Aran Sei

விளம்பரத்திற்கு 8 கோடி, உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் இல்லையா – பஞ்சாப் முதல்வர் கேள்வி

விசாயிகள் மரணம் குறித்து பாஜக தலைவர்கள் உண்மைக்குப் புறம்பான தகவலை தெரிவித்துள்ளதாகவும், நாட்டின் நலனை கருத்தில் கொண்டு, பாஜக பதவி விலக வேண்டும் என்றும், பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங் கூறியுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். இந்நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டக் களத்தில் உயிரிழந்ததாக போராட்டக்காரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘உங்களால்தான் நாங்கள் இருக்கிறோம்’ – விவசாயிகள் போராட்டக்களத்தில் மகாத்மா காந்தியின் பேத்தி தாரா காந்தி

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், டெல்லி காவல்துறையினரின் தகவலின் அடிப்படையில், இதுவரை இரண்டு விவசாயிகள் மட்டுமே உயிரிழந்துள்ளதாகவும், அதில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறினார்.

அதேபோல் ஹரியானா மாநில விவசாயத்துறை அமைச்சர் ஜே.பி.தலால், போராட்டக் களத்தில் உயிரிழந்த ஒரு விவசாயி குறித்து கருத்து தெரிவிக்கையில், “அவர் வீட்டில் இருந்திருந்தாலும் இறந்திருப்பார்” என்று கூறினார்.

போராட்ட களத்தில் பூங்கா அமைத்த விவசாயிகள்: சட்டங்களைத் திரும்ப பெறாமல் ஒரு அங்குலம் கூட நகர முடியாது – விவசாயிகள் திட்டவட்டம்

பாஜக அரசின் இரண்டு அமைச்சர்களின் இந்த கருத்துகளை சுட்டிக்காட்டியுள்ள பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அம்ரீந்தர் சிங், மத்தியிலும், ஹரியானா மாநிலத்திலும் பாஜக பதவி விலக வேண்டும் என்று கோரியுள்ளதாக, என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

போராட்டக்களத்தில் உயிரிழந்த 102 விவசாயிகளின் குடும்பத்திற்கு பஞ்சாப் அரசு நிவாரண உதவி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அம்ரீந்தர் சிங், உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை கூட அரசிடம் இல்லை என்று கூறியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த விவசாயிகளின் எண்ணிக்கை தொடர்பாக பேசிய அம்ரீந்தர் சிங், “விவசாயத்துறை அமைச்சர் வேண்டுமென்றே நாடாளுமன்றத்தில் பொய் சொல்லியிக்க வேண்டும் அல்லது உண்மை தரவுகளை சேகரிப்பதில் அலம்சியம் காட்டப்பட்டிருக்க வேண்டும்” என்று கூறியதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

விவசாயிகள் நிதி உதவித் திட்டத்திற்கு நிதி குறைப்பு? – நிர்மலா சீதாராமனின் விளக்கம் சரியா?

உயிரிழந்த விவசாயிகளுக்கு கிசான் கல்யாண் திட்டத்தின் கீழ் நிவாரணத் தொகை வழங்கப்படாது என்று, மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி பேசிய அம்ரீந்தர் சிங், வேளாண் சட்டங்களை விளம்பரப் படுத்த 8 கோடி ரூபாய் செலவிட்ட மத்திய அரசு, தங்கள் உரிமைக்காக போராடி உயிரிழந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்