Aran Sei

திரையரங்குகள் எப்போது திறக்கும்? – மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள்

த்திய அரசு அக்டோபர் 15-ம் தேதி முதல் திரையரங்குகளைத் திறப்பதற்கு அனுமதி அளித்துள்ளது. ஏறக்குறைய ஏழு மாதக் காலமாக மூடிக்கிடந்த திரையரங்குகள் மீண்டும் திறக்கப்படுவது திரைத் துறையினரை நிச்சயம் மகிழ்ச்சியில் ஆழ்த்தும்.

இன்று மத்திய அரசு திரையரங்குகளில் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. ஒரு இருக்கை இடைவெளி விட்டு அமர வேண்டும், படம் பார்க்கும் பொழுது அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும், திரைப்படம் முடிந்த பிறகு கிருமி நாசினி கொண்டு திரையரங்கைச் சுத்தம் செய்ய வேண்டும், திரைப்படத்தின் இடைவெளியில் கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வு படங்களை வெளியிட வேண்டும் என்பன போன்ற பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. மேலும் பாக்கெட்டில் விற்கப்படும் தின்பண்டங்களை மட்டும்தான் விற்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

திரையரங்குகள் திறந்தாலும் பழைய நிலைக்கு உடனடியாகச் செல்லுமா என்று உறுதியாகச் சொல்ல முடியாத நிலையே உள்ளது. 50 சதவீதப் பார்வையாளர்களைக் கொண்டு படத்தை ஓட்டும்போது லாபம் பெரிய அளவில் வராது. மேலும் திரையரங்குகளுக்கு உடனடியாக மக்கள் வருவார்களா என்ற சந்தேகமும் உள்ளது. சென்னையில் பல மால்கள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் பெரும்பாலான நாட்களில் கூட்டம் இல்லாத சூழ்நிலையைக் காணமுடிகிறது. அதனால் உடனடியாக மக்கள் திரையரங்குக்கு வருவார்களா என்று உறுதிபட கூற முடியாத நிலையே உள்ளது.

சினிமா படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதால் பல திரைப்படங்கள் முடிவடையாத நிலையில் உள்ளன. திரையரங்குகளில் உள்ள நிச்சயமற்ற சூழ்நிலை காரணமாக பெருவாரியான தயாரிப்பாளர்கள் அரசு அனுமதித்த பிறகும் கூட படப்பிடிப்பிற்குச் செல்லவில்லை. இதன் காரணமாக பட ரிலீசுக்குத் தயாராக உள்ள திரைப்படங்கள் குறைவாகவே உள்ளன.

பெரிய ஹீரோக்களின் திரைப்படங்களை மட்டுமே அதிக அளவு ரசிகர்கள் விரும்பக் கூடிய சூழ்நிலை நிலவுகிறது. நடிகர் சூர்யா போன்றவர்கள் தமது திரைப்படங்களை திரையரங்குகளில் திரையிடாமல் OTT தளத்தில் வெளியிடுகின்றனர். இதுவும் திரையரங்குகளுக்குச் சிக்கலாக மாறி விட்டது.

இப்பொழுது விஜய் நடித்த மாஸ்டர், தனுஷ் நடித்த ஜகமே தந்திரம், ஜெயம் ரவி நடித்த பூமி போன்ற ஒரு சில திரைப்படங்களே ரிலீசுக்குத் தயாராக இருக்கின்றன. ஆனால் மக்கள் படம் பார்க்க வருவார்களா என்ற தயக்கம் தயாரிப்பாளர்களுக்கு உள்ளதால் உடனடியாக இந்தப் படங்கள் ரிலீஸ் செய்யப்படுமா என்ற கேள்வியும் உள்ளது.

மத்திய அரசு திரையரங்குகளைத் திறப்பதற்கு அனுமதி அளித்தாலும் தமிழக அரசு இதுவரை அனுமதி எதுவும் அளிக்கவில்லை. விரைவில் இதைப் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளார்.

திரைப்படத் தொழில் என்பது உலகச் சந்தை ஆகிவிட்டது. உதாரணமாக நடிகர் விஜய்க்கு தமிழ்நாடு மட்டுமன்றி கேரளா, பாண்டிச்சேரி, ஆந்திரா போன்ற மாநிலங்களில் ரசிகர்கள் உள்ளனர். ஒரு மாநிலத்தில் திரையரங்குகள் திறக்கப் படாமல் இருந்தால் கூட அந்த மாநிலத்தின் பட வசூல் பாதிக்கப்படும். எனவே, ஒரு மாநிலத்தில் திரையரங்கு திறக்கப்பட்டு மற்றொரு மாநிலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தால் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் படத்தை வெளியிடுவதற்குத் தயக்கம் காட்டுவார்கள்.

திரையரங்குகளைத் திறப்பதற்கு இதுபோன்ற பல தடங்கல்கள் இருந்தாலும் இந்த இக்கட்டிலிருந்து திரைத்துறை மீண்டு வரும் என்பதே நம்பிக்கை. திரைப்படம் என்பது ஒவ்வொருவரின் வாழ்க்கையின் அங்கமாக உள்ளது. பிடித்த நடிகரின் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது ஒவ்வொருவருக்கும் கொண்டாட்டமான அனுபவமாகும். நமது வாழ்வின் ஒவ்வொரு காலகட்டத்திலும் ரிலீசான திரைப்படங்கள் நம்மை அந்தக் காலத்திற்கே அழைத்துச் செல்லும் ஆற்றல் பெற்றவை.

திரைத்துறை இதற்கு முன்பும் பல சிக்கல்களைக் கண்டிருக்கிறது. அவற்றிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. இந்தக் கொரோனா பிரச்சனையில் இருந்தும் திரைத்துறை மீண்டு கம்பீர நடை போட வேண்டும் என்பதே ஒவ்வொரு சினிமா ரசிகனின் வேண்டுதல் ஆகும்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்