Aran Sei

‘இதுக்கு எல்லாமா சைக்கியாட்ரிஸ்ட்ட பாப்ப?’ – ரஷ்மி மாதவன்

Image Credits: Times Now

“இதுக்கு எல்லாமா சைக்கியாட்ரிஸ்ட்ட பாப்ப?” என்று இன்னும் பலர் கூறுவதுண்டு. இது இந்திய சமூகத்தில் பெரும்பாலானோரிடம் உள்ள சிக்கல். “சரி நாம் பிரச்னை சிறியது போல. தீவிர பிரச்சனை ஏதேனும் இருந்தால், அப்போது அனைவரும் புரிந்துகொள்வார்கள்” என்று நீங்கள் நினைப்பீர்களேயானால் அது உங்களிடம் உள்ள சிக்கல்.

உண்மையில் பெரிய சிக்கல், சிறிய சிக்கல் என்றெல்லாம் எதுவும் இல்லை. மனநல சிக்கல் என்பது மிகவும் பொதுவானது என்று பிரமிட் ஹெல்த் கேர் கூறுகிறது. மக்கள்தொகையில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பகுதியினர் கவலை, மனச்சோர்வு அல்லது இருமுனைக் கோளாறு (bipolar disorder) போன்ற சில வகையான மனநலக் கோளாறுகளைக் கொண்டிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

கூச்சம், யாரை அணுகுவது எனும் குழப்பம் போன்ற பல காரணங்களால், தங்களுக்கு மருத்துவ உதவி தேவை என்பதை வெளியே சொல்ல பலர் தயங்குவதுண்டு. இவ்வாறு தயங்குபவர்களுக்கு, இதுபோன்ற சிக்கல்கள் இயல்புதான் என்பதை குடும்பமும் நண்பர்களும்தான் புரியவைக்க வேண்டும். ஆனால் நம் சமூக கட்டமைப்பும்  இதுபோன்ற விடயங்களுக்கு அது வினையாற்றும் முறையும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது.

என் தந்தை கிட்டத்தட்ட ‘சந்தோஷ் சுப்ரமணியத்தின்’ பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தை போன்ற ஒருவர். இருவருக்கும் இருக்கும் ஒரே வித்யாசம் – பிரகாஷ் ராஜ், சந்தோஷின் (ஜெயம் ரவி) நண்பர்களை அழைத்து, சந்தோஷின் பிரச்னை குறித்து விசாரிப்பார், என் தந்தை “நானே உன் நண்பன் தான், நீ எதுக்கு சைக்கியாட்ரிஸ்ட்ட பாக்கணும்? என் கிட்டயே உன் பிரச்னை என்னனு சொல்லு” என்பார்.

இது கேட்பதற்கு நன்றாக தான் இருக்கும். ஆனால், தெரியாத மனநல மருத்துவரிடம் நமது சிக்கலை குறித்து பேசுவதே சிக்கலாக இருக்கும் பட்சத்தில் ஒரு தந்தையிடம் அது குறித்து பேச முடியாது. அதுவும், என் தந்தையை போன்ற ஒரு கண்டிப்பான தந்தையிடம் ஒருபோதும் இது சாத்தியமே இல்லை.

“இப்போ எல்லாம் யாருப் பா சாதி பாக்குறா?” என்று கேட்பது  எவ்வளவு அபத்தமோ, “இதுக்கு எல்லாமா சைக்கியாட்ரிஸ்ட்ட பாப்ப?” என்று கேட்பதும் அவ்வளவு அபத்தம்.

இன்று, உலக மனநல தினம். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10-ம் தேதி உலகளாவிய மனநல கல்வி, விழிப்புணர்வு, சமூக களங்கத்திற்கு எதிராக கருத்துக்களை முன்வைப்பது போன்றவற்றிற்காக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

உலகெங்கிலும் உள்ள கோடி கணக்கானவர்கள் ஆரோக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலமும், மன ஆரோக்கியம் தொடர்பான முக்கிய விளைவுகள் மற்றும் பெரிய நோய்களை பற்றி கவனத்திற்குக் கொண்டுவருவதன் மூலமும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

1992-ம் ஆண்டு, அக்டோபர் 10 அன்று, மனநலத்திற்கான உலக கூட்டமைப்பு, முதல் உலக மனநல தினத்தை கொண்டாடியது. அது இன்று வரை தொடர்கிறது.

இரண்டு ஆண்டுகளாக, மனநலக் கல்வி மற்றும் விழிப்புணர்வை ஊக்குவிப்பதைத் தவிர வேறு எந்தக் கருப்பொருளும் (தீம் – theme) இல்லாமல்தான் அந்த நாள் கடைபிடிக்கப்பட்டது. ஆனால் 1994 ஆம் ஆண்டில் ‘உலகம் முழுவதும் மனநல சுகாதார சேவைகளின் தரத்தை மேம்படுத்துதல்’ என்ற கருப்பொருளுடன் இந்த நாள் கொண்டாடப்பட்டது.

அப்போதிருந்து, உலக மனநல தினம் எப்போதும் ஒரு புதிய கருப்பொருளுடன் அனுசரிக்கப்படுகிறது.

இந்த ஆண்டின் கருப்பொருள்

இந்த ஆண்டு, கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக மன ஆரோக்கியம் என்ற தலைப்பு மிக முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது, மேலும் இது கடந்த 9-10 மாதங்களாக மனிதர்களின் மன நிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

“இந்த ஆண்டின் உலக மனநல தினம், அக்டோபர் 10 அன்று, கொரோனா தொற்றுநோயின் விளைவாக நமது அன்றாட வாழ்க்கை கணிசமாக மாறியுள்ள நேரத்தில் வருகிறது,” என்று உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கம், கடந்த சில மாதங்கள் அனைத்து முன்னணி தொழிலாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான பிற தொழில் வல்லுனர்களுக்கும் சவாலாக உள்ளது என்று கூறுகிறது.

“தொற்றால் ஏற்பட்ட பொருளாதார விளைவுகள் உலகளவில் கோடி கணக்கான மக்களால் உணரப்படுவதால் ‘மன ஆரோக்கியம் மற்றும் மனோ சமூக ஆதரவின் தேவை, வரும் மாதங்களில் கணிசமாக அதிகரிக்கும்’ என்பது புரிந்து கொள்ளப்படுகிறது” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை மனதில் வைத்து, மனநலத்தில் முதலீட்டை அதிகரிப்பதே இந்த ஆண்டின் கருப்பொருளாக உள்ளது. ஆகையால், இந்த சர்வதேச விழிப்புணர்வு நாள் “அனைவருக்கும் மன ஆரோக்கியம்” என்பதில் கவனம் செலுத்தும்

உலகில் எத்தனையோ பிரச்சனைகள் உள்ள நிலையில் இதற்கெல்லாம் விழிப்புணர்வு தேவையா என்று சிலர் யோசிக்க கூடும். இந்த வாதம் மேலோட்டமாக பார்க்க சரி போன்று தோன்றினாலும் இதில் சில சிக்கல் உள்ளது. அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதுதான். ஒரு அரசின் கொள்கை முடிவு சாமனியனை பாதிக்க கூடும். அதேபோல் நிச்சயமற்ற பணி சூழல் பல தொழிலாளர்களின் மனநிலையை பாதிக்கும்.

பல பிரச்சனைகள் இருந்தாலும், மனச்சிக்கல் சிறியது என்று ஒதுக்கிவிட முடியாது. முன்னரே குறிப்பிட்டதுபோல் பல ரீதியில் தங்களை முற்போக்காக கட்டிக்கொள்ளும் இந்திய சமூகத்திற்கு, மனநலன் மற்றும் அதன் தேவைகள் குறித்து சரியான பார்வை இல்லை. ஆகையால், இதுபோன்ற விழிப்புணர்வுகளுக்கு தேவை உள்ளது.

பெண்கள் தினம் அன்று மட்டும் பெண்களை பற்றி பேசுவது போல், இன்று மட்டும் மனநலனை பற்றி பேசாமல், எப்போதும் அதை புரிந்து நடந்துகொள்வதற்கான தேவை உள்ளது.

குறிப்பிட்ட வயதினருக்கு தான் பாதிப்புகள் ஏற்படும் என்ற விதிகள் எதுவும் இல்லை. மனஅழுத்தம் பரவலாக ஏற்படுகின்றது. கல்லூரியில் இருந்தபோது என் கைக்காசு அனைத்தையும் சேகரித்து, “இதை வைத்து மனநல மருத்துவரின் ஆலோசனை பெற முடியமா?” என்று யோசித்த நாட்கள் இன்னும் நினைவில் இருக்கிறது. தந்தையிடம் கேட்டிருக்கலாம் தான், அவர் என்னிடம் பேசு என்று சொல்லி விடுவார்.

மனநலனின் முக்கியத்துவத்தை அறிந்த உளவியலாளர்களை நியமிக்கும் சில பள்ளி, கல்லூரிகள் உண்டு. கொரோனா பொதுமுடக்க காலகட்டத்தில் சிலர் காணொலியில் இலவச மனநல ஆலோசனை வழங்கினார்கள். இதுபோன்ற முன்முயற்சிகள் பலரை சென்றடைந்தால் உண்மையில் “அனைவருக்குமான மன ஆரோக்கியத்தை” உறுதி செய்ய முடியும்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்