Aran Sei

சங்பரிவாரின் வேலைகள் பெருமைக்காக அல்ல, பிரிவினைக்காக – ராமச்சந்திர குஹா

Image Credit : thewire.in

காந்தியுடன் கடைசியாக பணியாற்றிய அவருடைய செயலாளர் பியாரிலால், தனது ‘மகாத்மா காந்தி: கடைசி கட்டம்’ என்ற நூலில், 1947 இந்திய பிரிவினையும், அதனைத் தொடர்ந்து நடந்த கொடூரமான வன்முறைகளும் ”இந்து பேரினவாதத்திற்கு வளமான நிலத்தை அளித்தும், ஆர்எஸ்எஸ் அரசுத் துறைகளில் இந்து நடுத்தர வகுப்பு மக்களை ஊடுருவச் செய்ததுமே அதன் மிக முக்கிய வெளிப்பாடாகும். அது, காங்கிரஸ்காரர்களில் உள்ள இந்துக்களின் ஒரு பிரிவினரைக்கூட, இரகசிய இரக்கம் காட்ட கட்டளையிடத் துவங்கியது‌.” என்று எழுதி உள்ளார்.

இந்து பேரினவாத அமைப்பு எதற்காக நிற்கிறது, அதன் குறிக்கோள்கள் என்ன என்பதை கோடிட்டுக் காட்டுகிறார். அப்போது அவர், “ஆர்எஸ்எஸ் ஒரு வகுப்புவாத, துணை ராணுவ, பாசிச அமைப்பு. இந்து ராஷ்டிரம் அமைப்பது என்பது அவர்களது அறிவிக்கப்பட்ட நோக்கம் ஆகும். ‘முஸ்லீம்கள் இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்’ என்பது அவர்கள் முழக்கம் ஆகும். அவர்கள் தீவிரமாக இல்லாதிருந்த போது, மேற்கு பாகிஸ்தானிலிருந்து இந்துக்களும், சீக்கியர்களும் வெளியேற்றப்படுவதற்காகவே வெளிப்படையாக காத்திருந்தனர். அதன் பிறகு பாகிஸ்தான் செய்ததற்கு பழிவாங்கும் உணர்வுடன் அழிக்கலாம்.” என்று இருந்ததாக அவர் எழுதி உள்ளார்.

காஷ்மீரில் ஜனநாயகத்தை படுகொலை செய்யும் பாஜக : மெஹ்பூபா முஃப்தி கண்டனம்

புதிதாக விடுதலை அடைந்த இந்தியா, பிரிவினை காயங்களாலும், அகதிகளின் அவல நிலையாலும் பீடிக்கப்பட்டிருந்த நிலையில் சொல்லப் போனால், உள்நாட்டிலேயே ஒரு கடுமையான அச்சுறுத்தலை எதிர் கொண்டது. அது இந்து பேரினவாதத்தின் எழுச்சி அலை. 1947ன் பிற்பகுதியில், மனம் மாறிய இந்து நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்களில் மூத்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை ஆர்எஸ்எஸ் வென்றெடுத்தது. இருப்பினும் இரண்டு இந்துக்கள் குறுங்குழுவாதத்திற்கும், பேரினவாதத்திற்கும் எதிராக உறுதியாக நின்றார்கள். இந்தியாவிலேயே இருக்க விரும்பிய முஸ்லீம்களின் உரிமைக்காக தங்கள் உயிரையும் பணயம் வைக்க அவர்கள் விரும்பினார்கள்.

இந்த முன்மாதிரி இந்துக்களில் ஒருவர் பிரதமர் ஜவஹர்லால் நேரு, மற்றொருவர் அவரது வழிகாட்டியான மகாத்மா காந்தி. பியாரிலால் எழுதியபடி: காந்தி “இது போன்ற ஒரு துயரத்திற்கு உயிருள்ள சாட்சியாக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். இந்திய ஒன்றியத்தில் முஸ்லீம்கள் சிறுபான்மையினராக இருந்தனர். இந்திய ஒன்றியத்தில் சமகுடிமக்களாக தங்கள் எதிர்காலம் குறித்து அவர்கள் ஏன் பாதுகாப்பற்றதாக உணர வேண்டும்? தலையை நிமிர்த்தி நடக்க முடியாமல் அச்சத்தில் வாழ்வதைப் பார்ப்பது அவருக்கு வேதனையாக இருந்தது. உயிர்வாழும் போராட்டத்தில் உள்ளவர்களுக்காக முன்னிற்பதற்காகவும், ஏதுமற்றவர்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும், அத்தகைய இந்திய முஸ்லீம்களின் துயர் துடைக்கத் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.”

இந்த வார்த்தைகள் விளக்கும் நிகழ்வுகள் நடந்து எழுபது ஆண்டுகளுக்கும் மேலாகியும் இன்றும் அறிவூட்டத்தக்கதாகும்.

1947-ம் ஆண்டின் பிற்பாதியில் இந்திய அரசியலிலும் பொது வாழ்விலும் ஆர்எஸ்எஸ் மிகச்சிறிய பங்கே வகித்தது. அப்போதைய வகுப்புவாத பதற்றங்களைப் பயன்படுத்தி தனது செல்வாக்கை அதிகரித்துக் கொள்ளலாம் என நம்பியது. ஆனால் நல்வாய்ப்பாக காந்தி மற்றும் நேருவின் தீர்மானமான முடிவுகளால் அந்த அமைப்பின் வளர்ச்சி தடை பட்டது.

கல்கத்தாவிலும் டெல்லியிலும் இந்து-முஸ்லீம் நல்லிணக்கத்திற்காக வெற்றிகரமாக காந்தி உண்ணாவிரதம் இருந்த போது, இந்தியா ஒரு இந்து பாகிஸ்தானாக மாறுவதை விரும்பவில்லை என நேரு தனது அரசாங்கத்தில் உள்ள அனைவருக்கும் தெளிவுபடுத்தினார். 1948, ஜனவரி 30ல், ஒரு ஆர்எஸ்எஸ் நபரால் காந்தி கொலை செய்யப்பட்டார்; அவரது தியாகம் அவரது சக இந்துக்களை அவர்களின் உணர்வுகளுக்குக் கொண்டு வந்து, திகைப்பிலாழ்த்தியதுடன், வெட்கப்பட செய்தது. அப்போதைக்கு ஆர்எஸ்எஸ்-ன் செயல்பாட்டிற்கு தடை ஏற்பட்டது.

நான் இதை எழுதும் போது ஆர்எஸ்எஸ் சிறிய அமைப்பாக இனியும் இல்லை. இன்று இந்திய அரசியல் மற்றும் பொது வாழ்வில் மேலாதிக்கம் செலுத்துகிறது. அதன் அரசியல் முன்னணியான பாஜக, மத்திய அரசையும் பல மாநில அரசுகளையும் கட்டுப்படுத்துகிறது. இந்து நடுத்தர வர்க்கத்தின் பெரிய பிரிவினர் தமது அரசியல் மற்றும் கருத்தியல் நிகழ்ச்சிகளுக்கு இரகசியமாக அல்ல நேரடியாகவே கடுமையாக ஆதரவு குரல் கொடுக்கின்றனர். உயர்மட்ட அரசு ஊழியர்களும், தூதரக அதிகாரிகளும், சில உயர்பதவி வகிக்கும் இராணுவ அதிகாரிகளும் கூட அரசியலமைப்பு மீதான தமது பற்றுறுதியை கைவிட்டுவிட்டு, ஆளுங்கட்சிக்கும் இந்துத்துவாவிற்கும் பகுதி நேர ஆதரவாளர்களாக மாறி விட்டனர்.

ஆர்எஸ்எஸ்-ன் முக்கிய நம்பிக்கைகளில், பியாரிலால் பார்வையின் படி: “இந்து ராஷ்டிரம் அமைப்பதே அவர்களின் அறிவிக்கப்பட்ட நோக்கம். “முஸ்லீம்களை இந்தியாவை விட்டு வெளியேற்றுங்கள்” என்பதே அவர்கள் முழக்கம். இதன் முதல் பகுதி இன்றும் முழுதும் செல்லுபடியாகும், இரண்டாவது பகுதி முழுவதும் நல்ல வழியில் இல்லை என்றாலும் மாற்றப்பட்டுள்ளது.

பிரிவினைக்குப் பிறகு உடனடியாக, பல ஆர்எஸ்எஸ் தலைவர்கள் இந்தியா முற்றிலும் முஸ்லீம்களற்றதாக இருக்க வேண்டும் என விரும்பினர். எனினும் 1950 களில், அது இனியும் சாத்தியமில்லை என்பதை உணர்ந்து கொண்டார்கள். அவர்கள் சமூகம் மிகப் பெரியதாகவும், நாடு முழுவதும் பரவலாக இருப்பதாலும், ஒரு முழு அளவிலான அழித்தொழிப்பு எவருடைய கற்பனைக்கும் அப்பாற்பட்டது என்பதை அறிந்து கொண்டார்கள்.

இப்போது இந்திய முஸ்லீம்கள் மீதான ஆர்எஸ்எஸ் மனப்பாங்கு பின்வருமாறு மறு வடிவாக்கம் செய்யப்பட்டுள்ளது: இந்துக்களின் அரசியல், இறையியல், சமூக, பொருளாதார, நிறுவன மேலாதிக்கத்தை அங்கீகரிக்கும் வரை இங்கு பிறந்து, வாழ்ந்து வரும் முஸ்லீம்கள் இந்த நாட்டிலேயே இருக்கலாம்.

நான் பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டி உள்ளபடி ஆர்எஸ்எஸ்-ன் இந்த அரசியல் மாதிரி, முரண்பாடாக இஸ்லாமிடமிருந்து – மத்திய கால இஸ்லாமிடமிருந்து கடன் வாங்கப்பட்டதாகும். காலிஃபாக்களின் ஆட்சி உச்சத்தில் இருந்த போது யூதர்களையும், கிறித்தவர்களையும் விட முஸ்லீம்கள் தனிப்பட்ட உயர்வான உரிமைகளைப் பெற்றிருந்தனர். பிந்தையவர்கள் வெளிப்படையாக துன்புறுத்தப்படவில்லை; எனினும், தங்கள் குடும்பங்களை கவனிக்கவும், வாழ்வாதாரத்திற்காகவும் தாழ்ந்த அல்லது இரண்டாம் தர நிலையை ஏற்க வேண்டியிருந்தது.

அதைப்போலவே, இந்தியாவிலும் இன்று, ஆர்எஸ்எஸ் நீடித்தால், முஸ்லீம்கள் இரண்டாந்தர நிலையைக் கூட ஏற்க வேண்டிவரும். ஆர்எஸ்எஸின் வரலாறு மற்றும் சமூகவியல் குறித்து அறிஞர்கள் கற்றறிந்த படைப்புகளை எழுதியுள்ளனர். ஆர்எஸ்எஸும் தன் பங்கிற்கு, உறுப்பினர் அல்லாதவர்களுக்கு அது எதற்காக இருக்கிறது என்பதை விளக்கி, டஜன் கணக்கில் புத்தகங்களையும், துண்டு பிரசுரங்களையும் வெளியிட்டுள்ளது. இவ்வளவு அதிகமான (எப்போதும் கூடிக் கொண்டே இருக்கும்) படைப்புகள் இருந்த போதிலும், ஆர்எஸ்எஸின் சித்தாந்தத்தையும், திட்டங்களையும் ஐந்தே வார்த்தைகளில் சுருக்கி விடலாம். அவை: நாங்கள் முஸ்லீம்களுக்கு அவர்கள் இடத்தைக் காட்டுவோம்.

இந்து பெருமையை மீட்கவும், மீளமைக்கவும், உயிர்த்தெழச் செய்யவும் ஆர்எஸ்எஸ் இருப்பதாகக் கூறுகிறது. என்றாலும், நடைமுறையில், அந்த அமைப்பின் நம்பிக்கைகளும், செயல்களும் மற்றும் அதனுடன் தொடர்புள்ள அரசியல் கட்சியும் பெருமிதத்தை விட பாகுபாடு மற்றும் மனச்சிதைவு ஆகியவற்றாலேயே தீர்மானிக்கப்படுகின்றன.

இதைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு மற்றும் பாஜக ஆளும் மாநில அரசுகளின் அண்மைக்கால செயல்களை கவனியுங்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அழிவு, அயோத்தியில் கோவில் கட்டுவதில் காட்டிய சாகசம், மத மறுப்பு திருமணங்களுக்கு எதிரான சட்டங்கள், இதற்கெல்லாம் மேலாக குடியுரிமை திருத்தச் சட்டம் மேலும் அதை அமைதியாக எதிர்த்தவர்கள் மீதான காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறைகள். இவையாவும் குறிப்பாக முஸ்லீம்களுக்கு அவர்கள் இடத்தைக் காண்பிப்பதற்கான அவர்கள் விருப்பத்தின் வெளிப்பாடே.

‘மகாத்மா காந்தி: கடைசி கட்டம்’ நூலில் பியாரிலால் 1947 ல் டெல்லியில் தான் கண்ட ஒரு விவாதம் குறித்து எழுதியுள்ளார். அதை நான் மேற்கோள் காட்டுகிறேன்: “காந்தியின் கட்சியைச் சேர்ந்த ஒருவர்” வாஹ் (Wah) முகாமில் ஆர்எஸ்எஸ் நபர்கள் நல்ல பணி செய்து வருகிறார்கள” என இடையில் கூறினார். “அவர்கள் கடின உழைப்புக்கான வலிமையையும், வீரத்தையும், ஒழுக்கத்தையும் காட்டியதாகவும்” கூறினார். ஆனால் காந்தி, “மறந்து விடாதீர்கள். இதே போல்தான் இட்லரின் நாஜிக்களும், முசோலினியின் பாசிஸ்டுகளும் செய்தனர்.” என்று பதில் கூறினார். அவர் ஆர்எஸ்எஸ்-ஐ எதேச்சதிகார கண்ணோட்டம் கொண்ட வகுப்புவாத அமைப்பு என அதன் பண்பை வகைப்படுத்தினார்.

73 ஆண்டுகளுக்குப் பின்னரும் காந்தியின் ஆர்எஸ்எஸ் பற்றிய கருத்துக்கள் எவ்வாறு நிலைநிறுத்தப்படுகின்றன? சரிதான். அவர் பயன்படுத்திய பெயரடைகளின் வரிசையை மாற்றி திருப்பிப் போட்டால் போதும்‌.

அப்பொழுதைப் போல் இல்லாமல் இப்போது, ஆர்எஸ்எஸ் வகுப்புவாத கண்ணோட்டம் கொண்ட எதேச்சாதிகார அமைப்பாக முன்பை விட சிறப்பாக உள்ளது என்று கூறலாம். 1947-ல் ஆர்எஸ்எஸ், இந்திய வாழ்க்கையின் விளிம்பில் இருந்தது; 2020-ல் அது மிகப் பெருமளவில் செல்வாக்குச் செலுத்துகிறது.

ஒன்றிய அரசைக் கட்டுப்படுத்தும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள், பத்திரிகைகளை அடிபணிய செய்துள்ளனர். நீதிமன்றத்தை வழிக்கு கொண்டு வந்துவிட்தாகவும் கூறப்படுகிறது, பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் லஞ்சம் மற்றும் கட்டாயப்படுத்தி அவற்றிற்கு குழிபறிக்கவோ அல்லது அவற்றை தூக்கி எறியவோ செய்கின்றனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்களை கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்டுள்ள புதிய சட்டங்கள், இந்துத்துவா சித்தாந்தத்திற்கு இணக்கம் காட்டாத தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அற்பமாக்கும் நடவடிக்கையாகும்.

அரசுகளின் நிறுவனங்களிலும், பொது சமூகத்திலும், மக்கள் எதை உண்ண வேண்டும் என்பதிலும் கூட, எப்படி உடை உடுத்த வேண்டும், யாரை அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம் அல்லது யாரை திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பது வரை அனைத்தின் மீதும் ஆர்எஸ்எஸும் பாஜகவும் அரசியல் நடைமுறை ஆதிக்கம் பெற்றுள்ளன. நாட்டு மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு கூறையும், அது அரசியல், சமூக, நிறுவன அல்லது சித்தாந்தம் எதுவாக இருந்தாலும், அதனை கட்டுப்படுத்த நினைக்க விரும்புவது, “எதேச்சாதிகாரம்” என்பதன் வரையறைக்கு மிகப் பொருத்தமான பாடநூல் விளக்கமாக உள்ளது.

இதற்கிடையே, முஸ்லீம்களை களங்கப்படுத்தவும், கொடூரமானவர்களாகவும் காட்ட அவர்கள் எடுக்கும் தொடர் முயற்சிகள் அவர்களுடைய ‘வகுப்புவாத’ மனநிலையை தெளிவாக வெளிப்படுத்துகிறது. 1947-ன் பிற்பாதியில், அன்று மகாத்மா காந்தி ஆர்எஸ்எஸ்ஐ உருவகப்படுத்தியது இன்றும் முற்றிலும் (இடையூறு தருவதாக) மிகச் சரியாக உள்ளது. அதிகாரத்தின் விளிம்பில் இருந்தாலும் இதயத்தில் இருந்தாலும், ஆர்எஸ்எஸ் எதேச்சாதிகார கண்ணோட்டம் கொண்ட வகுப்புவாத அமைப்பு என்பது கூடுதலோ குறைவோ அல்ல.

(டெலிகிராஃப் இந்தியா இணைய தளத்தில், வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குஹா எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்