Aran Sei

விவசாயிகளுடன் இன்று 9ஆம் கட்ட பேச்சுவார்த்தை – துளியும் நம்பிக்கையில்லை என்று விவசாயிகள் கருத்து

ன்று (15.01.21) மத்திய அரசுடன் நடைபெறும் 9வது கட்ட பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளப்போவதாக, விவசாயிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இதுவே அரசுடன் நடத்தப்போகும் இறுதி பேச்சுவார்த்தை என்று போராடும் விவசாயிகள் தெரிவித்துள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு, ஜனவரி 19ஆம் தேதியன்று முதல் முறையாக கூட உள்ளது. இதற்கிடையில், ஏற்கனவே திட்டமிடப்பட்ட, அரசுடனான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வோம் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

“டெல்லி தெருக்களில் இரத்தம் சிந்துவதை தடுக்கும் பொறுப்பு மோடிக்கு உள்ளது” – பிரேம் சங்கர் ஜா

இருந்தபோதும், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள விவசாயிகள், ஆகவே, இந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படும் என்ற நம்பிக்கை இல்லை என்று, தி இந்து –விடம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள விவசாய சங்க பிரதிநிதி அபிமன்யூ கோஹர், உச்சநீதிமன்றத்தால் விவசாய சட்டங்களை ரத்து செய்ய முடியாது என்று அரசுக்கு நன்றாக தெரியும் என்றும், கடந்த நவம்பர் 28 ஆம் தேதி முதல் டெல்லியில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளின் உணர்வுடன் அரசு விளையாடக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவைச் சேர்ந்த் அனில் கன்வாத், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்திற்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும், எங்களுக்கு “ஈகோ” இல்லை என்றும் கூறியுள்ளார்.

‘உச்சநீதிமன்றம் ஏமாற்றி விட்டது’ – போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் அறிவிப்பு

இந்நிலையில், உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவில் இடம்பெற்றுள்ள பாரதிய கிசான் சங்கத்தைச் சேர்ந்த புபிந்தர் சிங் மான் அந்த குழுவிலிருந்து விகுவதாக அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “நான், ஒரு விவசாயியாகவும் விவசாய சங்க தலைவராகவும் செயல்பட்டு வருகிறேன். பொதுமக்களிடையே நிலவும் உணர்வுகள் மற்றும் கருத்துக்களுகு மதிப்பளித்து, பஞ்சாப் மற்றும் தேசத்தில் உள்ள விவசாயிகளின் நலன்களில் சமரசம் ஏற்படாமல் எனக்கு வழங்கப்படும் எந்தவொரு பதவியையும் தியாகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். நான் இந்த குழுவிலிருந்து விலகுகிறேன், நான் எப்போதும் எனது விவசாயிகள் மற்றும் பஞ்சாபுடன் நிற்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள குழுவில் இடம் பெற்றுள்ள அனைவரும், மத்திய அரசின் ஆதரவாளர்கள் என்று குற்றம்சாட்டியுள்ள விவாசயிகள், அந்த குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்