Aran Sei

விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையின் போது மோடி என்ன பேசுவார்? – பாஜகவுக்கு அந்த புரிதல் உள்ளதா?

த்திய அரசு கொண்டு வந்த விவசாய திருத்தச் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி கடந்த ஐந்து வாரங்களாக டெல்லி எல்லையில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்தின் எதிரொலியாக, மூன்று விவசாய சட்டங்களையும் அமல் செய்வதை நிறுத்தி வைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்ததையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி விவசாய தலைவர்களோடு பேச்சு வார்த்தை நடத்த சம்மதித்துள்ளார்.

வட இந்தியாவைச் சேர்ந்த விவசாயிகளை இப்படியொரு வேதனையான நிலைக்கு தள்ளியது எது என நரேந்திர மோடிக்கோ அவர் அரசுக்கோ எந்த புரிதலும் இல்லாத நிலையில், எதைப் பற்றி அவர் பேச்சுவார்த்தை நடத்துவார்?

அவருடைய கட்சியின் பிரச்சாரகர்கள்,  “விவசாய தலைவர்கள் அரசியல் காரணங்களோடும், தேச விரோத காரணங்களோடும்தான் போராட்டம் நடத்துகிறார்கள்” என்று சொல்வதில் இருந்தே பாஜகவிற்கு இது குறித்து எதுவும் தெரியவில்லை என்பது வெளிப்படுகிறது. பள்ளிக்கூடத்தில், ஒரு விவாதத்தில் தோற்பதாக தெரிந்த உடனேயே, எதிரில் இருப்பவரை அடிக்கத் தொடங்கும் சிறுபிள்ளைத்தனமான மனநிலைதான் இது.

இப்போது, மோடி விவசாயிகளோடு பேச முடிவு செய்திருப்பதால், எந்த காரணங்களுக்காக விவசாயிகள் இப்படி ஒரு நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதை புரிந்து கொள்ள முயற்சி செய்வார். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால்; இந்தியா இப்போது உணவு உபரியாக இருக்கும் பொருளாதாரம். உணவு வர்த்தகத்தை நாடு முழுவதும் இருக்கும் வர்த்தகர்களுக்கு அளிக்கத் தொடங்கும் போது, (அதிகபட்ச பேர அதிகாரமும், பிற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்து எளிதாக தொடர்பு கொள்ள முடிகிறவர்களுமாக இருக்கும்) பெரிய விவசாயிகளுக்கு மட்டுமே லாபம் கிடைக்கும். விவசாய சமூகத்தில் ஐந்தில் நான்கு பங்கு இருக்கும் சிறு விவசாயிகள் உணவு உபரியினால் உருவாகும் விலை இறக்கத்தினால் பாதிக்கப்படுவார்கள்.

குறைந்தபட்ச ஆதார விலை முறை நீக்கப்படாது எனும் அரசின் சமீபத்திய முடிவு, விலை இறக்கத்தின் தாக்கத்தை கொஞ்சம் சரி செய்யலாம். ஆனால், பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்திர பிரதேசம் மற்றும் வடக்கு ராஜஸ்தானில் இருக்கும் மண்டிகள், தங்கள் உபரிகளை தனியார் நிறுவனங்களிடம் கொடுத்து விட்டு, மண்டியை மூடும் போது என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது.

இந்த மண்டிகளை நடத்தும் விவசாய உற்பத்தி சந்தை குழுக்கள் பிழைத்துக் கொண்டாலும் கூட, அவர்களிடம் இருக்கும் குறைவான நிதியை வைத்துக் கொண்டு, இன்று செய்வதை போல, விவசாயிகள் அடுத்த பயிரை விதைப்பதற்கு விதைகளும், உரமும் வாங்குவதற்கு உதவ முடியுமா? என்பது கேள்வியாகவே உள்ளது. அரசின் இந்த சீர்திருத்தங்கள், இந்தியாவில் மிக பலவீனமான மக்கள் தொகையை நிச்சயமின்மையின் கடலுக்குள் தள்ளிவிடுகிறது; அதில் எவ்வளவு காலம் உயிர்பிழைத்திருக்க முடியுமென்பது விவசாயிகளுக்கு தெரியாது.

பொருளாதார வளர்ச்சியினால் உண்டான தவிர்க்க முடியாத காரியமாகவே, தாராளமயவாத பொருளதார நிபுணர்கள் இதை பார்க்கிறார்கள். தயாரிப்பை பல்வகைப்படுத்துதல் தான் இதற்கான தீர்வென்று சொல்கிறார்கள். காய்கறிகள் வளர்ப்பு, பால் பண்ணை, பறவைகள் பண்ணை போன்றவற்றை அமைக்க நிலத்தை பயன்படுத்திக் கொண்டால், தானியங்களுக்கான சந்தை சமநிலைக்கு வந்துவிடும் என்கிறார்கள். ஆனால், விவசாயிகள் இதை 1990களில் இருந்தே செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு தெரியவில்லை. குறைவான நிலமும், பணமும் வைத்திருந்த விவசாயிகள் தான், அதை முதலில் முயற்சி செய்து பார்த்தார்கள்.

ஆனால், அவர்கள் நுழைந்த உலகம், அவர்கள் விட்டுவிட்டு வந்த உலகத்தைவிட அதிகமாக அச்சுறுத்துவதாக இருந்தது. ஏனென்றால், இந்த புது உலகில், ஏறத்தாழ – முழுமையான சந்தை பாதுகாப்பு எனும் நிலைக்கு பதிலாக சமமான – முழுமையான சந்தை பாதுகாப்பு இருந்தது. தானியங்கள் அழுகாது என்பதால் அவற்றை ஆறு மாதங்கள் வரை சேமித்து வைக்கலாம். ஆனால், வெங்காயம், உருளைக்கிழக்கு தவிர மற்ற காய்கறிகள், பழங்கள், முட்டை, பால் எல்லாம் சில நாட்களில் அழுகிவிடும். இதனால், தங்கள் பயிரை அறுவடை செய்வதில் இருந்தே வர்த்தகரின் கருணையில் தான் இருக்க வேண்டும் என்பதை காய்கறிகள் பயிரிடுபவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள்.

இவ்வளவு சிக்கல் இருந்தாலுமே, திடீரென ஏற்றுமதி வளர்ந்ததால் நிறைய விவசாயிகள் காய்கறிகளும், பழங்களும், பூக்களும் பயிரிட தொடங்கினர். ஏற்றுமதி செய்பவர்கள் ஒப்பந்த விலைகளை கொடுப்பதாலும், முன்கூட்டியே அதற்கு உறுதியளிப்பதாலும், விவசாயிகளின் வருவாய் ஓரளவு நிலையானதாக இருக்கிறது. இதன் விளைவாக, காய்கறி பயிரிடும் நிலத்தின் அளவு கடந்த இருபத்தைந்து வருடங்களில் அதிகரித்து 25 மில்லியன் ஹெக்டேராகியுள்ளது. மேலும், 2000-01ல் எட்டாயிரம் கோடி ரூபாயாக இருந்த ஏற்றுமதி, 2018-19ல் 63,700 கோடி ரூபாயாக மாறியுள்ளது.

ஆனால், வர்த்தகர்களும், ஏற்றுமதியாளர்களும், பெரிய விவசாயிகளும் மட்டும் தான் இதனால் நன்மையடைந்தார்கள். கடந்த இருபது வருடங்களில், காய்கறிகள் பழங்கள் போன்ற உற்பத்திகளை சேமித்து வைக்க 40,000 டன் கொள்ளளவு உடைய குளிர் சேமிப்பு கிடங்குகள் இந்தியா முழுக்க முளைத்துள்ளன. 2019 மார்ச் மாதம், 7,645 குளிர் சேமிப்பு கிடங்குகள், 150 மில்லியன் க்யூபிக் டன் இடத்துடன்,  37 முதல் 39 மில்லியன் உற்பத்தியை சேமிக்கும் கொள்ளளவுடன் இருந்தது.

ஆனால், சிறு விவசாயிகளுக்கு இங்கே இடமில்லை. விடுதலை பெற்று, ஒரு நூற்றாண்டின் முக்கால் பாகத்தை கடந்த பிறகும் கூட, இன்னமும் கிராமங்களில் குளிர் சேமிப்பு கட்டமைப்புகள் இல்லை.

விவசாய அமைச்சகத்தின்  ‘2018 தோட்ட வேளாண் புள்ளிவிவரங்கள்’ எனும் அறிக்கை, குளிர் சேமிப்பு இல்லாத ஒரு காரணத்தால், எப்படி சிறு விவசாயிகள் வறுமையில் வீழ்ந்தார்கள் என்பதை காட்டுகிறது. பஞ்சாப்பில், நான்கு டன் நெல்லையும், ஐந்து டன் கோதுமையையும் கொடுக்கும் ஒரு ஹெக்டேர் நிலம் இருபது டன் காய்கறிகளை கொடுக்கிறது.

காய்கறி விவசாயத்தின் மூன்று முதன்மை பயிர்களான வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி. 2013 முதல் 2018 வரை, விளைச்சல் நிறைவு பெறும் மாதங்களான மார்ச் மற்றும் ஏப்ரலில், மேற்சொன்ன பயிர்களின் ஒட்டுமொத்த விலை சராசரியாக ஒரு டன் பத்தாயிரம் ரூபாயில் இருந்து பன்னிரெண்டாயிரம் ரூபாய் வரை இருந்தது. அப்போது வேறு வழியில்லாமல் தங்கள் உற்பத்தியை விவசாயிகள் விற்றார்கள். பண்ணை விலைகள் மொத்த விலையின் பாதி அளவில் இருப்பதால், காய்கறி விவசாயிகள் ஒரு டன் உற்பத்திக்கு  அதிகபட்சமாக 6,000 ரூபாய் பெறுகிறார்கள். வருடாந்திர மொத்த வருமானம் 1,20,000 ரூபாயாக உள்ளது.

ஆனால், நெல்லுக்கும் கோதுமைக்கும் அரசாங்கம் நிர்ணயித்திருக்கும் கொள்முதல் விலை ஒரு டன்னிற்கு 18,000 ரூபாய்க்கும் மேல். இதனால், நான்கு டன் நெல்லும், ஐந்து டன் கோதுமை ஒரு வருடத்தில் மொத்த வருமானமாக 1,62,000 ரூபாயை ஈட்டிக் கொடுக்கும். இது காய்கறிகளால் வரும் வருவாயை விட மூன்றில் ஒரு பங்கு அதிகமானது. இதனால், காய்கறி விவசாயம், பாதுகாப்பு குறைந்தது மட்டுமல்ல, வருமானம் குறைவான தொழிலாகவும் உள்ளது. குறைந்தபட்ச ஆதார விலை நீடிக்க வேண்டும் எனவும், விவசாய சட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட வேண்டும் எனவும் விவசாயிகள் போராடுவதற்கு இது இரண்டாவது காரணம். இப்போதிருக்கும் சந்தை அமைப்பு பலவீனமாக்கப்பட்டாலோ, அழிக்கப்பட்டாலோ, பெரியளவு நிலம் வைத்திருப்பவர்களில் இருந்து சிறு விவசாயிகள் வரை அத்தனை பேரும் வீழ்ச்சியை சந்திப்பார்கள்.

இன்று டெல்லியை முற்றுகையிட்டு போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள், காய்கறி வளர்த்து கற்றுக் கொண்ட கசப்பான பாடம், சந்தை கருணையில்லாததது, சுரண்டலானது என்பது தான். இந்த சந்தையின் கருணையில் வாழவே விவசாயிகளை மோடி தள்ளிவிடுகிறார். அதனால் தான் குறைந்தபட்ச ஆதார விலை நீடித்தால் மட்டுமே போதாது, மூன்று விவசாய சட்டங்களும் நீக்கப்பட வேண்டும் என பேச்சுவார்த்தையின் தொடக்கதிலேயே விவசாயிகள் சொல்கின்றனர்.

மோடி இந்தியாவை ‘தானிய வலையில்’ இருந்து காப்பாற்ற வேண்டுமென்றால், காங்கிரஸ் கட்சி 1948ல் அதன் முதல் தேசிய கொள்கை திட்டமாக நில சீர்திருத்தத்தை அறிவித்த போது, இந்திய அரசும் அதன் அறிவுஜீவிகளும் விவசாயிகளுக்கு வாக்குறுதி அளித்த (பின் மறந்து போன), வேளாண் கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.

( www.thewire.in இணைதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்