Aran Sei

சசிகலாவுடன் இணைய அதிமுகவை நிர்பந்திக்கும் பாஜக – ஏற்றுக்கொண்ட ஓபிஎஸ், நெருக்கடியில் இபிஎஸ்

டிடிவி தினகரன் மற்றும் சசிகலாவை கூட்டணியில் இணைத்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்று, பாரதிய ஜனதா கட்சி, அதிமுவுக்கு நெருக்கடி கொடுப்பதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஞாயிற்றுக்கிழமையன்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை, சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின்போது, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தையும், கூட்டணியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று, பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக தி இந்து தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற, 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தென் மாவட்டங்களில் அமமுக சுமார் 9 சதவீத ஓட்டுக்களை பெற்றது. ஆகவே, அமமுகவை கூட்டணியில் இணைப்பது, தங்களுக்கு பலம் என்று பாஜக கருதுவதாக, அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜகவின் இந்த யோசனையை உடனடியாக அதிமுக ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், இதுகுறித்து பாஜக தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த, அதிமுகவின் மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி மற்றும் வைத்திலிங்கத்தை அந்த கட்சி நியமித்துள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

பாஜகவின் யோசனையை ஏற்றுக்கொள்ள ஓ.பன்னீர்செல்வம் தயாராக இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி இதை ஏற்றுக்கொள்ளவில்லை என்று புதியதலைமுறை செய்தி வெளியிட்டுள்ளது.

ஒருவேளை, அமமுக, கூட்டணியில் இணைந்தால், அவர்கள் எந்த சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்ற குழப்பம் நிலவுவதாகவும், அதிமுகவின் சில தலைவர்கள், அமமுக இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடலாம் என்று கூறுவதாக தி இந்து தெரிவித்துள்ளது.

குறிப்பாக, தென் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக தலைவர்கள், கூட்டணியில் அமமுக இணைவதை விரும்புவதாக தெரிவித்துள்ள தி இந்து, கூட்டணியில் பாஜவிற்கு ஒதுக்கப்படும் இடத்தை, அமமுகவிற்கு பிரித்துதர, அந்த கட்சி தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்