Aran Sei

உழைப்பில்லாமல் ஆதியோகி சிலை உருவாகியிருக்குமா?: ஜக்கியின் கம்யூனிசம் குறித்த கருத்திற்கு பதில் – இரா.முருகவேள்

(நியூஸ் 18 தமிழ்நாடு இணையதளத்தில், ‘கம்யூனிசம், தனி உடமை, ஆன்மீகம்… சத்குருவின் பார்வை !’ என்ற தலைப்பில் வெளியான ஜக்கியின் நேர்காணலில், கம்யூனிசம் பற்றி அவர் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில், எழுத்தாளர் இரா.முருகவேள் எழுதியுள்ள கட்டுரை)

ம்யூனிசம், சோஷலிசம் பற்றிய ஜக்கி வாசுதேவின் கருத்துக்கள் அனைத்தும் வழக்கமான பொதுப்புத்தியில், வலதுசாரி நடுத்தரவர்க்க நபர்கள் பேசுவதுதான். எனவே கேலி கிண்டல் செய்யாமல் ஜக்கி சொல்வது சரியா என்று பார்க்கலாம்.

  1. மார்க்ஸுக்கு மனித இயல்பு தெரியாது என்கிறார் ஜக்கி.

ஜெர்மனியில், காடுகளில் திருடியதற்காக திடீரென்று பல்லாயிரம் விவசாயிகள் கைது செய்யப் பட்டனர். சிலர், திருடர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றனர். சிலர், விவசாயிகள் பாவம். மன்னித்து விட்டுவிடலாம் என்றனர். மார்க்ஸ் மட்டுமே ஏன் அவர்கள் திருடுகிறார்கள் என்று தேடுகிறார். அப்போது காடுகள் கிராமங்களின் பொதுச் சொத்தாக இருந்தன. அப்போது காடுகளில் சுள்ளி பொறுக்குவது விவசாயிகளின் உரிமையாக இருந்தது. இப்போது காடுகள் தனிச்சொத்தாக மாற்றப் பட்டவுடன் விவசாயிகள் தங்கள் பாரம்பரிய உரிமையை நிலைநாட்டுவது திருட்டாகக் கருதப் படுகிறது என்ற உண்மையைக் கண்டடைந்தார். இங்கிருந்தே தனிச்சொத்து, பொது உரிமை போன்றவை குறித்த மார்க்ஸின் தேடல் தொடங்கியது.

கொஞ்சம் மார்க்சிய நூல்களைப் படித்து இருந்தாலும் மனித இயல்பு பற்றிய விவாதம் ஆய்வுகள் எந்த அளவுக்குச் செய்யப்பட்டிருக்கின்றன என்பது தெரிந்து இருக்கும். குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் காதல், ஒருவருக்கு ஒருவர் என்று வாழ்தல் ஆகியவை மனித இயல்பா இல்லையா என்று ஆராய்ந்து எங்கெல்ஸ் விரிவாக எழுதியிருப்பார்.

ஜக்கி சொல்லும் மனித இயல்பு என்பது மனிதர்கள் சுயநலமானவர்கள், திருடுபவர்கள், அடித்துப் பிடுங்குபவர்கள் அவர்களை தியானம் மூலமே திருத்த முடியும் என்பது.

சுயநலம் பிறவியிலேயே வருகிறதா அல்லது சமூக சூழலால் உருவாகிறதா என்று தேடுவது மார்க்சியம். பிளட் பிரஷ்ஷருக்கு மாத்திரை கொடுக்கும் அலோபதி மருத்துவர் வாக்கிங் போகச் சொல்வார். நன்றாகத் தூங்க வேண்டும் என்பார். வாழ்க்கையைக் கொஞ்சம் நிதானமாக்கிக் கொள்ளுங்கள் என்பார். அதாவது மாத்திரை மட்டும் போதாது. பிரஷ்ஷர் ஏற்படுவதற்கான சூழலை மாற்றிக் கொள்ளுங்கள் என்பார். மார்க்சியம் சொல்வது இதுதான்.

அதுசரி, மனிதர்கள் ஏன் திருடுகிறார்கள், வெறுக்கிறார்கள் என்று ஜக்கியால் ஏன் யோசிக்க முடியவில்லை?  அப்படிச் சிந்தித்தால் அவருக்குச் சிக்கலாகிவிடும்.

ஜக்கி ஆசிரமத்தை ஒட்டி உள்ள கிராமங்களில், அவர் மேகத்தை மந்திரம் போட்டுக் கட்டி வைத்திருக்கிறார், அதனால்தான் மழை பெய்வதில்லை என்று மக்களிடையே வதந்தி உலவுகிறது. பழங்குடிகளும், செயல்பாட்டாளர்களும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும், சிறுவிவசாயிகளும் அவரை  வெறுக்கிறார்கள். இது அவர்கள் இயல்பு. மனிதர்கள் கெட்டவர்கள் என்று கடந்து போவது அவருக்கு பாதுகாப்பானது. ஆய்வு செய்தால் சிக்கல் அல்லவா வரும்?

சரி, அவர் திருப்திகாக விட்டுக் கொடுக்கலாம். மார்க்ஸுக்கு மனித இயல்பு தெரியாது. லெனினுக்குத் தெரியாது, மாவோவுக்குத் தெரியாது.

அட்லருக்கு தெரியாதா? தாழ்வு மனப்பான்மை பற்றிய ஆய்வுகளின் தந்தை எனப்படும் உளவியல் நிபுணர் அட்லரை ஜக்கிக்குத் தெரியுமா? அவரது அரசியல் தெரியுமா? தெரிந்து இருந்தால் இந்தக் முடிவுக்கு அவர் வந்திருக்க மாட்டார். சிகர்லெமர் போன்ற நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளின் பங்களிப்பால்தான் மார்க்ஸ் தனது சிந்தனை முறையை உருவாக்கினார் என்பது ஜக்கிக்குத் தெரியுமா?

குடியுரிமை திருத்தச் சட்டம் – ஜக்கி வாசுதேவை பாஜக எப்படி பயன்படுத்தியது?

  1. மனிதர்கள் சுயநலக்காரர்கள். மனிதர்கள் தங்களிடம் உள்ளவற்றை ஒரு போதும் பகிர மாட்டார்கள். இல்லாதவர்கள் அடித்துப் பிடுங்குவதால் அராஜகம் நிலவுகிறது. இந்த மனித இயல்பை மார்க்ஸ் புரிந்து கொள்ளவில்லை என்கிறார் ஜக்கி.

இரண்டு சட்டை இருக்கே அதில் ஒன்றை இல்லாதவருக்குக் கொடுப்பாயா என்று காங்கிரஸ், திமுக, அதிமுக, இப்போது பிஜேபி காரர்கள் காலங்காலமாகக் கேட்டு வருவதைத்தான் ஜக்கியும் கேட்கிறார்.

100 கோடி சம்பாதிக்கும் முதலாளி அதைப் பகிர்ந்து கொள்வாரா? என்கிறார்.

சோஷலிசம் என்பது அது அல்ல. ஒருவர் 100 கோடியும், மற்றவர்கள் 30,000 ரூபாயும் மாதம் மாதம் சம்பாதிக்கும் நிலையில் வைத்திருப்பது சோஷலிசம் அல்ல.

தொழிலாளர்களுக்குக் குறைவாகக் கொடுத்து நுகர்வோரிடம் அதிகமாகப் பெற்று 100 கோடி சேர்ப்பது முதலாளித்துவம். ஜக்கி சொல்லும் சந்தைப் பொருளாதாரம் இதுதான்.

எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும்? வேலை நிலைமைகள் எப்படி இருக்க வேண்டும்  என்று தொழிலாளர்களிடம் விவாதிக்கப்படுவதில்லை. விற்கப்படும் பொருளின் விலை எப்படி நிர்ணயிக்கப்படுகிறது, தரம் எப்படி இருக்க வேண்டும்? மூலப் பொருட்களை முதலாளி என்ன விலைக்கு எங்கிருந்து, எப்படிப் பெற்றார் என்பது பற்றியெல்லாம் நுகர்வோரிடம் சொல்லப்படுவதில்லை. இதெல்லாம் செய்வதுதான் சோஷலிசம். இது கல்வி, மருத்துவம், கட்டக்கலை, பொறியியல் அனைத்துக்கும் பொருந்தும்.

டாடா, பிர்லா போல அபினி ஏற்றுமதி செய்தோ, அம்பானி போல கோல்மால் செய்தோ, வட்டித் தொழில் நடத்தியோ, பண்ணையடிமைகளை கூலியில்லாமல் வேலை வாங்கியோ சேர்க்கப்பட்ட மூலதனத்தை ஒரு தொழிலில் முதலீடு செய்தவதால் ஒரு முதலாளி அல்லது கார்ப்பரேட் கம்பெனி இப்படி சர்வாதிகாரமாக நடந்து கொள்ளும் உரிமையைப் பெறுகிறது. இது மக்கள் திரளில் பெரும்பகுதியை பாதித்து இறுதியில் முதலாளியையும் பாதிக்கிறது.

உதாரணமாக கோல்கேட் பற்பசையை ஒரு கார்ப்பரேட் கம்பெனி தயாரிக்கிறது. மேனேஜிங் டைரெக்டர்கள் தனி விமானங்கள், பண்ணை வீடுகள், விருந்துகள், உலகின் கலைப் பொக்கிஷங்கள், நவரத்தினக் கற்கள் ஆகிவற்றைப் பெறுவதற்காக மிக மிக உயர்ந்த சம்பளத்தைத் தங்களுக்கு ஒதுக்கிக் கொள்கின்றனர். அம்பானியின் அண்டிலியா என்ற வீட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

இதனால் பற்பசை விலை உயர்கிறது. தொழிலாளர்களுக்கும் முடிந்தவரை சம்பளத்தைக் குறைத்துக் கொடுக்க முயல்கிறார். இதனால் நாட்டின் பலகோடி நுகர்வோர் பற்பசை வாங்க முடியாத நிலை இருக்கிறது.

எனவே அந்த விலை கொடுத்து வாங்கும் சக்தி குறைந்த அளவுள்ள நடுத்தர வர்க்கத்தைக் கவர பெரும் பெரும் தொகைகள் கொடுத்து சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோரை கொண்டு விளம்பரம் செய்கின்றனர். பொருளின் விலை மேலும் உயர்கிறது. மேலும் அதிக நுகர்வோர் இதை வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது.

எனவே போட்டியைச் சமாளிக்க அரசை வசப்படுத்துகின்றனர். குரோனி கேபிடலிசம் உருவாகிறது. போட்டி முதலாளியை ஒழிப்பதே சந்தையில் தங்கி நிற்கும் வழி என்று முதலாளி உணர்கிறார். தோல்வியடையும் முதலாளிகள் வங்கிகளைக் காலி செய்துவிட்டு நாட்டை விட்டு ஓடுகின்றனர். பல்லாயிரம் நுகர்வோர் போண்டியாகின்றனர். எதையும் வாங்க முடியாத நிலை வருகிறது.

அடுத்ததாக சிறுமுதலாளிகள் ஒழிக்கப்படுகின்றனர். மோனோபோலி எனப்படும் ஏகபோகம் உருவாகிறது. காளி மார்க் சோடா, கோலி சோடா, போன்றவை இப்போது எங்கே? எண்ணற்ற சோப்புக் கம்பெனிகள் என்னவாயின? ஓரிரு பஸ் வைத்து நடத்திய சிறுமுதலாளிகளும், லேத் ஓனர்களும், துணிக்கடை ஓனர்களும் கடைக்காரகளும் என்னவாயினர்? ஒவ்வொரு நகரிலும் இருந்த சிந்தாமணி போன்ற   கூட்டுறவு நிறுவங்கள் என்னவாயின?

ஜக்கி எந்த முதலாளியின் நியாயத்தைப் பேசுகிறார்?

லாபவெறியால் ஏற்படும் நெருக்கடியைச் சமாளிக்க மேலும் மேலும் விளம்பரம், மேலும் ஊழல், திசை திருப்ப மதவெறி… சாதி வெறி … வேலைக்குப் போகும் பெண்கள் உரிமைப் போராட்டத்தில் இறங்காமல் தடுக்க ஆணாதிக்கம் . … இதுதான் ஜக்கி சொல்லும் நவீன சந்தைப் பொருளாதாரம்.

  1. பிரச்சினை பகிர்ந்து கொள்வதா இல்லையா என்பது அல்ல. அவர் 100 கோடி சேர்ப்பது நியாயமான வழியிலா? ஜனநாயக பூர்வமான வழியிலா என்பதுதான்.

மூலதனம் திரட்டுவதில் மென்மேலும் வளர்த்தெடுப்பதில் அநீதியான முறைகள் பயன்படுத்தப்படுகின்றனவென்றால் அதைத் தடுப்பதுதானே சரியானது? இதில் மார்க்ஸ் எங்கே வருகிறார்?

மனிதர்களின் உழைப்புதான் அனைத்தையும் உருவாக்குகிறது. ஜனநாயகப்பூர்வமாக அவர்களுக்குரிய கூலியை கொடுத்தால் முதலாளியிடம் இவ்வளவு பெரிய தொகையில் பணம் சேர்வது சாத்தியமில்லை. முதலாளியிடம் சேர்ந்த 100 கோடியின் பின்னால் உள்ள சுரண்டலுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் இருப்பதால் மட்டும் முதலாளி நியாயவான் என்று ஜக்கி புரிந்து கொள்வாரெனில் பிரச்சினை ஜக்கியிடம்தானேயொழிய, மார்க்ஸிடம் இல்லை.

  1. அடுத்ததாக தியானம் ஆன்மீகம் போன்ற முறைகளின் மூலம் முதலாளிகளைத் திருத்தி பகிர்ந்து கொள்ளச் செய்வதுதான் சரி என்கிறார். ஜக்கியிடம் முரண்பாடு இருக்கிறது. முதலாளித்துவத்தை ஆதரித்த அவர் அவர்களைத் திருத்த வேண்டும் என்கிறார். எந்தத் தவறும் இழைக்காதவர்களை ஏன் திருத்த வேண்டும்?

இந்தத் திருத்தும் முறை குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளாகப் பரீட்சித்துப் பார்க்கப் பட்டு வந்துள்ளது. சொர்க்கத்தில் பணக்காரன் நுழைய முடியாது, ஆசையைக் கைவிடுங்கள் என்றெல்லாம் இயேசு, புத்தர் சொல்லியதுதான்.

வணிகன் தனது நந்தவனத்தின் தரையெல்லாம் தங்கத்தால் நிரப்பி புத்தரை வரவேற்கிறான். லிச்சாவிப் பழக்குடிகளை அஜாத சத்ரூ கொன்று குவிப்பதை புத்தரால் வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது.

இவ்வளவு ஏன் இந்த ஜக்கி கோவையில் தான் இருக்கிறார். தியானம் ஆன்மீகம் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார். ஆனால் மில்கள் இழுத்து மூடப்படுகின்றன. தொழிலாளர்கள் கோர்ட்டுக்கு அலைகின்றனர். ஜக்கி ஆசிரமத்துக்கு வராத முதலாளி கிடையாது, பேசி திருத்த வேண்டியதுதானே?

ஜக்கி ஆசிரமம் குறித்தே பழங்குடியினர் சிலர், செயல்பாட்டாளர்கள் சிலர் கோரிக்கை வைக்கின்றனர். அவர்கள் கேட்பது தவறாகவே இருக்கட்டும். மனித நேயத்துடன் ஜக்கி விட்டுக் கொடுக்கலாமே?

முடியாது. ஒருவருக்கு விட்டுக் கொடுத்தால் அந்த பட்டியல் கூடும். நிலங்கள் வாங்கப்பட்ட முறைகள் கேள்விக்குள்ளாகும். ஜக்கி பலவீனம் காட்டினால் அரசை நடத்துபவர்கள் ஜக்கியை நம்ப மாட்டார்கள். வேறு சாமியாரைத் தேடிப் போய்விடுவார்கள். கொஞ்சம் மென்மைப் போக்கு கொண்ட வேதாத்ரி மகரிஷியை விட்டுவிட்டு கடுங்கோட்பாட்டாளரான ஜக்கியிடம் வந்தவர்கள்தானே அவர்கள்.

ஜக்கி தனது நிறுவனங்களைக் காக்க கடுமையான நிலை எடுத்தே ஆகவேண்டும். விட்டுக் கொடுத்தால் அனைத்தையும் விட்டுக் கொடுக்க வேண்டும். ஜக்கி தியானம் செய்கிறாரா, மனித நேயம் உள்ளவரா, இல்லையா என்பது அல்ல பிரச்சினை.

அத்தனையும் அல்லது எதுவும் இல்லை என்பதே முதலாளித்துவ சிஸ்டம்.

மூக்குத்தி அம்மன் : புனைவின் அரசியல் – பா.பிரேம்

  1. அடுத்ததாக முதலாளிகளுக்கு வரி போட்டு அவர்கள் ஈட்டுவதில் 90 சதவீதம் கைப்பற்ற வேண்டும் என்கிறார். அப்பப்பா அவர் பேச்சில் எத்தனை முரண்பாடுகள்?

இதேதான் சோவியத் யூனியனில் செயல்படுத்தப்பட்டது. சீனாவில் புதிய ஜனநாயக கால கட்டத்துக்குப் பிறகு செயல்படுத்தப்பட்டது. சிறு, நடுத்தர முதலாளிகள் மீது ஒருபோதும் வன்முறையைப் பயன்படுத்தக் கூடாது என்ற சோவியத், சீன நிலைபாடுகள் பற்றி கொஞ்சமாவது தெரிந்து கொண்டு பேசுங்கள் சுவாமி ஜி. ஒரே ஒரு திருத்தம். 90 சதம் கைப்பற்றபப்டவில்லை. அதைவிடக் குறைவாகவே கைப்பற்றப்பட்டது.

முதலாளித்துவ சொர்க்கமான இங்கிலாந்தின் பேபியன் சொஸைடி கூட இதே கோட்பாட்டைக் கொண்டிருந்தது. பெர்னாட் ஷா, டி.எச்.லாரன்ஸ் போன்றார் இதில் ஈடுபாடு கொண்டிருந்தனர்.

அடுத்து ஒரு கேள்வி.

ஜக்கி உயர்த்திப் பேசும் சந்தைப் பொருளாதாரம் இந்த வரிவிதிப்பைக் கடுமையாக எதிர்க்கிறதே? ஜக்கியின் நண்பர்களான கார்ப்பரேட்டுகளும், பிஜேபியும் இதை ஒப்புக் கொள்ளுமா? ஒப்புக் கொள்ளாவிட்டால் அவர்களுக்கு தியானம் சொல்லிக் கொடுத்து ஜக்கி திருத்துவாரா? இதுவரை அப்படி என்னென்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளார்?

அபத்தமாக வாய்க்கு வந்ததைப் பேசும் உளறல்களைத்தான் ஜக்கி தன்னுடைய போதனையாக கொண்டிருக்கிறார்.

  1. சோஷலிசம் என்பது என்ன?

ஒருவர் மற்றவரைக் கொள்ளையடிக்க வாய்ப்பில்லாத அமைப்பை ஏற்படுத்துவதுதான் சோஷலிசம்.

முதலாளித்துவம் அராஜகமாக இருக்கிறது என்கிறார் மார்க்ஸ்.  மோட்டார் பைக்குக்குத் தேவை அதிகம் இருக்கிறது என்றால் எல்லா முதலாளிகளும் மோட்டார் பைக் உற்பத்தியில் குவிகின்றனர். முதலாளி போட்டியைச் சமாளிக்க, பொருளின் விலையை குறைக்கும் நிர்பந்தத்ததிற்கு ஆளாகி, கொத்தடிமை போன்ற முறைகளைச் சார்ந்து இருக்கிறார். பல முதலாளிகள் இதில் இறங்குவதால் கச்சாப் பொருட்களின் விலை கூடுகிறது. விளம்பரம் போக்குவரத்து செலவு கூடுகிறது. போட்டி கடுமையாகிறது. ஒருவர் வெல்கிறார். மற்றவர்கள் அழிகின்றனர். மக்களுக்குத் தரமான பைக்  குறைந்த விலையில் கிடைப்பதில்லை. பெரும்பாலான மக்கள் அது இல்லாமலேயே வாழ்கின்றனர்.

சோஷலிச உற்பத்தி என்பது இரண்டு  பைக் வைத்திருப்பவர்கள் அதை இன்னொருவருக்குக் கொடுத்து நிலைமையைச் சமாளிப்பது அல்ல. மாறாக மக்களுக்கு எத்தனை  பைக் வேண்டும், என்ன விலையில் வேண்டும் என்பதைக் கணக்கிட்டு அதற்கேற்ற தொழில் நுட்பத்துடன், விலையில் திட்டமிட்டுத் தயாரிப்பது.

பத்தாயிரம் பேருக்கு  பைக் தேவை என்றால் பல தரங்களில் அவற்றைத் தயாரித்து சிலருக்கு கேவலமான தரம், சிலருக்கு தங்கக் கைப்பிடி என்று தயாரித்து யாருக்கும் முழுமையாகக் கிடைக்காமல், அல்லது விற்காமல் கிடங்கில் கிடக்கச் செய்வது முதலாளித்துவ சிஸ்டம்.

பத்தாயிரம்  பைக் தேவை என்றால் திட்டமிட்டு பத்தாயிரம்  பைக் தயாரித்து அனைவருக்கும் வழங்குவது சோஷலிச பெருவீத உற்பத்தி. இங்கே லாபம் குறிக்கோள் இல்லை. மக்களின் தேவையே உற்பத்தியின் குறிக்கோள். இந்தப் பெருவீத உற்பத்தியால்தான் மலிவு விலையில் பொருட்களை உற்பத்தி செய்து குவிக்கும் சோஷலிச முறையை, இப்போது முதலாளித்துவமாக மாறியுள்ள சீனா பயன்படுத்தி சந்தையை ஆக்கிரமிக்கிறது. முதலாளித்துவ நிறுவனங்கள் அந்த அமைப்பு முறையைப் பயன்படுத்திக் கொள்ள சீனா விரைகின்றன. அதே நேரம் சீனப் பொருட்கள் தரமற்றவை என்று பிரச்சாரமும் செய்கின்றன.

  1. ஆலைகளை தொழிலாளர்களும், நிலங்களை விவசாயிகளும், கல்லூரிகளை ஆசிரியர்களும், பெற்றோரும், மாணவர்களும் நிர்வகிப்பது என்பதே சோஷலிச ஜனநாயகம்.

அரசில் மக்கள் பங்கு பெறுவதே ஜனநாயகம். இப்போது குடிசை மாற்று வீடுகள் 400 சதுரடியில் கட்டப்பட வேண்டும் என்று அரசும் நீதிமன்றமும் சொல்கின்றன. இது இன்னும் செயல்படுத்தப்படவில்லை. இன்றுவரை 300 க்கும் குறைவான சதுரடியிலேயே வீடுகள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அது இருக்கட்டும். ஆனால் இந்த முடிவு யார் எடுத்தது?

இந்த முடிவை மக்களும், அரசும் இணைந்து சிந்தித்து எடுக்க வேண்டும் என்பதே சோஷலிசம்.

  1. 100 கோடி ரூபாயை முதலாளி விட்டுக் கொடுப்பாரா என்று ஜக்கி கேட்கிறார். கொடுப்பார். எப்படி தெரியுமா?

நாடு முழுவதும் ஒரே கல்வி, ஒரே மருத்துவம், ஒரு சிலவகையான கார்கள், சமத்துவமும் சுதந்திர உணர்வும் கொண்ட பெண்கள் என்று  ஏற்பட்டால் 100 கோடியால் என்ன பயன்? விட்டுக் கொடுப்பார். தனது மகனை தனிவிதமான இண்டர்நேஷல் பள்ளியில் சேர்க்க முடியாது என்றால் ஏன் அவர் 100 கோடி சேர்க்க வேண்டும்? பென்ஸ்காரை அரசு உற்பத்தி செய்வதில்லை. ஆல்டோ 800 காரும் தயாரிப்பதில்லை. தேவையான வசதிகள் கொண்ட ஸ்விஃப்ட் ரக கார்களை சூழலுக்கு ஏற்ப அரசு தயாரிக்கிறது என்றால், 100 கோடியை அவர் ஏன் ஏமாற்றி, போராடி சேர்க்க வேண்டும்?

அடித்துப் பிடுங்குவது, கொலை செய்வது, போண்டியாக்குவது, ஏமாற்றுவது என்பது முதலாளித்துவத்தின் இயல்பு. சோஷலிசம் இப்படிப்பட்டது அல்ல.

” இசுலாமிய வெறுப்பின் குடியரசு ” – புத்தக விமர்சனம்

  1. முதலாளித்துவம் வன்முறைமயமானது. இது உருவாக்கும் ஏற்றத் தாழ்வான நிலைமைகளால் ஒவ்வொரு நாளும் பல்லாயிரம் பேர் உயிரிழக்கின்றனர். கொலைகள், தற்கொலைகள், பசி, பட்டினி, போதுமான மருத்துகள் கிடைக்காமை போன்றவற்றால் மரணங்கள் நிகழ்கின்றன. வன்முறை அன்றாட வாழ்வாகிவிட்டது. புறநகர் பகுதிகளில் இரும்பு கிரில் கதவு இல்லாமல் குடியிருக்க முடியாது என்ற நிலை உள்ளது. இந்த வன்முறையை ஜக்கி ஏன் பேசவில்லை?

கோவையில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 100 திருமணமான பெண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆணாதிக்கம், வறுமை, சொத்துரிமையின்மை ஆகியவையே காரணம். என்றால் முதலாளித்துவம் ஏற்படுத்தும் வன்முறையின் கொடூரத்தின் வீச்சு எந்த அளவுக்கு உள்ளது என்பதைப் பற்றி ஜக்கி பேசட்டும்.

பலமுறை பொய் என்று நிரூபிக்கப்பட்ட ஸ்டாலின் கொலைகள் பற்றி பிறகு பேசலாம். நம்மை நாம் பார்ப்போம்.

  1. பேராசிரியர் தனது சொத்தை தன் மகனுக்குக் கொடுக்க விரும்புகிறார். என்கிறார் ஜக்கி.

ஆமாம். அதில் என்ன தவறு. அவர் ஏன் ஜக்கிக்குக் கொடுக்க வேண்டும்?

சோஷலிஸ்டுகளும் இதையேதான் சொல்கின்றனர். தங்கள் உழைப்பின் பலன் தங்களுக்குக் கிடைக்க வேண்டும். தங்களை நிர்வகிக்கும் உரிமை தங்களுக்கு வேண்டும் என்கின்றனர்.

இதற்காகத்தான், உயிர் விட்ட நண்பன் என்று ஜக்கி சொல்லும் தோழர் சாகேத் ராஜன் போன்றவர்கள் போராடினார்கள். தியாகம் செய்தார்கள். இதுவும் மனித இயல்புதான். சக மனிதர்களின் துயரத்தைப் போக்கப் போராடுவதும் மனித இயல்புதான்.

இறுதியாக…

சோஷலிசம் பெண்களை பொதுவுடமை ஆக்கிவிடும் என்று ஜக்கியின் முன்னோர்கள் விமர்சித்தனர்.

நம்மைப் போன்ற மனிதர்களை எதற்கு அய்யா பொதுவுடமை, தனி உடமை ஆக்க வேண்டும் என்று கேட்டார் ஏங்கெல்ஸ். முதலாளித்துவமும் நிலப்பிரபுத்துவமும் அல்லவா விபச்சார விடுதிகள், காமக்கிழத்திகள் என்று பெண்களை தங்கள் உடல் மீது கூட உரிமை அற்றவர்களாக, பொதுவுடமை, தனி உடமை என்று மாற்றியிருக்கிறது என்றார் அவர்.

இது முதலாளித்துவவாதிகளுக்குத் தெரியாதது அல்ல.

ஆனால் பெண்கள் தங்கள் உடமை என்ற எண்ணம் கொண்டிருக்கும் ஆண்களின் மனப்போக்கை பயன்படுத்திக் கொள்ள முயன்றனர்.

அதே போல ஜக்கிக்கும் தெரிந்து இருக்கலாம். ஐந்து சென்ட்டில் வீடுகட்டி கடன் கட்டிக் கொண்டிருக்கும் நடுத்த மனிதரை தன்னுடன் சேர்த்துக்கொள்ள விழைகிறார்.

ஆனால் ஜக்கி சொல்லும் சந்தை, கார்ப்பரேட் பொருளாதாரத்தால் பலனடைபவர்கள் அரசு இந்த விஷயத்தில் தலையிடக் கூடாது. சந்தையே அனைத்தையும் தீர்மானிக்கும். வரி உட்பட என்பவர்கள். அரசு வரி போட வேண்டும் என்ற ஜக்கியின் வாதம் இதற்கு முரண்பாடாக இருக்கிறது.

‘சோஷலிசம் வீரியம் குறைக்கப்பட்ட’ … இதெல்லாம் அபத்தம். இவை பற்றி ஜக்கியின் அறிவு ஜிரோ என்பது தெரிகிறது.

ஒரே ஒரு விஷயம்தான். பாவம் ஜக்கி.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்