திரைப்படத் துறையைச் சேர்ந்த கார்ஸ்டன் விட்.

1945 வரை பரப்புரையே ஜெர்மன் திரைப்படத் துறையின் மையமாக இருந்தது

பொழுதுபோக்கிற்காக மென்மையான திரைப்படங்களை – அவையே பெருமளவில் இருந்தாலும் – திரையிடுவது தேசிய சோசலிசக் கட்சி கொள்கையின் ஒரு பகுதிதான். “ஆட்சி வீழும் வரை, இந்தத் துறை பொழுதுபோக்கு மற்றும் பரப்புரை ஆகிய இரண்டையும் நிறைவு செய்யும், வேறுபட்ட விருப்பத்தையும், சுவையையும் திருப்தி செய்யும், தலைவனை வழிபடும் பண்பையும், தத்துவார்த்த நிலைபாடுகளை வெளிப்படுத்தும் சமரசப் பண்பின் தொகுப்பாக இருந்தது” என்கிறார் எழுத்தாளர் சபின் ஹேக். “உண்மையில் நாஜிக் கொள்கையைப் பரப்புவதையே அதன் மைய நோக்கமாக இருந்தது” என்கிறார் அவர்.

ஜெர்மன் பரப்புரைத் திரைப்படமான ‘கோல்பெர்க்’ வஞ்சனையான, கபடத்தனமான படமாகவே இன்று நினைவுகூரப்படுகிறது. இது நெப்போலியனுடனான போரில் ஒரு ஜெர்மானிய கிராமம் பிரெஞ்சு நாட்டுத் துருப்புக்களை எவ்வாறு சமாளித்தது என்பதை விளக்கும் படமாகும். “கோல்பெர்க், பரப்புரை அமைச்சகத்தின் அடையாளமாகும். ஏனெனில் யூத இன எதிர்ப்புப் படமான ‘ஜுட் சஸ்’ என்ற திரைப்படத்தை இயக்கிய வெட் ஹர்லான் என்பவர்தான் இதனையும் இயக்கியவர்” என்கிறார் ரோத்தர். நேச நாட்டுப் படைகளை எதிர்ப்பதை ஊக்கப்படுத்தவே கோல்பெர்க், போரின் கடைசி வாரத்திலும் அடிக்கடி திரையிடப்பட்டது.

கோல்பெர்க்குடன் மக்களும் தோல்விக்குத் தயாரானார்கள்

இன்னொரு செய்தியையும் கோல்பெர்க் மையமாகக் கொண்டிருந்தது. ஜெர்மானியர்களின் வலிமைக்கான வேண்டுகோளுக்காக இருந்தாலும், அது  தோல்வி உறுதியாகிவிட்ட கருத்தையும் முன்வைத்தது. “இந்தப் படம், முதன்மையாகவோ, தனியாகவோ, மக்களிடையே எதிர்ப்புணர்வை மூட்டி, போரில் கடைசி நிமிட திடீர் திருப்பத்தை ஏற்படுத்தும் என நம்பியதாகக் கூறும் கருத்துடன் ஒத்துப்போவதாக நான் நினைக்கவில்லை.” என்று கூறுகிறார் ரோத்தர்.

கொலைவெறி மிக்க நாஜி ஆட்சியின் படுதோல்விக்குச் சற்றுமுன் வெளிவந்த விடாமுயற்சி பற்றிய படம்தான் இது. எனினும் அது அடுத்த சந்ததியினருக்கு ஒரு அபாயகரமான செய்தியை உள்ளடக்கி இருந்தது. அது ‘சாக விருப்பம்’ என்பதே.

இந்தப் படத்தில், கோல்பெர்க் கிராமம் கடுமையான குண்டு வீச்சிற்கிடையில் குடிமக்களை, விட்டுக் கொடுக்காமல் இறுதி வரை போராடுமாறு உற்சாகப் படுத்துவதாக இருக்கும். ”பல உணர்ச்சியைத் தூண்டும் படங்களில் கோல்பெர்க் மிக அதிக உணர்ச்சியைத் தூண்டும் படமாகும். அதாவது சாவை எதிர்பார்க்கும் உணர்ச்சி.” என விளக்குகிறார் ரோத்தர்.

தற்போது, போர் முடிவு பெற்ற 75வது ஆண்டைக் கொண்டாடும் இந்த வேளையில், ஜெர்மனியில் நாஜி கோட்பாடு முற்றிலும் ஒழிந்துவிடவில்லை என்பதை நினைவில்கொள்ள வேண்டும். இதனாலேயே மேற்கூறிய படங்கள் நாட்டின் வரலாற்றின் ஒரு பகுதியாக உள்ளன. மேலும் நன்மை, தீமைகளுக்காக விவாதிக்கப்படுகின்றன. நல்வாய்ப்பாக, இந்தத் திரைப்படங்கள் இப்போது தடை செய்யப்பட்டுள்ளன.

(www.thewire.in இணையதளத்தில் ‘ஜோச்சென் குர்டன்’ எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)                                                                                    –

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்