Aran Sei

யார் அந்த ஹிட்மா? – போலீஸ் படைகள் மீதான பல தாக்குதல்களுக்குப் பின் இருக்கும் நிழலான மாவோயிஸ்ட் தளபதி

image credit : aajtak.in

மாவோயிஸ்டுகளின் மக்கள் விடுதலை கொரில்லா இராணுவ படைப்பிரிவு 1 இன் நிழலான, கிட்டத்தட்ட புராண நாயகர் போன்ற தளபதி, சத்தீஸ்கரில் மாவோயிச நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கும் தண்டகாரண்யா சிறப்பு மண்டலக் குழுவின் உறுப்பினர், ஹிட்மா. மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களின் மையமான தெற்கு பஸ்தர், பிஜாப்பூர், சுக்மா, தண்டேவாடா ஆகிய மாவட்டங்களில் ஹிட்மாவின் படைப்பிரிவு இயங்குகிறது.

76 சிஆர்பிஎஃப் வீரர்கள் கொல்லப்பட்ட தாட்மெட்லாவிலிருந்து, சத்தீஸ்கரில் காங்கிரஸ் தலைமையைத் துடைத்து அழித்து விட்ட 2013-ம் ஆண்டு ஜீராம் காட்டி தாக்குதல், பெஜ்ஜி, புர்கபால், மின்பா, இப்போது தாரெம் ஆகிய இடங்களில் நடந்த சமீபத்திய தாக்குதல்கள் வரை, தாக்குதல் படையில் ஹிட்மா இருந்ததாக போலீசார் கூறுகின்றனர். இந்த ஒவ்வொரு தாக்குதலுக்கும் அவர் தலைமை தாங்கியிருக்கிறார். அவரது தலைக்கு சத்தீஸ்கர் அரசு ரூ 25 லட்சமும், பிற மாநில அரசுகள் ரூ 20 லட்சமும் வெகுமதி அறிவித்துள்ளன.

ஹிட்மாவின் சொந்த வாழ்க்கை பற்றிய விபரங்கள் பற்றி தெளிவில்லை. அவரது புகைப்படங்கள் உள்ளன, ஆனால் அவை மிகக் குறைந்த எண்ணிக்கையில் தெளிவற்றவையாக உள்ளன. அவர் 35 முதல் 45 வயதிற்குட்பட்டவர், கம்பி போல ஒல்லியானவர், மெல்லிய மீசையுடயவர், ஏ.கே .47 வைத்திருப்பார்.

தெளிவான விஷயம் என்னவென்றால், அவர் ஒரு உள்ளூர் பழங்குடியினர்.  ஜாகர்குண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிஜப்பூர், சுக்மா மாவட்டங்களின் எல்லைக்கு அருகில் காடுகளின் உள்ளே உள்ள புவேர்தி கிராமத்தில் பிறந்தார் . அவரது பெயரும் அவரது மாற்றுப்பெயர்களும் கூட பெரும்பாலும் சந்தேகத்துக்கிடமானவையாகவே உள்ளன. சில போலீஸ் ஆவணங்கள் அவரது பெயரை “மாண்டவி” என்றும், மற்றவை “மாட்வி” என்றும் காட்டுகின்றன. களத்தில் உள்ள காவல்துறையினரை பொறுத்த வரையில், அவர் வெறுமனே ஹிட்மா, அவர்கள் பிடிக்க வேண்டிய மனிதர்.

மாவோயிஸ்ட் அமைப்புக்கு ஹிட்மா ஏன் முக்கியமானவர்?

மாவோயிஸ்ட் அமைப்பில் ஹிட்மாவின் செல்வாக்கு பற்றிய தகவல்களில் பெரும்பகுதி இந்தத் துறையில் நிபுணத்துவம் வாய்ந்த ஊடகவியலாளர்களால் அல்லது சரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட மாவோயிஸ்டுகள் கூறிய விபரங்களிலிருந்து பாதுகாப்புப் படையினரால் தொகுக்கப்பட்டவை.

அவர்கள் கிட்டத்தட்ட இரண்டு தனித்துவமான அடையாளங்களைப் பற்றி பேசுகிறார்கள்.

ஒன்று, காவல்துறையின் மீது மிகப் பெரிய உயிரிழப்புகளை வெற்றிகரமாக ஏற்படுத்துவதன் மூலம் தனது புகழைக் கட்டியெழுப்பிய தாக்குதல்களின் தளபதியும் தாக்குதல்களை திறமையாக நடத்துபவரும் என்ற அடையாளம். தாக்குதல்களைத் திட்டமிடுவதில் மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தைப் பற்றிய புரிதலும், பாதுகாப்புப் படைகளின் நகர்வுகளை முன்கூட்டியே தெரிந்து கொள்வதிலும் அவருக்கு இருக்கும் நிபுணத்துவத்தைப் பற்றி சரணடைந்த பல மாவோயிஸ்டுகள் பேசுகிறார்கள். மோதலின் போது அவரது அமைதியைப் பற்றியும் அவர்கள் கூறுகிறார்கள். தாக்குதல் நடவடிக்கைகளின் போது அவர் உடன் இருக்கிறார், பிற ஊழியர்களுடன் சமத்துவ ரீதியாக பேசுகிறார்.

ஹிட்மா என்ற அடையாளத்தின் இரண்டாவது முக்கியமான காரணி, அவர் உள்ளூர் ஊழியர்களுக்கு என்னவாக உள்ளார் என்பது. சத்தீஸ்கரில் உள்ள மாவோயிஸ்டுகளின் உயர்மட்ட ஊழியாளர்களில் பெரும்பாலோர், மத்தியக் குழு முதல் டி.கே.எஸ்.இசட் செயலாளர் சுஜாதா வரை கூட பெரும்பாலும் தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள். ஆனால், இந்தத் தாக்குதல்களில் உண்மையில் பங்கேற்கும் மாவோயிஸ்டுகள் உள்ளூர் பழங்குடிகள்; ஹிட்மா அவர்களில் ஒருவர், கீழிருந்து வளர்ந்து உயர்ந்துள்ளார்.

இது எந்த அளவுக்கு உள்ளதென்றால், அவரை மத்திய குழுவிற்கு உயர்த்துவது, அல்லது ராமண்ணா நோய்வாய்ப்பட்ட பின்னர் தண்டகாரண்யாவின் முழு பொறுப்பையும் அவரிடம் வழங்குவது போன்ற பல உரையாடல்கள் நடந்துள்ளன. அந்த வகையில் பார்த்தால், ஹிட்மா மாவோயிஸ்டுகளுக்கு ஒரு உள்ளூர் நாயகன், அவரைப் பற்றி பல கதைகள் சொல்லப்படுகின்றன.

மாவோயிஸ்டுகள் மத்தியில் பிரபலமான ஒரு கதையை, சரணடைந்த மாவோயிஸ்ட் ஊழியர்கள் காவல்துறையினரிடம் கூறியுள்ளனர். இவ்வளவு தீவிரமாக தேடப்படுபவராக இருந்தபோதிலும், பெரும் எண்ணிக்கையில் போலீஸ் குவிக்கப்பட்டிருந்த கிஸ்தாரம் உள்ளூர் சந்தைக்கு ஹிட்மா, சாதாரண உடையில் சென்று வந்துள்ளார். தனது தைரியத்தைக் காட்டவும் ஊழியர்களின் ஊக்கத்தை அதிகரிக்கவும் அதைச் செய்திருக்கிறார். மாவோயிஸ்ட் படிநிலையில் அவர் சுஜாதா அல்லது மத்திய குழு உறுப்பினர்களைக் காட்டிலும் கீழ்நிலையில் இருக்கலாம், ஆனால் அவர் சொல்வது சட்டமாக உள்ளது.

அவர் பாதுகாப்புப் படையினரின் முக்கியமான இலக்காக ஏன் உள்ளார்?

இதனால்தான் ஹிட்மா மிகவும் முக்கியமானவர், சிபிஐ (மாவோயிஸ்ட்) பொதுச் செயலாளர் பசவ்ராஜு போன்ற மத்தியக் குழு உறுப்பினர்களின் பெயர்களை விட அவரது பெயர் இன்னும் அதிகமாக அடிபடுகிறது. பாதுகாப்புப் படைகளைப் பொறுத்தவரை, ஹிட்மாவை பிடிப்பது என்பது ஒன்றன்பின் ஒன்றாக தாக்குதலை எதிர்கொள்ளும் மிகவும் சிக்கலான பகுதியான பஸ்தாரில் உள்ள மாவோயிஸ்டுகளின் முதன்மை செயல் தளபதிகளில் ஒருவரை நீக்கி விடுவதைக் குறிக்கும். ஆனால், அதை விட முக்கியமாக அது பஸ்தாரில் உள்ள மாவோயிஸ்டுகளின் மன உறுதிக்குக் கடும் அடியாக இருக்கும்.

மாவோயிஸ்டுகள் பாலர் சங்க மட்டத்தில் இருந்தே சித்தாந்த பயிற்சியளித்தாலும், மாவோயிஸ்ட் ஊழியராக ஆன பிறகும் பயிற்சியின் வழக்கமான ஒரு பகுதியாகத் அது தொடர்ந்தாலும், பழங்குடி ஊழியர்கள் மாவோயிசத் தலைமையை விடவும் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலிருந்து வரும் ஊழியர்களை விடவும் சித்தாந்த ரீதியாக குறைந்த அளவிலேயே வலுவாக உள்ளனர் என்று போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

அவர்களைப் பொறுத்தவரை, ஹிட்மா ஒரு உத்வேகம், அவர் களத்தை விட்டு வெளியேறி விட்டால், அது அப்பகுதியில் உள்ள மாவோயிஸ்ட் அமைப்பின் முதுகெலும்பை உடைத்து விடும்.

அவரைப் பிடிப்பது ஏன் மிகவும் கடினமாக உள்ளது?

அவரது முக்கியத்துவம் இவ்வாறு இருக்கும் நிலையில், ஹிட்மாவைக் கண்காணிக்கும் பாதுகாப்புப் படை ஊழியர்கள், அவருக்கு மூன்று வளையங்களைக் கொண்ட பொதுமைய பாதுகாப்பு உள்ளதாகக் கூறுகின்றனர். அவர், தாக்குதல்களுக்காக வெளிவரும் நேரங்களைத் தவிர பிற நேரங்களில், சாலைகளிலிருந்து விலகிய அடர்ந்த காடுகளில் தனது படைப்பிரிவின் குழுக்களுடன் பயணிக்கிறார். காடுகளிலேயே வளர்ந்து, பல ஆண்டுகளாக இப்பகுதியில் சுற்றித் திரிந்த அவருக்கு, இந்தப் பகுதியின் நிலப்பரப்பு பற்றியும் மக்கள் பற்றியும் நுணுக்கமான அறிவு உள்ளது. அதனால் அவரைப் பின்தொடர்வது கடினமாக உள்ளது.

சுக்மா, பிஜோர், தண்டேவாடா காடுகளின் பல பகுதிகளில் தொலைபேசி இணைப்புகள் இல்லாத காரணத்தால், அவர் அறியாமல் அவரை சூழ்வது சாத்தியமற்று உள்ளது. மனிதர்கள் மூலம் பெறப்படும் எந்த ஒரு உளவு தகவலும் சில நாட்கள் கழித்தே வந்து சேர்கிறது.

மேலும், அவர் எங்கு இருப்பார் என்று பாதுகாப்புப் படைகளுக்குத் தெரிந்தாலும், சாலை இணைப்புகள் இல்லாததால், அங்கு செல்வதற்கு மிக நீண்ட நேரம் ஆகும், குறிப்பாக படைப்பிரிவு 1 மாவோயிஸ்டுகளில் மிகவும் ஆயுத பாணியாக்கப்பட்ட படைப்பிரிவு. எனவே, அவரை தேடிச் செல்லும் படைகளும் கடும் பாதுகாப்பு கருவிகளையும் தாக்குதல் கருவிகளையும் எடுத்துச் செல்ல வேண்டியுள்ளது. இது அவர்களது வேகத்தை மட்டுப்படுத்துகிறது. குறிப்பாக கடுமையான கோடையில் அடர்த்தியான காட்டையும் ஆறுகளையும், நீரோடைகளையும் கடந்து வேகமாகச் செல்ல முடிவதில்லை.

இத்தோடு அவருக்கு தரப்பட்டுள்ள மூன்று அடுக்கு பாதுகாப்பு இன்னும் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. அதாவது அவர் அறியாமல் அவர் நெருங்குவது கடினம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரது பாதுகாப்பு வளையத்தின் வெளிப்புற வட்டத்தில் உள்ள போலீஸ் வருகையை கண்காணிப்பவர்கள் போலீஸ் வருவதைக் கண்டறிந்து, துப்பாக்கிச் சூட்டில் இறங்குகிறார்கள். இதன் மூலம், ஹிட்மா அருகில் இருந்து நடவடிக்கையை வழிநடத்தும் அதே நேரம் பாதிப்பில்லாமல், இறுதியில் தப்பித்து விட முடிகிறது.

தாங்கள் ஹிட்மாவுக்கு மிக நெருங்கி போய் விட்டதாக போலீசார் கூறுகின்றனர். ஜூன் 2017-ல், பெஜ்ஜி மற்றும் புர்கபாலில் தொடர்ச்சியான இரண்டு பெரிய தாக்குதல்களில் 38 வீரர்கள் கொல்லப்பட்டனர். வெகுகாலமாக போலீஸ் நெருங்க முடியாமல் இருந்த, மாவோயிஸ்டுகளின் தலைநகராகக் கருதப்படும் சுக்மாவில் உள்ள தொண்டமார்க்காவில் மாவோயிஸ்டுகளை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்ட ஆபரேஷன் பிரஹார் என்ற வலுவான கூட்டு நடவடிக்கையைத் தொடங்கின.

அந்த நடவடிக்கையில் 7 முதல் 18 பேர் மாவோயிஸ்டுகள் வரை கொல்லப்பட்டதாக காவல்துறையினர் கூறினர். அந்த மோதலில் ஹிட்மா கடுமையாக காயமடைந்திருக்கலாம், கொல்லப்பட்டிருக்கலாம் என்றும், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் அவர் ஒரு டிராக்டரில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் அவர்கள் கூறினார். அவர் காயமடைந்தாரா இல்லையா என்ற கேள்விக்கு இன்னும் பதில் இல்லை. பஸ்தரில் மாவோயிஸ்டுகள் இதை வெளிப்படையாக மறுத்தனர்.

ஆனால் ஹிட்மா உயிருடன் இருக்கிறார், துடிப்பாக செயல்படுகிறார் என்பது இப்போது நமக்குத் தெரிகிறது. அவரது எதிர்காலம் பஸ்தரில் நடக்கும் மோதலின் எதிர்காலத்திற்கு மையமானது.

indianexpress.com இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்