Aran Sei

வட்டி மீது வட்டி தள்ளுபடி – நிதி வழங்குவதை உறுதி செய்க : ரிசர்வ் வங்கி

கொரோனா முழு அடைப்பு காலத்தில் வட்டியின் மீதான வட்டி தள்ளுபடிக்கான தொகையை நவம்பர் 5-ம் தேதிக்குள் கடன் வாங்கியவர்களின் கணக்கில் சேர்க்கும்படி வங்கிகளை அறிவுறுத்தியிருப்பதாக ரிசர்வ் வங்கி உச்சநீதி மன்றத்தில் உறுதிப் பத்திரம் தாக்கல் செய்திருக்கிறது.

இந்த வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணை இன்று நடைபெறவுள்ள நிலைமையில் ரிசர்வ் வங்கி இது தொடர்பான உறுதி மொழிப் பத்திரத்தை உச்சநீதி மன்றத்தில் ஞாயிற்றுக் கிழமை தாக்கல் செய்துள்ளது என்று பார் அண்ட் பெஞ்ச் இணையதளம் தெரிவிக்கிறது.

கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு நாடு முழுவதிலும் பொதுமுடக்க நடவடிக்கையை மேற்கொண்டது. இந்த நடவடிக்கை நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார செயல்பாடுகளையும் முடக்கியது. இதனால் வங்கிகளில் கடன் வாங்கிய தொழில் செய்பவர்களுக்கும் தனிநபர்களுக்கும் வருமானம் இல்லாமல் போனது. அவர்கள் கடன் தவணையை செலுத்த முடியாத நிலைமை ஏற்பட்டது.

இதன் காரணமாக கடன் பெற்றவர்களுக்கு ஏற்படும் துயரங்களைக் குறைப்பதற்கு ரிசர்வ் வங்கி மார்ச் 22-ம் தேதி கடன் தள்ளிவைப்பு நடவடிக்கையை அறிவித்தது. இந்த தள்ளிவைப்பு முதல் கட்டமாக மே 31-ம் தேதிவரை வழங்கப்பட்டது. அதன்பிறகு, ஆகஸ்ட் 31 வரை நீட்டிக்கப்பட்டது.

ரிசர்வ் வங்கி அறிவித்த கடன் தள்ளிவைப்பு வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட கடனாளிகளின் கடன் மீது வட்டி மீது வட்டி விதிக்கப்பட்டதை எதிர்த்துப் உச்சநீதி மன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டன.

இந்த வழக்குகளை மொத்தமாக செப்டம்பர் 3-ம் தேதி உச்சநீதி மன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. “கடன் பெற்றவர்கள் மீது கொரோனா முழு அடைப்பு உருவாக்கிய நெருக்கடியை சமாளிக்கவே கடன் தள்ளி வைப்பு அறிவிக்கப்பட்டது என்றும் வட்டியை தள்ளுபடி செய்யும் நோக்கம் இல்லை” என்று மத்திய அரசு வாதிட்டது.

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட கடனின் வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது – மத்திய அரசு

செப்டம்பர் 10-ம் தேதி வட்டி மீது வட்டியைத் தள்ளுபடி செய்வது பற்றிப் பரிசீலிக்க வல்லுநர் குழுவை அமைத்திருப்பதாக நிதி அமைச்சகம் நீதிமன்றத்தில் தெரிவித்தது.

செப்டம்பர் 28-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் வட்டி மீது வட்டி தள்ளுபடி பற்றி ஓரிரு நாட்களில் உறுதிமொழி பத்திரத்தைத் தாக்கல் செய்யும்படி உச்சநீதி மன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

அக்டோபர் 2-ம் தேதி உச்சநீதி மன்றத்தில் நிதி அமைச்சம் உறுதிமொழி பத்திரத்தைத் தாக்கல் செய்தது. அதில், 2 கோடி ரூபாய் வரையில் கடன் வாங்கியுள்ளவர்களின் கடன்மீதான வட்டி மீது வட்டி தள்ளுபடி செய்ய முடியும் என்று தெரிவித்திருந்தது.

வட்டி மீது வட்டி தள்ளுபடி: மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதி

இரண்டு கோடிகள் வரை பெற்ற கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும் என அறிவிப்பை அக்டோபர் 23-ம் தேதி (20 நாட்களுக்குப் பிறகு) மத்திய அரசு வெளியிட்டது.

கடன் வட்டிகள் தள்ளுபடி : மத்திய அரசு

ஞாயிற்றுக் கிழமை அன்று, ரிசர்வ் வங்கியின் மேற்பார்வை துறை (வங்கி) துணை பொது மேலாளர் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்த உறுதிமொழி பத்திரத்தில், கொரோனா நோய்த் தொற்று பரவல் ஏற்படுத்திய அசாதாரண நிலையைக் கருத்தில் கொண்டு அக்டோபர் 23-ம் தேதி திட்டம் அறிவிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி மார்ச் 1, 2020 முதல் ஆகஸ்ட் 31, 2020 வரை

  • சிறு நடுத்தர நிறுவனங்களின் கடன்கள்
  • கல்விக் கடன்கள்
  • வீட்டுக் கடன்கள்
  • நுகர்வு பொருட்கள் கடன்கள்
  • கடன் அட்டை நிலுவைகள்
  • வாகனக் கடன்கள்
  • தொழில் முறையாளர்களுக்கான தனிநபர் கடன்கள்
  • நுகர்வுக் கடன்கள்

ஆகிய பிரிவுகளில் கடன் வசதியை பெற்றிருந்த வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.

 

“மக்களின் தீபாவளி மத்திய அரசின் கைகளில்” – உச்ச நீதிமன்றம்

“அனைத்து வணிக வங்கிகள் (சிறு நிதி வங்கிகள், வட்டார வங்கிகள், பிராந்திய ஊரக வங்கிகள் உட்பட), அனைத்து முதன்மை (நகர்ப்புற) கூட்டுறவு வங்கிகள் / மாநில கூட்டுறவு வங்கிகள், அனைத்து அனைத்திந்திய நிதி நிறுவனங்கள், அனைத்து வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் (வீட்டுக் கடன் நிதி நிறுவனங்கள் உட்பட) ஆகியவை இந்தத் திட்டத்தின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். விதிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி நிவாரணம் பெறுவதற்கான நிபந்தனைகள்:

  1. கடன் கணக்கு பிப்ரவரி 29, 2020 அன்று வாராக் கடனாக இருந்திருக்கக் கூடாது.
  2. கடன் கொடுத்த நிறுவனம், ஒரு வங்கி நிறுவனமாக, பொதுத்துறை வங்கியாகவோ, கூட்டுறவு வங்கியாகவோ, வட்டார ஊரக வங்கியாகவோ அகில இந்திய நிதி நிறுவனமாகவோ, வங்கி இல்லாத நிதி நிறுவனமாகவோ, பதிவு செய்யப்பட்ட வீட்டுக் கடன் நிதி நிறுவனமாகவோ இருக்க வேண்டும்.
  3. கடன் வாங்கியவர் ரிசர்வ் வங்கி அறிவித்த கடன் தள்ளிவைப்பை பயன்படுத்தியிருந்தாலும் சரி, பயன்படுத்தியிருக்கா விட்டாலும் சரி அவருக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழான நிதி உதவி மேற்சொன்ன கடன் கொடுத்த நிறுவனங்கள் மூலமாக கடன் வாங்கியவர்களுக்கு வழங்கப்படும். இந்த நிதியை நவம்பர் 5, 2020-க்குள் வாடிக்கையாளரின் கணக்கில் நிதி நிறுவனம் சேர்த்து விட வேண்டும்.

தகுதி படைத்த கடன் வாங்கியவர்களின் புகார்களை பெறுவதற்கும் தீர்த்து வைப்பதற்குமான ஒரு செயல்முறையையும் ஒவ்வொரு கடன் கொடுக்கும் நிறுவனமும் ஏற்படுத்த வேண்டும்.

கடன் கொடுத்த நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் இது தொடர்பான நிதி கோரல் இந்திய அரசுடன் கலந்தாலோசித்து பாரத ஸ்டேட் வங்கியின் வரையறுக்கப்பட்ட பிரிவு கையாளும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்