Aran Sei

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 2)

யோகி வருகை: உத்தரப் பிரதேசம் to காவி பிரதேசம்.

சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக, தீவிர மதத் தலைவர் ஒருவர் பொதுப் பதவிக்கு நியமிக்கப்பட்டார். பதவியேற்ற ஓராண்டுக்குள், முதல்வர் அலுவலகம், மாநிலச் செயலகம், அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள், போக்குவரத்துப் பேருந்துகள், கழிப்பறைகள், சாலைப் பிரிப்பான்கள், சுங்கச்சாவடிகள், அரசுப் பள்ளிகளில் பள்ளிப் பைகள், பொதுக் கட்டிடங்கள், திரைச்சீலைகள், துண்டுகள், பாராட்டு மற்றும் பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் இஸ்லாமியர்களின் மெக்கா புனித யாத்திரைக்கு உதவும் மாநில ஹஜ் அலுவலகம் கூட காவி நிறத்தில் இருந்தது.

முன்பு ஆளும் அரசியல் கட்சிகளின் நீலம் மற்றும் சிவப்பு-பச்சை என பொதுச் சொத்துக்கள் மாறி மாறி இருப்பதை அரசு முன்பு பார்த்திருந்தாலும், இந்த முறை அது வேறுபட்டு இருந்தது. காவி நிறம் இந்து மதத்தில் புனிதமாக கருதப்படுகிறது. உ.பி.யில் உள்ள காவி நிறங்கள் மாநிலத்திற்கும் மதத்திற்கும் இடையிலான வேறுபாடு மங்கலாகிவிட்டதை மிக முக்கியமாக அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

யார் இந்த யோகி ஆதித்யநாத்? – சாமியார் மடம் முதல் சட்டமன்றம் வரை(பகுதி 1)

ஆதித்யநாத், இந்துத்துவ வாழ்க்கை முறையை திணிக்கும் இந்துத்துவா சித்தாந்தத்திற்கு ஏற்ப, மத பன்மைத்துவத்தை கடுமையாக எதிர்ப்பவர். 2008 ஆம் ஆண்டு, உ.பி.யில் உள்ள சித்தார்த் நகரில் இந்து யுவாவாஹினி ஏற்பாடு செய்திருந்த விராட் இந்து சேத்னா பேரணியில் கலந்துகொண்ட ஆதித்யநாத், இந்துக் கலாச்சாரமும் இஸ்லாமியர் கலாசாரமும் இணைந்து இருக்க முடியாது என்றும், மதப் போர் தவிர்க்க முடியாதது என்றும் கூறினார். அவரது அதிகாரப்பூர்வ இணையதளத்தில், ஆதித்யநாத்தின் பல முக்கியக் கட்டுரைகளில் இஸ்லாமிய வெறுப்பை ஊக்குவிக்கும், “இந்துக்களுக்கு ஆபத்து”, “எச்சரிக்கை”,  “இது இஸ்லாமிய பயங்கரவாதம்”  போன்ற சொற்கள் நிறைந்து இருக்கின்றன.

2015 ஆம் ஆண்டில், திரைப்பட நடிகர் ஷாருக்கான் இந்தியாவில் வளர்ந்து வரும் மத சகிப்புத்தன்மை குறித்தப் பிரச்சனையில் எழுத்தாளர்கள், திரைப்பட தயாரிப்பாளர்கள், அறிவியலாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களுடன் இணைந்தபோது, ஆதித்யநாத் அவரை பாகிஸ்தான் பயங்கரவாதி ஹபீஸ் சயீத்துடன் ஒப்பிட்டு, அவரது படங்களைப் புறக்கணிக்க இந்து பெரும்பான்மைக்கு அழைப்பு விடுத்தார்.மேலும் அவரை,  ‘பாகிஸ்தானுக்குப் போகுமாறு’ மிரட்டலும் விடுத்தார். உத்தரபிரதேசத்தின் சமயசார்பற்ற ஒத்திசைவு  இவரது ஆட்சிக்காலத்தில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

முதல்வராக பதவியேற்ற ஒரு வருடத்திற்குள், மார்ச், 2018 இல், உத்தரபிரதேச சட்டசபையில், தான் ஒரு பெருமைமிக்க இந்து என்பதால், இஸ்லாமியர்களின் பண்டிகையான ஈத் பண்டிகையை கொண்டாட வேண்டாம் என்று கூறினார். இது கங்கா-ஜமுனிதெஹ்சீப்பில் இருந்து புறப்பட்ட கருத்து.

அசுத்தமானது பெண்களின் மாதவிடாயா? பாஜகவினரின் அறிவா? – சூரியா சேவியர்

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, உத்தரபிரதேசத்தில் 19 விழுக்காட்டினர் இஸ்லாமியர்கள். இந்த மாநிலம் இந்து-இஸ்லாமியர் கலாச்சாரக் கூறுகளின் ஒத்திசைவான வாழ்நிலைக்கான மாநிலமாக எப்போதும் அறியப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக மதங்களுக்கிடையிலான பரிமாற்றங்களின் விளைவாக,  இரு சமூகங்களினதும் பரம்பரை – அதன் உணவு வகைகள், கதக் போன்ற கலை வடிவங்கள், திருவிழாக்கள், இலக்கியம், உடைகள் ஆகியன அன்றாட வாழ்வில் பிரதிபலிக்கிறது.

ஒவ்வொரு ஹோலி  திருவிழாவின் போதும், பாரபங்கி மாவட்டத்தில் உள்ள சூஃபி துறவி ஹாஜி வாரிஸ் அலி ஷாவின் வெள்ளை ஆலயமான தேவா ஷெரீஃப், சிவப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு, ஊதா உள்ளிட்ட இன்னும் பல வண்ணங்களையும் பூசிக் கொள்கிறது. வாரிஸ் அலி ஷா 19 ஆம் நூற்றாண்டின் துறவி மற்றும் சூஃபிசத்தின் வார்சி பிரிவை நிறுவியவர். எல்லா மதங்களும் அன்பை அடிப்படையாகக் கொண்டவை என்று அவர் நம்பினார். இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள் அவரைப் பின்பற்றினர். அத்துடன் அவர்கள் அவரவர் மதத்தையே பின்பற்ற அனுமதிக்கப்பட்டனர். இந்த சகிப்புத்தன்மையைக் குறிக்கும் வகையில், அவர் ஒவ்வொரு ஆண்டும் புனித ஹோலியைக் கொண்டாடும் பாரம்பரியத்தைத் தொடங்கினார்.  இது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்கிறது.

நவம்பர் 26, 2017 அன்று, உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, முதல்வர் ஆதித்யநாத் தேவா ஷெரீப்புக்கு மின்சார விநியோகத்தைப் பயன்படுத்தி, மதவெறிப் பிரிவினையை தேர்தல் பிரச்சினையாகப் பயன்படுத்திக் கொண்டார். ‘அதே மாவட்டத்தில் உள்ள லோதேஷ்வர் மகாதேவ் கோவிலைக் காட்டி, ‘தேவாவுக்கு, ‘24×7 மின்சாரம் கிடைத்தது, மகாதேவாவுக்கு மின்சாரம் கிடைக்கவில்லை. இதை மாற்றுவோம்,’ என்று பரப்புரை செய்தார். மதச்சார்பற்ற மரபுகள் இருந்தபோதிலும், இரண்டு வழிபாட்டுத் தலங்களுக்கும் வகுப்புவாத அடையாளம் வழங்கப்பட்டது.

லோதேஷ்வர் மஹாதேவ் கோவில், பாரபங்கியின் ராம்நகர் தாலுகாவின் மகாதேவா கிராமத்தில் காக்ரா ஆற்றின் கரையில் உள்ள தேவா ஷெரீப்பில் இருந்து ஒரு மணி நேர தொலைவில் உள்ளது. இந்தக் கோவில் அதன் ஒத்திசைவு கலாச்சாரத்திற்கும் பெயர் பெற்றது. பல நூற்றாண்டுகளாக, கோயில் வளாகத்திற்கு வெளியே இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு சொந்தமான கடைகளில் பிரசாதம், சடங்குகளுக்குத் தேவையான பொருட்கள், கைவினைப்பொருட்கள், பாத்திரங்கள், பொம்மைகள் விற்கப்படுகின்றன. உண்மையில், இந்தக் கோவிலில் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் ஒரு திருவிழாவும் அக்டோபர்-நவம்பர் மாதங்களில் இன்னொரு திருவிழாவும்  என இரண்டு வருடாந்திர திருவிழாக்கள்  நடைபெறும். கால்நடைகள், கிராமத்தின் பொருளாதாரத்திற்கு முக்கிய பங்களிப்பாகும். இந்துக்களும், இஸ்லாமியர்களும் சம ஆர்வத்துடன் கலந்து கொள்வர். கடந்த காலங்களில், கோவிலின் தலைமை அர்ச்சகர்கள் மத நல்லிணக்கத்தை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர். 2017 ஆம் ஆண்டில், யோகி ஆதித்யநாத்திற்குப் பிறகு தனது 30 வது வயதில், மஹந்த் ஆதித்யநாத் திவாரி தன்னை வாரிசாக நியமித்துக் கொண்டார். அவர் ‘சோட்டா யோகி’  என்றும் அழைக்கப்படுகிறார்.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படமும் பிரதமர் மோடியும் – அ.மார்க்ஸ்

ஆதித்யநாத்தின் வழியைத் தொடர்ந்து, சோட்டா யோகி, உள்ளூர் இந்து யுவ வாஹினி  பிரிவின் உதவியுடன் கோவிலுக்கு அடுத்துள்ள 200 ஆண்டுகள் பழமையான மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கியை அகற்றவும், கோயில் வளாகத்திற்கு வெளியே உள்ள அனைத்து இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த கடை உரிமையாளர்களையும் வெளியேற்றவும் தீவிர பிரச்சாரங்களைத் தொடங்கினார்.  இப்பகுதியில் இருந்து பல வகுப்புவாத கலவர சம்பவங்கள் பதிவாகி இஸ்லாமிய விற்பனையாளர்கள் கொடூரமான தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இந்த சட்டத்தின்படி ஒரு நபரை 12 மாதங்களுக்கு விசாரணையின்றி  காவலில் வைக்கவும், மேல்முறையீடின்றி சந்தேக நபர்களை காவலில் வைக்கவும் மத்திய, மாநில அரசாங்கங்களுக்கு அதிகாரம் அளிக்கிறது.

“நான் இந்த மக்களிடம் கேட்க விரும்புகிறேன், ஒரு இஸ்லாமிய தையல்காரர் அயோத்தியில் பல ஆண்டுகளாக ராம்லல்லாவுக்கு எவ்வாறு சேவை செய்கிறார் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்களா? ஆண்டாண்டு காலமாக வரும் பக்தர்களைக் கவனித்து மகாதேவருக்கு சேவை செய்தோம் அல்லவா?”  என்று ஷகீலா கேட்கிறார். அவருடைய மகன் ரிஸ்வானும் கைது செய்யப்பட்டிருந்தார்.  குடும்பத்தைக் காப்பாற்றுபவர்களை இவ்வாறு கைது செய்வது, நாட்டின் மிக மோசமான சமூக-பொருளாதார குறிகாட்டிகளைக் கொண்ட இஸ்லாமியச் சமூகங்களை மேலும் பலவீனப்படுத்துவதாக அவர் கூறுகிறார். சச்சார் கமிட்டி அறிக்கையின்படி, கிட்டத்தட்ட 31% – இந்திய இஸ்லாமியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் – வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர்.

தொடரும்…

அடுத்து …. “கோமாதாக்களும் இஸ்லாமியர்களும் காவல்துறையின் தோட்டாக்களும்”

 

South asian women in media இணையதளத்தில் நேஹா தீட்சித் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்