Aran Sei

எல்கர் பரிஷத் 2.0: அலிகர் முஸ்லீம் பல்கலை., முன்னாள் மாணவர் கைது – மத உணர்வுகளை புண்படுத்தியதாக குற்றச்சாட்டு

மீபத்தில் புனேவில் நடைபெற்ற எல்கர் பரீஷத் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய, அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஷர்ஜீல் உஸ்மானி மீது, மஹாராஷ்ட்ரா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மகராஷ்டிராவில், 1818ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதியன்று, புனேவுக்கு அருகில் உள்ள பீமா கோரேகானில், ஆங்கிலேயர்களின் ராணுவத்தில் இருந்த மகர் என்று அழைக்கப்படும் பட்டியலின மக்களின் படைக்கும், பிராமண பேஷ்வா பாஜிராவ் படையினருக்கும் இடையே நடைபெற்ற போரில், மகர் படை வெற்றிப்பெற்றது.

அந்த வெற்றியை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் மகராஷ்டிராவில் எல்கர் பரிஷத் என்ற பெயரில் நிகழ்ச்சி நடத்தப்படுவது வழக்கம்.

அந்தவகையில், கடந்த ஜனவரி 30ஆம் தேதி புனேவில் எல்கர் பரிஷத் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அந்த நிகழ்ச்சியில், எழுத்தாளர் அருந்ததி ராய், ஓய்வு பெற்ற நீதிபதி கொல்சே பாட்டில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி எஸ்.எம்.முஷ்ரிப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்ச்சியில் பேசிய ஷர்ஜீல் உஸ்மானி, இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக மஹாராஷ்ட்ரா மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டினார்.

அதைத்தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியின் இளைஞர் அமைப்பான ‘பாரதிய யுவ மோட்ச்சா’ அமைப்பின் உள்ளுர் தலைவர் பிரதீப் கவாடே என்பவர், ஷர்ஜீல் உஸ்மானிக்கு எதிராக, ஸ்வர்கேட் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில், ஷர்ஜீல் உஸ்மானி மீது, இந்திய தண்டனை சட்டம் (153 A) (மதத்தின் அடிப்படையில் இரண்டு குழுவிற்கு இடையே பிரிவினையை ஏற்படுத்துவது) அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக புனே காவல் ஆணையர் அமிதாப் குப்தா தெரிவித்துள்ளார்.

2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், நடைபெற்ற எல்கர் பரீஷத் நிகழ்ச்சியை தொடர்ந்து, பீமா கோரேகான் போர் நினைவுச் சின்னத்தின் அருகே கலவரம் நடைபெற்றது. இதில், மாவோயிஸ்டுகளுக்கு தொடர்பிருப்பதாக கூறி, செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில், 80 வயதான எழுத்தாளர் வரவர ராவ், 83 வயதான செயல்பாட்டாளர் ஸ்டேன் சாமி ஆகியோரும் அடக்கம்.

Source: PTI

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்