Aran Sei

மாதவிடாய் குறித்த தவறான எண்ணம் – உடைத்தெறிந்த விவசாயிகள் போராட்டக்களம்

டெல்லிக்கு போகும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டு, திக்ரி எல்லையில் விவசாயிகள் போராடத் தொடங்கி 25 நாட்களாகிவிட்டன. ஒவ்வொரு இரவும் பகலும் லட்சக்கணக்கான மக்கள் போராட்டக் களத்தில் இருக்கின்றனர். புது குழுக்கள் போராட்டத்தில் இணைந்து கொண்டே இருக்கின்றன.

போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, சுகாதார பிரச்சினை மோசமானதாக மாறுகிறது. இது போராட்டத்தில் பங்கேற்றுக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான பெண்களுக்கு பெரிய பிரச்சினையாக இருக்கிறது. தினசரி சுகாதார பிரச்சினைகளுடன் மாதவிடாய் பிரச்சினையும் வருவதால் சுகாதார வசதிகளும், தண்ணீரும் அவசியமாக உள்ளது. இது குறித்து டெல்லி அரசிடமும், மாநகராட்சியிடமும்,  செயற்பாட்டாளர்களும், மக்களும் புகார் அளித்துள்ளனர்.

வீரம் செறிந்த விவசாயிகள் போராட்டம் – வரலாறு படைக்கும் பெண்கள்

ப்ரைவசி பிரச்சினைகளால், போராட்டக்களத்தில் இருக்கும்  நகரும் கழிப்பறைகளை பெண்களால் பயன்படுத்த முடியவில்லை. பெண் விவசாயிகளின் தலைவராக ஜஸ்பீர் கௌரின் மகள் நவ்கிரன் கௌர், தொடக்கத்தில், எல்லையில் நிறுத்தப்பட்ட போதே இப்படி ஒரு பிரச்சினை வருமென்பது தெரியும் என்கிறார். “இப்போது நகரும் கழிப்பறைகள் மோசமான நிலையில் உள்ளன. அவற்றை யாரும் சுத்தம் செய்வதே இல்லை. கழிப்பறைகளில் இருந்து வரும் கழிவும், பிற கழிவுகளும் ஒன்றாக கலப்பதனால், கழிப்பறைகளுக்கு செல்வதே கடினமாக உள்ளது” என்று அவர் தி வயரிடம் தெரிவித்தார்.

சுகாதார வசதிகள் மோசமாவதால், போராட்டக் களத்தில் பெண்களால் குறைந்த நேரம் மட்டுமே செலவிட முடிகிறது. வெகு சில நகரும் கழிப்பறைகளே போராட்டக் களத்தில் உள்ளன. உள்ளூர் மக்கள் உதவ தயாராக இருந்தாலும் கூட, கொரோனா நோய்தொற்று காரணமாக தயங்குகிறார்கள். “ கடைக்காரர்கள் சிலர் உதவுகின்றனர்; சில சமயம் நாங்கள் மெட்ரோ ஸ்டேஷனுக்கு சென்று அங்கிருக்கும் கழிப்பறையை பயன்படுத்துகிறோம். ஒரு சேமிப்பு கிடங்கில் இருக்கும் கழிப்பறைகளை பயன்படுத்த பெண்களுக்கு அனுமதியளித்தார்கள்” என்கிறார் நவ்கிரன்.  “ஆனால், இப்போது மக்கள் உதவ தயாராக இல்லை. அவர்களை குற்றம் சொல்லவும் முடியாது, எங்களுக்கு உதவ வேண்டும் என ஒரு கட்டாயமும் அவர்களுக்கு இல்லை” என்கிறார்.

கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக்கொண்ட விவசாயிகள் – படங்களை ஏந்தி போராடும் தாய்மார்கள்

கீர்த்தி கிசான் சங்கத்தை சேர்ந்த ஜக்ரூப் என்பவருக்கும் இதே போன்ற பிரச்சினைகள் உள்ளன. “ நவம்பர் 26 ஆம் தேதி இங்கே வந்த போது, ஒரு காலணி தொழிற்சாலையில் உள்ள கழிப்பறைகளை பயன்படுத்திக் கொண்டிருந்தோம். ஆனால், சில நாட்கள் மட்டுமே அவற்றை பயன்படுத்த முடிந்தது; அதன் பிறகு சுகாதார பிரச்சினைகள் உருவாகின, குறிப்பாக பெண்களுக்கும், சிறுமிகளுக்கும்” என்கிறார்.

“மாதவிடாய் காரணமாகவும் பிரச்சினைகள் வருகிறது. இங்கே பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் ப்ரைவசி இல்லை. மேலும், சுகாதாரமின்மை காரணமாக, சில சிறுமிகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது” என்றார் ஜக்ரூப்.

தொண்டு நிறுவனமான கல்சா எய்ட் (Khalsa Aid), இதற்கொரு தீர்வு காண முயற்சி செய்கிறது. மருந்துக்கள் தேவைப்படுவோருக்கு அந்த தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்கள் மருந்துக்கள் கொடுக்கிறார்கள். ரொஹ்தக் மற்றும் பக்கத்து நகரங்களை சேர்ந்த மக்கள் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் ஒரு சுகாதார முகாமை அமைத்துள்ளனர்.

“தொடக்கத்தில் பெண்கள் இது குறித்து பேச தயங்கினார்கள், ஆனாலும் நாங்கள் அவர்களிடம் சென்று பேசினோம். எங்களால் முடிந்த அளவு உதவியை செய்கிறோம்” என்கிறார் கல்சா எய்ட் அமைப்பை சேர்ந்த தன்னார்வலரான ஜக்மீத்.

அமெரிக்காவை சேர்ந்த இதய நோய் நிபுணர் ஸ்வைமன் சிங் என்பவரும் போராடும் மக்களுக்கு உதவிக் கொண்டிருக்கிறார்.  “எங்களுடைய குழுவை சேர்ந்தவர்கள் மருந்துக்களும், சேனிடரி நாப்கின்களும் கொடுக்கிறார்கள். ஆனால், கழிப்பறைகள் இல்லாதபோது அவர்கள் எங்கே போக முடியும். இந்த மக்கள் வரிப்பணம் செலுத்துபவர்கள். அரசாங்கம் அவர்களுக்கு உதவ வேண்டும். நிறைய குடிமக்களும், மருந்துக்களையும் பிற அத்தியாவசிய பொருட்களையும் நன்கொடையாக கொடுக்கிறார்கள்” என்றார்.

விவசாயிகளின் போராட்டக் களத்தில் சிறுவர்கள் – ஒருபுறம் முழக்கம், மறுபுறம் ஆன்லைன் வகுப்பு

மாதவிடாயை சூழ்ந்திருக்கும் களங்கத்தை குறித்தும், போராடிக் கொண்டிருப்பவர்கள் அதை எப்படி உடைக்க முயற்சிக்கிறார்கள் என்பது குறித்தும் சில பெண்கள் பேசினார்கள். போராட்டக் களத்தில், மக்கள் இது குறித்து கவனமாக இருக்கிறார்கள், ஒருவருக்கு ஒருவர் உதவி செய்கிறார்கள் என்று பெண்கள் கூறினார்கள். “மாதவிடாய் எனும் விஷயத்தை சுற்றி ஒரு அவமானம் பொதுவாக உள்ளது தான். ஆனால், இங்கே  சானிடரி நாப்கின்களை பைகளில் போட்டு மறைக்காமல் கொடுப்பதை பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. போராட்டம் செய்து கொண்டிருப்பவர்கள் இங்கிருக்கும் பெண்களை பார்த்துக் கொள்கிறார்கள். பிரச்சினை குறித்து பேச விடாமல் செய்வதில்லை, அவர்களை அமைதியாக்குவதில்லை” என்கிறார் போராட்டத்தில் பங்கேற்றிருக்கும் 23 வயதான குர்லீன் கௌர்.

போராட்டம் நடக்கும் இடத்தில் போதுமான சுகதார வசதி இல்லாததற்கு பெண் விவசாயிகள், ஆம் ஆத்மியின் அரசை விமர்சிக்கின்றனர். போராட்டம் தொடங்கியதில் இருந்தே திக்ரி எல்லையில் இருக்கும் கிரஞ்சித் கௌர், “ ஒரு பக்கம், ஆம் ஆத்மி கட்சி விவசாயிகளோடு இருப்பதாக சொல்கிறது; மறு பக்கம், அடிப்படையான சுகாதார வசதிகளை கூட அவர்கள் செய்து தரவில்லை. அவர்கள் விவசாயிகளோடு தான் நிற்கிறார்கள் என்றால், இருங்கிருப்பவர்களுக்கு உதவ வேண்டும். இந்த சூழலுக்கு நாங்கள் பழகிக் கொள்கிறோம், திரும்பி போக மாட்டோம்” என்கிறார்.

குளிர்காலத்தில், டெல்லியின் பகல்கள் கொடுமையாகவும், இரவுகள் மிக மோசமாகவும் இருக்கும். திக்ரி எல்லையில் எந்த விதமான சவால்களை சந்தித்தாலும், பாஜக புதிய விவசாய சட்டங்களை ரத்து செய்யும் வரை திரும்பி போகப் போவதில்லை என்று பெண்கள் சொல்கிறார்கள்.

(www.thewire.in இணையதளத்தில் வெளியான சிறப்புச் செய்தியின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்