Aran Sei

விவசாயிகள் வரையறுக்கப்பட்ட பேரணி பாதையைக் கடக்க காவல்துறை அனுமதித்தது ஏன்? – செயல்பாட்டாளர்கள் கேள்வி

பாஜக ஆதரவு பெற்ற குழுக்கள் அமைதியாக நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் வன்முறையைத் தூண்டியதற்கு பல்வேறு முக்கிய சிவில் உரிமை செயல்பாட்டாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். அரசுக்குக் கண்மூடித்தனமாக ஆதரவளிக்கும் ஊடகங்கள் என்னதான் விவசாயிகள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த முயன்றாலும், டிக்ரி, காசிபூர் மற்றும் சிங்கு எல்லைகளில் அமைதியாகப் போராடும் விவசாயிகள்மீது பாஜக ஆதரவு பெற்ற கருங்காலிகள் எத்தனை முறை தாக்குதல் நடத்தினாலும் போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

டெல்லி குண்டு வெடிப்பு எதிரொலி: எல்கர் பரிஷத் நிகழ்ச்சிக்கு கூடுதல் பாதுகாப்பளித்த காவல்துறை

அரசின் தவறான கொள்கை முடிவுகளை எதிர்த்து அமைதியான முறையில் கேள்வி கேட்கும் விவசாயிகளின் போராட்டத்தை, அரசு எவ்வாறெல்லாம் அவமதிக்கிறது என்று மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமெனப் பத்திரிகையாளர் மன்றத்தில் தலித் ஆதிவாசி அதிகார் மன்ச் அமைப்பினர் ஏற்பாடு செய்த பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட செயல்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

உச்சநீதிமன்ற வழக்குரைஞர் பிரசாந்த் பூசண், ஜனவரி 26ல் சிலர் வரையறுக்கப்பட்ட பாதைகளிலிருந்து வெளியேறிச் செங்கோட்டையில் கொடியேற்றியது பல சந்தேகங்களை எழுப்புவதாகத் தெரிவித்துள்ளார். அப்போதும் கூடத் தேசியக்கொடி இறக்கப்படாததை குறிப்பிட்டுள்ளார்.

ஓபிசி தொகுப்பு இட ஒதுக்கீடு: ரோகிணி ஆணையத்திற்கு கால நீட்டிப்புக் கூடாது – மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

“சம்யுக்த கிசான் மோர்ச்சா வரையறுக்கப்பட்ட பாதையில் மட்டுமே செல்வதெனக் காவல்துறையுடன் ஒப்பந்தமிட்டிருந்தது, சிங்கு எல்லையின் டெல்லி புறமாக அவர்களுக்குச் சம்பந்தமில்லாத ஒரு குழு காவல்துறையால் அனுமதிக்கப்பட்டு உட்கார வைக்கப்பட்டதையும், அவர்கள் அனுமதிக்கப்படாத ரிங் சாலை வழியாகச் செல்லப்போகிறோம் என ஜனவரி 25 ஆம் நாள் இரவே அறிவித்ததையும் சம்யுக்த கிசான் மோர்ச்சா அறிக்கை வாயிலாகத் தெரிவித்திருக்கிறார்கள்” என்று பூசண் குறிப்பிட்டுள்ளார்.

‘மகாத்மாவின் ஆவியைக் குடித்தான் பேயன்’ – பேரறிஞர் அண்ணா

மேலும்,”அந்தக் குழு வரையறுக்கப்பட்ட பாதையில் செல்லப்போவதில்லை என்பது காவல்துறைக்கு முன்பே தெரியும், யோகேந்திர யாதவ்க்கு மூத்த காவல்துறை அதிகாரிகளிடமிருந்து இதுகுறித்து 10க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்தன” என்கிறார்.

இதுமட்டுமல்லாது தீப் சித்துவும் அவரது குழுவும் கூட ஜனவரி 25 இரவே சிங்கு எல்லையில் முகாமிட்டு தாங்களும் வரையறுக்கப்பட்ட பாதையில் செல்லப்போவதில்லை என்று சொன்னதை குறிப்பிட்டுள்ள பூசண், “இதுவும் காவல்துறைக்கு முன்பே தெரியும், ஆனால் அவர்களைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்காமல், ரிங் சாலையில் அனுமதித்து செங்கோட்டை வரையிலும் விட்டுவிட்டார்கள்” என்கிறார்.

காவல்துறை ஆதரவு பெற்ற வன்முறையாளர்கள் பாஜகவுக்கு நெருக்கமானவர்கள்

இயல்பாகவே செங்கோட்டையில் காவல் பலமாக இருக்கும், அதுவும் குடியரசு தினத்தன்று கடுமையாக இருக்கும், எனவே செங்கோட்டை கோபுரத்தில் ஏறியவர்கள் காவல்துறையின் அனுமதியின்றி அதைச் செய்திருக்க வாய்ப்பில்லை.

தீப் சித்து செங்கோட்டையில் கொடியேற்றி அதைப் பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பு செய்ததும் அங்கிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டிருக்கிறார், இன்று வரை கைதும் செய்யப்படவில்லை, என்னவென்று கவனித்தால் அவருக்கும் பாஜவுக்கும் ஆழமான தொடர்பிருப்பது தெரிய வருகிறது, பாஜக எம்.பி சன்னி தியோலின் பரப்புரை மேலாளராக அவர் பணிபுரிந்ததுடன் நரேந்திரமோடி மற்றும் அமித்சா ஆகியோருடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் காணக்கிடைக்கின்றன என்று பூசண் தெரிவித்துள்ளார்.

அரசு ஆதரவு ஊடகங்கள் கதை எழுதி விட்டன

விவசாயிகளுக்கெதிராகக் குற்றங்களைப் புனையும் அரசு ஆதரவு ஊடகங்களைக் கடுமையாகச் சாடியுள்ள பூசண் “ஊடகங்களைக் கொண்டு இந்தப் போராட்டம் காலிஸ்தானிகளால் நடத்தப்படுகிறது எனக் காண்பிக்க அரசு மிகவும் மெனக்கெட்டது. ஆனால், இந்த மொத்த போராட்டத்திலும் காலிஸ்தான் ஆதரவு அறிக்கை தீப் சித்து மற்றும் வேறுசில குழுக்களிடமிருந்து தான் வந்திருக்கிறது. அவர் பாஜகவை சேர்ந்தவர் என்பதால் இதுவரை கைது செய்யப்படாததோடு செங்கோட்டையிலும் ஏற அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

காசிப்பூரில் விவசாயிகள் போராட்டத்தை கலைத்த பாஜக – ஜாட் சமூகத்தின் கோபத்தை சீண்டியுள்ளதா?

யோகேந்திர யாதவ் மற்றும் பிற விவசாய தலைவர்கள் தொடர்ந்து விவசாயிகளை அமைதி வழியில் போராட வலியுறுத்தியும், ஒப்பந்தபடி நடந்துகொள்ள அறிவுறுத்தியும் வருகிறார்கள்.அப்படி இருந்தும் அவர்கள்மீது சட்டவிரோத தடுப்பு சட்டத்தில் வழக்கு தொடுத்து தொல்லை கொடுப்பதாக அரசின் மீது பூசண் புகார் தெரிவித்துள்ளார்.

போராட்டத்தைப் பாஜக வன்முறை கொண்டு முடிவுக்கு கொண்டு வர நினைக்கிறது

பாஜக அரசு மற்றும் அவர்களின் ஆதரவு பெற்ற குழுக்கள் வன்முறை கொண்டு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.

“நேற்று எண்ணற்ற காவல்துறையினர் காசிபூர் எல்லையில் போராடும் விவசாய தலைவர்களை மிரட்டிப் போராட்டத்தைக் கைவிட சொல்ல அனுப்பப்பட்டார்கள், ஆனால் இதுகுறித்து முன்னுணர்ந்த விவசாயிகள் எல்லைகளில் மேலும் மேலும் குவிந்தபடியே இருப்பதால் இந்தத் திட்டம் பலிக்கவில்லை” என்று பூசண் தெரிவித்துள்ளார்.

பாஜக செயல்பாட்டாளர்கள் பங்குபெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக போராட்டம் மற்றும் வடகிழக்கு டெல்லி கலவரங்களில் கருங்காலிகள் புகுந்து கலவரம் செய்ததை நினைவு கூறும் பூசண், சிங்கு எல்லையிலும் அதே தான் நடக்கிறது என்கிறார்.

சர்ச்சைக்குரிய தீர்ப்பு வழங்கிய மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி – நிரந்தர நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையைத் திரும்பப் பெற்றது உச்சநீதிமன்ற கொலீஜியம்

டெல்லி பல்கலைக்கழக பேராசிரியரும், அரசியல் விமர்சகருமான அபூர்வானந்த் தெரிவிக்கையில், “ஜனவரி 26 அன்று பெரும்பாலானவர்கள் வரையறுக்கப்பட்ட பாதையில் பேரணி செல்ல, குறிப்பிட்ட சிலர் மட்டும் டெல்லியில் புகுந்து ITO மெட்ரோ நிலையம் மற்றும் செங்கோட்டையில் வன்முறை செய்திருக்கிறார்கள். இந்தச் சம்பவங்களால் விவசாயிகள் போராட்டத்தைக் குறை கூற பயன்படுத்திக்கொள்கிறார்கள்”.

மேலும், அரசு ஆதரவு ஊடகங்களைக் கொண்டு போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் பரப்புரையில் இறங்கியுள்ள அரசு, விவசாய தலைவர்கள்மீது குற்றவியல் வழக்குகள் பதிவு செய்துள்ளதோடு ஸ்வராஜ் இந்தியாவின் தலைவர் யோகேந்திர யாதவ்வின் வீடு மற்றும் பிற விவசாயிகளைத் தாக்க வன்முறை குழுக்களை அனுப்பி வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

நடப்பு சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு மாகாத்மா காந்தி நினைவு நாளான ஜனவரி 30 மாலை 5 மணிக்கு ஒரு நிமிட மௌன அஞ்சலியும், அனைத்து மத பிரார்த்தனையும் நடத்தி விவசாயிகளுக்கு ஆதரவளிக்க வேண்டுமெனச் சிவில் சமூகத்தின் சார்பாகப் பூசண் கேட்டுக்கொண்டார்.

வீட்டுக்கு ஒருவர் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் – ஊர் கூடி முடிவெடுத்த பஞ்சாப் கிராம விவசாயிகள்

விவசாயிகளின் உலகம் அமைப்பைச் சேர்ந்த தினேஷ் அப்ரோல் இரண்டு மாதங்களாக அமைதி வழியில் போராடியதற்காகப் பொதுமக்கள் விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளதுடன், பெரும்பாலான விவசாயிகள் வரையறுக்கப்பட்ட பாதையில் சென்றதை குறிப்பிட்டுள்ளார்.

“வலது சாரிகளின் போராட்டங்களின்போது பொதுமக்கள் பாதிக்கப்படுவதை கண்கூடாகப் பார்த்திருக்கிறோம், ஆனால் லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றும் ஒரேயொரு பொது குடிமகன் கூடப் பாதிக்கப்படவில்லை” என்று கூறியுள்ள அப்ரோல், “போராட்டத்தில் கண்ணீர் புகைக்குண்டு மற்றும் தண்ணீர் பீரங்கி பிரயோகித்த காவலர்களுக்குக் கூட உணவளித்த விவசாயிகள் போற்றப்பட வேண்டியவர்கள்” என்றும் கூறியுள்ளார்.

போராட்டம் டெல்லியில் மட்டும் நடக்கவில்லை, மும்பையில் 50,000 விவசாயிகள் கூடி போராடினர், நாடு முழுவதும் பேரணிகள் ஒருங்கிணைக்கப்பட்டன.

இதற்கு முன் சிவில் சமூகத் தலைவர்கள் நகர்ப்புற நக்சல்கள் என்று முத்திரை குத்தப்பட்டு சிறையிலடைக்கப்பட்டதைப் போல இம்முறை நடக்க விடக் கூடாது, உண்மை அறியும் குழுவின் துணையுடன் விவசாயத் தலைவர்கள்மீது சுமத்தப்பட்டிருக்கும் பொய் வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டும்.

இந்தியக் குடியரசை இனி என்னவென்று அழைப்பது – மருத்துவர் சையத் ஹஃபீசுல்லா

இது நாட்டின் உணவு பாதுகாப்புக்கும், விவசாயிகளின் நலனுக்குமான முக்கியமான போராட்டம் “இதன் வெற்றியை நாம் உறுதி செய்ய வேண்டும்” என்றெல்லாம் அப்ரோல் தெரிவித்துள்ளார்.

இந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கெதிரானவை என்பது ஒட்டுமொத்த நாட்டுக்கே புரிந்துவிட்டது. ஆனால் அரசின் தவறான கொள்கை முடிவுகளைக் கேள்வி கேட்டால் பதில் சொல்லாமல் போராடுபவர்கள் மீது குற்றம் சுமத்தும் வேலையை அரசு செய்கிறது என ஜேஎன்யூவின் வட்டார மேம்பாட்டு துறையின் பேராசிரியர் அதுல் சூட் தெரிவித்துள்ளார்.

“விவசாயிகளின் பிம்பத்தை உடைக்க முயன்றார்கள், போராட்டக்காரர்களைக் குறிப்பிட்ட மதம் அல்லது மாநிலத்துடன் தொடர்புபடுத்தி பிரித்தாள முயன்றார்கள். போராடுபவர்கள் தேசத்திற்கெதிரானவர்கள் என்று சொல்லிப் பார்த்தார்கள். ஜனவரி 26க்கு பிறகு அதன் தீவிரம் இன்னும் அதிகரித்துள்ளது, ஆனால் பொதுமக்களுக்கு உண்மை தெரியும், இது முற்றிலும் மதசார்பற்ற போராட்டம் தான்” என்றும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கும்பல்நீதி ஆதிக்கம் – கண்ணை மூடிக் கொள்ளும் இந்தியர்கள்

“ஜனவரி 26 நிகழ்வுகளுக்குப் பிறகு நாம் கேட்க வேண்டிய கேள்வி போராட்டத்தைத் திசைதிருப்பியவர்கள் யார் என்பது தான், ஊடகங்கள் விவசாயிகள் தோற்றுவிட்டதைப் போன்ற தோற்றத்தை உருவாக்க முயல்கின்றன, அவர்கள் தோற்றுவிட்டார்கள் என்றால் வென்றது யார்? நீங்கள் விவசாயிகளுக்கெதிராக நிற்கிறீர்களா? விவசாயிகளுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம், இது விவசாயிகளின் சமூக நீதிக்கான போராட்டம்” என்று காந்திய சிந்தனையாளரும் செயல்பாட்டாளருமான குமார் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

உண்மையான போராட்டம் கொச்சைப்படுத்தப்படுகிறது

இதற்கு முன்பு குடியுரிமை சட்டத்திற்கெதிராகப் போராடிய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் சிவில் சமூகத்தினரை தவறாகச் சித்தரித்து போராட்டத்தை நீர்க்கச் செய்தது போலவே எல்லா போராட்டத்தையும் சமாளிக்க முடியுமெனப் பிரதமரும், உள்துறை அமைச்சரும் நினைக்கிறார்கள் எனச் சமூக செயல்பாட்டாளர் சப்னம் ஆஸ்மி தெரிவித்துள்ளார்.

பிஎம்-கேர்ஸ் நிதியில் வெளிப்படைத்தன்மை இல்லை – முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மோடிக்கு கடிதம்

வியாழக்கிழமை இரவே காசிப்பூரில் இதற்கான திட்டம் தீட்டப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கும் அவர், “வன்முறை என்பது வன்முறை தான், அதிகரிக்கும் போது அது அழிந்து போகும்” என்ற உருது கவிஞர் சஹிர் லுதியான்வியின் புகழ்பெற்ற வரிகளை நினைவுகூர்கிறார்.

“நடப்பவற்றை ஒட்டுமொத்த நாடும் பார்த்துக்கொண்டிருக்கிறது. ஊழல் ஊடகங்கள் அரசுச் சார்பு பரப்புரை செய்வதுடன், விவசாயிகளைத் தாக்க வன்முறையாளர்கள் அனுப்பப்படுகிறார்கள், ஆனால் விவசாயிகளின் போராட்டத்தை உங்களால் இப்படி அடக்கிவிட முடியாது” என்று ஆஸ்மி தெரிவித்துள்ளார்.

(தி வயர் இணையத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்