Aran Sei

என்கவுண்டர் ஊக்குவிக்கப்பட்டால், நாளை நாமும் அதற்கு பலியாகலாம் – நீதிபதி செல்லமேஷ்வர்

விசாரணையற்ற தீர்ப்பும், காவல்துறை என்கவுண்டர் கொலைகளும் எந்த சாதாரண மனிதனும் அரசின் நியாயமற்ற நடவடிக்கைக்கு பலியாகும் வீபரீத சூழலை உருவாக்கும் என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜே.செல்லமேஷ்வர் தெரிவித்திருக்கிறார்.

ஞாயிறன்று ஹைதராபாத்தின் ஐ.சி.எஃப்.ஏ.ஐ சட்டக்கல்லூரியில் உரையாற்றிய முன்னாள் நீதிபதி செல்லமேஷ்வர், சட்டத்தை பாதுகாப்பது குறித்து பேசிய போது, “காவல்துறையினர் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர்களை என்கவுண்டரில் கொலை செய்வது ஊக்குவிக்கப்பட்டால், நாளை நம்மில் யார் வேண்டுமானாலும் அதற்கு பலியாகலாம்” என்று அவர் கூறியதாக பார் & பெஞ்ச் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஹைதராபாத், கால்நடை பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக் செல்லமேஷ்வர் இதை கூறியுள்ளார்.

“செய்தித்தாள்களில் சுருக்கமான விசாரணை குறித்தும், விசாரணையற்ற தீர்ப்பு குறித்தும் படிக்கும் போது நன்றாகவே இருக்கும். ஆனால், நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அந்த நால்வரோடு அது நின்றுவிடப்போவதில்லை. இந்த மாதிரியான அமைப்பு ஊக்குவிக்கப்பட்டால், நம்மில் யார் வேண்டுமானாலும், நிரபராதியான யார் வேண்டுமானாலும் அதற்கு பலியாகலாம். உள்ளூரில் இருக்கும் ஒரு காவல்துறை அதிகாரிக்கு உங்களை பிடிக்கவில்லையென்றால், அவர் பொய்யாக உங்கள் மீது குற்றம் இருப்பதாக சொன்னால், அதற்கு பிறகு உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்று முன்னாள் நீதிபதி செல்லமேஷ்வர் கூறியுள்ளார்.

ஹைதராபாத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை மக்கள் வரவேற்றது சட்டத்தை நடைமுறைபடுத்தும் அமைப்பின் இயலாமையை தான் காண்பிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

“சட்டத்தை பின்பற்றாத அரசின் (காவல்துறையின்) நடவடிக்கையை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். இதற்கு மக்களுக்கு பல காரணங்கள் இருக்கலாம். நீதித்துறை மெத்தனமாக இருக்கிறது எனலாம். அவர்கள் குற்றவாளிகள் என நிரூபிக்க 20 வருடங்கள் ஆன பிறகும் கூட உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படலாம் என பல வாதங்கள் இருக்கின்றன. குற்றத்தை விசாரணை செய்யும் பிரிவு, அதற்கு தண்டனை கொடுக்கும் பிரிவு மற்றும் நீதித்துறை, மக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்க்காததே இதற்கு காரணம்” என்று செல்லமேஷ்வர் கூறியுள்ளார்.

ஹைதராபாத் கால்நடை மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதானவர்கள், காவல்துறையினரை தாக்க முயன்றதால் தான் சுட்டுக் கொல்லப்பட்டதாக, ஹைதராபாத் காவல்துறை தெரிவித்திருந்தது. ஆனால், என்கவுண்டர் ஜோடிக்கப்பட்டதாக தெலுங்கானா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த என்கவுண்டர் நடந்த மறுநாள், ஜோத்பூரில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டே, “நீதி, பழிக்குப் பழி என்றாகும் போது அதன் நீதித்தன்மையை இழக்கிறது என்றே நான் நினைக்கிறேன்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்