“ஜெய் ஸ்ரீராம் என கோஷம் போட்டுக்கொண்டு வந்த ஒரு ஆக்ரோஷமான கூட்டம், என்னை ஆட்டோவில் இருந்து இழுத்து தள்ளினார்கள், நான் நினைவிழந்துவிட்டேன். ஒன்பது மாதங்கள் கழித்து எனக்கு ஞாபகம் இருப்பது இவ்வளவுதான்” என்கிறார் 22 வயதான ஷாரூக்.
ஃபெப்ரவரி 24, 2020 அன்று ஒரு மத நிகழ்வுக்கு சென்றுவிட்டு திரும்பும் போது, ஷிவ் விஹார் திராஹா எனும் இடத்தில் இவர் பயணித்துக் கொண்டிருந்த ஆட்டோ ஒரு கூட்டத்தினரால் நிறுத்தப்பட்டது. இவரை ஆட்டோவில் இருந்து இழுத்து கிழே தள்ளி , அடித்து, சுயநினைவில்லாமல் கிடந்தவரை ரோட்டில் விட்டுவிட்டு சென்றனர்.
ஏழு மணி நேரத்திற்குப் பிறகு, ஷாரூக்கின் இளைய சகோதரன், சமீர், ஷாரூக் எங்கே என்று கேட்டு பலரையும் தொடர்பு கொண்டார். இப்படி ஒரு சம்பவம் நடந்ததை கேட்ட சமீர், வீடு திரும்பாத தன்னுடைய சகோதரனை நினைத்து பதட்டப்பட தொடங்கினார். பிறகு, அவனுடைய உறவினர்களில் ஒருவர் ஃபோனில் அழைத்து, ஷாரூக் தாக்கப்பட்டதையும், தன்னைக் காத்துக்கொள்ள அவர் அங்கிருந்து தப்பித்து ஓடியதையும் கூறினார்கள்.
அதே நாள், கையில் கம்பிகள் வைத்திருக்கும் கலவரக்காரர்கள் ஷாரூக்கை கொடூரமாக தாக்கும் ஒரு வீடியோவும் சமீருக்கு வந்தது. ‘ஜெய் ஸ்ரீராம்’ எனக் கத்திக் கொண்டே ஷாரூக்கை அடித்து, குறைந்தபட்சம் ஐநூறு மீட்டருக்கு இழுத்துச் செல்வதை வீடியோவில் பார்க்க முடிந்தது.
ஷாரூக் உடலில் இருந்த காயங்கள் சாலை முழுவதும் ரத்த தடங்களை உருவாக்கியது. ஷாரூக் கீழாடை இல்லாமல், கண்களில் இருந்து ரத்தம் வடிய, முகம் முழுதும் ரத்தமாக இருக்க, அந்த கும்பலால் இழுத்துச் செல்லப்படுவது தெரிந்தது. கும்பலை சேர்ந்தவர்கள், ஒருவர் மாறி ஒருவர் கம்பிகளால் அடிப்பதை பார்க்க முடிந்தது.
இந்த தாக்குதலால், துணி வியாபாரம் செய்து கொண்டிருந்த அந்த 22 வயது இளைஞனின் இடது கண் பார்வை முழுமையாக பறிபோனது. வலது கண்ணிலும் வெளிச்சம் மாறுவதை மட்டுமே பார்க்க முடிந்தது. ஷாரூக்கை அவர்கள் துப்பாக்கியால் சுடவும் செய்திருந்தார்கள்; தோட்டா அவருடைய நெஞ்சில் பாய்ந்திருந்தது.
ஃபெப்ரவரி 25 அன்று, அந்த கலவரத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் இருந்து சமீருக்கு அழைப்பு வந்தது. குரு தேக் பகதூர் மருத்துவமனையில் ஷாரூக் இருப்பதாக தெரிய வந்தது. ஷாருக்கின் குடும்பம் மருத்துவமனையை அடைந்த போது, ஷாரூக் பிணவறையில் வைக்கப்பட்டிருப்பது தெரிந்தது. யாரும் மருத்துவமனையில் அனுமதிக்க இல்லாததால் அவர் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தார்.
ஷாரூக்கின் குடும்பத்தினர் யாரும் ஆதார் அட்டையை எடுத்துக் கொண்டு வராததால், மருத்துவமனை அவருக்கு அனுமதி கொடுக்க மறுத்தது. தெருக்களில் கல் வீச்சு நடந்து கொண்டிருந்த அந்த நேரத்திலும், அவர்கள் வீட்டிற்கு சென்று ஆதார் அட்டையை எடுத்துவர வேண்டியதாக இருந்தது.
ஷாரூக்கிற்கு பதினேழு நாட்கள் கழித்தே நினைவு திரும்பியது.
“எனக்கு நினைவு திரும்பி, நான் கண்களை திறந்த போது, என்னால் எதையும் பார்க்க முடியவில்லை. நான் மறுபடியும் மயக்கமடைந்தேன். ஏன் என் உடல் ரணமாக இருக்கிறது, என் உடலின் ஒவ்வொரு அடியும் ஏன் வலிக்கிறது, நான் என்ன தவறு செய்தேன் என எதுவும் எனக்கு புரியவில்லை” என தி வயர் -ரிடம் பேசியபோது சொன்னார்.
‘இந்தியன்’ என்பதன் அர்த்தம் என்ன என்று இஸ்லாமியர்களை யோசிக்க வைத்த அந்த நாளில், தான் அணிந்திருந்த குல்லாதான், தன் வாழ்க்கையை இருளச் செய்தது என்பதை அவர் இன்று புரிந்து கொள்கிறார்.
“என்னைச் சுற்றி என்ன நடக்கிறதென்றே எனக்கு புரியவில்லை. நான் அந்த கலவர்த்திற்கு பிறகு, முற்றிலுமாக இருளில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். காலையில் எழுகிறேன், பின்பு உறங்குகிறேன். நாள் முழுவதும் நான் எதுவும் செய்வது இல்லை. நமாஸ் மட்டும் தான் எனக்கு மன அமைதியை தருவதாக இருக்கிறது” என்கிறார்.
வீடியோவில், ஷாரூக்கை தாக்கும் ஒருவரின் முகம் மிகத் தெளிவாக தெரிகிறது. ஷிவ் விஹாரில் இருக்கும் மருந்தகம் ஒன்றின் உரிமையாளர் இவர் என சமீர் சொல்கிறார். எதுவுமே நடக்காதது போல அவர் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கிறார்.
கராவல் நகர் காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் அங்கித் குமார், இது இப்படியே தொடராது என்கிறார். “ இந்த வழக்கு எனக்கு வருவதற்கு முன் விவரங்கள் முழுமையாக இல்லை. இப்போது தான் பதிவு வேலை முடிந்திருக்கிறது. நான் தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தியவரை பார்த்தேன். அவர் கூடிய விரைவில் கைது செய்யப்படுவார்” என்று சொல்கிறார்.
இந்த தாக்குதல் ஷாரூக்கின் குடும்பத்தை மன அளவில் மட்டுமே உருக்குலைக்கவில்லை. வீட்டின் ஒரே வருமானத்தை ஷாரூக் கொண்டு வந்ததால், இப்போது அந்த குடும்பம் பொருளாதார நெருக்கடியில் இருக்கிறது. அவருடைய அப்பா படுக்கையை விட்டு எழ முடியாதவர், எல்லாவற்றுக்கும் பிறரின் உதவி தேவைப்படும். டெல்லி அரசாங்கம் குடும்பத்திற்கு நஷ்ட ஈடு கொடுத்திருக்கிறது என்றாலும், குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்பது தான் அவர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது.
ஷாரூக்கின் தாய் ஷெஹ்னாஸ், தன்னுடைய மகன் சின்ன சின்ன வேலைகளுக்கு எல்லாம் உதவி கேட்கும் போது, தன்னுடைய இருதயம் எரிவது போலிருப்பதாக வேதனைப்படுகிறார். “ அந்த கும்பலை சேர்ந்தவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டும்; அவர்கள் என் குழந்தையின் வாழ்க்கையையும், எங்கள் எல்லோருடைய வாழ்க்கையையும் அழித்துவிட்டார்கள்” என்கிறார்.
(www.thewire.in இணையதளத்திற்காக தரூஷி அஸ்வானி எழுதிய செய்தியின் மொழியாக்கம்)
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.