Aran Sei

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 3)

பகுதி 3: கோமாதாக்களும் இஸ்லாமியர்களும் காவல்துறையின் தோட்டாக்களும்

தித்யநாத் அரசாங்கத்தின் முதல் 18 மாதங்களில், 160 பேர் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ்  குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர்  இஸ்லாமிய தொழிலாளர்கள் – செங்கல் சூளைத் தொழிலாளர்கள், ரிக்சா காரர்கள், தெரு வியாபாரிகள், மாணவர்கள் ஆகியோர். ஜனவரி 2018 மற்றும் டிசம்பர் 2020க்கு இடையில் உத்தரப் பிரதேசத்தில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் வழியாகப் போடப்பட்ட 120 வழக்குகளில் மூன்றில் ஒரு பங்கு இஸ்லாமியர்களுக்கு எதிரானது. பெரும்பாண்மையான வழக்குகள் பசுவதை என்று இருந்தன.

இந்து மதத்தின் சில பிரிவுகளால் புனித விலங்காகக் கருதப்படும் பசு, வலதுசாரி அரசியலில் முக்கிய உந்து சக்தியாக உள்ளது. அரசுக்கு வாலாட்டும் ஊடகங்கள்,  ஆதித்யநாத் பசுக் கூடங்களில் நேரத்தை செலவிடுவது, அவற்றைப் பராமரிப்பது, வழிபடுவது போன்ற காட்சிகளை அடிக்கடி காட்டுகின்றன. தொற்றுநோயின் போது, 2021 ஆம் ஆண்டில், மருத்துவ உபகரணங்களுடன் பசு உதவி மையத்தை அரசாங்கம் அமைப்பதாக செய்திகள் வந்தன. ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்ததால், அதிகாரபூர்வ விருந்துகளில் இறைச்சி வழங்கப் படுவதில்லை. இந்தியாவில் உள்ள இந்து வலதுசாரிகள் இந்தியா ஒரு சைவ நாடு என்ற கட்டுக்கதையை அடிக்கடி பரப்பி வருகின்றனர். இந்தியர்களில் 20 விழுக்காட்டினர் மட்டுமே சைவ உணவு உண்பவர்கள் என்று தரவுகள் தெரிவிக்கின்றன. பெரும்பான்மையான இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் இதர 80 விழுக்காட்டினர் இறைச்சியை உண்கின்றனர்.  அவர்களில் 15 விழுக்காட்டினர் மாட்டிறைச்சியை உண்கின்றனர். உண்மைக் காரணங்கள் அகற்றப்பட்டு, இந்துத்துவா ஆதரவாளர்கள் ‘பசுக்களைப் பாதுகாப்பதை’ ஒரு சாக்காகப் பயன்படுத்தி, இஸ்லாமியர்கள் ‘பசுக்களை’ அறுப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். அவரது அரசாங்கம் உ.பி.யில் உள்ள கசாப்பு வணிகத்தை குறிவைத்துள்ளது. இது நாட்டின் சுமார் ஐந்து மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள எருமை இறைச்சியின் மொத்த ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கு பங்களிக்கிறது.

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 1)

வியாபாரம் பெரும்பாலும் இஸ்லாமியர்களால் நடத்தப்படுகிறது. கடந்த நான்கரை ஆண்டுகளில், மாநில அரசு 150 சட்டவிரோத இறைச்சிக் கூடங்களை மூடியுள்ளதுடன், மாநிலத்தில் பசு கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 319 பேரை கைது செய்துள்ளது.  கைது செய்யப்பட்டதைத் தவிர, பசு வதை வதந்திகளால் பல இஸ்லாமியர்கள் மாநிலத்தில் அடித்துக் கொல்லப் பட்டுள்ளனர்.  “மாடு, கத்தி, கோடாரி, ரத்தம் எதுவும் இல்லை. இஸ்லாமியர்கள் என்பதால் நாங்கள் தாக்கப்பட்டோம்,” என்று சமியுதீன் கூறுகிறார்.

கடந்த நான்கரை ஆண்டுகளில், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் பெரும்பான்மை மத உணர்வும் ஊடுருவியுள்ளது. கோரக்பூரில் உள்ளதைப் போலவே காவல் நிலைய வளாகங்களிலும் இந்து திருவிழாக்களைக் கொண்டாடுவது ஊக்குவிக்கப்படுகிறது.  ஒதுக்கப்பட்டவர்களின் கொலைகள் காவல்துறையில் எவ்வாறு நிறுவனமயமாக்கப்பட்டுள்ளன என்பதையும் இது பிரதிபலிக்கிறது. காவல்துறை என்கவுண்டர்கள் எனப்படும் துப்பாக்கிச் சூடு மாநில கொள்கையாகிவிட்டது.

2017 ஆம் ஆண்டு தனது தேர்தல் பிரச்சாரத்தில், ஆதித்யநாத் உ.பி.யின் குற்ற வரைபடத்தை மாநிலத்தின் மத அமைப்புடன் இணைத்து, சட்டம் ஒழுங்கு வீழ்ச்சியடைந்து வருவதற்கு இஸ்லாமியர்கள்தான் காரணம் என  சுட்டிக்காட்டினார். குற்றவாளிகள் கொல்லப்படுவார்கள் என்றார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்தவுடன் தன் மீதான அனைத்து கிரிமினல் வழக்குகளையும் திரும்பப் பெற்றார். அவரது ஆட்சிக்காலத்தின் நான்கு ஆண்டுகளில், அக்டோபர் 2021க்குள், உ.பி. காவல்துறை 151 பேரைக் கொன்றுள்ளது. 3,196 பேர் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர்.  இது பேச்சுவழக்கில் ‘காவல்துறை என்கவுண்டர்கள்’ என்று அழைக்கப்படுகிறது. ஏறக்குறைய அவர்கள் அனைவரும் விசாரணைக் கைதிகள்.  அவர்களில் கிட்டத்தட்ட 40 விழுக்காட்டினர் இஸ்லாமியர்கள்.  மீதமுள்ளவர்கள் பட்டியல் இனத்தையும், பிற பிற்படுத்தப்பட்ட சமூகங்களையும் சேர்ந்தவர்கள். 2015 ஆம் ஆண்டுக்கான தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் சிறைத் தரவுகளின்படி, சிறைக் கைதிகளில் மூன்றில் இரண்டு பங்கினர் விசாரணைக் கைதிகள். நாடு முழுவதும் உள்ள விசாரணைக் கைதிகளில் 55% க்கும் அதிகமானோர் இஸ்லாமியர்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியினர்.

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 2)

தற்காப்புக்காக காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்திய தற்செயலான என்கவுண்டர்களுக்குப் பதிலாக கொலைகள் எவ்வாறு முன்கூட்டியே திட்டமிடப்பட்டு இலக்கு வைக்கப்பட்டன என்பதை விசாரணைகள் வெளிப்படுத்துகின்றன. கொல்லப்பட்டவர்கள் 17 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள், வருமானம் ஈட்டும் ஒரே குடும்ப உறுப்பினர்கள்.  தங்க மோதிரம், 100 அமெரிக்க டாலர்கள் வரை பணம் மற்றும் உணவு போன்ற சிறிய குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள். என்கவுன்டர் எண்களை ஆண்டறிக்கைகளில் சாதனையாக ஆதித்யநாத் அரசு பட்டியலிட்டுள்ளது.  உச்ச நீதிமன்ற உத்தரவை மீறி காவல்துறையினருக்கு விருதுகள் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது. கொலைகள் குறித்து விசாரிக்கக் கோரிய குடும்பத்தினர் மிரட்டப்பட்டு, அவர்களது வீடுகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும் பிரதமர் மோடியும் – அ.மார்க்ஸ்

“இத்தகைய கொடூரமான குற்றவாளிகள் நிறைந்த குடும்பமாக நாங்கள் இருந்தால், ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவளிக்க எங்களிடம் ஏன் பணம் இல்லை? நாங்கள் ஏன் இன்னும் மோசமான வீட்டில் வசிக்கிறோம்?” என்று 2017 அக்டோபரில் கொல்லப்பட்ட ஃபர்குவானின் மனைவி நஸ்ரின் கேட்கிறார். தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆதித்யநாத் அரசுக்கு 12க்கும் மேற்பட்ட நோட்டீஸ்களை  அனுப்பியுள்ளது. ஜனவரி 2019 இல், மனித உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர், இந்த கொலைகள் குறித்து எச்சரிக்கை விடுத்து இந்திய அரசுக்கு கடிதம் எழுதினார். ஆனால் அவரது கடிதத்தை அரசாங்கம் அதை கண்டுகொள்ளவே இல்லை.  2016 க்கும் 2019 க்கும் இடையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் சிறுபான்மையினர்/தலித்துகள்  துன்புறுத்தப்பட்ட 2,008 வழக்குகளை பதிவு செய்துள்ளது.  இதில் கொலை வழக்குகளும் சேரும். இதில் உ.பி.யில் இருந்து மட்டும் 43% வெறுப்பு குற்றங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பது சிறுபான்மையினர், தலித்துகள் மற்றும் பழங்குடியின சமூகத்தினருக்கு உ.பி. மிகவும் பாதுகாப்பற்றது  என்பதை உணர்த்துகிறது.

தொடரும்…

South asian women in media இணையதளத்தில் நேஹா தீட்சித் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்