Aran Sei

யூதர்களின் பல்கலைக் கழகத்திற்குச் சென்ற ஹிட்லர் – இது புனைவுக் கதையல்ல

யூத பல்கலைகழகம் நிறுவப்பட்டதை கொண்டாட ஃப்யுஹெரர் (ஹிட்லர்) வரவேற்கப்பட்ட காலம், 1934-ன் குளிர்காலமாகவோ, 1936-ன் கோடைகாலமாகவோ இருக்கலாம். காலங்களும், நேரங்களும் நாகரீகத்தின் அநாவசியமான அனுமானங்கள், அதனால் எந்த வருடமென்பது முக்கியமில்லை.

ஏன் அவர் ஒரு யூத கல்வி நிறுவனத்திற்கு வரவேற்கப்பட்டார் என்பது தான் புதிரானது. ஏனென்றால், அவர் தன் வாழ்நாள் முழுவதும் யூதர்களை வெறுத்தார். அவர் கருவாக இருந்த போதும் கூட யூதர்களை வெறுத்திருப்பார். காற்று வதந்திகளை சுமந்திருந்தது. பல்கலைகழகத்தின் நிர்வாகிக்கு ஃப்யுஹெரரின் விருப்பப்பட்டியலில் இடம் பெற ஆசை என்றனர் சிலர்; தன்னை வரவேற்க வேண்டும் என ஃப்யுஹெரரே நிர்பந்தித்ததாக சிலர் கூறினர். வரவேற்பிற்கான காரணம், வரவேற்ற காலத்தை போலவே முக்கியமற்றது.

பார்வையாளர்கள், வயர்லெஸ் வழியே, நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். சில அதிர்ஷ்டசாலிகள் மட்டும் ஃப்யுஹெரரை நேரில் பார்த்தார்கள். அவர்களை விட அதிர்ஷ்டசாலிகள் மேடையில் ஃப்யுஹெரரோடு உட்கார்ந்திருந்தனர். அதில் மூன்று பேர் முக்கியமானவர்கள் : மருத்துவர் சிகரம் என்றழைக்கப்பட்ட பல்கலைகழக நிர்வாகி, பெயரில்லாத காவல்துறை அதிகாரி மற்றும் மாயாஜாலம் செய்பவர்கள் வைத்திருப்பது போன்றதொரு கருப்பு தொப்பிக்குள் ஒளிந்திருந்த ஒரு முயல்.

நண்பர்களை பாதுகாத்த ஜாமியா பல்கலைக்கழக மாணவிகள் – தற்போது என்ன செய்கிறார்கள்?

ஃப்யுஹெரர், இரண்டு விஷயங்களுக்கு பெயர் போனவர்; அவருடைய பேச்சுத் திறன் ஒன்று என்றால், யாரும் எதிர்பாராத நேரத்தில் ஒரு மாயாஜால வித்தையை செய்து முடிப்பது மற்றொன்று. ஃப்யுஹெரரின் உரைக்கு இரண்டு நாட்கள் முன் பல்கலைகழகத்திற்கு வந்த கெஸ்தபோ (ரகசிய போலீஸ்) ஏஜண்ட் ஒருவர், மேடையில் முயலை வைத்துவிட்டு சென்றார்.

பொது பார்வையாளர்கள் மத்தியில் சில யூதர்கள் எச்சரிக்கையாக அமர்ந்திருந்தனர். பெரும்பாலும் அவர்கள் தங்களுடைய பாரம்பரிய உடையில் தான் இருந்தார்கள். சிலர் அழகாய் வடிவமைக்கப்பட்ட கிப்பா தொப்பிகளை தலையில் அணிந்திருந்தார்கள். சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்த பல்கலைகழகத்தின் நிர்வாகி, யூத இனத்தின் மத்தியில் ஃப்யுஹெரர் நம்பிக்கையை ஊட்டியிருப்பதாக கூறினார். அந்த நிகழ்வில் பங்கேற்ற சிலருக்கு அன்று ‘நம்பிக்கை’  எனும் வார்த்தைக்கு இருந்த பொலிவு குறைந்ததாகப்பட்டது.

ஃப்யுஹெரர் வழக்கமான துடிப்புடன் பேசினார். கொண்டாட்டத்தில் பங்கேற்க அனுமதித்ததற்காக பல்கலைகழகத்திற்கும், யூதர்களுக்கும் அவர் நன்றி கூறினார். அவர் விழாவிற்கு அழைக்கப்பட்டது அவருக்கே ஆச்சரியமாக இருந்தது போல. யூதர்களுக்கும், பல்கலைகழகத்திற்கும் ஃப்யுஹெரர் நன்றி சொன்னதும், பல்கலைகழக நிர்வாகி உற்சாத்தில் கை தட்ட தொடங்கினார். அவருடைய உற்சாகம் பிறருக்கு பரவியது, கைதட்ட காரணமே இல்லையென தெரிந்தும் எல்லோரும் கைதட்டினார்கள். காவல்துறையினர் கைதட்டினர். தொப்பிக்குள் இருந்த முயல் திடீரென வெளியே வந்து கைதட்ட தொடங்கியது, ஃப்யுஹெரரை புகழ்ந்தது. கெஸ்தபோ ஏஜண்ட் முறைத்து பார்த்ததும் மீண்டும் இருட்டிற்குள் போய்விட்டது.

ஃப்யுஹெரர் பேசத் தொடங்கினார். யூத பெண்களின் கல்வி குறித்தும், அதில் மாற்றம் கொண்டு வர வேண்டியதன் அவசியம் குறித்தும் பேசினார். அதை சொல்லும் போது அவர் கண்களில் ஒரு வெளிச்சம் வந்தது. அதை பல்கலைகழக நிர்வாகியும், காவல்துறையினரும் பார்த்தனர்; அதனால் மறுபடியும் கைதட்டினர்.

சூரப்பாவின் சூழ்ச்சி தற்காலிகமாக முறியடிப்பு – அண்ணா பல்கலைக் கழகத்தில் நடப்பது என்ன?

முயலும் தொப்பிக்குள் இருந்து வெளியே வந்து கைதட்டியது. அந்த பெரிய அரங்கத்தில் முயலின் கைதட்டல் தனியே எதிரொலித்துக் கொண்டிருக்கும் வரை, முயல் கைதட்டிக் கொண்டிருந்தது. கெஸ்தபோ ஏஜண்ட் முறைத்துப் பார்த்த பிறகு, மீண்டும் தொப்பிக்குள் போனது. தலைவர் தொப்பிக்குள் இருந்து காதை பிடித்து தூக்கிவிடுவார் என்று அது எச்சரிக்கையாகவே இருந்தது. ஒவ்வொரு முறை அப்படி காதை பிடித்து தூக்கும் போதும், ஒரு வாரத்திற்கு அதனுடைய காதுகள் வலித்தன. அதோடு ஒப்பிடும் போது கைதட்டுவது எளிதென முயல் நினைத்தது.

பல்கலைகழகத்தின் முன்னாள் மாணவர்களை புகழ்ந்த ஃப்யுஹெரர், யூத குழந்தைகள் அம்மாணவர்களை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும் என பார்வையாளர்களுக்கு நினைவுபடுத்தினார். குழந்தைகள் என்று சொன்னதும், பார்வையாளர்களில் சிலர் வேதனையடைந்தனர்.

குறிப்பாக, ஹாஃப்மேன் தம்பதி. அவர்களுடைய மகளை சமீபத்தில் தான் ஃப்யுஹெரரின் ஆட்கள் சிறைக்கு அனுப்பியிருந்தார்கள். அவர்கள் ஃப்யுஹெரரை வெறுத்தார்கள். ஆகர்மென் தம்பதியும் ஃப்யுஹெரரை வெறுத்தார்கள்; அவர்களுடைய மகனை ஃப்யுஹெரரின் கட்சியை சேர்ந்த ரவுடிகள் வெட்டி கொலை செய்திருந்தனர். அவன் செய்த குற்றம், தவறான கையில் தாவீதின் நட்சத்திரத்தை அணிந்திருந்தது (ஹிட்லர் ஜெர்மனியில் யூதர்கள் அணிய வேண்டிய கை பட்டை). அக்காலத்தில், அத்தனை விதமான வதந்திகளும் அளவுக்கதிமாக இருந்தன. வதந்திகளும், உண்மையும் ஓவியரின் வண்ணத்தட்டில் வண்ணங்கள் கலப்பது போல கலந்திருந்தன.

இப்போது ஃப்யுஹெரரின் உரை மடை திறந்து வரும் வெள்ளம் போல சென்று கொண்டிருந்தது. அவர் பேசிய போது எந்த இடத்திலும் இடைவெளி இல்லாமல் பேசினார். மற்றவர்கள் எதை கேட்பது முக்கியம் என்று அவர் நினைத்தாரோ, அதை குறித்து மட்டுமே பேசினார்.

எச்சரிக்கையோடு கவனமாக கேட்டுக் கொண்டிருந்த யூதர்களிடம், எப்படி தன்னுடைய ‘ஜெர்மனியை சுத்தம் செய்யும்’ இயக்கம், பள்ளிகளில் இருந்து பெண்பிள்ளைகள் நிற்கும் விகிதத்தை குறைத்துள்ளது என்று விவரித்தார். அப்போது பார்வையாளர்கள் மத்தியில் ஒரு சலசலப்பு உருவானது. எது சாதனை என புரிந்து கொள்வது கடினமாக இருந்தது – யூத பெண்களா, ஜெர்மனியை சுத்தம் செய்யும் இயக்கமா அல்லது ஃப்யுஹெரரா? இருந்தாலும், எல்லோரும் கைதட்டிக் கொண்டே இருந்தனர்; அத்தனை கைதட்டல்களையும் பல்கலைகழக நிர்வாகியும், காவல் அதிகாரியும் தொடங்கினர்; யூதர்கள் அதை பின் தொடர்ந்தனர்; முயலும் கூட அவ்வப்போது உற்சாகமாக் கைதட்டிக் கொண்டிருந்தது.

அரைமணி நேரம் கழித்து ஃப்யுஹெரரின் உரை முடிந்தது. மெய்மறந்து போயிருந்த  பார்வையாளர்கள் கைதட்டிக் கொண்டே இருந்தனர்; மேடையில் இருந்தவர்களும் கைதட்டிக் கொண்டே இருந்தனர். மருத்துவர் சிகரம் எழுந்து நின்று கைதட்டினார்; மற்றவர்களும் எழுந்து நின்றனர். எழுந்து நின்று கைதட்டியது முன் கூட்டியே திட்டமிடப்பட்டதல்ல; அல்லது அப்படித் தான் கெஸ்தபோ ஏஜண்ட் பதிவு செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

திடீரென, முயல் அதன் தொப்பிக்குள் இருந்து வெளியே வந்து கத்திக் கொண்டே கைதட்டியது.  “பொய்யன், பொய்யன், பொய்யன்! இவனொரு பொய்யன்” என்றது. அதன் குரலை விட கைதட்டல் உற்சாகமானதாக இருந்தது. “இவன் ஒரு பொய்யன்! திரும்பி போ பொய்யனே” என்றது. உண்மையும், பொய்யும் ஒரு சேர ஆக்கிரமிக்கும் ஒரு மன நோய் முயலுக்கு இருந்தது. நிறைய பேருக்கும் இந்த நோய் இருக்கிறது, ஆனால், அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பது முயலுக்கு தெரிந்தது.

மொத்த அரங்கிலும் கைதட்டல் சத்தம் எதிரொலித்துக் கொண்டிருந்தது.  அந்த பெரும் சப்தத்தில், முயலின் குரல் மூழ்கியது. இரண்டு வலிமையான கரங்கள், முயலை தூக்கி தொப்பிக்குள் வைக்கும் வரையில் அது கத்திக் கொண்டே தான் இருந்தது. கெஸ்தபோ ஏஜண்டிற்கு பயங்கர கோபம். முயலின் செயலுக்கு பின் இருக்கும் சூழ்ச்சியை கண்டுபிடிக்க வேண்டுமென்று அறிக்கை பதிவு செய்தார்.

முயலின் கால்களை இறுக்கக் கட்டி, அதன் பொந்திற்குள் உயிரோடு புதைத்தார்கள். இரண்டு நாட்களுக்கு பிறகு, முயலை புதைத்த இடத்தில், ஒரு அறிவிப்பு பலகை முளைத்தது. அதில்,

“புதிய உலகம் வரப் போகிறது,

இதோ வந்து விடும்.

இந்த உலகம் முடிந்துவிடும்.

புதிய உலகம் வரப் போகிறது” என்று எழுதப்பட்டிருந்தது.

ஃப்யுஹெரர் தன்னுடைய வழக்கமான வேலைகளை செய்தார். பல்கலைகழகத்திற்கு சென்றதை மறந்துவிட்டார், முயலை மறந்துவிட்டார் ஆனால் யூதர்களை மறக்கவில்லை.

(புனைவு என்பது கற்பனை கதை தான்; ஆனால், நாம் வாழும் இக்காலத்தில், கற்பனை புனைவாக இருப்பதில்லை) 

(www.thewire.in இணையதளத்தில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பேராசிரியராக பணியாற்றும் ஷா ஆலம் கான், எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்