Aran Sei

சிறுவனை தாக்கிய ஷ்ரிங்கி யாதவுக்குப் பிணை – இந்துத்துவா வன்முறையை இயல்பாக்குகிறதா உத்தர பிரதேசம்?

image credit : thewire.in

ன் குடிநீர் தாகத்திற்காக உ.பி.யின் காசியாபாத்தின் தாஸ்னாவில் உள்ள சிவ்சக்திதாம் கோவிலில் தண்ணீர் குடித்ததற்காக ஒரு முஸ்லீம் குழந்தையை அந்த கோவில் வளாகத்திலேயே தாக்கிய ஷ்ரிங்கி நந்தன் யாதவ் இப்போது பிணையில் விடுதலையாகி இருக்கிறான்.

உ.பி. காவல்துறை, இந்திய குற்றவியல் சட்டங்களின் பிணை பெற முடியாத, தேவையான பிரிவுகளை கைது ஆணையில் எக்காரணம் கொண்டும் குறிப்பிட மறுத்து விட்டதுடன், பிணை மனுவை எதிர்க்க வேண்டியது அவசியம் என்பதைக்கூட கண்டு கொள்ளாமல் விட்டு விட்டது. இதனால், ஒரு முஸ்லீம் இனத்தவர் என்பதாலேயே, ஒரு குழந்தையைக் கொடூரமாகத் தாக்கிக் காயப்படுத்தியதாகத் தன்னை பதிவு செய்து கொண்டுள்ள ஒரு மதவெறி வன்முறையாளன், தனது தாக்குதல் காணொளியைப் பெருமையாகத் தனது சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி சுற்றுக்கு விட்டவன், இப்போது மீண்டும் தனது வன்முறையை வெளிப்படுத்தவும், தான் ஏற்கனவே தாக்கிய குழந்தையின் விடயத்தில் மீண்டும் தலையிடவும் சுதந்திரம் பெற்றிருக்கிறான்.

நல்லது, இதுதான் அஜய் சிங் பிஷ்ட் நிர்வகிக்கும் உத்தர பிரதேசம். இந்த ஷ்ரிங்கி நந்தன் யாதவ் தாஸ்னாவில் உள்ள சிவ்சக்திதாம் கோவிலின் பூசாரியும், பல்வேறு தொடர் குற்றங்களை செய்துவருபவருமான யதி நரசிங்கானந்தின் ஆதரவாளன் ஆவான். இதற்கு முன்பு கூட, தான் பிடித்து வைத்திருந்த இளம் முஸ்லீம் ஒருவரை தாக்கும் காணொளியை பதிவு செய்துள்ளான். அந்தக் காணொளியில் மோஷின் என்ற பெயருடைய அந்த முஸ்லீம் இளைஞரை பயங்கரமான கத்தியால் மிரட்டுவதைக் காணலாம்.

“லவ் ஜிகாத்” சட்டங்களும் வன்முறை வெறுப்புப் பிரச்சாரமும் – ஒரு விரிவான பார்வை

தற்போது பிணையில் வெளிவந்துள்ள ஷ்ரிங்கி, அந்தக் குழந்தை கோவிலின் புனிதத்தைக் கெடுக்கும் வகையில் வேண்டுமென்றே கோவிலில் உள்ள சிவலிங்கத்தின் மீது சிறுநீர்கழிக்க முயன்றதை தடுத்து நிறுத்த முயன்றதாக நேர்காணல்களில் கூறி வருகிறான். நான் அத்தகைய ஒரு நேர்காணலை ‘சைபர் சிப்பாய்’ என்னும் ஒரு வலையொளியில் பார்த்தேன். அதே சமயம், நான் என்ன நடந்தது என்பதை விளக்கும் அந்தக் குழந்தையின் காணொளியையும் பார்த்தேன். ஷ்ரிங்கி அப்பட்டமாகப் பொய் சொல்கிறான் என்பதில் எனமனதில் எள்ளளவும் ஐயமில்லை. அவரது பொய்கள் அந்தக் குழந்தையின் நற்பண்பை படுகொலை செய்யும் அருவருப்பான முயற்சியாகும்.

கடந்த ஆண்டு வடகிழக்கு தில்லியை உலுக்கிய வன்முறைகளைத் தூண்டியதில் யாதவின் வழிகாட்டியான நரசிங்கானந்தின் பங்கு நன்கு ஆவணப்படுத்தப்படுள்ளது. அத்துடன் அவர் தனது சீடன் அந்த முஸ்லீம் குழந்தை, தாஸ்னா கோவிலின் புனிதத்தை தீட்டுப்படுத்தியதிலிருந்து காப்பாற்றியதாக கூறியதை பாராட்டுவதாக அண்மையில் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். மேலும் அந்த நேர்காணலில் அவரது சீடர் செய்த ஒரே தவறு, தனது செயலை காணொளிப் படுத்தியதுதான் என்றும், அதுதான் தற்போது தங்களுக்கு எதிரானதாகக் காட்டப்படுவதாகவும் கூறியுள்ளார்.

கல்லறை சுடுகாடு – ‘வெறுப்பு அரசியலை பரப்பும் பாஜக எம்பி சாக்ஷி மகாராஜ்’

சைபர் சிப்பாய், சுதர்சன் டிவி போன்ற சமூக ஊடக ஒளியலைவரிசைகள் (channels) கூட்டாக தாஸ்னா சிவசக்தி கோவிலை மையமாகக் கொண்டு இயங்கிவரும் இந்துத்துவா வன்முறை வலைப்பின்னல் என்பதுடன், தியாகி அகா யதி நரசிங்கானந்த சரஸ்வதி என்ற அந்த வழிகாட்டி, இன்னும் ஒருபடி மேலே சென்று ‘இடதுசாரிகள்’ ‘இந்துக்களை களங்கப்படுத்த’ முன்னரே திட்டமிட்டிருந்த ‘சதித்திட்டத்தின்’ ஒரு பகுதியாகத்தான் அந்தக் குழந்தை கோவிலுக்குள் அனுப்பப்பட்டது என்று வலியுறுத்துவதை தி வயர் அம்பலப்படுத்தி உள்ளது.

அந்தக் குழந்தை சிவலிங்கத்தின் மீது சிறுநீர் கழித்து கோவிலை தீட்டுப்படுத்தியதாகக் கூறுவதற்கு, மூன்று ஆண்டுகளுக்கு முன் (ஏப்ரல் 2018 லிருந்து) சுற்றுக்கு விடப்பட்ட காணொளியை அவர் முட்டுக் கொடுத்துள்ளார். அது ஆந்திர பிரதேசம் விசாகப்பட்டினத்தில் ஒரு இந்து கோவிலில் ஒரு சிறுவன் சிறுநீர் கழிப்பதை காட்டும் காணொளி. இதனை கடுமையான சோதனைக்குப் பின் ஆல்ட் நியூஸ் கண்டு பிடித்துள்ளது.

இந்துத்துவா வலைப்பின்னல்கள் இந்த ஆந்திரா காணொளியைப் பயன்படுத்துவதற்கு முன், நந்தன் யாதவ் தாஸ்னா கோவிலில் தாக்கியதாகக் கூறப்படும் சிறுவன் கோவிலில் திருடுவதற்காக நுழைந்ததாக அந்தக் கோவிலின் பூசாரி கூறியதாக ஒரு கதையைக் கட்டி விட்டன.

ஒரு குழந்தை மீது தான் நடத்திய வன்முறையை மறுபரிசீலனை செய்து மாற்றி நியாயம் கற்பித்த யாதவ், பழைய சிறுநீர் கழிக்கும் காணொளியை உடனிகழ்வாக விரிவாக்கிக் கொடுத்த பாஜக தலைவர் கபில் மிஸ்ரா (நரசிங்கானந்தாவுடன் மிக நெருக்கமானவர் என பொது வெளியில் அறியப்பட்டவர்), ஸ்வராஜ்யா இணையதளத்தின் ஆசிரியர் ஸ்வாதி கோயல் சர்மா ஆகியோர் மூன்றாண்டுகளுக்கு முந்தைய பழைய காணொளியை அண்மையில் நடந்த நிகழ்வின் ஆவணமாக காட்ட இந்துத்துவா சமூக ஊடகங்களுக்கு உதவி உள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதற்கு ஒரு முடிவு இருப்பதாகவே நமக்குத் தெரியவில்லை.

வெளிப்படையான வடிவமைப்பு

ஒரு வடிவமைப்பு இருப்பது தெளிவு. இந்து சிவ்சக்திதாம், அதன் தலைவரான யதி, ஷ்ரிங்கி யாதவ், தீபக் ‘இந்து’ மற்றும் அனில் யாதவ் (சோட்டே- இளையவன் என்றும் அழைக்கப்படும்) போன்ற இளைஞர்களை உள்ளடக்கிய அவரது முறைசாரா தீவிரவாதிகள் குழு, ஆகியோர் இந்துத்துவா சமூக ஊடகங்களில் பிரபலங்களாக மாற கடுமையாக ஆசைப்படுவதும், யதிமா, ஆஸ்த்தா மா மற்றும் ராகினி திவாரி போன்ற தீகக்கும் வெறுப்புப் பேச்சுக்களைப் பேசும் பெண்களை ஒரு இடத்தில் கூட்டி, ஒரு திட்டமிட்ட போர் தந்திரத்தை நடைமுறைபடுத்த பயிற்சி செய்யத் துவங்குவதும் தெளிவாகத் தெரிகிறது.

அந்தப் போர் தந்திரம் எளிய முஸ்லீம்களின் மீது ஏதாவது ஒரு சாக்கை வைத்துத் தாக்குதல்களைத் தூண்டுவது, அந்தத் தாக்குதல்களின் செய்திகளைப் பரப்புவது, அவர்கள் மீது பாதுகாப்பாக, இரக்கத்துடன் ஒப்புக்கு நடக்கும் காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் தாக்குதல்களை வெட்கக் கேடானவகையில் தாங்கிக் கொள்வது, அதனை எதிர்ச் செயலாக தங்களை “ஜிகாதிகள் பயங்கரவாதத்தால்” (இது முஸ்லீம்களின் இருப்பை குறிப்பதற்கு அவர்கள் பயன்படுத்தும் வழக்கமான நடைமுறை), பாதிக்கப்பட்டவர்களாகக் காட்டிக் கொள்வது, மேலும் அதனை ‘இடதுசாரிகளின் சதிதிட்டம்’ என்று கூறுவது என்பதே ஆகும்.

இந்த போர்தந்திரத்தின் வாதத்திற்கு தொடர்ந்த வெட்கக் கேடான தாக்குதல் மற்றும் அதிகரித்த அபத்தங்களுடன் கூடிய நியாயங்களை வெளிப்படுத்துவது தேவைப்படுகிறது. மூர்க்கத்தனம் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவு அதிகமாக பணம் கொட்டும். பயங்கரவாதத்தை இயல்பான நடைமுறையாக முழு அளவில் மாற்றுவதற்கான களத்தை தயாரிப்பதுதான் இதன் பின்னால் உள்ள வாதம். இதே நடைமுறையைத்தான் பாகிஸ்தானிலும், ஆப்கானிஸ்தானிலும் அதன் வழிகாட்டிகள் பயங்கர விளைவுகளுடன் பயன்படுத்தினார்கள்.

தாஸ்னாவில் உள்ள சிவ்சக்திதாம் ‘இந்துக்களுக்காக’ என்ற பெயரில் விடுக்கப்படும் அழைப்பை ஏற்று வரும் தன்னார்வலர்களுக்கு இரண்டு வருட தீவிர பயிற்சிக்காக பயிற்சியாளர்களை தேர்த்தெடுத்து வருகிறது.

எவர் ஒருவர் இந்த பயிற்சி பற்றி விளம்பரம் செய்ய விரும்புகிறார்களோ அவர்களின் உள்ளுணர்வுகளை சைபர் சிப்பாய் போன்ற ஒளியலைவரிசைகள் கண்டுபிடித்துவிடும். இது தரும் குறிப்பு என்னவெனில் -மிகவும் தெளிவாக- ஆயுதங்களை திறமையாக பயன்படுத்துவது எப்படி என்பதுதான். தாஸ்னா சிவ்சக்திதாம்தான் வெடிமருந்து கிடங்கு. பற்றவைக்கக் கோரும் ஆட்களுக்காக காத்திருக்கிறது.

எனினும், தனது இந்துத்துவா அடையாளங்களை வெளிப்படையாக அறிவிக்கும் ஒரு மனிதனால் ஒரு குழந்தை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் உடனடியாக அடையாளம் காண வேண்டும். அத்துடன் அவன் உத்தர பிரதேச காவல்துறையால் மீண்டும் வெளியில் விடப்பட்டுள்ளான் என்பதையும், அவன் மீண்டும் தன்னால் பாதிக்கப்பட்டவரைப் பற்றி பொய்யை பரப்பவும், வெறுப்பைத் தூண்டுவதையும் செய்வான் என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும்.

தாக்கப்பட்ட குழந்தைக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய நீதியை உறுதிசெய்ய ஏதேனும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையமும், உத்தர பிரதேச மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையமும் உடனடியாகப் பதில் கூற வேண்டும். இதே தேசிய ஆணையம்தான் கடந்த ஆண்டு நடந்த சிஏஏ எதிர்ப்புப் போராட்டத்தின் போது அங்கு குழந்தைகள் இருப்பது பற்றிய தனது ‘அக்கறையுடன்’ அந்த நகருக்குச் சென்றது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. மேற்கூறிய ஆணையங்கள், சிவ்சக்திதாம் இனிமேலும் குழந்தைகளை அவமதிக்கும் நிகழ்வுகளை ஊக்குவிக்காது என்பதை உறுதி செய்ய என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதை நமக்குக் கூற வேண்டியது அவசியம்.

ஒரு குழந்தையைக் தாக்குவது, அதன்பின் முன்னர் நடத்திய தாக்குதலை நியாயப்படுத்தும் வகையில் அந்தக் குழந்தையைப் பற்றி ஊடகத்தில் பொய்களைப் பரப்புவது ஆகியவையே எனது கருத்துப்படி குழந்தைகளை அவமதிப்பது தான்.

www.thewire.in இணையதளத்தில் சுத்தப்பிரதா சென்குப்தா எழுதியுள்ள கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்