Aran Sei

யார் இந்த தாலிபான்கள்? – வரலாற்றில் ஒரு பயணம்

1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி. வியட்நாம் மக்கள் ராணுவம் சைகோன் நகரத்தைக் கைப்பற்றியதாக அறிவித்தது. ஒருபுறம் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்க, சைகோனில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் உச்சியில் ஒரு ஹெரிகாப்டர் அவசரமாக தரையிறங்கியது. அதில் அமெரிக்க தூதரக பணியாளர்கள் அவசர கதியில் ஏற்றப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்தக் காட்சி, 20 ஆண்டுகளாக வியட்நாமில் நடத்திய போரில் அமெரிக்கா தோல்வியுற்று ஓடுவதை அப்பட்டமாக உணர்த்தியது.

சுமார் 45 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே போன்றதொரு காட்சி தற்போது ஆப்கானிஸ்தானில் அரங்கேறியுள்ளது.

தலைநகர் காபுல், தாலிபான்களிடம் வீழ்வது உறுதியாகிய நிலையில், சைகோனில் நடந்ததுபோலவே, அமெரிக்க தூதரக ஊழியர்கள் ஹெரிகாப்டர்கள் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதன் மூலம் வியட்நாமில் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட அதே அவமானகரமான நிலை தற்போது ஆப்கானிஸ்தானிலும் ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. ஆனால், இதற்கு லட்சக்கணக்கானோரின் உயிர் விலையாக கொடுக்கப்பட்டுள்ளது.

யார் இந்த தாலிபான்கள்? ஏன் இந்தப் போர்?

இதைப் புரிந்துகொள்ள 1970களிலிருந்து ஆப்கான் அரசியலில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.

1978 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் இடதுசாரிகள் தலைமையில் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்பு, அந்நாட்டில் நூற்றாண்டுகளாக நடைபெற்று வந்த அரசாட்சியை முழுவதுமாக முடிவுக்குக் கொண்டுவந்தது.

சோவியத் யூனியன் ஆதரவுடன், சீர்திருத்தங்களைக் கடுமையாக நடைமுறைப்பத்திய அந்த அரசுக்கு, இஸ்லாமிய பழமைவாதத்தில் ஊறிப்போயிருந்த ஆப்கான் கிராமப் புறங்களில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. இடது சாரி அரசை எதிர்த்து இஸ்லாமிய பழங்குடி யுத்தப் பிரபுக்கள் களம் இறங்கவே, 1979 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சோவியத் ரஷ்யாவின் ராணுவம் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தது.

ஆப்கான் கம்யூனிஸ்ட் அரசுடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி, உள்நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலிலிருந்து அந்த அரசை பாதுகாப்பதற்காக, தனது ராணுவத்தை அணுப்பி வைத்திருப்பதாக தனது ஆக்கிரமிப்பிற்கு சோவியத் யூனியன் காரணம் கூறியது.

அதுவரை ஆப்கான் அரசை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டவர்கள் தற்போது, சோவியத் ராணுவத்தை எதிர்த்துச் சண்டையில் இறங்கினர். சோவியத்தை எதிர்த்துச் சண்டையிட்ட அந்தப் போராளிகள் முஜாஹிதீன்கள் என்று அழைக்கப்பட்டனர். முஜாஹித் என்பதற்கு அரபி மொழியில், இஸ்லாமை பாதுகாப்பதற்காக சண்டடையிடும் போராளி என்று பொருள். அவர்கள் நடத்தும் சண்டைக்கு ஜிகாத் அதாவது புனிதப் போர் என்று பெயர்.

அமெரிக்காவுக்கும், சோவியத் ரஷ்யாவுக்கும் பகை உச்சத்தில் இருந்த அந்தச் சமயத்தில், சோவியத் ராணுவத்தை எதிர்த்துப் புனிதப்போரை நடத்திய முஜாஹிதீன்களுக்கு அமெரிக்கா, ஆயுதம் உட்பட பல்வேறு உதவிகளை வழங்கியது.

ஆப்கானிஸ்தானில் ஜிகாத் நடத்துவதற்கு பல மில்லியன் டாலர்களை கொட்டிக் கொடுத்த அதே அமெரிக்கா, பிற்காலத்தில் ஜிகாதிகள் என்ற சொல்லாடல் மூலம் உலக அளவில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் ஒரு அபாயகரமான போக்கிற்கு மூலக் காரணமாக அமைந்தது.

முஜாஹிதீன்கள் நடத்தும் புனிதப்போரில் கலந்துகொள்ள, உலக இஸ்லாமிய இளைஞர்களுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று சவுதி அரேபியாவிலிருந்து ஒரு இளைஞர் ஆப்கானிஸ்தானுக்கு வந்தார். அமெரிக்காவிடமிருந்து நேரடியாக ராணுவப் பயிற்சியைப் பெற்ற அந்த இளைஞர்தான் அல் கொய்தா அமைப்பைத் தோற்றுவித்த ஒசாமா பின்லேடன்.

முஜாஹிதீன்களுக்கு எதிராக 9 ஆண்டுகளாக சண்டையை நடத்திய சோவியத் படை 1989 ஆம் ஆண்டு திரும்ப பெறப்பட்டது. அடுத்த சில ஆண்டுகள் ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய அரசியல் குழப்பம் நீடித்த நிலையில், 1992 ஆம் ஆண்டு அது உள்நாட்டு யுத்தமாக உருப்பெற்றது.

அதிகரத்தை கைப்பற்ற பழங்குடி யுத்த பிரபுக்களுக்கு இடையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் 1994ஆம் ஆண்டு தாலிபான் அமைப்பு கவனத்தை பெறத் தொடங்கியது. பெரும்பாலும், சோவியத்தை எதிர்த்துப் போரிட, அமெரிக்காவால் பயிற்றுவிக்கப்பட்ட முஜாஹிதீன்களை கொண்டு உருவாக்கப்பட்ட அந்த அமைப்பு, 1996ஆம் ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றியது. அமெரிக்காவிற்கு சிம்ம சொப்பனமாக திகழும் ஈரானின் ஷியா பிரிவுக்கு, தாலிபான்கள் எதிரானவர்கள் என்பதால் அவர்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்கு பாகிஸ்தான் மூலம் அமெரிக்கா மறைமுகமாக உதவியதாகவும் கூறப்படுகிறது.

பழமைவாதிகளான தாலிபான்கள், ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய அரசை நிறுவியதுடன் பல பிற்போக்கான சட்ட திட்டங்களையும் அமல்படுத்தினர். இதற்கிடையில், சோவியத் ராணுவம் வெளியேறியபிறகு ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய ஒசாமா பின்லேடன், தாலிபான்களின் நண்பராக மீண்டும் ஆப்கானிஸ்தான் திரும்பியிருந்தார். முன்னர் முஜாஹிதீனாக ஆப்கானிஸ்தானுக்குள் வந்த ஒசாமா, தற்போது அல் கொய்தா என்ற அமைப்பின் தலைவராக உயர்ந்திருந்தார்.

2001 ஆம் ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி, அமெரிக்காவின் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்டது. இந்தக் கோர காட்சியோடு நியூயார்க் நகரம் கண் விழித்தது.

இதுவரை உலகம் கண்டிராத இந்தப் புதிய வகை தாக்குதல், உலக அரசியல் வரலாற்றில் குறிப்பிட்டுக்கூறும் நிகழ்வாக மாறியது.

இந்தத் தாக்குதலுக்கு அல் கொய்தா அமைப்பே காரணம் என்று கூறிய அமெரிக்கா, பின்லேடனை ஒப்படைக்கும்படி தாலிபன்களுக்கு கட்டளையிட்டது.

அமெரிக்காவின் கட்டளையைத் தாலிபான்கள் ஏற்க மறுக்கவே, 2001 ஆம் ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையினர் ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தனர். அடுத்த சில வாரங்களில் தாலிபான் அரசு வீழ்த்தப்பட்டு, அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்படும் அரசு அமைக்கப்பட்டது.

சோவியத் ராணுவத்தை எதிர்த்துச் சண்டையிட்ட முஜாஹிதீன்களால் உருவாக்கப்பட்ட தாலிபான் அமைப்பு, அமெரிக்காவை எதிர்த்துச் சண்டையிடத் தொடங்கியது. ஆப்கான் மண் மீண்டும் ரத்தத்தால் சிவக்கத் தொடங்கியது.

தாலிபான்களை முற்றிலும் ஒழிப்போம் என்றும், ஜனநாயகப்பூர்வமான, ஆப்கான் அரசையும், பலமான ஆப்கான் ராணுவத்தையும் உருவாக்குவோம் என்றும் முழங்கிய அமெரிக்கா 20 ஆண்டுகளில் அதில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை. ஆனால், இந்த யுத்தம் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிகொண்டு விட்டது.

அமெரிக்க ராணுவம் இனி ஆப்கானில் நீடிப்பது இயலாத காரியம் என்பதை உணர்ந்த அமெரிக்கா, யாரை பயங்கரவாதிகள் என்று கூறியதோ அவர்களுடனே பேச்சுவார்த்தைக்குச் சென்றது.

2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், தாலிபான்களுடன் அமெரிக்க அதிகாரிகள் நேரடியாக பேச்சுவார்த்தையைத் தொடங்கினர். இந்தப் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு டோஹாவில் நடைபெற்ற கூட்டத்தில், இந்தியாவின் பிரதிநிதியும் கலந்துகொண்டார். ஓராண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அமெரிக்கா தாலிபான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத்தொடர்ந்து, செப்டம்பர் 11 ஆம் தேதி தனது ராணுவம் ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறும் என்று அமெரிக்கா அறிவித்தது.

இதனிடையே, நிலைமையைச் சரியாக கணித்து நடவடிக்கையைத் தொடங்கிய தாலிபான்களிடம், அமெரிக்காவால் பயிற்றுவிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் ராணுவம் எளிதில் விழ்ந்துள்ளது. 45 ஆண்டுகளுக்கு முன் வியட்நாமிலிருந்து தோல்வியுடன் திரும்பிய அமெரிக்காவின் அசிங்கமான வரலாறு தற்போது ஆப்கானிஸ்தானில் திரும்பியுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்