Aran Sei

எங்களை ஏன் ஏமாற்றுகிறீர்கள் மோடி? – எழுத்தாளர் க.பொன்ராஜ்

ன்பில்லாத மோடிக்கு…

விளம்பரம்

வணக்கம் சொல்ல விரும்பவில்லை. ஜிஎஸ்டி மூலம் கடந்த ஏப்ரல் மாதத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரு லட்சத்து 41 ஆயிரம் கோடி ரூபாய் கிடைத்துள்ளதை நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில் (2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அதிலாவது இருக்கிறதா என தெரியவில்லை) இக்கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். டெல்லியில் உள்ள பத்ரா மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இல்லாமல் கொரோனா தொற்றாளர்கள் 12 பேர் உயிரிழந்த தகவல், பணத்தை எண்ணிக் கொண்டிக்கும்போது உங்கள் காதைக் கடந்து போயிருக்கலாம். சரி விடுங்கள்… கடந்த எட்டு நாட்களில் இதோடு 57 பேர் இப்படித்தான் உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களை எரிக்க விறகுக்கு கூடத்தான் தட்டுப்பாடு… பாவம் நீங்கள் என்ன செய்வீர்கள்.

சமையல் எரிவாயு சிலிண்டரே வாங்க முடியாத அளவுக்கு விலை ஏறிக் கிடக்கும்போது, கள்ளச்சந்தையில் 30,000 ரூபாய், 40,000 ரூபாய் என விற்கும் சிலிண்டரை நீங்களா வாங்கித் தர முடியும்?… இல்லை, உங்கள் அட்மினிடம் சொல்லி ட்விட்டரில் ஒரு வரி இரங்கல்தான் தெரிவிக்க முடியுமா?. “தலைவா” ரஜினி போன்ற புகழுரை உள்ள ஒரு ட்விட்டர் பக்கத்தில் இப்படி ஒரு இரங்கல் குறிப்பு அசிங்கமாக இருக்காதா?

‘இந்திய ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ வேண்டும்’ – திமுக கூட்டணிக்கு ஏ.ஆர்.ரகுமான் வாழ்த்து

ஆனால் அனைவருக்கும் தடுப்பூசி போடுகிறேன் என கூறிக் கொண்டு 136 கோடி இந்தியர்களையும் ஏன் ஏமாற்றிக் கொண்டிருக்கிறீர்கள் நரேந்திர மோடி? நாடும் நாட்டு மக்களும் கொடுந் துயரத்திலும், கடும் அச்சத்திலும் இருக்கும் நேரத்தில் தடுப்பூசி போடும் தலையாய கடமையை கை கழுவ உங்களுக்கு எப்படி மனம் வந்தது என தெரியவில்லை. மருத்துவ பணியாளர்கள், துப்புரவு ஊழியர்கள், காவலர்கள் என முன்களப் பணியாளர்களுக்கு நாடு முழுவதும் தடுப்பூசி போடத் தொடங்கியபோது அதை பெருமையோடு குறிப்பிட்டீர்கள். அதற்கான தகுதியானவராக நீங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் எங்களை இப்படி நட்டாற்றில் இறக்கிவிட்டு போவீர்கள் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை.

45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மத்திய அரசு தனது சொந்த செலவில் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறது. நம் நாட்டைப் பொறுத்தவரை சீரம் நிறுவனம் தயாரிக்கும் கோவிஷீல்ட், பாரத் பயோடெக் தயாரிக்கும் கோவேக்சின் தடுப்பூசிகளுக்கு மட்டுமே அனுமதி கொடுத்திருக்கின்றீர்கள். (ரஷ்யாவின் ஸ்புட்னிக் – வி தடுப்பூசிக்கு அண்மையில் அனுமதி அளித்து இன்றுதான் முதற்கட்ட டோஸ் வந்திறங்கியிருக்கிறது)

‘ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் சாக; தனது அதிகார வெறியை தம்பட்டம் அடிக்கும் பிரதமர்’ – சீதாராம் யெச்சூரி

136 கோடி மக்கள் உள்ள நாட்டில் வெறும் இரு தடுப்பூசிகளுக்கு மட்டும் அனுமதி கொடுத்ததற்கு நீங்கள் சொல்லிக்கொள்ளும் காரணங்களுள் ஒன்று “ஆத்மநிர்பார் பாரத்”. அதாவது தன்னிறைவு பெறும் இந்தியா. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் தடுப்பூசிக்கு வெளிநாட்டினரின் கையை எதிர்பார்க்காமல் நாமே தயாரித்து நம் மக்களுக்கு போடுவோம் என்பது… உண்மையில் இந்த சுதேசிப் பார்வை மெச்சிக் கொள்ள வேண்டிய ஒன்றுதான். பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் கண்டுபிடிப்பான கோவிஷீல்டை கூட இந்தியாவில்தான் தயாரிக்க வேண்டும் என சீரம் இந்தியா நிறுவனம் மூலம் தயாரித்து பெற்றுக் கொள்கின்றீர்கள். (உண்மையில் இது சுதேசியும் இல்லை, விதேசியும் இல்லை… ரெண்டும் கெட்டான். அதாவது உங்கள் அகராதிப்படி “மேக் இன் இந்தியா”. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் இந்தியத் தயாரிப்பல்ல, இந்தியாவில் தயாரித்தது)

கோவேக்சின் மட்டுமே அசல் நம் ஊர் தயாரிப்பு. உங்களின் பல திட்டங்கள் போலவே இந்தத் தடுப்பூசித் திட்டமும் ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தது. ஆனால், இன்று மக்களின் உயிரோடு விளையாடும் அரசியலாக கொரோனாவைப் போல உருமாறி இருப்பது இப்போதுதான் பலருக்கும் தெரிகிறது. 45 வயதுக்கு உட்பட்டோரே இரண்டாவது டோஸ் கிடைக்காமல்  மருத்துவமனைகளுக்கு ஏறி இறங்கிக் கொண்டிருக்கின்றனர். தாமதமாக முதல் டோஸ் போடச் செல்பவர்களின் நிலை கேட்கவே வேண்டாம்… தமிழகம், மகாராஷ்டிரா என நாடு தழுவிய தட்டுப்பாடு குறித்து மாநில அரசுகள் கூப்பாடு போட்டாலும் உங்களின் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் வழக்கம்போல் புள்ளி விவரங்களால் கோலம் போட்டுக்கொண்டுதான் இருக்கிறார். அது அலங்கோலமாகத்தான் இருக்கிறது. 15 கோடி டோஸ் தடுப்பூசி போட்டுவிட்டோம், ஒரு கோடி டோஸ் மாநிலங்களின் கையிருப்பில் இருக்கிறது என அதிகாரிகள் கூறியதை எழுத்துக் கூட்டி வாசித்துவிட்டு போய்விட்டார்.

கர்நாடகாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 24 பேர் மரணம் – சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உறவினர்கள் போராட்டம்

ஆக்ஸிஜன் உருளைகள் இல்லாமல் இதுவரை 57 பேர் உயிரிழந்தபோதும், பல பத்தாயிரங்களில் கள்ளச்சந்தையில் ஆக்ஸிஜன் உருளைகள் கிடைக்கின்றபோதும், போதுமான அளவு ஆக்ஸிஜன் உருளைகள் இருப்பதால் யாரும் பீதியடைய வேண்டாம் என கூறிக்கொண்டிருப்பவர்தானே அவர், உண்மையில் அவரைப் பார்த்துதான் பீதியாக இருக்கிறது. சரி விஷயத்திற்கு வருகிறேன்,  இன்று தடுப்பூசி தட்டுப்பாட்டிற்கு ஆட்பட்டு நிற்கும் நாம்தான் மார்ச் மாதம் வரை பல நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்து கொண்டிருந்தோம். அப்போது இதே ஹர்ஷ்வர்தன் தான், ஃபைசர் தடுப்பூசி எங்களுக்குத் தேவையில்லை என்று வெளிப்படையாகவே கூறினார். மற்ற தடுப்பூசிகளுக்கு இதுவரை அனுமதி தராததற்கு காரணம் உண்மையில் அவை நமது தகுதிப்பாடு அளவீடுகளுக்குள் வராததா அல்லது வேறு ஏதேனுமா என அந்த அமைச்சருக்கே வெளிச்சம்.

அது ஒரு பக்கம் கிடக்கட்டும்… 18 வயது முதல் 44 வயதுக்கு உட்பட்டோருக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி போடாது என நீங்கள் கூறியதும், அதனால், மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கான தடுப்பூசி விலையை அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டதும், அதற்கு பின் மூன்று விதமான விலையை இரு தடுப்பூசி நிறுவனங்களும் அறிவித்ததும் “திட்டமிட்ட” நிகழ்வல்ல என எங்களுக்கு ஞாபகத்தில் உறுத்தாமல் இருந்தால் நன்றாகவே இருந்திருக்கும்.

அதிலும், மே ஒன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி என கூவிய ஊடகங்கள், இனி மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி போடாது என்பதை அடக்கியும், அதில் பல அதைப் பற்றி பேசமலும் பிடில் வாசித்ததை என்ன சொல்வது என்றே தெரியவில்லை. சமூக ஊடகங்கள் என்று ஒன்று இல்லாமல் இருந்தால் இன்றைய தேதிக்கு ஊடகங்கள் வழி நாட்டில் பாலாறும், தேனாறும் கூடவே மோடியாறும் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. நான் விஷயத்திற்கு வருகிறேன்.

தடுப்பூசிகளை ஏழைகள் பெற முடியுமா?; விலையை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் – உச்சநீதிமன்றம்

இப்போதும், 50 விழுக்காடு தடுப்பூசியை நாங்கள் பெற்றுத் தருகிறோம் என திரைபோட்டு அதற்கு பின்னால் ஒளியத் துடிக்காதீர்கள்.

நூறாண்டு காணாத கொடுந்துயரில் மக்கள் உழன்று கொண்டிருக்கும் போது தடுப்பூசிக்கான விலையை அரசு நிர்ணயிக்காமல் ஏன் தனியார் நிறுவனத்திடம் கொடுக்க வேண்டும் என கேட்பதற்கு உச்சநீதிமன்ற நீதிபதியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை… தேநீர் கடையில் தினத்தந்தி பத்திரிகையை எழுத்து கூட்டி படிக்கத் தெரிந்த சாமானியனாக இருந்தாலே போதும்… உங்களுக்கு 150 ரூபாய்க்கு கொடுத்த அதே தடுப்பூசியை மாநிலங்களுக்கு 400 ரூபாய் என்கிறது சீரம் இந்தியா நிறுவனம் (பின்பு கண்துடைப்புக்காக 300ஆக குறைத்தார்கள்). 600 ரூபாய் என ஏலம் போடுகிறது கோவேக்சின். (இவர்களும் பின்பு 400 ரூபாயாக “மக்கள் நலன்” கருதி குறைத்திருக்கிறார்கள்).

தடுப்பூசி விலையை நீங்களே நிர்ணயிங்கள் என தயாரிப்பு நிறுவனங்களிடம் ஒரு நாட்டு அரசே கூறுவது வெட்கக்கேடானதாக பார்க்கப்படும் சூழலில், குறைந்தபட்சம் விலையைக் குறையுங்கள் என வெளிப்படையாக கேட்கக் கூட முடியாத நிலையில் நீங்கள் இருக்க என்ன காரணம் நரேந்திர மோடி.

அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி போடுங்கள் என்கிறார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அதற்கு கூட பணத்தை செலவழிக்காமல் என்ன செய்யப் போகின்றீர்கள் என கேட்கிறார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உங்களின் நண்பரான தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியே கூட, நீங்களே கொள்முதல் செய்து தாருங்கள் என மென்மையான கோரிக்கையும் வைக்கிறார்.

இதற்கு எதற்கும் நீங்கள் பதில் அளிக்காமல் மவுனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது ஏன் மிஸ்டர் மோடி.

தொடக்கத்தில் 150 ரூபாய்க்கு தருவோம், அதன் பின் மத்திய அரசுக்கே 400 ரூபாய்தான் விலை என்று முதலிலேயே அரசாங்கத்திடம் கூறி விட்டோம் என கோவிஷீல்ட் தயாரிக்கும் சீரம் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அதார் பூனாவாலா வெளிப்படையாக பேட்டி கொடுக்கின்றாரே அது உண்மையா என்பது பற்றி நீங்களும், உங்கள் அமைச்சர் ஹர்ஷ்வர்தனும் எப்போது விளக்கம் தருவீர்கள்.

‘பெரும் நம்பிக்கையுடன் உள்ளோம்’ – திமுக வெற்றி குறித்து அற்புதம்மாள்

150 ரூபாய்க்கு கொடுப்பதிலேயே லாபம் இருக்கிறது என அதார் பூனாவாலா கூறிய நிலையில், இந்த 3 வகையான விலை நிர்ணயம், கொரோனாவை வைத்து யார் சம்பாதிக்க?

விலை அதிகமாக இருந்தால் மாநிலங்கள் தடுப்பூசி வாங்க வேண்டிய அவசியமில்லை. தேவையான தடுப்பூசியை தேர்ந்தெடுத்துக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்பு இருக்கிறது என அதார் பூனாவாலா பேசுவதற்கு தைரியம் கொடுத்தது எது என நாங்கள் தெரிந்து கொள்ளலாமா?

தடுப்பூசி சுமையை மிகவும் லாவகமாக மாநிலங்களின் முதுகிற்கு மாற்றிவிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றீர்கள். வேறு வழியே இல்லாமல் தமிழகம், கேரளா என இதுவரை 20 மாநிலங்கள் எங்கள் செலவில் இலவசமாக தடுப்பூசி போடுகிறோம் என அறிவித்துவிட்டன. ஏற்கெனவே கொரோனா ஊரடங்கு, தடுப்பு நடவடிக்கை, மருத்துவக் கட்டமைப்பு என மாநிலங்கள் கடுமையான பொருளாதா சுழலில் சிக்கி தத்தளித்துக் கொண்டிருக்கும்போது இப்படி ஒரு விளையாட்டை நீங்கள் விளையாடிப் பார்ப்பதை வரலாறு என்றும் மறக்கப்போவதில்லை.

கொரோனா தடுப்பூசிக்காக பட்ஜெட்டில் 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கினீர்களே அது என்னவாயிற்று 55 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 67 ஆயிரம் கோடி ரூபாய்க்குள் அனைத்து இந்தியருக்கும் தடுப்பூசி போட்டுவிடலாம் என நிபுணர்கள் கூறும்போது பட்ஜெட் ஒதுக்கீட்டையும், பி.எம். கேர் நிதியையும் கையில் வைத்துக் கொண்டு இன்னும் எதற்காக வேடிக்கை பார்க்க வேண்டும்?

தேவைப்பட்டால் கூடுதல் நிதி ஒதுக்குவேன் என பட்ஜெட் உரையில் உறுதி அளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எங்கே?

நீதிமன்ற உரையாடலை வெளியிட தடை கோரிய தேர்தல் ஆணையம் – ’ஊடகங்கள் ஜனநாயகத்தின் பாதுகாப்பு அரண்கள்’ – மறுத்த உச்சநீதிமன்றம்

கொரோனா காலத்தில் கொழுத்து வளரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் போல் இதுவரை இல்லாத அளவு பெட்ரோல், டீசல் வரி வசூல், ஜிஎஸ்டி வசூல் என அரசாங்கத்தின் கல்லா நிறைந்து கொண்டிருக்கும்போது, இட்லிக்கு கூட வரி கட்டும் குடிமகனுக்காக கல்லாப்பெட்டி திறக்க மறுக்க என்ன காரணம்?

18 வயது நிரம்பியோர! தடுப்பூசி போட்டுக் கொள்ள கோ வின் செயலியில் பதியுங்கள் எனக் கூறுவதில் என்ன பெருமை இருக்கிறது பிரதமரே. கர்நாடகா, உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட பாஜக ஆளும் சில மாநிலங்கள் பெயருக்குத்தான் மே ஒன்று அன்று 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்துள்ளன. உண்மையில் தடுப்பூசி கேட்டு முறையிட்ட மாநிலங்களுக்கு இதுவரை எந்த நிறுவனமும் எவ்வளவு தருவோம், எப்போது தருவோம் என கூறவே இல்லை. பதிலுக்கு காத்துக் கிடக்கின்றன மாநில அரசுகள்.

இதுவரை இப்படி தடுப்பூசி கொள்முதல் செய்தது இல்லை, தடுப்பூசி நிறுவனங்களோடு பேரம் பேச முடியாது என மாநிலங்கள் தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில், கை பிடித்து வழிகாட்ட வேண்டிய நீங்கள் கை கழுவிவிட்டுப் போவதுதான் கூட்டாட்சித் தத்துவமா?

எங்களது செயலியில் ஒரே நாளில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட முன்பதிவு செய்து விட்டார்கள் என காற்றில் பாராட்டுப் பத்திரம் எழுதிக் கொண்டிருப்பதால் என்ன பலன்?

அணையாமல் சிதையில் எரியும் தீ – கண்ணீரால் அணைத்துவிடமுடியுமா என்ன?

யார் இந்த பாரத் பயோடெக். பொதுமக்களின் வரிப்பணத்தில் தடுப்பூசி ஆராய்ச்சி செய்த நிறுவனம். மூன்றாம் கட்ட பரிசோதனை முடியும் முன்பே அதன் தடுப்பூசிக்கு அவசர அவசரமாக அனுமதி கேட்டு வாங்கிக் கொண்ட நிறுவனம். இன்று மாநிலங்களை ஆட்டுவித்துக் கொண்டிருப்பது யாருக்கு அசிங்கம் என கொஞ்சம் சிந்தியுங்கள்.

காசு கொடுக்க தயாராக இருந்தும் தடுப்பூசி கிடைக்காமல் மாநிலங்கள் கையை பிசைந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தனியார் மருத்துவமனைகளோ 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கின்றன.  தேவைப்படுபவர்கள் அங்கே போய் போடலாமே என நிர்மலா சீதாராமன் போல பேசி விடாதீர்கள்… 600 ரூபாயும் ஆயிரம் ரூபாயும் கொடுத்து போட நாட்டில் முக்கால் வாசிப் பேருக்கு வழியில்லை.

உங்களின் செல்லாத நோட்டு நடவடிக்கையால் 5 ரூபாய் கொண்ட பார்லே ஜி பிஸ்கட் பாக்கெட் வாங்கக் கூட வக்கற்றுப் போனவர்கள் வாழும் தேசம் என்பதை மறந்து விடாதீர்கள்…

மாநில அரசுகளை கைவிட்டதாக நினைத்துக் கோண்டு மக்களை முற்றாக கைவிட்டு விட்டீர்கள் மோடி. எங்களை ஏமாற்றும் அளவுக்கு உங்களுக்கு ஒட்டுப் போட்டதை தவிர நாங்கள் செய்த குற்றம் என்ன மிஸ்டர் மோடி?

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்