Aran Sei

“இந்தியாவில், சாதி ஒழிப்பே பெண் விடுதலை ” – மீனா கந்தசாமி

மனுஸ்மிருதிக்கு எதிரான போராட்டத்தில் திருமாவளவன் - Image credit - thewire.in

பெண்ணுரிமை போராளிகள் மனுநீதிக்கு (மனுஸ்மிருதி) எதிரான இயக்கத்தில் ஏன் இணைய வேண்டும்?

னிக்கிழமை (24/10/20) அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தமிழகமெங்கும் பெண்களை இழிவுபடுத்தும், அடிமைப்படுத்தும் மனுநீதியைத் தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தி உள்ளது.

இத்தகைய மக்கள் திரள் போராட்டத்தை மனுநீதிக்கு எதிராக வடிவமைத்ததன் மூலம், பெண் உரிமைப் போராளிகளும், சாதி எதிர்ப்பாளர்களுமான மகாத்மா பூலே, புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோர் வரிசையில் தொல்.திருமாவளவனும் சேர்கிறார்.

சனாதனக் கோட்பாடான இந்துத்துவாவின் சாதிய கோட்பாட்டிற்கு எதிரான போராட்டத்தை கடந்த முப்பது ஆண்டுகளாக நடத்தி வரும் விசிக, மனுநீதியைத் தடை செய்யக் (#BanManu) கோரும் போராட்டத்தை இன்றைக்கு நடத்துவதற்கான காரணம், இந்து பெண்களைப் பற்றி இழிவான கருத்துகளை திருமாவளவன் கூறிவிட்டார் என பாஜக அவர் மீது குற்றம் சாட்டியதே ஆகும்.

செப். 20, 2020 ல் ஐரோப்பிய ஒன்றிய பெரியார் இயக்கமும், அம்பேத்கர் தோழர்கள் கூட்டமைப்பும் இணைந்து நடத்திய ஒரு இணைய நிகழ்ச்சியில் திருமாவளவன் பெரியார் மற்றும் பெண்ணுரிமை பற்றிப் பேசி இருந்தார். மற்றவர்களைப் போலவே நானும் அந்த உரையின் ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து கேட்டேன். அதில் தவறு எதுவும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. திருமாவளவன் அதில் பெரியாரை மேற்கோள் காட்டி, ஏன் வேதங்களை அதிலும் குறிப்பாக மனுநீதியை, பெரியார் எதிர்த்தார் என விளக்கி இருந்தார்.

“இந்து தர்மத்தின் படி, எல்லாப் பெண்களுமே விபச்சாரிகள்தான். கடவுளால் அப்படித்தான் படைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் இந்து தர்மப் படி …. மனுதர்மப் படி விபச்சாரிகளே. ஆண்களுக்கு இவர்கள் கீழானவர்கள்.”

அவரது உரையில் இடம் பெற்றிருந்த எதிர்க்க வேண்டிய இந்தப் பகுதிகளைக் கூறியது உண்மையில் மனுவே. ஆனால் வலதுசாரி எதிர்ப்பாளர்களும், பாஜகவும் இதில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை விட, இதை வைத்து விசிகவைத் தாக்கத் தயாராகி விட்டனர். நேற்று இணைய குற்றப்பிரிவு (cyber crime) காவல் துறையினர், திருமாவளவன் மீது, பாஜக அமைப்பாளர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மனுநீதி, இந்திய சமூகத்தில் பெண்கள் இழிவாக நடத்தப்படுவதற்கும், சாதி அமைப்பு முறைக்கும் அடித்தளமாக இருப்பதால் சாதி எதிர்ப்பு அமைப்புகளின் தலைவர்கள், மனு நீதியை எதிர்ப்பதை ஒரு சடங்காக வைத்திருப்பதாகத் தோன்றுகிறது. சுதந்திரமான, அதிகாரம் உடையவர்களாகப் பெண்களை மாற்றாமல், சாதி ஒழிப்பு சாத்தியமில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனி ஆகும்.

மேலும் பார்ப்பன ஆணாதிக்கப் பிடி இருக்கும் வரை பெண்கள் விடுதலை பெற்றவர்களாக, அதிகாரம் உடையவர்களாக மாற முடியாது.

இதனால்தான் ஜோதிராவ் பூலே குலாம்கிரியில் மனுநீதியையும் பிற புராணக் கதைகளையும் பிரித்து மேய்ந்தார்.

தனது 36-ம் வயதிலேயே பல்லாயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் முன்னிலையில், மகத் சத்தியாகிரகப் போராட்டத்தில் 1927 டிசம்பரில் அண்ணல் அம்பேத்கர் மனுநீதியை எரித்தார்.

1922-ல் மனுநீதியை எரிப்பதாக பெரியார் முழக்கமிட அது சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர் கழகத்தின் அடையாளமான போராட்டமாக தொடர்ந்தது.

அம்பேத்கரும் பெரியாரும் புரட்சிகரமாக மனுநீதியை எரித்து, ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பின் திருமாவளவன் வழியில் மனுநீதியைத் தடை செய்ய கோருகிறார்.

2004-ல் மும்பையில் உலக சமூக அமைப்பு நடத்திய கூட்டத்தில் பேசிய திருமாவளவன், “இந்து மதத்தில் பெண்களின் நிலை மிக மோசமாக உள்ளது. எனவேதான் சாதி ஒழிப்பு ஆண்களைவிட பெண்களுக்கே மிக முக்கிய பிரச்சனையாக உள்ளது என அம்பேத்கர் கூறினார். இரண்டாவதாக, எந்த ஒரு மதத்தின் அடிப்படையும், அடுத்த மதத்திற்கு எதிரானதாகவே இருக்கும். ஆனால் இந்துத்துவாவின் அடிப்படை கோட்பாடுகள், பிற மதங்களுக்கு எதிரானதாக மட்டுமல்ல, சாதி அமைப்பு முறையையும், பார்ப்பனிய ஆணாதிக்கத்தையும் நிலைத்திருக்க செய்வதையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளது. சுருக்கமாக கூறுவதெனில், சமத்துவமின்மையே இந்துத்துவாவின் வாழ்வும் ஆன்மாவும் ஆகும்.“

பதினாறு ஆண்டுகளுக்குப் பின், மனுநீதியை நிராகரிக்க அவர் அழைப்பு விடுத்திருப்பது, சனாதன தர்மத்தை எதிர்த்து அதை வேரறுப்பதன் மூலம் சாதியை ஒழிப்பது என்ற விசிகவின் கருத்தியலில் அடுத்த அடி ஆகும்.

மனுநீதி எத்தகைய நஞ்சூட்டும் சமத்துவமின்மையை முன் மொழிகிறது என்பது பற்றி அறியாதவர்களுக்காக அதன் சாதிய மேற்கோள்களை சற்று ஆராயலாம். இது மிகவும் பிரபலமான, “சூத்திரன் கல்வியைப் பெற தகுதியற்றவன், உயர் குலத்தோர் சூத்திரனுக்குக் கல்வி தருவதோ, அறிவுரை கூறுவதோ கூடாது, சூத்திரர்கள் சட்ட திட்டங்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்பதால் அதை அவர்களுக்கு கற்றுத்தர வேண்டிய அவசியம் இல்லை.“ என்பனவற்றையும் உள்ளடக்கியது. ( மனு: IV-78-81).

சூத்திரர்களுக்கு கல்வியை மறுத்தது மட்டுமல்ல, மனுநீதியின் அத்தியாயம் 9-ன் 18-வது சூத்திரம், “வேதங்கள் பற்றி பெண்கள் தெரிந்திருக்க வேண்டியதில்லை“ என அறிவிக்கிறது. பெண்களை பற்றி மிக மோசமாக கூறும் மனுநீதியின் ஒரு சில கருத்துக்கள் இதோ:

  1. “ஸ்பாவ் எவ் நாரினாம்……”-2/213. ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. அதனாலேயே, அறிவுடையவர்கள் பெண்களோடு பழகுவது எப்போதும் பாதுகாப்பற்றது.
  2. “அவித்வம் சாம்லாம்……….”-2/214. பெண்கள் தமது பாலின பண்பிற்கு உண்மையாக இருப்பதால், முட்டாள்களை மட்டுமல்ல, படித்த மற்றும் அறிவாளிகளையும் கூட வழிதவறச் செய்து விடுவாள். இருவரும் ஆசைக்கு அடிமை ஆவார்கள்.
  3. “யாத்ரா ஸ்வாஸ்த்ரா………”-2/215. அறிவுடையவர்கள் தனது தாயுடனோ, மகளுடனோ அல்லது சகோதரிகளுடனோ தனியாக இருக்கக் கூடாது. ஏனெனில் உடல் இன்பம் என்பது வலிமையானது. அது உணர்ச்சிவசப்பட வைத்துவிடும்.

சங்பரிவாருக்கு வக்காலத்து வாங்குபவர்களும், சரியான வாதத்தை முன்வைக்க இயலாதவர்களும், சாதி அமைப்பின் நச்சுத்தன்மையை அறியாமல் இருப்பவர்களும், ‘நான் மனுநீதி புத்தகத்தைப் பார்த்ததே இல்லை, எந்த ஒரு இந்து வீட்டிலும் அதை நான் கண்டதில்லை, அதனால் இன்று அதற்கு என்ன பொருத்தப்பாடு உள்ளது?’ என்றெல்லாம் கேட்கிறார்கள்.

இங்கேதான் அண்ணல் அம்பேத்கரின் வார்த்தைகள் பொருத்தமானவை. அவர் பழக்க வழக்கங்கள் சட்டத்தை விட வலிமையானவை, அவை காவல் துறை இல்லாத வன்முறை, தலையீடு இல்லாத ஆதிக்கம் என்கிறார. “பழக்க வழக்கங்கள் அரசுகள் சட்டத்தை திணிப்பதைவிட, மிக வலிமையாக மக்களால் திணிக்கப்படுகின்றன. ஏனெனில் அமைப்பாக்கப்பட்ட மக்களின் வலுக்கட்டாயம், அரசின் வலுக்கட்டாயத்தைவிட மிகவும் சக்தி வாய்ந்தது.

மனுநீதி, எழுதப்படாத அரசியல் அமைப்புச் சட்டமாக இருந்து, சாதி வெறியை வழிநடத்துவதால்தான் இன்று விசிக அதை எதிர்க்கிறது. எழுதப்படாத, படிக்கப்படாத , ஆனால் பெண்கள் மற்றும் தலித் மக்கள் மீதான வன்முறைக்கும், குறிப்பாக தலித் இன பெண்கள் மிக வலிமையற்றவர்களாக கருதப்பட்டு வன்முறையின் எல்லை வரை கொண்டு செல்லப படுவதற்குமான அடிப்படைகளை உள்ளீடாக கொண்டுள்ளது மனுநீதி.

இந்த நூல் சாதி முறையை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனைகளை பரிந்துரை செய்யும் நூலாகும். அதன் பிரதிபலிப்புதான் சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் ஆணையும், பெண்ணையும் கொலை செய்வது, மேற்படிப்புக்கு செல்லவிடாமல் சட்டத்தை மீறி தடுப்பது, தேர்தலில் போட்டியிடுவதைக்கூட சட்டத்தை மீறி தடுப்பது போன்றவை ஆகும்.

  • இந்த மனுநீதியை மண்டையில் புகுத்தி இருப்பதால்தான் யோகி ஆதித்யநாத், பெண்கள் விருப்பம் போல் நடமாடவோ சுதந்திரமாக இருக்கவோ தகுதியற்றவர்கள் என்று திமிராக பேச முடிகிறது.
  • இந்த மனுநீதியை தலையில் சுமப்பதால்தான் ரஞ்சித் பகதூர் ஸ்ரீ வஸ்தவா என்கிற பாஜக தலைவர், ஹத்ராசில் பாதிக்கப்பட்ட பெண்ணின் நடத்தையை கேவலப்படுத்தி, ஒழுக்கமற்ற பெண் வயலில் இறந்து கிடக்கிறாள் என ஆணவத்தோடு கூற முடிகிறது.

இந்த மனுக்கள்தான் நம் வீட்டில் இருக்கிறார்கள். நம் சொந்த தந்தையாக இருக்கிறார்கள். இவர்கள்தான் அந்த முட்டாள்தனமான அடக்குமுறை சமூக அமைப்பை பிரதிபலிக்கிறார்கள்.

நாம் மனுவை நிராகரிக்க கோரும் இந்த வேளையில், #ManuMustFall என பகிரும் வேளையில், ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் நிற்கும் மனுவின் சிலை மீது தார் பூசிய தலித் இன வீர மங்கைகளான காந்தாபாய் அகிர், ஷீலா பவார் ஆகியோரின் உருவங்கள் தவிர்க்க முடியாமல் நமது கண்முன், வருகின்றன.

ஜூன் மாதம் ‘தி வயர்’ நிறுவனத்துக்கு அகிர் அளித்த பேட்டியில், “ இந்து புராணங்கள் மனுதான் மனுநீதியை எழுதியவர் என நம்புகின்றன. அவர்தான் சாதி மற்றும் பால் அடிப்படையில் மனித குலத்தைத் தாழ்த்துவதை சட்டபூர்வமாக்கினார். அவர்தான் சூத்திரர்கள், ஆதி சூத்திரர்கள் மற்றும் பெண்களுக்கு எதிராக கொடுமையான சட்டங்களை உருவாக்கினார். அந்த மர்ம முகம் தற்கால இந்தியாவிலும் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. இதில் மிக‌வும் அதிர்ச்சி அளிக்கக் கூடியது என்ன வென்றால் அவmது சிலை உயர்நீதிமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது.” என்று கூறினார்.

அகிரும்,ஷீலாவும் நாம் பின்பற்றுவதற்கு நல்ல எடுத்துக்காட்டுகள்.

ஒரு தமிழ் பெண்ணாக இதை நான் எழுதும் போது, தமிழகத்தில் பரவலாக அரசியல் கட்சிகள், திராவிட இயக்கங்கள், தமிழ் தேசியவியலாளர்கள் ஆகிய அனைத்து தரப்பிலிருந்தும் திருமாவளவனின் இந்த ‘மனுவை தடை செய்’ கோரிக்கைக்கு ஆதரவாக திரண்டிருந்தது எனக்கு மேலும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது.

பெண்கள் தங்கள் வலிமையை தங்கள் ஆதரவின் மூலம் காட்டுவதால் மட்டுமே, இந்த சனாதன நீதிக்கு எதிரான போராட்டம் ஒரு தீர்மானமான மாற்றத்தை எட்ட முடியும். நமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்விலும் நம்மை அடக்கி , கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் மனுநீதிக்கும், பழக்க வழக்கங்களை அடிப்படையாகக் கொண்டு திண்ணை போட்டு அமர்ந்திருக்கும் சாதி ஆணாதிக்கத்திற்கும் எதிராக பொது வெளியில் திரண்டால், நாம், இந்திய பெண்ணாக, பல்வேறு மட்டங்களில் உள்ள அடக்குமுறை கட்டிடத்தை இடித்துத் தள்ள முடியும்.

ஏன் பெண்கள் இதில் பங்கு பெற வேண்டும்?

முதலாவதாக, நாம் எதிர்த்து செயல்படுவதன் மூலமே நமது சுயமான கட்டுப்படுத்த முடியாத, கண்காணிக்க முடியாத வலிமையை உருவகப்படுத்த இயலும்.

மனுவும் (யோகி ஆதித்ய நாத் போன்ற அவரது சீடர்களும்) எல்லோரையும் எச்சரிக்கும் இத்தகைய ‘ விதிமீறல்கள்’ மூலம் நாம் மனுநீதி போன்ற குப்பைகள் இல்லாத உலகத்தைப் படைப்போம். அவர்களது கொடூர கனவில் வந்து அவர்களது உறக்கத்தைக் கெடுப்போம். எல்லா பெண்களும் சாதிக்கு எதிரானவர்களாக இருந்தால், இராணுவக் கட்டமைப்புடன் பாதுகாக்கப்படும், தங்கள் தொப்புள் கொடியோடு இறுக்கப்பட்டிருக்கும் , சாதியை அனைத்து பெண்களும் உடைத்தெறிந்தால், அனைத்துப் பெண்களும் சமூகத்தில் சாதியை மறுஉற்பத்தி செய்யமாட்டோம் என தீவிரமாக தீர்மானித்து விட்டால், மனுவும் அவரது சங் பரிவார் வாரிசுகளும் தாங்கள் ஆள விரும்புவதில் பாதி தொகுதிகளை இழந்து விடுவார்கள்.

இரண்டாவதாக, நமது அடக்குமுறைகளுக்கு அடித்தளமாக உள்ள மனுநீதி யையும், சனாதன தத்துவத்தையும் கண்டிப்பதன் வாயிலாக, ஒரு பெண்ணாக (தலித்தாக, சூத்திரனாக) ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமக்கு மறுக்கப்பட்ட பாத்திரத்தை நாம் கோர முடியும். அதாவது சிந்தனை உடையவர்களாகவும், அறிவுள்ள மனிதர்களாகவும் வாழ்வதற்கான உரிமையை கோர முடியும்.

முரட்டுத்தனமாக கூறுவதெனில், இந்த சமூகத்தில் பார்ப்பனர்களுடைய இடத்தை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்- இந்த அறிவுசார் பொருளாதாரத்தில் – அதுதான் தற்போது மேதைகளின் இடமாக, அரசியலின் இடமாக மற்றும் பொது வெளியாக உள்ளது.

மூன்றாவதாக, நமது சூழலுக்கு ஏற்ப பெண்ணியத்தை வடிவமைக்க வேண்டும். இந்தியாவில் சாதி ஒழிப்பே பெண்ணியம். இந்தியாவில் பாட்டாளி வர்க்க விடுதலைக்கு முன் நிபந்தனையாக சாதி ஒழிப்பு இருக்க வேண்டும் என்ற கசப்பான உண்மையை ஏற்று கொண்டால்தான், கம்யூனிசம் கூட இங்கு பொருத்தமாக இருக்கும் என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

இறுதியாக, அதுவே போராட்டத்தில் முன்னிலை என்ற, பெண்களின் சரியான இடத்தை மீட்டுக் கொள்ள அனுமதிக்கும். பல்வேறு பின்புலங்களைக் கொண்ட அனைத்து பெண்களும் சாதி – ஆணாதிக்கத்திற்கு எதிராக போரிடும் போது மட்டுமே, மிக அதிகமான தாழ்த்தப்பட்ட மக்களின் ஆதரவுடன் , அம்பேத்கரிய தலித் தலைமையின் கீழ், சாதி ஒழிப்புத் திட்டம் நிறைவேறும். சனாதனம் மற்றும் மனுநீதிக்கு எதிரான போராட்டமே, அதன் கொடூர ஆட்சியின் கீழ் ஒடுக்கப்பட்டிருக்கும் தலித்துகளை, சூத்திரர்களை, பழங்குடிகளை, பெண்களை ஒன்றுபடுத்தும்.

வரலாற்றை திரும்பிப் பார்க்கும் போது, தலித் பெண்ணிய அமைப்புகள், எந்த நாளில் அம்பேத்கர் மனுநீதியை எரித்தாரோ, அந்த நாளை, அதாவது 1927, டிசம்பர் 25-ம் நாளை இந்திய பெண்கள் விடுதலை நாளாகக் கொண்டாட வேண்டும் என அறிவித்துள்ளன. இன்று தொல். திருமாவளவனும் அவரது விசிக வினரும், மனுநீதியைத் தடை செய்யக் கோரி போராட்டத்தைத் துவக்கி உள்ளனர்.

பெண்ணியவாதிகளாக நாம், இந்த மனுநீதியை நிராகரிக்கும் தீவிரமான போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும். இந்த போராட்டத்தில் நாம் இணைவது சாதி ஒழிப்புக்கு அருகில், பெண் விடுதலையை நோக்கி நம்மை இட்டுச் செல்லும்.

– மீனா கந்தசாமி

கட்டுரையாளர் மீனா கந்தசாமி  புனைவு எழுத்தாளர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், செயல்பாட்டாளர்

கட்டுரை & படங்கள் : நன்றி thewire.in

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்