Aran Sei

உய்குர் இஸ்லாமியர்களை கண்டறியும் தொழில்நுட்பம் – போட்டி போட்டுக்கொண்டு காப்புரிமை பெறும் சீன நிறுவனங்கள்

ய்குர் இஸ்லாமியர்களை கண்டறிந்து, கண்காணிக்கக் கூடிய கருவிகளுக்கான காப்புரிமையை, சீனத் தொழில்நுட்ப முதலாளிகள் பதிவு செய்துள்ளனர். இது சிறுபான்மை இஸ்லாமியர்கள் மீதான அடக்குமுறையை மேலும் ஆழமாக்கிவிடும் என, மனித உரிமை குழுக்கள் அஞ்சுகின்றன.

2017 ஆம் ஆண்டு வரை தாக்கல் செய்யப்பட்டுள்ள தொடர்ச்சியான காப்புரிமைகளை, ஐபிவிஎம் எனப்படும் இணைய காணொளி சந்தை நெறிமுறை (IPVM) எனும், காணொளி கண்காணிப்பு ஆராய்ச்சி நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. உய்குர்களின் இருப்பிடத்தை காட்டும் படங்களை பகுப்பாய்வு செய்து, அதனை கண்காணிப்பு புகைப்படக் கருவிகள் மற்றும் முகங்களை அங்கீகரிக்கும் வலைப்பின்னல்களுடன் இணைப்பதற்கு உதவும் அமைப்புமுறைகளுக்கு தொகுப்பாக காப்புரிமை பெற்றிருப்பதை, 12/1/2020 ல்ஒரு அறிக்கை மூலம் ஐபிவிஎம் வெளிப்படுத்தி உள்ளது. “கொடூரமான அடக்குமுறைகளை திறமையாக செய்வதற்காகவே, இத்தகைய தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்ற உண்மையை நாம் புறக்கணித்துவிட முடியாது, “என்று தாம்சன் ராய்ட்டர்ஸ் அறக்கட்டளையிடம், உய்குர்களின் உரிமைக்கான பரப்புரைக் குழுவின் நிர்வாக இயக்குநர், ரூஷன் அப்பாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த நிறுவனங்களின் கருத்தைப் பெற அவர்களை அணுக முடியவில்லை. ஆனால் அவர்கள் ஐபிவிஎம்-க்கு அளித்துள்ள பதிலில், காப்புரிமை விண்ணப்பங்கள் அவர்களுடைய தொழில்நுட்பங்களின் பயன்பாட்டு நோக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதை மறுத்துள்ளனர்.

மனித உரிமைக்குழுக்கள் கூறுவது போல, காப்புரிமை பெற்ற தடமறிதல் தொழில்நுட்பம் மூலம், அடக்குமுறையின் முக்கிய பகுதியாக, உய்குர்கள் அதிகமாக வாழும் ஜின்ஜியாங் பகுதியை “மிகப்பெரிய தடுப்பு முகாமாக” மாற்றி உள்ளதாக ஐ.நா கூறியுள்ளது. “இந்த தொழில்நுட்பங்கள், சீன காவல்துறை, மிக அதிக அளவிலான முகங்களைக் கொண்ட தரவுதளங்களைப் பார்வையிடவும், சீனர்கள் அல்லாதவர்கள் அல்லது உய்குர்கள் என செயற்கை நுண்ணறிவு குறிக்கும் முகங்களை அடையாளம் காட்டவும் அனுமதிக்கின்றன. இதில் பெரிய மனித உரிமைத் பிரச்சனைகள் உள்ளன” என்கிறார் ஐபிவிஎம்-ன் ஆராய்ச்சியாளர் சார்லஸ் ரோலட். மிக அதிக எண்ணிக்கையிலான சிறுபான்மை உய்குர் இனத்தவர்கள் உள்ளிட்ட பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட சீன இஸ்லாமியர்கள், ஜின்ஜியாங் பகுதியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக ஐ.நா. கணக்கிட்டுள்ளது‌. இங்கு மனித இனத்திற்கு எதிரான குற்றங்களும், இனப் படுகொலையும் நடப்பதாக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அவதூறுகளை மறுத்துள்ள சீனா, அந்தப் பகுதி முகாம்களில் உள்ளவர்களுக்குத் தொழிற்கல்வி கற்றுக்கொடுக்கப்படுவதாகவும், தீவிரவாதத்தை எதிர்த்து போராட உதவுவதாகவும் தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் உள்ள அதன் தூதரகம் உடனடியாக கருத்துக் கூற மறுத்துவிட்டது. மனித உரிமை குழுவின் ஆய்வுகள், சீனத் தொழில்நுட்ப நிறுவனங்கள், உய்குர் கண்டுபிடிப்பு அமைப்புமுறைகளை கட்டமைத்து, முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தி, மக்களின் இருப்பிடம் குறித்தும், எந்த அடிப்படையில் கைது செய்வதற்கான காவல்துறை முன் கணிப்புகள் கருவிகள் தேவை என்பது குறித்தும், அதிகாரிகளுக்கு எச்சரிக்கைச் செய்வதாக கூறுகின்றன. மனித உரிமை கண்காணிப்பகத்தின், மாயாவாங், இத்தகைய  ‘உய்குர் அடக்குமுறை தொழில்நுட்பம்’ பயன்படுத்தப்படுவது குறித்து உலகத்திற்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்கிறார். “அமெரிக்கா முழுமையான எதேச்சதிகாரத்தில் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். கருப்பு நிறத்தவர் என்பதாலேயே கருப்பின மக்களை கைது செய்து சிறையில் அடைக்கவும் மற்றும் நாடு முழுவதும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எங்கெல்லாம் கருப்பினத்தவர் இருக்கிறார்கள் என்று கண்டுபிடித்து, வேட்டையாடவும் செய்தால் எப்படி இருக்கும். அதைத்தான் நாம் சீனாவில் காண்கிறோம். உலகம் இதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறுகிறார் மாயாவாங்.

அமெரிக்க கசிவு

உய்குர்கள் மீதான நடவடிக்கைகளில் சீன கார்ப்பரேட்டுகளின் பங்கு குறித்தும், அடக்குமுறைகளுக்கு உதவும் சீன தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு, அமெரிக்கா தடை வித்தித்துள்ளது குறித்தும், உலகம் எங்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன. பதவியேற்கவிருக்கும் பைடன் (தற்போது அதிபராக பதவியேற்றுள்ளார்) நிர்வாகம், இந்த வாரத்தில், அமெரிக்க அரசால் 2019 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட காணொளி கண்காணிப்பு நிறுவனமான, ஹிக்விஷன் என்ற நிறுவனத்தின் பரப்புரையாளராகத் தன்னை பதிவு செய்து கொண்டுள்ள, அமெரிக்க மாநிலங்களவை உறுப்பினர் பாராபரா பாக்ஸர் கொடுத்த நன்கொடையை  திருப்பி அனுப்பிவிட்டது. பாக்சரின் மெர்க்குரி மக்கள் துறை நிறுவனத்திடம் கருத்து கேட்ட போது அது பதிலளிக்கவில்லை.

ஹிக்விஷன், டாஹுவா, யூனிவியூ போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் உள்ளிட்ட, சீனாவின் பல பாதுகாப்பு புகைப்பட கருவிகள் தயாரிக்கும் நிறுவனங்கள் “உய்குர் பகுப்பாய்வை” அளிப்பதாக ஐவிபிஎம் அறிக்கைகள் கூறுகின்றன.

தங்கள் நிறுவனம்  “உலக மனித உரிமைகளை மிக முக்கியமான ஒன்றாக” கருதுவதாகவும், தங்கள் தொழில்நுட்பம் கடைகளிலும், போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வணிக வளாகங்களிலும் பயன்படுத்தப்படுவதாகவும், ஹிக்விஷன் 2019 ஆம் ஆண்டு, ராய்ட்டரிடம் (செய்தி நிறுவனம்) தெரிவித்துள்ளது.

மிகப் பெரிய சீன தொழில்நுட்ப நிறுவனமான ஹூவே, சீன அறிவியல் அகாடமியுடன் இணைந்து தாக்கல் செய்துள்ள காப்புரிமை விண்ணப்பத்தில், செயற்கை நுண்ணறிவு எவ்வாறு  ஒரு பாதசாரியை அவர் உய்குரா, இல்லையா என்பதை கூறுகிறது என்பது பற்றி விளக்கி உள்ளது. ஹூவே, இதனை திருத்தி விடுவதாக கூறியதாக, ஐபிவிஎம் தெரிவிக்கிறது.  தாம்சன் ராய்ட்டரின் கேள்விக்கு, அந்த நிறுவனம் பதிலளிக்கவில்லை.

மற்றொரு காப்புரிமை, முக அங்கீகார தொழில்நுட்ப நிறுவனமான மெக்வி என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், தங்கள் சாதனம் உய்குர்கள் இருக்கிறார்கள் என்பதை எப்படி கூறுகிறது என விளக்கியுள்ளது. இந்த வடிவமைப்பு செயல்பாடு தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டுள்ளது என்கிறது மெக்வி. இதுவும் ராய்ட்டரின் கருத்துக்கான வேண்டுகோளுக்கு பதில் தரவில்லை.

துன்புறுத்தலின் அளவு என்று வந்தால், சீன நிறுவனங்கள் அதிகரித்த அளவில் அவதூறுக்கு ஆளாகும் என்கிறார் ரோலட்.

“நீங்கள் சீன தொழில்நுட்ப நிறுவனமாக இருந்தால், குறிப்பாக முக அங்கீகார தொழில்நுட்ப கருவிகளை உருவாக்குபவர்களாக இருந்தால், காவல்துறை உங்கள் வாடிக்கையாளராக இருக்கும். இந்த வகையான உய்குர் கண்டுபிடிப்பு பகுப்பாய்வை நீங்கள் பெறுவீர்கள்,” என்கிறார் அவர்.

கண்காணிப்புடன் நேரடியாகத் தொடர்பில்லாத நிறுவனங்களும், இதே போன்ற காப்புரிமைக்கு விண்ணப்பித்திருப்பதை அறிக்கை கண்டுபிடித்துள்ளது. மின்னணு வணிகத்தில் மிகப் பேரிய நிறுவனமான அலிபாபா இனத்தை விவரிக்கும், (உய்குர் என்று குறிப்பிடவில்லை என்றாலும்) தொழில்நுட்பம் குறித்து விளக்குகிறது.

“இத்தனை தொழில்நுட்ப நிறுவனங்கள் சீன அரசிற்கு உதவுகின்றன என்பது எனக்கு அதிர்ச்சியாக உள்ளது” என்று கூறும் துருக்கியில் வாழும் உய்குர் செயற்பாட்டாளர் ஜெவ்லன் ஷிர்மெம்மட், அவரது தாய், சீனத் தடுப்புக்காவல் முகாமில் இருப்பதாகவும் கூறுகிறார். “இந்த தொழில்நுட்பம், உய்குர் மக்களை துன்புறுத்த (அரசுக்கு) பயன்படுமானால், ஏன் அவர்கள் (நிறுவனங்கள்) அதை உருவாக்குகிறார்கள்,” என்று கேட்கிறார் ஜெவ்லன்.

(www.thewire.in இணையதளத்தில் அலி அஷர் ஸ்காப்பிரோ எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்