பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான, கோவாக்சின் தடுப்பு மருந்தின் ‘செயல்படு திறன்’ குறித்த தரவுகளை வெளியிடும்வரை, அந்த மருந்தை எடுத்துக்கொள்ள தயாராக இல்லை என்று, இந்தியாவின் தலை சிறந்த தடுப்பு மருந்து நிபுணர்களின் ஒருவரான ககன்தீப் கங் தெரிவித்துள்ளார்.
தி வயர் இணையதளத்திற்காக, பத்திரிகையாளர் கரண் தாப்பருக்கு அளித்த பேட்டியில், ககன்தீப் இவ்வாறு கூறியுள்ளார்.
எந்த ஒரு தடுப்பு மருந்தையும் தன் மீது சோதனை செய்துகொள்ளலாம் என்று கூறியுள்ள ககன்தீப் கங், ஆனால் செயல்படு திறன் குறித்த தரவுகளை, பொதுமக்களுக்கு வெளியிடாத பாரத் பயோடெக் நிறுவனத்தின் தடுப்பு மருந்தை, எடுத்துக்கொள்ள மாட்டேன் என்று கூறியுள்ளார்.
கொரோனா தடுப்பு மருந்து : பாஜகவின் சிறுபிள்ளைத்தனமான முன்னெடுப்பு – சு.வெங்கடேசன்
மூன்றாம் கட்ட சோதனை நடத்தப்படாத கோவாக்சின் தடுப்பு மருந்திற்கு, குறைந்தபட்ச அனுமதி வழங்கப்பட்டிருப்பது, மிகப்பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ள ககன்தீப், எபோலா மற்றும் நிபா வைரஸ்களுக்கு எதிரான தடுப்பு மருந்துகளுக்கு, மூன்றாம் கட்ட சோதனை நடத்தப்படாமல் அனுமதி வழங்கப்பட்டதை, கொரோனா தடுப்பு மருந்திற்கு முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளார்.
அந்த வைரஸ்கள் எற்படுத்திய மரணங்களை, கொரோனாவுடன் ஒப்பிடும்போதும், தற்போது சந்தையில் கொரோனாவிற்கு மற்ற தடுப்பு மருந்துகள் கிடைக்கும் நிலையிலும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பிற்கு அவசர அனுமதி வழங்கப்பட்டது, தவறு என்று ககன்தீப் தெரிவித்துள்ளார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தலைவர் பல்ராம் பார்கவ், பாரத் பயோடெக் நிறுவனம், கோவாக்சின் தடுப்பு மருந்தை விலங்குகளில் சோதனை நடத்தியதையும், அத்துடன் முதல் மற்றும் இரண்டாம் கட்ட சோதனைகள் நடத்தப்பட்டதையும் குறிப்பிட்டுள்ளதை கரண் தாப்பர் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள ககன்தீப், விலங்குகளில் சோதனை நடத்தப்படும்முன், எதற்காக தடுப்பு மருந்து கொடுக்கப்படுகிறதோ, அந்த குறிப்பிட்ட நோய் அந்த விலங்கிற்கு செயற்கையாக ஏற்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், கொரோனாவை அதுபோல் விலங்குகளுக்கு உருவாக்க முடியாது என்று கூறியுள்ள ககன்தீப், ஆகவே, விலங்குகளில் கோவாக்சின் மருந்த சோதனை செய்யப்பட்டதை நம்பகமான தரவாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
‘இந்தியர்கள் பரிசோதனை எலிகளா?’ – கொரோனா தடுப்பு மருந்து குறித்து சுப்பிரமணியன் சாமி கேள்வி
அத்துடன், கோவாக்சின் மருந்து, முதல் மற்றும் இரண்டாம் நிலை சோதனைகளில், 800 பேருக்கு மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள ககன்தீப், இந்த சோதனை முடிவுகளை வைத்து அந்த மருந்தின் செயல்படு திறனை அறிந்துகொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.
கோவாக்சின் தடுப்பு மருந்திற்கு அனுமதியளித்த மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் தலைவர், பத்திரிகையாளர்களுக்கு பேட்டியாளிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ள ககன்தீப் கங், கோவிட் – 19 நிபுணர் குழுவில் இடம்பெற்றுள்ள நபர்கள் குறித்த தகவல்களை, அரசு வெளியிடாதது குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ககன்தீப் கங், வேலூரில் உள்ள கிறிஸ்டீன் மருத்துவ கல்லூரியின், வெல்கம் அறக்கட்டளை ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.