Aran Sei

நிலக்கரி பற்றாக்குறைக்கு யார் காரணம்? – தனியார் முதலாளிகளா? அரசா?

2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் செயல்படும் அனைத்து அனல் மின் நிலையங்களிலும் அடுத்த 28 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி கையிருப்பு இருந்தது. அடுத்த 6 மாதத்தில் அதாவது செப்டம்பர் மாதத்தில் அனைத்து அனல் மின் நிலையங்களிலும் அடுத்த 4 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் இருக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலைக்குப் பொதுத்துறை நிறுவனமாக கோல் இந்தியாவே காரணம் என்று பாஜகவும் அதன் ஆதரவு பொருளாதார தரகர்களும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

உண்மையில் நிலக்கரி தட்டுப்பாட்டிற்கு கோல் இந்தியா காரணமல்ல என்பதை அந்த நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பார்த்தா பட்டாச்சார்யாவும், நிலக்கரித்துறையின் முன்னாள் செயலாளர் அனில் ஸ்வரூப்பும் ஆதாரத்துடன் விளகியுள்ளனர்.

இந்தியாவின் சந்தை அந்நிய முதலாளிகளுக்கு முழுமையாக திறந்துவிடப்பட்ட 1990களின் தொடக்கத்தில் நிலக்கரி உற்பத்தி குறித்து அரசால் அமைக்கப்பட்ட கமிட்டி, எதிர்கால தேவையை கோல் இந்தியா நிறுவனம் பூர்த்தி செய்யாது என்ற தனியாருக்கு ஆதரவான கருத்தைக் கூறியது.

இதைத்தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு, கோல் இந்தியாவுக்கு சொந்தமான 200 நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டன. அந்த 200 சுரங்கங்களில் ஆண்டுக்கு 500 மில்லியன் டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்படும் என்று அரசு கணித்த நிலையில் அவற்றின் உற்பத்தி இந்நாள் வரை ஆண்டுக்கு 60 மில்லியன் டன்னை தாண்டியதில்லை என்கிறார் பார்த்தா பட்டாச்சார்யா. இந்தச் சமயத்தில் கோல் இந்தியா நிறுவனம் பற்றாக்குறையை சமாளிக்க உற்பத்தியை அதிகரிக்க நிர்பந்திக்கப்பட்டது என்றும், தனியாரின் கையாளாகாத தனத்தால், பொதுச்சொத்தான கோல் இந்தியா நிறுவனம் எப்போதும் ஒரு நெருக்கடியிலேயே வைக்கப்பட்டதாக கூறுகிறார் பட்டாச்சார்யா.

2014 ஆம் ஆண்டு நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டபோது, கோல் இந்தியா உற்பத்தியை அதிகரிக்க அரசால் அழுத்தம் கொடுக்கப்பட்டது. தேவையை உணர்ந்த செயல் பட்ட நிறுவனம் அந்த ஆண்டு 34 மெட்ரிக் டன் அதிக அளிவு உற்பத்தி செய்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளிலும் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்தது.

இந்த அளவிற்கு உற்பத்தி திறனுடைய கோல் இந்தியா நிறுவனம் புதிதாக சுரங்களில் உற்பத்தியைத் தொடங்குவது 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு குறைக்கப்பட்டதாக கூறுகிறார் அத்துறையின் முன்னாள் செயலாளர் அனில் ஸ்வரூப். 2015 ஆம் ஆண்டு கோல் இந்தியா நிறுவனத்திடம் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபாய் உபரியாக இருந்தது. பொதுவாக இந்தப் பணத்தை பயன்படுத்தி நிறுவனத்தை மேம்படுத்தியிருந்தால் அதன் உற்பத்தியும் அதிகரித்திருக்கும். ஆனால், இந்த நிறுவனத்தை பணம் காய்க்கும் மரமாக கருதிய அரசு, இதன் பெரும் பகுதியைத் தனக்கான பங்கு என கூறி எடுத்துக்கொண்டதாக கூறுகிறார் அனில் ஸ்வரூப். அந்தவகையில் 2019 ஆம் ஆண்டு கோல் இந்தியாவின் உபரி நிதி 8 ஆயிரம் கோடியாக குறைந்ததாகவும் அவர் கூறுகிறார்.

2014ஆம் ஆண்டு நிலக்கரி சுரங்கள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கை கூறியது. அதைத்தொடர்ந்து ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 214 சுரங்கங்க உரிமைகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்தச் சமயத்தில் தனியார் சுரங்கங்கள் 90 மெட்ரிக் டன் உற்பத்தி செய்து வந்ததாகவும், உரிமம் ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட உற்பத்தி இழப்பையும் கோல் இந்தியா நிறுவமே ஈடு செய்ததாகவும் அனில் ஸ்ரூப் கூறுகிறார்.

தொடக்கம் முதலே, தனியார் நிறுவனங்கள் ஒப்புக்கொண்ட அளவு உற்பத்தி செய்யாததால், சுமார் 200 மில்லியன் டன் நிலக்கரியை இந்தியா வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாக அனில் ஸ்வரூப் கூறுகிறார். சர்வதேச சந்தையில் சீனா அதிக அளவு நிலக்கரியை இறக்குமதி செய்வதால், விலை கடுமையாக அதித்துள்ளது. இதனால், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.
கொரோனா முதல் அலைக்குப் பிறகு, தொழில்துறை மீண்டும் இயங்கத்தொடங்கியதால், கோல் இந்தியா நிறுவனம் நிலக்கரி உற்பத்தியை அதிகரிக்க அரசால் நிர்பந்திக்கப்பட்டது. உற்பத்தி அதிகரிக்கப்பட்ட சமயம் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலை கோல் இந்தியா நிறுவனத்தைக் கடுமையாக பாதித்தது. அந்த நிறுவனத்தைச் சேர்ந்த 250 பேர் கொரோனாவல் உயிரிழந்தனர். இதனிடையே, எதிர்பார்க்காத வகையில் நீடித்த பருவமழையும் உற்பத்தியைப் பாதித்தது.

இத்தனை பிரச்சனைகளுக்கும் மத்தியில் பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா, 2021 ஆம் ஆண்டின் முதல் பாதியில், அதற்கு முந்தைய ஆண்டைவிட, 14 மில்லியன் டன் அதாவது 5.8 சதவீதம் உற்பத்தியை அதிகரித்தது.
தற்போது கோல் இந்தியா நளொன்றிற்கு 1.5 மெட்ரிக் டன் நிலக்கரியை உற்பத்தி செய்கிறது. அடுத்த சில வாரங்களில் இது 1.6 முதல் 1.7 மெட்ரிக்டன்னாக உயர்த்தப்படவுள்ளது. இந்தியாவில் நிலக்கரியின் தற்போதையே தேவையே தொடரும் பட்சத்தில் இன்னும் சில நாட்களில் பற்றாக்குறை தீர்க்கப்படும் என்கிறார் அனில் ஸ்வரூப்.

வெட்டி எடுக்கப்படும் நிலக்கரியை உரிய நேரத்தில் உரிய இடத்தில் சேர்க்கும் பணியை ரயில்வே நிர்வாகம் சரியாக மேற்கொள்ளும் பட்சத்தில் பற்றாக்குறை முழுவதுமாக முடிவுக்கு வரும் என்கிறார் அவர்.

இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலையைவிட கோல் இந்தியா நிலக்கரியின் விலை 60 முதல் 70 சதவீதம் குறைவாகும். ஆகவே, கோல் இந்தியாவின் உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில், இறக்குமதி குறையும் இதனால் அந்நியசெலாவணி மிச்சப்படுத்தப்படுவதுடன், குறைந்த விலையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் மக்களுக்குத் தடையில்லா மற்றும் நியாயமான விலையில் மின்சாரம் கிடைக்கும்.

இருளுக்கும் வெளிச்சத்திற்கும் இடையில் பலமான மலையைப் போல் உயர்ந்து நிற்கும் பொதுத்துறை நிறுவனமாக கோல் இந்தியா, தற்போதைய பற்றாக்குறைக்கு காரணம் என்று தவறாக குற்றம்சாட்டப்படுவதாக கூறுகிறார் அனில் ஸ்வரூப்.

1990களில் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கை முடிவின்படி, கோல் இந்தியாவிற்கு சொந்தமான 28 பில்லியன் டன் உற்பத்தி திறனுடைய சுரங்கங்கள் அதனிடமிருந்து பறிக்கப்பட்டாலும், அதன் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்துள்ளது. கோல் இந்தியாவை நிறுவனத்தைப் போற்ற வேண்டிய தருணம் இது. அதை விடுத்து தற்போதைய நெருக்கடிக்கு அந்த நிறுவனமே காரணம் என்று கூறுவதை முற்றிலும் தவறானது என்கின்றனர் கோல் இந்தியா நிறுவனத்தை நிர்வகித்தவர்கள்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்