Aran Sei

E – அடிமைகள் – மூளைக்குள் திணிக்கப்படும் தகவல்கள் – அதிஷா எழுதும் தொடர் (பாகம்-6)

ரு கத்தி வாங்கலாம் என அமேசான் தளத்திற்குள் நுழைகிறோம். கத்தி என்று போட்டு தேட ஆரம்பிக்கிறோம். கத்திகளில் ஆயிரம் வகைகளை வரிசையாகக் காட்டுகிறார்கள். நீட்டு கத்தி, அகல கத்தி, கரகர கத்தி, ரம்ப கத்தி என வகை வகையாகக் கத்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.

இந்தக் கத்திகளில் சிறந்தது, உயரியது விலை மலிவானது என நிறைய வருகின்ற, கத்தியோடு நீங்கள் இந்த சாணை பிடிக்கிற மெஷினையும் வாங்கலாம் என்று காட்டுகிறது… ஓ இப்படி கூட உண்டா என வியக்கிறோம். அடுத்து சாணை பிடிக்கிற மெஷினோடு மக்கள் இந்தக் கத்தி வைக்கும் ஸ்டாண்டையும் வாங்கியிருக்கிறார்கள் என்று காட்டுகிறது.

அதில் ஆயிரத்தி சொச்சம் வகைகள் இருக்கின்றன. அதையெல்லாம் பார்த்து முடிக்கும்போது இந்தக் கத்தி ஸ்டாண்டை வைக்க அழகான அலமாரிகள் என்று காட்டுகிறார்கள்… அலமாரியில் ஒட்ட ஸ்டிக்கர்கள் காட்டுகிறார்கள்… ஸ்டிக்கர்களில் அலமாரி ஸ்டிக்கர், சுவரில் ஒட்டுகிற ஸ்டிக்கர், வார்ட்ரோப் ஸ்டிக்கர் என வகைகள் வருகின்றன…

அதில் சுவரில் ஒட்டுகிற ஸ்டிக்கரில் பாப்புலர் விஷயங்கள், கிளாசிக், நேச்சுரல் எனப் பல வெரைட்டிகள் வந்து குவிகின்றன… அப்படியே ஓரத்தில் ட்ரெட் மில் ஆபர் ஒன்று காட்டுகிறது. அறுபதாயிரம் ரூபாய் மதிப்புள்ள ட்ரெட்மில் வெறும் இருபதாயிரம்தான் என்கிறார்கள். அதைத் திறக்கிறோம். அங்கே வகைவகையாக ட்ரெட்மில்கள். கீழேயே டம்புள்ஸ் இருக்கிறது. அதையும் சேர்த்துவாங்குங்கள்… ஹோம் ஜிம் செட்டாக வாங்கினால் இன்னும் மலிவு என்கிறான்…

கடைசியில் என்ன வாங்க அமேசான் தளத்தைத் திறந்து வைத்தோம் என்பதையே மறந்து வீட்டிலேயே செய்கிற ஜிம் செட் ஒன்றை ஆர்டர் பண்ணி எதை எதையோ வாங்கிக்கொண்டு வெளியே வருவோம். இப்படிச் சம்பவங்கள் எப்போதாவது நடந்தால் பரவாயில்லை. இப்போதெல்லாம் அடிக்கடி நிகழத்தொடங்கி இருக்கிறது!

இதில் நாம் இரண்டு விஷயங்களை இழந்திருப்போம் ஒன்று பணம். இன்னொன்று நேரம். பணத்திற்குக் கணக்குவைத்துக்கொள்கிற நாம் நேரத்தைக் கணக்கிடுவதே இல்லை. குறிப்பாக ஸ்மார்ட்போன் பயன்படுத்த தொடங்கிய பிறகு சுத்தமாக நேரம் நம் கைகளில் இருப்பதில்லை!

இந்தக் கிறுக்கு சுப்பையாத்தனமான ஷாப்பிங்கிற்கு Compulsive online Shopping Disorder, Shopping addiction, Spending Addiction என்று பல பெயர்கள் வைத்திருக்கிறார்கள். ஆனால் இதைத் தூண்டுகிற சக்தி எது?

நெட்ப்ளிக்ஸில் முதன்முதலாக திருப்பாச்சி என்றொரு பிரபலமான படம் பார்க்கிறீர்கள். படம் ரொம்ப பிடித்திருக்கிறது. உடனே அந்தப் படத்தின் இயக்குநரின் பெயரை கூகுளில் தேடுகிறீர்கள். பேரரசு எனக்காட்டுகிறது. உடனே பேரரசுவின் விக்கிபீடியா பக்கங்கள் திறக்கிறது. அதில் அவர் இதுவரை எடுத்த படப்பட்டியலைப் பார்க்கிறீர்கள். மற்ற படங்களை பற்றிய லிங்குகளை க்ளிக் பண்ணுகிறீர்கள். அதில் பழனி என்றொரு படம் காட்டுகிறது. அதை க்ளிக் பண்ண அந்தப்படத்தின் கதையெல்லாம் படிக்க அடேயப்பா எப்பேர்ப்பட்ட புதுமையான கதை என வியக்க வைக்கிறது.

உடனே இந்தப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள், நடித்தவர்கள் பெயர்களைப் பார்க்கிறீர்கள். ஐஸ்வர்யா நடித்திருக்கிறார். அழகான பெயர் என அந்தப் பெயரை க்ளிக் பண்ண… அவர் நடிகை லட்சுமியின் மகள் என்கிற தகவல் கிடைக்கிறது. நீ அவங்க பொண்ணாம்மா ரொம்ப நல்ல நடிகையாச்சே அவங்க என்று அவர் நடித்த படங்களைப் பார்க்கிறீர்கள். (அவர் நடித்த படங்களைப் பார்த்து என்ன ஆகப்போகிறது என்கிற கேள்வி உள்ளுக்குள் எழவேயில்லை)

அதில் ரஜினிகாந்தோடு நடித்த படங்களின் பட்டியல் வருகிறது. எஜமான் என்கிற படம் பற்றிய தகவல் கிடைக்கிறது. அந்தப்படத்தின் இயக்குநர் பெயரைப் பார்த்ததும் இவர் தெரிஞ்ச பேரா இருக்கிறாரே… அவர் எடுத்த படங்களைத் தேடுகிறோம்… அட கிழக்குவாசல்… அதை ஒரு க்ளிக்… ஜனகராஜ் அதில் ஒரு க்ளிக்… அட அண்ணாமலை அதில் ஒரு க்ளிக்… அட சுரேஷ்கிருஷ்ணா அதில் ஒரு க்ளிக்… எது இந்திப்படம் எடுத்துக்காரா… அதில் ஒரு க்ளிக்… எது அந்தப் படத்துல ரேவதி ஹீரோயினா அதில் ஒரு க்ளிக்… எது ரேவதி இங்கிலீஷ் படம் எடுத்துருக்காங்க… அதில் ஒரு க்ளிக்… ஒரு ஒன்றரை மணிநேரம் போயிருக்கும். குறைந்தபட்சம் அரைமணிநேரம். கழித்து ஒரு மூட்டை தகவல்களைச் சேகரித்துக்கொண்டு வெளியே வருவோம். ஆனால் இந்தத் தகவலை எதற்காகத் தேடினோம் ஏன் படித்தோம் அதனால் நமக்கு என்ன கிடைத்தது எதுவுமே தெரியாது. அதனாலேயே இந்தத் தகவல்கள் எதுவுமே மண்டையிலும் தங்குவதில்லை!

சமூகவலைதளங்களுக்கு அடிமையாகிற ப்ராசஸ் இதே பாணிதான். தினமும் ஃபேஸ்புக்கைத் திறக்கும்போது நமக்கு எந்த வித நோக்கமும் இருப்பதில்லை. பள்ளிக்குச் சென்றால் படிக்கிறோம்… ஜிம்முக்குச் சென்றால் உடற்பயிற்சி செய்கிறோம்… அதுபோல பேஸ்புக்கில் என்ன செய்கிறோம்? அங்கே நமக்கு ஒரே ஒரு எதிர்பார்ப்புதான். புதிய தகவல்கள் கிடைக்கும். செய்திகளைத் தெரிந்துகொள்கிறோம். மீம்ஸ் பார்க்கிறோம். இலக்கியவாதிகளின் சண்டைகளை ரசிக்கிறோம். ஆச்சர்யமூட்டும் வதந்திகளைப் பெற்றுக்கொள்கிறோம். டிக்டாக்கை திறப்பவருக்குப் புதிய மினி வீடியோ.. இன்ஸ்டா என்றால் புகைப்படம்… ட்விட்டர் என்றால் ஏதாவது வம்புகள் ஹேஸ்டேக் சண்டைகள்… வாட்ஸ் அப் என்றால் எதாவது பார்வர்டுகள்… இப்படி நம்முடைய எதிர்பார்ப்பு என்பது முழுக்க முழுக்க புதிய தகவல்கள்தான். அதுவும் ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக இருக்கவேண்டும். ஒரு புத்தகத்தைப் படித்து சேகரிக்கிற தகவல் என்பது உழைப்பைக் கோருகிறது. ஆனால் ஒரு ஸ்டேடஸோ ட்வீட்டோ வீடியோவுக்கோ அதெல்லாம் தேவையில்லை. எளிதில் கிடைக்கிற தகவல்கள். Junk Food போல இவை Junk information ருசியானது… விரைவானது… ஆனால் தீங்குவிளைவிக்கக்கூடியது… அவசியமற்றது.

இவ்வளவு தகவல்களையும் மூளை சேகரித்து வைத்து என்ன செய்கிறது. அல்லது நாம் என்ன செய்கிறோம் என்று யோசித்துப் பார்த்தால் ஒண்ணுமேயில்லை. பிறகு ஏன் இப்படி புதிய தகவல்களுக்குக் கிடந்து தவிக்கிறோம். ஏங்குகிறோம். புதிய தகவல்கள் இல்லாத நாட்கள் சபிக்கப்பட்டவையாக உணர்கிறோம்.

இதை Information Addiction என்கிறார்கள். ஆனால் சமூகவலைத்தளங்கள் வருவதற்கு முன்பே மனிதர்களுக்கு இந்த நோய் இருக்கிறது என்கிறது பல்வேறு ஆய்வுகள். மனிதன் நாடோடியாகத் திரிந்த காலத்திலேயே இங்கிங்கு இந்த மிருகங்கள் கிடைக்கும், இங்கே தண்ணீர் கிடைக்கும், இங்கே எதிரிகள் இருப்பார்கள், ஆபத்து இருக்கிறது என்கிற தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கினான். அதிக தகவல்கள் கொண்டவன் அதிக உணவையும் குறைந்த ஆபத்துகளைப் பெற்றவனாக இருந்தான். அதே பழக்கம் இப்போதும் நம்மிடம் இருக்கிறது. இதுகுறித்து தொடர்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளும் ஆய்வாளரான மிங்சூ “புதிய தகவல் என்பதே மூளை தனக்குத் தானே அளித்துக்கொள்ளும் ஒரு Rewardதான்’’ என்கிறார்.

‘’பணமும் உணவும் எப்படி மனித மூளையைச் சிலிர்க்கச் செய்து மேலும் மேலும் வேண்டும் என்கிற உணர்வைத் தூண்டுகிறதோ எவ்வளவு கிடைத்தாலும் போதாது என்கிற உணர்வுக்கு ஆட்படுத்துகிறதோ அதே அளவு புதிய புதிய தகவல்களும் மனிதர்களின் மூளையில் ஹார்மோன் தூண்டுதல்களை உருவாக்கி மகிழ்ச்சியைத் தருகின்றன. உணவு பணம் இந்த இரண்டுக்குமான அதே நியூரல் கோடுதான் தகவல்களுக்கும்’’ என்கிறார் மிங்.

ஒவ்வொரு முறை நமக்கு ஒரு புதியதகவல் கிடைக்கும்போதும் நம்முடைய மூளையில் இருக்கிற வென்ட்ரோ மெடியல் ப்ரீப்ரென்டல் கார்டெக்ஸ் சுருக்கமாக VMPFC என்கிற பகுதி ஆக்டிவேட் ஆகின்றன. மூளையின் அதே பகுதிதான் நமக்கு நல்ல நல்ல உணவுகளும் கைநிறைய காசும் கிடைத்தால் ஆக்டிவேட் ஆகிற அதே பகுதி இது!

கண்டதைப் படித்தால் பண்டிதனாவான்னு சொல்லிருக்காங்களே என நினைக்கலாம். அது நாமாகத் தேடித் தேடி கண்டதையும் படித்து அறிவை வளர்த்துக்கொண்டால்தான். ஆனால் உங்கள் மூளைக்குள் ஓட்டை போட்டு தினமும் ஒரு குண்டா சாக்கடையை யாரோ ஊற்றிக்கொண்டிருந்தால் என்னாகும்… சமூகவலைத்தளங்கள் செய்வது அதைத்தான். எப்படி செய்கிறன்றன… ஏன் செய்கின்றன… எதற்காக என் மூளைக்குள் தகவல்களைத் திணிக்கின்றன..

அது அடுத்தவாரம்… புதியதகவல்களோடு வரேன்!

– விலங்குகள் உடைப்போம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்