Aran Sei

மேற்கு வங்க தேர்தல் – சிஏஏ குறித்து அடக்கி வாசிக்கும் அமித் ஷா – ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ள பாஜக

2019 மேற்கு வங்கத் தேர்தல் பாஜகவுக்கு ஒரு திருப்பு முனையாக இருந்தது. மாநிலத்தில் சிறிய கட்சியாக இருந்த பாஜக, பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, ஒரு அழுத்தமான செயல்திறனைக் காட்டியது. அது 41% வாக்குகளுடன் 18 நாடாளுமன்ற தொகுதிகளை வென்றது. இதுவே, தற்போது பாஜகவை முக்கிய எதிர்கட்சியாக தெளிவாக காட்டியுள்ளது.

வகுப்புவாத அடையாளத்தை மையமாகக் கொண்ட, குறிப்பாக மத அடிப்படையிலான, தேசிய குடிமக்கள் பதிவேடு, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றைக் கொண்டு, திறம்பட செய்த பரப்புரையால் இந்த வெற்றியை அது அடைந்தது. வங்க தேசத்திலிருந்து வந்து குடியேறியுள்ள இந்துக்களுக்கு விரைவில் அவர்களுக்கான குடியுரிமை சட்டபூர்மாக்கப்படும் என உறுதிமொழி அளித்த போதும் கூட, இந்த முன்னெடுப்புகள் முஸ்லீம்களை பாதிக்கப்படக் கூடியவர்கள் என உணரச் செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்டன.

இரண்டு ஆண்டுகள் அதிரடியாக கடந்து விட்டன. தற்போது சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறவும், திரிணாமுல் காங்கிரஸை ஆட்சியிலிருந்து அகற்றவும் ஒருங்கிணைந்த முயற்சிகளை எடுத்து வருகிறது பாஜக. இதுவரை 2019 ஆம் ஆண்டு பாடிய பழைய பல்லவியை பாடவில்லை. கடந்த குளிர்காலத்தில் நாடெங்கும் பெரும் போராட்டங்களை சந்தித்த மிகவும் சர்ச்சைக்குரிய சிஏஏ போன்ற பிரச்சினைகளை கொண்டு வருவதற்குப் பதிலாக, பாஜக இதனது விளையாட்டை நேரடியாக விளையாடத் துவங்கி விட்டது. அது இப்போது நிலையான அரசியல் கருவிகளான மாற்று கட்சிகளிடம் கட்சித்தாவலை உருவாக்குவது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஊழல் விவகாரங்கள் மற்றும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் இரத்த உறவுகளுக்கு சலுகைகள் காட்டும் (Nepotism) ஆட்சி ஆகியவற்றை பயன்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.

கட்சித் தாவல் குவிமையம்

அண்மையில் நடந்து முடிந்துள்ள அமித்ஷாவின், சட்டமன்ற  தேர்தலுக்கான முதல் கட்ட பரப்புரை துவங்கியதிலிருந்தே, பாஜக மேற்கு வங்கத்தை எவ்வாறு அணுகும் என்பதை தொகுப்பாகக் காட்டிவிட்டது‌.

அமித் ஷாவின் சுற்றுப்பயணத்தின் முக்கியக் கூறு, கடந்த சனிக்கிழமை நடந்த பேரணியில் திரிணாமுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் பொது மேடையில் பாஜகவுடன் இணைந்தது ஆகும். மொத்தமாக 18 தலைவர்கள் கட்சி மாறி உள்ளனர். இதில் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு சட்டமன்ற உறுப்பினர்கள், ஒரு திரிணாமுல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோரும் அடங்குவர். பாஜகவின் தூண்டிலில் சிக்கிய மிகப் பெரிய மீன், மம்தா பானர்ஜியின் தளபதியாக ஒரு காலத்தில் விளங்கிய சுவந்து அதிகாரி ஆகும்.

2007 ஆம் ஆண்டு, மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில், நில ஆக்கிரமிப்புக்கு எதிராக இடதுசாரி அரசை எதிர்த்தப் போராட்டத்தை சுவந்தது அதிகாரி தலைமையேற்று நடத்தியவர். போராட்டக்காரர்களுக்கும் மார்க்சிஸ்ட் கட்சியினருக்கும் இடையேயான வன்முறை மோதல்களை சந்தித்த இந்த நிகழ்வுதான், திரிணாமுல் காங்கிரசை முக்கியத்துவம் பெறச் செய்தது.

கட்சி மாறுபவர்கள் மீது கவனத்தைக் குவிப்பது பாஜகவுக்கு புதிதல்ல. 2017-ல் மம்தாவின் வலது கரமாகத் திகழ்ந்த முகுல்ராயை சேர்த்துக் கொண்டது. அக்டோபரில் முகுல் ராய் பாஜகவின் துணைத்தலைவராக்கப்பட்டது, மோடி- ஷா உயர்மட்டத் தலைமை, சொந்த மாநிலத்தில் வளர்க்கப்பட்ட பிற கட்சிகளின் கட்சித்தாவிகளை ஊக்கப்படுத்துவதை மிக வசதியாக செய்ததைக் சுட்டிக்காட்டியது.

தனது இரண்டுநாள் சுற்றுப் பயணத்தின் போது இந்த கட்சித் தாவுபவர்கள் மீது கவனம் செலுத்தியதுடன், அமித் ஷா திரிணாமுல் மீது கூறப்படும் ஊழல் புகார்கள், வளர்ச்சியின்மை அத்துடன் தனது மருமகன் அபிஷேக்கை மம்தா கட்சியின் இரண்டாம் நிலையில் நியமித்ததைக் காட்டி உறவினர்களுக்கு சலுகைகள் காட்டும் போக்கையும் பற்றி கவனம் செலுத்தினார்.

சிஏஏ – வை காணோம்

இவையாவும் பாஜக தனது வலிமையால் நிறைவேற்றும் வழக்கமான இந்திய அரசியல் தந்திரம் தான். எனினும், 2019 ஆம் ஆண்டு அமித் ஷா எவ்வாறு பரப்புரை செய்தாரோ அதிலிருந்து மிகவும் மாறுபட்டு, சிஏஏ பற்றி அரிதாகவே பேசினார்.

ஒரு வருடத்திற்கு முன்னர் மிகுந்த பரபரப்புக்கு இடையே சிஏஏ நிறைவேற்றப் பட்டிருந்தாலும், மோடி அரசு அதை இதுவரை செயல்படுத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது. இந்த சட்டத்திற்கான விதிகள் (ஒரு சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்பட வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள்) இன்னும் வெளியிடப்படவில்லை.

வங்கதேச இந்துக்களின், அனைத்து நோய்களுக்கான ஒரே மருந்து (சர்வ ரோக நிவாரணி) எனக் காட்டப்பட்ட இந்த சட்டத்தை நடைமுறைபடுத்துவதில் ஏற்பட்டுள்ள நீண்ட தாமதம் மேற்கு வங்காளத்தில் கட்சியின் சொந்த அணிகளில் கலக்கத்தை உருவாக்கி உள்ளது. வங்க தேச வம்சாவளியைச் சேர்ந்த தனி மதப் பிரிவினரான மாதுவா தலித் சமூகத்தைசேர்ந்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தனு தாக்கூர், இந்தத் தாமதம் குறித்து தனது அதிருப்தியை பொதுவெளியில் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார். திருத்தங்கள் செய்வதற்கு பதிலாக, அமித் ஷா சிஏஏ பிரச்சினையிலிருந்து விலகி நடக்க முடிவு செய்துள்ளார்.

ஷாவின் பயணத்தின் போது, மாதுவாக்களின் கோட்டையான தாக்கூர் நகர் பயணம் ரத்து செய்யப்பட்டதுடன், உள்துறை அமைச்சர் தனது உரையின் ஒரு பகுதியாக சிஏஏவை கூறவே இல்லை. இருப்பினும் இதுகுறித்து 20ஆம் தேதி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கேள்வி எழுந்த போது, விதிகளை வடிவமைக்க இன்னும் பல நாட்கள் ஆகும் என்று குறிப்பிட்டதாகத் தெரிகிறது. ” தடுப்பூசிகள் போட ஆரம்பித்து கொரோனா சுழற்சி சங்கிலித் தொடரை உடைக்க முடியும் போது அது (சிஏஏ விதிகள்) பற்றி சிந்திப்போம்” என்று ஷா கூறினார்.

மே‌ற்கு வங்கத்தில், 2019 நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையின் போது, அமித் ஷாவால் அடிக்கடி பேசப்பட்ட தலைப்பான என்ஆர்சி பற்றி அழுத்தமாக கேட்தற்கு, ஷா பதில் கூற மறுத்துவிட்டார்.

திரிணாமுலின் கவனக் குவிப்பு

முரண்பாடாக, பாஜக, சிஏஏ மற்றும் என்ஆர்சியை பரப்புரை பிரச்சினையாக எடுக்கத் தவறினாலும் திரிணாமுல் அதை ஒரு பிரச்சினையாகக் காட்டுவதில் ஆர்வமுடன் உள்ளது‌. மம்தா பானர்ஜி பல தேர்தல் பேரணிகளில் சிஏஏவை எதிர்த்து வருகின்றார். வங்கதேச வம்சாவளியைச் சேர்ந்த இந்துக்கள் பெரும்பாலானோர் ஏற்கனவே இந்திய குடியுரிமைப் பெற்றிருக்கும் போதிலும், அவர்களும் புதிதாக விண்ணப்பிக்க வேண்டி வரும் என்று மேற்கு‌ வங்க முதல்வர் கூறுகிறார் .

பாஜகவின் ஊசலாட்டம், அதன் தீவிர இந்து அடையாளத்தின் காரணமாக அதன் பக்கம் சரிந்த மாதுவா வாக்குகளை மீண்டும் வென்றெடுக்க திரிணாமுலுக்கு ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது.

பாஜகவின் சிஏஏவை அறிமுகப்படுத்தும் திட்டம் சிக்கலுக்கு ஆளாவது இது முதல்முறை அல்ல. இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்பே, இதனை கூர்ந்து கவனிப்பவர்கள், ஆவணமற்ற புலம் பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்க ஒரு சட்டம் வந்தால் அதனால் எழும் எண்ணற்ற சிக்கல்களைச் சுட்டிக்காட்டி உள்ளனர்.

அதே வேளையில், வங்கதேச வம்சாவளி இந்துக்களில், மாதுவா போன்ற குழுக்கள், (தோன்றிய மதம் அல்லது நாடு குறித்த சான்றிதழ்கள் தேவை குறித்த) நிபந்தனைகளற்ற குடியுரிமையைத் தரும் நடைமுறை வேண்டும் என கோரி வருகின்றனர். தேர்தல் நடப்பதற்கு முன், கடைசி நிமிட அறிவிப்பாக விதிகளை வெளியிடுவதன் மூலம், நிலைமையைக் காப்பாற்றிக் கொள்வதுடன், சிஏஏ வை நடைமுறைப்படுத்துவோம் என தாங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி விட்டோம் என பாஜக காட்டிக் கொள்ளலாம்.

இருப்பினும், அமித்ஷாவின் டிசம்பர் பயணம், மேற்கு வங்க பாஜகவின் செயல்திட்டமாக நீடித்தால், இந்த மிகவும் கொந்தளிப்பான சிஏஏ தந்திரம், இந்துத்துவா கட்சி என்பதற்காக அவர்கள் பக்கம் சென்ற சில குழுக்களை மீண்டும் கவர்ந்திழுக்க திரிணாமுல் காங்கிரசுக்கு ஒரு வாய்ப்பைத் தரும்.

(www.scroll.in இணையதளத்தில், சோயிப் தானியல் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்