Aran Sei

கோபட் காந்தி அப்சல் குருவுடன் சிறையில் தேநீர் அருந்தியது ஏன் கவனத்தைப் பெறுகிறது? – பிரியா ரமணி

62 வயதான கோபட் காந்தி, செப்டம்பர் 21, 2009 அன்று திகார் மத்திய சிறையில் உள்ள சிறை எண் 3-ன் உயர்-அபாய பிரிவில் நுழைந்தார். 2019-ம் ஆண்டில் அவர் பிணையில் விடுவிக்கப்படும் வரை ஐந்து மாநிலங்களில் ஏழு சிறைகளில், பத்தாண்டு கால சிறை வாசத்தின் தொடக்கமாக அது இருந்தது.

ஒடுக்கப்பட்ட சமுதாயங்கள் மத்தியில் பணிபுரிந்த செயல்பாட்டாளரான கோபட் காந்தி, உயர்மட்ட நக்சலைட் தலைவர் என மன்மோகன் சிங் அரசாங்கத்தால் 2009-ல் கைது செய்யப்பட்டார். நக்சலிசம் இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று மன்மோகன் சிங் 2010 இல் கூறியது பிரபலமான ஒன்று.

image credit : bloombergquint.com
image credit : bloombergquint.com

கோபட் காந்தி தனது சிறைச்சாலை நினைவுகளை எழுதியுள்ள “ஃபிராக்சர்டு ஃப்ரீடம்” (உடைந்த சுதந்திரம்) என்ற நூலில், 10 சிறைச்சாலைகளைக் கொண்ட பரந்து விரிந்த திகார் சிறைச்சாலையில் மரண தண்டனை கைதிகளுக்கான அதிகபட்ச பாதுகாப்பு சிறையில் நுழைந்தபோது, அவர் சந்தித்த முதல் கைதிகளில் அப்சல் குருவும் ஒருவர் என்று பதிவு செய்துள்ளார்.

மருத்துவப் படிப்பை பாதியில் விட்டு விட்ட அப்சல் குரு, 1990-களின் முற்பகுதியில் பல காஷ்மீர் இளைஞர்களைப் போல தானும் ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியில் சேர்ந்ததாகவும், சில வாரங்கள் எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குச் சென்றதாகவும், அந்த நாட்டில் ஏமாற்றமடைந்து திரும்பியதாகவும் 2006-ம் ஆண்டு காரவன் பத்திரிகையிடம் கூறியிருந்தார்.

2001-ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தாக்குதலில் அவரது பங்கு தொடர்பாக நீதிமன்றத்தால் குற்றம் உறுதி செய்யப்பட்டு 2002-ல் அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது.

image credit : hindustantimes.com
அப்சல் குரு – image credit : hindustantimes.com

1989-க்குப் பிறகு திகார் சிறையில் தூக்கிலிடப்பட்ட முதல் நபர் அப்சல் குரு. 2009 முதல் பிப்ரவரி 9, 2013 அன்று தூக்கிலிடப்படுவதற்கு முந்தைய நாள் வரை அப்சல் குருவும் கோபட் காந்தியும் ஆயிரத்துக்கும் அதிகமான தேநீர் கோப்பைகளுடன் தமது நட்பை வளர்த்துக் கொண்டனர்.

அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நாளில், மற்ற கைதிகள் தங்கள் சிறை அறைகளுக்கு வெளியே அனுமதிக்கப்படவில்லை. எனவே அப்சல் குரு தனது கடைசி கோப்பை தேநீரை தனியாகவே அருந்தினார்.

செயல்பாடு மூலம் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று நம்பிய ஒரு புரட்சிகர தம்பதியைப் (கோபட் காந்தி மற்றும் அவர் சிறையில் அடைக்கப்படுவதற்கு18 மாதங்களுக்கு முன்பு காலமான அவரது மனைவி அனுராதா காந்தி) பற்றிய ஒரு முக்கியமான கதை யில் அப்சல் குரு ஒரு சிறிய கதாபாத்திரம்தான் என்றாலும் கோபட் காந்திக்கும் அப்சல் குருவுக்கும் இடையேயான தினசரி தேநீர் குடிக்கும் நடைமுறை கருத்தைக் கவரும் சித்திரத்தை தருகிறது.

image credit : bloombergquint.com
கோபட் காந்தி – image credit : bloombergquint.com

“காலையில் சிறைக் கதவுகள் திறந்தவுடன் (கோடைக் காலத்தில் அதிகாலை 5.30, குளிர்காலத்தில் காலை 6 – 6.30) ஒரு பெரிய பாத்திரத்தில் தேநீர் கொண்டு வரப்படும். சிறை பேக்கரியில் இருந்து இரண்டு ரொட்டி துண்டுகளுடன் தேநீர் வழங்கப்படும்” என்று கோபட் காந்தி கூறுகிறார்.

“அப்சல் குரு ஒரு வெள்ளை தெர்மாஸ் பிளாஸ்கில் தேநீரை வாங்கி வருவார். தேநீர் கிட்டத்தட்ட வெந்நீரைப் போலத்தான் இருக்கும், எனவே நாங்கள் கேன்டீனில் இருந்து பால் பவுடரும் தேயிலை பைகளும் வாங்கி அதை ‘சரியான’ தேநீர் ஆக்குவோம்.”

“என்னை விட அவர் தேநீரை மிகவும் விரும்பினார்,” என்று கோபட் காந்தி கூறினார். “அடுத்த 45 நிமிடங்களுக்கு நாங்கள் அரட்டை அடிப்போம், நான் அவரிடம் இந்தியாவைப் பற்றிச் சொல்வேன், அவர் காஷ்மீர் பற்றி என்னிடம் கூறுவார், இஸ்லாம் உண்மையில் எதைக் குறிக்கிறது என்று சொல்வார்.”

தேநீர் அருந்திய பிறகு, அருகிலுள்ள, மரங்கள் நிறைந்த சிறை மைதானங்களில் அவர்கள் நடந்து செல்வார்கள்.

இந்த மைதானம் அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட பிறகு கைதிகள் பயன்படுத்த முடியாததாக மாறியது. இங்கு, பிரிவினைவாதத் தலைவரும் ஜம்மு & காஷ்மீர் விடுதலை முன்னணியின் இணை நிறுவனருமான மக்பூல் பட் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு அருகில், அப்சல் குருவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அப்சல் குருவின் நினைவாக அவரது குடும்பத்திற்கு எதுவுமே தரப்படவில்லை, அப்சல் குரு ஒவ்வொரு நாளும் உறுதியுடன் பராமரித்து வந்த சிறை நாட்குறிப்பு கூட அவர்களுக்குத் தரப்படவில்லை.

கோபட் காந்தியும் அனுராதா காந்தியும் பல பத்தாண்டுகளாக முக்கியமாக மகாராஷ்டிராவில் தலித்துகள் மத்தியில் செயல்பாட்டாளர்களாக பணியாற்றி வந்தனர். தலித் பாந்தர் இயக்கத்தின் போராட்டங்களுடன் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்கள் நாக்பூரில் ஒரு தலித் சேரியில் வாழ்ந்தனர். ஆனால், சாதாரண காஷ்மீரிகளின் போராட்டங்களைப் பற்றி கோபட் காந்தி பெரும்பாலும் அறிந்திருக்கவில்லை.

image credit : bloombergquint.com
திஹார் சிறை – image credit : bloombergquint.com

60 வயதுகளில் இருந்த கோபட் காந்தி, 30 வயதுகளில் இருந்த அப்சல் குருவை விட பல பத்தாண்டுகள் மூத்தவர் என்றாலும் அவர்களுக்கு இடையேயான உரையாடலில் அப்சல் குருவே அதிகம் பேசினார். ரூமி மற்றும் இக்பாலின் கவிதைகளையும் “முஸ்லீம் சகோதரத்துவம்” அமைப்பின் தலைவர்கள் எழுதிய புத்தகங்களையும் டூன் பள்ளியில் படித்த பார்சி மதத்தைச் சேர்ந்த கோபட் காந்திக்கு அப்சல் குரு அறிமுகப்படுத்தினார்.

அப்சல் குருவிடம் இருந்து முதன் முதலில் கேட்ட ரூமி கவிதையால் ஈர்க்கப்பட்ட கோபட் காந்தி, அனுராதா காந்தியின் ஆறாவது மரண ஆண்டு நினைவு நாளில் விழாவில் அவருக்கு ஒரு அஞ்சலி கவிதை எழுதினார்.

கோபட் காந்தியும் அப்சல் குருவும் அடக்குமுறை, கம்யூனிசம், சூஃபியிசம் ஆகியவற்றைப் பற்றி விவாதித்தனர். அப்சல் குருவின் வழக்கு விவரங்கள் பற்றி ஒருபோதும் விவாதிக்கவில்லை என்று கோபாட் காந்தி கூறுகிறார். “நான் தத்துவ கேள்விகளில் அதிக ஆர்வம் கொண்டிருந்தேன்,” என்று அவர் கூறுகிறார்.

சில சமயங்களில், அவர்களுடன் அதே சிறையில் இருந்த ரபீக் ஷா போன்ற பிற கைதிகளும் சேர்ந்து கொண்டனர் என்று கோபாட் காந்தி கூறுகிறார். ரபீக் ஷா 2017 ல் விடுவிக்கப்பட்டார்.

“எல்லோரும் ஏன் அப்சல் குரு மீது அவ்வளவு ஆர்வம் காட்டுகிறார்கள்?” கோபட் காந்தி கேட்கிறார்.

கரண் தாப்பருடனான அவரது நேர்காணலில், அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதைப் பற்றி, அப்சல் குரு தூக்குமேடைக்குச் அழைத்துச் செல்லப்பட்ட போது சிறை ஊழியர்கள் ஏன் அழுதார்கள் என்பது உட்பட பல கேள்விகளை கரண் தாப்பர் கேட்டிருக்கிறார்.

“அது என்னுடைய புத்தகத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே” என்கிறார் கோபாட் காந்தி.

அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதற்கு பிந்தைய ஆண்டுகளில், அவர் தூக்கிலிப்பட்டது நீதியின் தோல்வியா அல்லது வழக்கமான கதையான போலீசால் கட்டாயப்படுத்தி பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தின் விளைவா அல்லது அவருக்கு சரியான சட்ட பிரதிநிதித்துவம் இல்லாததன் விளைவா என்றும் அரசியல் இழுபறியின் விளைவா என்றும் மேலும் மேலும் அதிகமாக எழுப்பப்படும் கேள்விகள் காரணமாக இருக்கலாம்.

அப்சல் குருவின் நினைவு ஏன் நம்மை இன்னும் துரத்துகிறது என்று 2017-ம் ஆண்டில், கட்டுரையாளர் அபூர்வானந்த் கேள்வி எழுப்பினார். “உச்ச நீதிமன்றம் அவரைத் தூக்கிலிட முடிவு செய்தபோது, அதன் ஒரே காரணமாக  ‘சமூகத்தின் கூட்டு மனசாட்சியை ’திருப்திப்படுத்துவது’ என்பதே இருந்ததாலா?”.

இந்தக் கேள்விக்கு கோபாட் காந்தி தன்னை அறியாமல் பதிலளிக்கிறார்.

தொலைபேசியில் தனது மனைவியிடம் கஜல்களைப் பாடிய, ரூமியின் ஆறு தொகுதிகளைப் படித்த, வாசிப்பை நேசிப்பவராக, நோம் சாம்ஸ்கியை மேற்கோள் காட்டிய, ஒரு மனிதாபிமானம் நிரம்பிய ஒரு மனிதரைப் பற்றிய சித்திரத்தை கோபட் காந்தி தருகிறார். நம்மால் கைவிடப்பட்ட ஒரு மனிதரைப் பற்றிய அப்பட்டமான நினைவூட்டல் என்ற வகையில் கோபட் காந்தியின் சித்திரம் அவரது புத்தகத்தில் தனித்து நிற்கிறது.

2020-ம் ஆண்டில், பல ஆண்டுகளுக்கு முன்பு அப்சல் குரு சொன்ன ஒன்று திடீரென்று புதிய முக்கியத்துவத்தைப் பெற்றது. சிறையில் இருந்து அளித்த முதல் பேட்டியில், தேவிந்தர் சிங் என்ற மூத்த போலீஸ்காரர் தன்னை இயக்கியதாக கேரவன் பத்திரிகையின் வினோத் ஜோஸிடம் அப்சல் குரு கூறினார்.

தேவிந்தர் சிங் “அவருக்காக ஒரு சிறிய வேலையை செய்யச் சொன்னார்… ஒரு நபரை நான் டெல்லிக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று அவர் கூறினார்.” என்று அப்சல் குரு கூறியிருந்தார். அப்சல் குரு இதே விஷயத்தை முன்பு திகாரில் இருந்து தனது வழக்கறிஞருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார், ஆனால் அது ஒருபோதும் விசாரிக்கப்படவில்லை.

பயங்கரவாதக் குழு ஹிஸ்புல் முஜாஹிதீனுக்கு உதவியதாகவும், இந்தியாவுக்கு எதிராக “போரை நடத்தியதாகவும்” தேவிந்தர் சிங் மீது சட்டவிரோத (செயல்பாடுகள்) தடுப்புச் சட்டம் என்ற பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமை கடந்த ஆண்டு குற்றம் சாட்டியது. எப்போதுமே நிழல்களில் மறைந்திருந்த கேள்வி திடீரென்று கவனம் பெற்றது: அப்சல் குரு சொன்னது உண்மையாக இருந்திருக்குமா?

இன்றுவரை, அப்சல் குருவின் நினைவு நாளில் காஷ்மீரில் மொபைல் இணைய சேவைகள் தடை செய்யப்படுகின்றன.

கூடுதலாக, அப்சல் குரு பற்றிய கோபட் காந்தியின் சித்தரிப்பு, மனித உரிமை ஆர்வலர்கள், மூத்த குடிமக்கள், மாணவர்கள் ஆகியோர் அரசுக்கு எதிராக பேசியதற்காக சிறையில் வாடும் நேரத்தில் நம்மை இன்னும் அதிகமாக பாதிக்கிறது. சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் உறவாடும் இரண்டு அறிமுகமான நபர்களின் தோழமை நமக்கு மனச்சோர்வை ஏற்படுத்தும் அளவுக்கு பழக்கமான எதிரொலிகளைக் கொண்டுள்ளது:

image credit : bloombergquint.com
செயல்பாட்டாளரும் வழக்கறிஞரும் ஆன அருண் ஃபெரைரா – image credit : bloombergquint.com

வெர்னான் கோன்சால்வ்சும், அருண் ஃபெரைராவும் நோய்வாய்ப்பட்ட வரவர ராவிற்கு உதவுவது; ஒன்றாக சிறையில் அடைக்கப்பட்ட போது அனிர்பன் பட்டாச்சார்யாவும் உமர் காலித்தும் நடத்திய நம்பிக்கை அளிக்கும் உரையாடல்கள்; தேவங்கனா கலிதா, நடாஷா நர்வால், குல்பிஷன் பாத்திமா ஆகியோர் சஃபூரா சர்கரின் துணிகளை துவைத்துக் கொடுப்பது ஆகியவற்றை நமக்கு அது நினைவூட்டுகிறது.

இந்தச் சித்திரங்கள் அரசியல் கைதிகள் திகாரில் நிரப்பப்பட்ட அவசரநிலை காலத்தையும் நினைவூட்டுகின்றன. கிறிஸ்டோஃப் ஜாஃப்ரெலோட் & பிரத்தினாவ் அனிலின் “இந்தியாவின் முதல் சர்வாதிகாரம்” என்ற நூலில், கைதிகளின் “சாதி அமைப்பு” பற்றிய கவனத்தை கவரும் ஒரு விவரிப்பை நாம் படிக்கலாம்.

மிக முக்கியமாக, கோபட் காந்தியின் கதை இந்திய சிறைச்சாலை அமைப்பில் சீர்திருத்தங்கள் செய்வது நீண்ட காலமாக தள்ளிப் போடப்பட்டுள்ளது என்பதற்கான நினைவூட்டலாகும், அங்கு இதுவரை எந்தவொரு குற்றத்திற்கும் தண்டனை பெறப்படாத, முகமற்ற, பெயரிடப்படாத விசாரணை கைதிகள் பல ஆண்டுகளாக வாடிக் கொண்டிருக்கின்றனர்.

கோபட் காந்தி, அனுராதா காந்தி ஆகியோரின் கதை அமைப்பை மாற்றுவதற்கு எவ்வளவு கடின உழைப்பு தேவை என்பதைப் பற்றியதாகவும் உள்ளது.

அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட பிறகு, அவரது வெள்ளை தேநீர் பிளாஸ்க்கை தங்களுக்கு தரும்படி கோபட் காந்தியும் ரபீக் ஷாவும் சிறை அதிகாரிகளிடம் கோரினர். அவர்களின் கோரிக்கை மறுக்கப்பட்டது.

bloombergquint.com இணையதளத்தில் பிரியா ராமணி எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்