Aran Sei

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 4)

credits : PTI

பகுதி 4: யோகி பிரதேசத்தில் தலித்களும் பழங்குடிகளும்

மாறுபட்ட கருத்துகளுக்கு இடமளிக்க ஆதித்யநாத் விரும்பவில்லை. அதிலும் குறிப்பாக தலித்துகளின் மாற்றுக்கருத்துக்கு அவர் எதிராக இருந்தார்” என்று  மீரட்டைச் சேர்ந்த சாதி எதிர்ப்புக் குழுவான ப்ளூ பேந்தர்ஸ் அமைப்பின் தலைவர் சுஷில் கௌதம் தெரிவித்துள்ளார். தாழ்த்தப்பட்டவர்கள் என்று பொருள்படும் மராத்திச் சொல்லான தலித்துகள், இந்தியாவில் உள்ள பட்டியல் சாதியினர்  என பெயர் மாற்றம் பெற்றுள்ளனர். அவர்கள் உ.பி.யின் மக்கள் தொகையில் 20 விழுக்காட்டினர் என்பதுடன், மாநிலத்தின் தேர்தல் அரசியலில் முக்கிய பங்கை வகிக்கின்றனர்.

பல நூற்றாண்டுகளாக, அவர்கள் இந்து சாதிய ஒழுங்கு அடக்குமுறைக்கு ஆளாகியுள்ளனர். தீண்டாமை போன்ற சமூக-பொருளாதார நடைமுறைகள் இன்னும் அவர்களைப் பாகுபடுத்தப் பயன்படுத்தப்படுகின்றன.

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 1)

ஜாதிவெறி குற்றச்சாட்டுக்குப் பலமுறை ஆளாகிய ஆதித்யநாத்

மே, 2017 இல், கிழக்கு உத்தரபிரதேசத்தில் உள்ள குஷிநகர் மாவட்டத்தில் தலித் குடும்பங்களுடன் ஆதித்யநாத் பொதுக்கூட்டம் நடத்தினார். அவரது வருகைக்கு ஒரு நாள் முன்னதாக, கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு முன்பு குடும்பங்களுக்கு சோப்பும், ஷாம்புகளும் விநியோகிக்கப்பட்டன. இந்த நடவடிக்கை உலக அளவில் விமர்சிக்கப்பட்டது. உறுதியான நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்திய அரசியலமைப்பு அரசு கல்லூரிகள் மற்றும் வேலைகளில்   பட்டியலின மக்களுக்கும், பிற பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கும்  இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், ஆதித்யநாத் இட ஒதுக்கீடு கொள்கையை எதிர்த்தார்.

“அவரது அரசாங்கத்தில் உள்ள பெரும்பாலான உயர் போலீஸ் அதிகாரிகள் தாக்கூர்கள். அவரது அரசாங்கத்தில் ஒரு அப்பட்டமான உயர் சாதி ஆதிக்கம் உள்ளது,” என்று சுஷில் கூறுகிறார்.

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 2)

ஏப்ரல் 2017 இல், அவர் ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திற்குள், தாக்கூர் சமூகத்தின் எதிர்ப்பு காரணமாக மேற்கு உத்தரபிரதேசத்தில் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள ஷபீர்பூர் கிராமத்தில் பி.ஆர்.அம்பேத்கரின் சிலையை நிறுவ மாவட்ட அதிகாரிகளால் தலித் சமூகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அம்பேத்கர் ஒரு சமூக சீர்திருத்தவாதி.  இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழுவின் தலைவர்.  தலித் புத்த மத இயக்கத்தை ஊக்கப்படுத்தினார்.  ஒரு சில வாரங்களுக்குள், அதே கிராமத்தில், அதே பகுதியில் மன்னன் மகாராணா பிரதாப் ஊர்வலம் செல்ல தாக்கூர் சமூகத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் மோதல் வெடித்தது. தலித் சமூகத்தினரின் 55 வீடுகளை  ஒரு கும்பல் எரித்தது.  பலர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து நடந்த போராட்டத்தில், 50க்கும் மேற்பட்ட தலித்துகளும், இரண்டு தாக்கூர்களும் கைது செய்யப்பட்டனர்.

நிர்வாகத்தின் இதே போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கை மீண்டும் மீண்டும் செய்யப்படுவதற்கு அடையாளமாக ஆகஸ்ட் 2018 இல், மீரட்டில் உள்ள உல்தேபூர்  கிராமத்தில் தலித் சிறுவன் தாக்கூர் ஆட்களால் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, நகரின் மையத்தில் உள்ள சௌத்ரி சரண் சிங் பூங்காவில் ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக அதே கிராமத்தைச் சேர்ந்த தாக்கூர்களுக்கு அதே இடத்தில் இரண்டு வாரங்களுக்கு முன் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

ஒவ்வொரு முறையும் மக்கள் போராட்டம் நடத்தும் போது 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. “மீரட்டின் பெரும் பகுதிகள் ஏறத்தாழ கடந்த 5 ஆண்டுகளாக 144 பிரிவின் கீழ் உள்ளன. எதிர்ப்பாளர்களை யோகி   சகித்துக் கொள்ள மாட்டார், ” என்று சுஷில் கூறினார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 144, ஒரு பகுதியில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் ஒன்றுகூடுவதைத் தடை செய்கிறது. சமீபத்திய அறிக்கைகளின்படி,  இந்தியாவில் ஐந்து தலித் மாணவர்களில் ஒருவர் வசதிகள் இல்லாததால் படிப்பை நிறுத்தி விடுகிறார். தலித் மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்கான விதிகளை சமூக-பொருளாதார அளவுகோல்களில் இருந்து மாற்றி தகுதி மதிப்பெண் என்று அவரது அரசாங்கம் மாற்றியுள்ளது. இப்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தபட்சம் 60% மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே உதவித்தொகை கிடைக்கும். இது  ஒதுக்கப்பட்ட சமூகத்தினரை விலக்கி வைப்பதற்கான முடிவு என விமர்சனத்திற்குள்ளானது. உண்மையில், 2021 அக்டோபரில் அவர் அமைச்சரவையின் சமீபத்திய விரிவாக்கத்தில் கூட, அவர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களை ஒதுக்கி விட்டார்.  ஆனால் இந்த ஆண்டு, ஜனவரி மாதம், 22ஆம் தேதி, மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, அவரது அரசியல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, ஆதித்யநாத் மற்றும் இரண்டு பாஜக உறுப்பினர்கள் கோரக்பூரில் உள்ள ஒரு தலித் குடும்பத்தின் வீட்டில் சாப்பிட்டனர்.  , “பொருளாதாரத்தில் நலிவடைந்தவர்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை (mineral water) அதிகமாகப் பயன்படுத்துவதில்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் ஆதித்யநாத் பிஸ்லேரி (bisleri) பாட்டிலுடன் அமர்ந்திருந்தார். எனவே இது தீண்டாமை பழக்கத்தை உடைக்காமல், புகைப்படம் எடுப்பதற்காக  மட்டுமே நடத்துவதாக இருந்தது. உண்மையிலேயே எங்களை சமமாக நடத்த விரும்பினால், எங்களுடன் அவர், பாரம்பரியமாக ஒதுக்கப்பட்ட வேலைகளான சாக்கடைக்குள் நுழைய வேண்டும்!” என்று கூறுகிறார்.

தலித் சமூகத்தின் பெரும் பகுதியினர் பல நூற்றாண்டுகளாக துப்புரவு பணி செய்து வருகின்றனர். குறிப்பாக கையால் மலம் அள்ளும் மோசமான நடைமுறையை இந்திய அரசு 1993ஆம் வருடம் தடை செய்தது. இருந்தாலும், பலர் நிர்பந்தத்தின் காரணமாக இருக்கின்றனர் உத்தரபிரதேசத்தில் பழங்குடியினர் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவானவர்கள். ஆனால் 80 விழுக்காட்டினர் நிலமற்றவர்கள். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மாநிலத்தில் 50% பட்டியலின மலைவாழ் மக்கள் குடும்பங்கள் வாழத் தகுதியற்ற நிலையில் உள்ளன. உத்தரப் பிரதேசத்தில் உள்ள பல பழங்குடியினர், அட்டவணைப் பழங்குடியினராக வகைப்படுத்தப்பட்டு, அவரது ஆட்சியின் கீழ் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.  குஜ்ஜார் சமூகத்தைச் சேர்ந்த கிராமத் தலைவர் யக்யாதத் உரிமை கோரும் நிலத்தை கோண்ட் பழங்குடியினர் காலி செய்ய மறுத்துவிட்டனர். இது குறித்து ஆதித்யநாத் அரசுக்கு பழங்குடியினர் முன்கூட்டியே எச்சரித்தும், அவரது நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மறுத்தது. இதனைத் தொடர்ந்து ஜூலை 17, 2019 அன்று நடந்த வன்முறையில், சோன்பத்ரா மாவட்டத்தில் பத்து பேர் கொல்லப்பட்டனர்.  மேலும் 25 பேர் காயமடைந்தனர். “கடந்த எழுபது ஆண்டுகளாக ஆதிவாசிகள் அந்த நிலத்தை உழுது வருகின்றனர். ஆதித்யநாத் அரசாங்கம் பதவியேற்ற பிறகு, நிலத்தை உழுவதை நிறுத்துமாறு ஆதிவாசிகள் உள்ளூர் நில மாஃபியாவால் அச்சுறுத்தப்பட்டனர்,” என்று முன்னாள் இந்திய காவல்துறை அதிகாரியும், அகில இந்திய மக்கள் முன்னணியின் தலைவருமான எஸ்ஆர் தாராபுரி கூறினார்.

ஆதித்யநாத் அரசு பழங்குடியினரின் அடையாளத்தை வலியுறுத்துவதில் மகிழ்ச்சியடையவில்லை என்று தாராபுரி கூறுகிறார். பழங்குடியினர் தங்கள்  தனிப்பட்ட பழக்க வழக்கங்களையும், சடங்குகளையும், மதத்தையும் பின்பற்றுகிறார்கள்.  இந்துத்துவா திட்டம் இந்தியாவில் உள்ள பழங்குடியினரை தீவிரமாக இந்துமயமாக்க முயற்சிக்கிறது. “உள்ளூர் பழங்குடியினரின் இந்து அல்லாத அடையாளத்தை உறுதி செய்ய வேண்டி இருப்பது வருத்தமுற செய்கிறது. இதனால் பழங்குடியினர் தங்கள் நிலத்தை விட்டு வெளியேற்றப் படுகிறார்கள்,” என்று தாராபுரி கூறுகிறார்.

தொடரும்……

South asian women in media இணையதளத்தில் நேஹா தீட்சித் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்