மூத்த விவசாய அறிஞர் எம்.எஸ்.சுவாமிநாதன், “பெண்கள் தான் முதலில் பயிர் தாவரங்களை வீட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வந்தது, அப்படி தான் விவசாயம் எனும் கலையும் அறிவியலும் தொடங்கியது. ஆண்கள் உணவு தேடி வேட்டைக்கு சென்ற போது, பெண்கள் அம்மண்ணில் விளைந்த தாவரங்களில் இருந்து விதைகளை எடுத்து, உணவு, தீவனம், நார் மற்றும் எரிபொருளுக்காக செடிகளை வளர்த்தனர்” என்றார்.
இந்தியாவில், விவசாயத்தை குறித்து பேசும் போதெல்லாம், ஆண்களை தான் விவசாயிகளாக பார்க்கிறோம். ஆனால், இது உண்மைக்கு தொலைவில் உள்ள ஒன்று. விவசாய கணக்கெடுப்பின்படி, கிராமப்புற பெண்களில் 73.2% பேர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர், ஆனால், அவர்களில் 12.8% பேரிடம் மட்டும் தான் நிலம் உள்ளது. கலாச்சார, சமூக மற்றும் மத காரணங்களால் பெண்களுக்கு நிலவுரிமை இல்லை. இது, விவசாயம் ஒரு ஆணின் வேலை எனும் எண்ணத்தில் இருந்து தான் தோன்றுகிறது. இந்திய மனித வளர்ச்சி கணக்கெடுப்பு, இந்தியாவில் நிலத்திற்கான சொத்துரிமை 83% ஆண்களுக்கு சென்று சேர்கிறது எனவும், 2% விட குறைந்த அளவு தான் குடும்பத்தின் பெண் உறுப்பினர்களுக்கு சென்று சேர்கிறது என்றும் சொல்கிறது. அதாவது, பெண்களுக்கு என தங்கள் பெயரில் நிலம் இருப்பதில்லை என்பதால், அவர்கள் விவசாயிகள் என்றும் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை. இதோடு கூட, பெண் விவசாய தொழிலாளர்களில் 81% பேர் பட்டியலின சமூகத்தினராகவும், பழங்குடியினராகவும், பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்களாகவும் தான் இருக்கின்றனர். இவர்கள், நிலமில்லாத விவசாய தொழிலாளர்களாக இருக்கிறார்கள்.
இப்படி பெண்களுக்கு அங்கீகாரம் கொடுக்கப்படாமல் இருப்பதை அரசும் கண்டு கொள்வதில்லை, அவர்களை ‘பயிர் செய்பவர்கள்’ என்றும் ‘விவசாய தொழிலாளர்கள்’ என்றும் சொல்கிறதே தவிர, விவசாயிகள் என்று சொல்வதில்லை. எந்த அங்கீகாரமும் இல்லாமல், பெண்கள் அரசின் திட்டங்களில் எல்லாம் இருந்து விலக்கப்படுகிறார்கள். விவசாயிகள் எனும் அங்கீகாரத்தின் மூலம் கிடைக்கும் பயிர் கடன், கடன் தள்ளுபடிகள், பயிர் காப்பீடு, தற்கொலை செய்து கொண்ட குடும்பத்திற்கு கொடுக்கப்படும் நிவாரண உதவி என உரிமைகள் எதுவும் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை.
விவசாயிகள் என அங்கீகரிக்கப்படாதது, அவர்களின் பிரச்சினைகளில் ஒன்று மட்டுமே. மஹிலா கிசான் அதிகார் மஞ்ச் என்ற அமைப்பு, பெண்களுக்கு நிலத்தின் மீதும், நீரின் மீதும், காடுகளின் மீதும் உள்ள உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்கிறது. சேமிப்பு கிடங்குகள், போக்குவரத்து செலவுகள், புது முதலீட்டிற்கான பணம், பழைய கடனை கழிப்பதற்கான பணம், விவசாய கடன் தொடர்பான பிற சேவைகள் போன்றவற்றை, ஒரு குறிப்பிட பாலினத்தால் மட்டுமே ஏற்பாடு செய்ய முடிகிறது. அது போல உள்ளீடுகளும், சந்தைகளும் கூட ஒரு குறிப்பிட்ட பாலினத்திற்கு மட்டுமே கிடைக்கிறது. இப்படி, விவசாயத்திற்கு எவ்வளவு பெரிய பங்காற்றினாலும், பெண் விவசாயிகள் மிகச் சிறிய பங்காக சுருக்கப்படுகிறார்கள்; சுரண்டப்படுவதற்காக பலவீனமாக்கப்படுகிறார்கள்.
இப்போது அவர்களுக்கு இருக்கும் புதிய கவலை, விவசாய சட்டங்கள். அரசின் சட்டங்கள் எப்போதும் பாலின சமத்துவமின்மையை சரி செய்யும்படி இருந்திருக்கவில்லை என்பதனால், விவசாயத்துறையில் உள்ள பாலின பாகுபாட்டை புதுச்சட்டங்கள் ஆழமாக்கும் என்று பெண் விவசாயிகள் அஞ்சுகின்றனர். மஹிலா கிசான் அதிகார் மஞ்ச், புது சட்டங்களில் சில பிரச்சினைகள் இருப்பதாக அதன் அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது. முதலாவது, விவசாயிகள் சுரண்டப்படுவதை தடுக்கும், குறைந்தபட்ச ஆதார விலை குறித்து ஒரு இடத்திலும் எழுதப்படவில்லை என்பது. மேலும், விவசாய உற்பத்தியையோ அல்லது வேறு விவசாய சேவையையோ வாங்க நினைக்கும் வணிகர்கள் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்களோடு போடப்படும் ஒப்பந்தங்களை பேரம் பேசி இயற்றும் நிலையிலும், அந்த ஆவணங்களை புரிந்து கொள்ளும் இடங்களிலும் பெண்கள் இல்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால், விவசாயத்துறை கார்ப்பரேட் மயமாக்கப்பட்டால், விவசாயிகளுக்கு பேரம் பேசும் அதிகாரம் இருக்காது, விவசாயிகளின் நலனை கருதாமல் கார்ப்பரேட் நிறுவனங்களே விலைகளை முடிவு செய்வார்கள் என்பது புரிகிறது. இதன் விளைவாக, சிறு விவசாயிகள் தங்கள் நிலங்களை பெரிய விவசாய நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு, கூலி தொழிலாளர்கள் ஆகும் நிலை வரலாம்.
இந்த போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, நாம் நம் பெண் விவசாயிகளின் கவலைகளை மறக்கக் கூடாது. நாங்களும் விவசாயிகள் தான், எங்களுக்கும் இந்த போராட்டத்தில் சமபங்கு உள்ளது என்பதை நினைவுபடுத்தவே பெண்கள் இந்த போராட்டத்தின் முன்னணியில் நிற்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
(திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தி இந்து பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.