Aran Sei

காஷ்மீர் என்கவுன்டர் – நீதி வேண்டும் : போலீஸ் விளக்கத்தை மறுக்கும் இளம் காஷ்மீரிகளின் குடும்பத்தினர்

Image Credit : scroll.in

ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் உள்ள லாவேபோரா பகுதியில் நடந்த “என்கவுண்டரில்” மூன்று ” பயங்கரவாதிகள்” கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் போலீசார் டிசம்பர் 30 அன்று அறிவித்தனர். டிசம்பர் 29-ம் தேதி மாலை இந்திய ராணுவத்தின் 02 ராஷ்டிரிய ரைஃபிள்ஸ் பிரிவு (RR) ஒரு “குறிப்பிட்டத் தகவலின்” அடிப்படையில் அந்தப் பகுதியில் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட போது என்கவுன்டர் துவங்கியதாக காவல்துறை அறிக்கை கூறுகிறது.

தேடுதலில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியதாகவும், சுற்றிவளைக்கும் நடவடிக்கையில் இருந்த படையினர் மீது கட்டிடத்தின் உள்ளே ஒளிந்திருந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதற்கு வீரர்கள் பதிலடி கொடுத்ததாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. காவல்துறைக்கு இந்தத் தகவல் கிடைத்ததும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையும் மத்திய ரிசர்வ் காவல்படையும் கொண்ட குழு “அந்த இடத்திற்கு விரைந்தது” என்றும் அது தெரிவிக்கிறது.

காவல்துறை கூற்றுப்படி, இரவு வந்து விட்டதால் நடவடிக்கை நிறுத்தப்பட்டு மீண்டும் டிசம்பர் 30-ம் மாலை காலை தொடர்ந்தது. இறுதியில் “என்கவுன்டர் ” பகல் 11:30க்கு முடிந்தது. அதில்” மூன்று பயங்கரவாதிகளும்” கொல்லப்பட்டனர்.

இறந்தவர்கள் தெற்கு காஷ்மீரின் புல்வாமாவைச் சேர்ந்த அஜாஸ் மக்பூல் கனியும் அத்தர் முஸ்டாக்கும், சோபியானைச் சேர்ந்த சுபைர் அகமது லோன் ஆகியோர். அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட பொருட்களில் இருந்து அவர்களை அடையாளம் கண்டுகொண்டதாகவும் காவல்துறை கூறியுள்ளது. அத்தர் முஸ்டாக் வானி என்ற முழுப் பெயரைக் கொண்டவர் 16 வயதே ஆன பதினொன்றாம் வகுப்பு மாணவர்.

“தேடுதலில் ஆயுதங்கள் (ஒரு ஏகே 47 துப்பாக்கி & இரண்டு கைத்துப்பாக்கிகள்) , வெடிமருந்துகளும் குற்றம் சாட்டப்படுவதற்கான பொருட்களும் அத்துடன் சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.” என காவல்துறை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அந்த அறிக்கையில் இந்த மூன்று பேரும் எந்த போராளிக் குழுவுடன் இணைந்திருந்தார்கள் என்பதைக் குறிப்பிடவில்லை.

என்கவுன்டர் நடந்து முடிந்த உடன், ஆர்ஆர் படையின் இந்தப்பகுதி பிரிவு தலைமை படைத்தளபதி சாஹி ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசினார். (காஷ்மீரில் கிளர்ச்சியை அடக்க உருவாக்கப்பட்டுள்ள ஆர்ஆர்எனும் துப்பாக்கிப் படையின் நான்கு பிரிவுகள் கிலோ ஃபோர்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. அதன் ஒரு பிரிவு குப்வாரா, ஸ்ரீ நகர், பாரமுல்லா ஆகியவை அடங்கிய வட காஷ்மீரில் நிறுத்தப்பட்டுள்ளது.)

“தீவிரவாதிகள் அதிகபட்ச விளம்பரத்திற்காக ஸ்ரீநகரின் புறநகர் பகுதியில் அல்லது நெடுஞ்சாலையில் பாதுகாப்பு படைகளைத் தாக்கத் திட்டமிட்டிருந்தனர்.” என்று சாஹி கூறியதாக உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்று கூறுகிறது.

தீவிரவாதிகள் பயன்படுத்தி உள்ள வெடிபொருட்களைப் பார்க்கும் போது அவர்கள் நெடுஞ்சாலையில் மிகப் பெரிய தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிகிறது.” என்று அவர் கூறியுள்ளார்.

Image Credit : scroll.in
மோதல் நடந்த இடம் – Image Credit : scroll.in

“போலி மோதல்”

இந்த செய்தியாளர் சந்திப்பிற்குப்பின், ஒரு சில மணி நேரத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீநகர் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறை முன்பு, இறந்தவர்கள் தீவிரவாதிகள் அல்ல சாதாரண பொதுமக்கள் தான் என்று கூறி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தினர். சமூக ஊடகத்தில் இறந்த உடல்களைப் பார்த்ததும் தெற்கு காஷ்மீரில் இருந்து அவர்களின் குடும்பத்தினர் ஸ்ரீநகருக்கு விரைந்து வந்துள்ளனர். அவர்கள் போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டிருப்பதாக கூறும் குடும்பத்தினர் டிசம்பர் 29 ம் தேதி வீட்டை விட்டுச் சென்றவ தங்கள் உறவினர்கள் வீடு திரும்பவே இல்லை என்று கூறுகின்றனர்.

அந்த மூவரும் மாலையில் தங்கள் வீடுகளைத் தொடர்பு கொண்டு தாங்கள் இரவில் காலந்தாழ்த்தியோ அல்லது மறுநாள் காலையிலோ வந்துவிடுவதாகக் கூறி உள்ளனர். ஆனால் மாலையில் அவர்கள் கைப்பேசிகள் அணைக்கப்பட்டுவிட்டன. இரவு முழுவதும் பல முறை முயற்சி செய்தும் அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்கின்றனர் குடும்பத்தினர்.

கடந்த ஜூலை மாதம் அம்ஷிபோராவில் நடந்த ஒரு துப்பாக்கிச் சூட்டில் மூன்று தொழிலாளர்களைக் கடத்திச் சென்று கொலை செய்ததாக ஒரு ராணுவ அதிகாரி (captain) மீதும் இரண்டு பொது மக்கள் மீதும் ஜம்மு காஷ்மீர் காவல்துறை, குற்றப்பத்திரிகை பதிவு செய்துள்ள நான்கு நாட்களில் இந்த குடும்பத்தினரின் புகார் வந்துள்ளது. அப்போதும், காவல்துறையும் இராணுவமும் படுகொலை செய்யப்பட்ட மூன்று தொழிலாளர்களையும் “அடையாளம் தெரியாத தீவிரவாதிகள்” என்றுதான் கூறியிருந்தனர்.

டிசம்பர் 30-ல் கொல்லப்பட்ட மூவரின் குடும்பத்தினர் கூறியுள்ள புகாருக்கு பதிலளித்த காவல்துறையினர் மூவருக்கும் தீவிரவாதத்துடன் தொடர்பு இருப்பதாக கூறினர். இவர்களின் பெயர் காவல்துறையின் தரவு தளத்தில் செயல்பாட்டில் உள்ள போராளிகள் பட்டியலில் இல்லை என்றாலும், அதில் இருவர் “பயங்கரவாதிகளின் தீவிர கூட்டாளிகள்” என்று போலீஸ் கூறியது. போராளி குழுக்களின் போரிடாத உறுப்பினர்கள் (over ground workers) இவர்கள்” என்று கூறுகிறது காவல்துறை.

தளவாடங்களை ஏற்பாடு செய்யும் பணியைச் செய்பவர்களுக்கு போரிடாத உறுப்பினர்கள் என்று பெயர் கொடுக்கப்படுகிறது. மூன்றாவது நபர் [கொல்லப்பட்ட பயங்கரவாதி] சமீபத்தில் இணைந்தவராக இருக்கலாம் என அந்த அறிக்கை மேலும் கூறுகிறது.

குடும்பத்தினருக்கு தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைககளைப் பற்றி பெரும்பாலும் தெரிந்திருப்பதில்லை என்கிறது காவல்துறை அறிக்கை, “பல ஓஜிடபிள்யூக்கள் கையெறி குண்டுகளை வீசுவது, கைத்துப்பாக்கியால் சுடுவது போன்ற குற்றங்களைச் செய்து விட்டு இயல்பாக தங்கள் குடும்பத்துடன் வந்து தங்கி விடுவார்கள்” என்றும் அறிக்கை கூறுகிறது.

இருப்பினும், “காவல்துறை ஒரு வழக்கு பதிவு செய்து புலனாய்வு செய்து வருகிறது. முழுமையான விசாரணைக்குப் பிறகே முடிவுகள் தெரியவரும்.” என்கிறது அறிக்கை.

ஜம்மு காஷ்மீரின் காவல்துறை தலைவர் தில்பாக் சிங், இராணுவம் கூறியதை மறுப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்றாலும் காவல்துறை அந்த படுகொலை செய்யப்பட்ட மூவரின் குடும்பத்தாரின் புகாரை விசாரிக்கும்.” என்று கூறியிருக்கிறார்.

“தாமதமாக வீட்டிற்கு வருவேன்”

அதே நாள் புல்வாமா மாவட்டத்தில் உள்ள பெல்லோ கிராமத்தில் வசிக்கும் அத்தர் முஸ்டாக் வானியின் குடும்பத்தினரை நமது நிருபர்கள் சந்தித்தனர்.

“அவன் உயிரோடு இருந்திருந்தால் இன்று அவனது தேர்வு எழுதி இருப்பான். இன்றுதான் அவனுக்கு கடைசித் தேர்வு. எப்படி அரைநாளில் தீவிரவாதி ஆவான்?” என்று கேட்கிறார் அவனது தந்தை.

டிசம்பர் 29 மதியத்திலிருந்து நடந்த நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்திப் பார்த்து அவர் அதிர்ச்சியடைகிறார். “நான் நேற்று மதியம் வேலைக்குப் போகும் போது அவனைப் பார்த்து விட்டுத்தான் போனேன்.” என்கிறார் 43 வயதான அரசு ஒப்பந்ததாரராக இருந்து ஆப்பிள் வியாபாரியாக மாறிய வானி. “அளவு பெரிதாக உள்ள தனது கால்சட்டையை சரி செய்து விட்டு வருவதாகக் கூறி, அவனது அம்மாவின் குடும்பத்தினரது வீட்டிற்குச் சென்றான்‌. அவர்கள் வீடு அதே கிராமத்தில் இருப்பதால் ஒரு மணி நேரத்தில் திரும்பி, மதிய உணவிற்கு வந்து விடுவதாகக் கூறினான்.”

மதிய உணவிற்குப் பின் வானி வீட்டை விட்டு வெளியே போய்விட்டார். மாலை 3:30 அல்லது 4:00 மணிக்கு அத்தர் தனது சகோதரியை கைப்பேசியில் அழைத்து, அங்கிருந்து 37 கி.மீ. தூரத்தில் உள்ள ஸ்ரீநகருக்கு ” சில வேலைகளுக்காக” செல்வதாகவும், இரவிலோ அல்லது மறுநாள் காலையிலோ திரும்பி வந்துவிடுவதாகவும், தனது கைப்பேசி மின்சக்தி குறைவால் அணைந்து விடலாம்.” என்றும் அத்துடன் சகோதரியிடம் கூறியதாக அவர் கூறுகிறார்.

Image Credit : scroll.in
அத்தரின் படத்தை காண்பிக்கும் அவரது தந்தை – Image Credit : scroll.in

அவர்களுக்கு ஸ்ரீநகரில் உறவினர்கள் யாரும் இல்லை என்றாலும் இந்த திடீர் பயணம் அவரது குடும்பத்தினருக்கு வழக்கத்திற்கு மாறானதாகத் தெரியவில்லை என்று தெரிவிக்கும் வானி, “அவனுக்கு அது வாடிக்கை. எங்கே போகிறான் என வெளியே போகும் போது கூற மாட்டான். நாங்கள்தான் அவனை கைப்பேசியில் அழைத்து எங்கிருக்கிறான் எனத் தெரிந்துக் கொள்வோம்.” என்கிறார் வானி.

வீட்டிற்கு வந்ததும் வானி பலமுறை அவனைத் தொடர்பு கொள்ள முயன்றிருக்கிறார். “நான் பலமுறை அவனை தொடர்பு கொள்ள முயன்றேன். அவனது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அது எனக்கு லேசாக கவலையை கொடுத்தது. ஆனால் எனது குடும்பத்தினர் என்னை கவலைப்பட வேண்டாம் என்றும் அவன் அவனது சகோதரியை அழைத்துப் பேசியதையும் கூறினர்.” என்கிறார் வானி.

மறுநாள் காலை தனது வேலைக்கு சீக்கிரமாகவே விமான நிலையத்துக்குச் சென்றுவிட்டார் அவர். மீண்டும் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்த போது ராஜ்போரா காவல்நிலையத்திலிருந்து அழைப்பு வந்ததுள்ளது‌. “அவர்கள் என்னிடம் அத்தரைப்பற்றி விசாரித்து விட்டு, அவனுடன் எனக்கு என்ன உறவு?” எனக் கேட்டதாகக் கூறுகிறார் வானி. ஏதோ தவறு நடந்துள்ளது என்று உணர்ந்த வானி வீட்டிற்கு விரைந்துள்ளார். “நான் வீட்டிற்கு வந்த போது நிறைய பேர் என் வீட்டிற்கு வெளியில் நின்றிருந்தனர்.” அப்போதுதான் அவருக்குத் அத்தர் மரணம் பற்றி சொல்லப்பட்டது.

தற்போது தன் வியாபாரம் நன்றாக இருப்பதால் தன் மகனுக்கு விரும்பியதை எல்லாம் கிடைப்பதை அவர் உறுதி செய்திருந்தார். அத்தரும் தனது தந்தைக்கு பொறுப்பான மகனாக இருந்தார். “நான் கொரோனா சமயத்தில் ஏறத்தாழ இரண்டு மாதங்கள் வீட்டை விட்டு வெளியேதான் இருக்க வேண்டியதாயிற்று. சிறுவனாக இருந்தாலும் வீட்டுத் தேவைகள் அனைத்தையும் அவன் பொறுப்பாக பார்த்துக் கொண்டான்.” என்கிறார் வானி.

அத்தரின் மாமா முகம்மது சஃபி வானி தனது மருமகன் காவல்துறையுடனோ, இராணுவத்துடனோ ஒரு போதும் சிக்கலை ஏற்படுத்திக் கொண்டதில்லை. அவன் மீது எந்த குற்றச் சாட்டும் இல்லை. நீங்கள் வேண்டுமானால் உள்ளூர் காவல்நிலையத்தில் கேட்டுக் கொள்ளலாம்.” என்று கூறுகிறார். தெற்கு காஷ்மீரில் நடைபெறும் வன்முறைகள் பற்றி அவன் அக்கறையின்றி இருந்தான் என்கிறார் அவர்.

போராளியாக இருந்த முகம்மது வானியின் மகன் ரயீஸ் அகமது வானி 2017 ல் கொல்லப்பட்டு விட்டார். “அத்தருக்கு அப்போது வயது 13-14 இருக்கும். காவல்துறையினர் அத்தரின் மாமா மகன் போராளி என்கின்றனர். அப்படியானால் அவன் ஏன் இத்தனை ஆண்டுகளாக போராளிகளுடன் சேரவில்லை என்பதை நீங்களே சொல்லுங்கள்.” என்கிறார் அவர்.

அத்தரின் குடும்பம் தங்கள் பையன் தீவிரவாதி என்றும் அவர்களோடு தொடர்புடையவர் என்றும் காவல்துறை கூறுவதை வன்மையாக மறுக்கின்றனர்.” அவன் போராளியாக இருந்தால் ஆதாரங்களைக் கொடுங்கள். ஒரு மணி நேரத்தில் தன் உயிரைக் கொடுக்க வேண்டிய அளவுக்கு அவர் இந்தியாவிற்கு என்ன செய்தார்?” என்று கேட்கிறார் வானி.

டிசம்பர் 30-ம் தேதி காவல் துறை அறிக்கை, “என்கவுன்டர்” நடந்த போது பலமுறை அவர்களை சரணடைய வேண்டுகோள் விடுத்ததாகக் கூறி உள்ளது.

அவ்வாறு நினைத்திருந்தால் அவர்கள் குடும்பங்களை அணுகி இருக்கலாம். அந்த என்கவுன்டரின் போது என்னை அழைத்து அவர்களிடம் சரணடைய வேண்டுகோள் விடுக்கக் கூறியிருந்தால், நான் உங்களுக்கு உறுதியாகச் சொல்கிறேன், துப்பாக்கிச் சூட்டிற்கு நடுவிலும் நான் உள்ளே சென்று அவனே என் தோளில் போட்டுத் தூக்கிக் கொண்டு வந்திருப்பேன்‌.” என்கிறார் முஸ்டாக் வானி.

கடந்த ஆண்டு, சமீப காலங்களில் முதன்முறையாக 12 போராளிகள் என்கவுண்டரின் போது சரணடைந்தார்கள்‌. பல என்கவுன்டர்களில் போராளிகளின் குடும்பங்கள் தங்கள் ஆட்களுக்கு விடுத்த வேண்டுகோள்கள் சமூக வலைதளத்தில் மிக வேகமாகப் பரவியது.
எனினும் லாவேபோராவில் அத்தகைய முயற்சிகள் எதுவும் எடுக்கப்பட வில்லை.

வானி குடும்பத்தினரின் மனதை அழுத்தும் இன்னொரு விடயம் குடும்பத்தினருக்கான இறுதி அழைப்பு இல்லை என்பது. காஷ்மீரில் என்கவுன்டர் முடிந்ததும் உடனடியாக போராளிகள் அவர்கள் தங்கள் வீட்டிற்கு அழைத்து பேசிய கடைசி தொலைபேசி அழைப்பின் பதிவு பொது வெளியில் வெளியிடப்படும்.”

மூவரிடமும் கைப்பேசி இருந்தது. ஆனால் ஒருவரும் தங்கள் வீட்டிற்கு அழைத்து தாங்கள் (தீவிரவாத) செயலில் இறங்கி விட்டோம். தற்போது மாட்டிக் கொண்டு விட்டோம்.” என்று கூறவில்லை என்கிறார் முகம்மது வானி.

“புத்தகங்கள் வாங்க வெளியே போகிறேன்”

வானியின் குடும்பம் இருக்கும் பெல்லோ கிராமத்திலிருந்து 2.5 கி.மீ‌ தூரத்தில் உள்ள பாட்ரிகாம் கிராமத்தில், அஜால் முகமது கனியை உயிரோடு பார்த்த அந்த கடைசி தருணங்களை நினைவு கூர்ந்தனர் அவரது குடும்பத்தினர். புல்வாமா கல்லூரியில் இறுதியாண்டு பட்டப் படிப்பு படித்து வரும் 20 வயதான கனி இந்த மாதத்தில் முதல்முறையாக வீட்டை விட்டு வெளியே சென்றார்.

தண்டுவடப் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வரும் அஜாஸ் கனியை மருத்துவர்கள் இரண்டு மாதம் முழு ஓய்வு எடுக்க அறிவுரை கூறியிருந்தார்கள். ஆனால் ஜனவரி 9ல் தனது தேர்வு துவங்க இருப்பதால் தான் 6 கி.மீ தூரத்தில் உள்ள புல்வாமா சென்று சில புத்தகங்களை வாங்கி வருவதாக கூறியதாக அவரது தந்தை முகம்மது மக்பூல் கனி கூறுகிறார். அவர் ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் தலைமைக் காவலராகப் பணியாற்றுகிறார்.

மாலை 4 மணி வாக்கில் கனி இன்னும் வராதது ஏன் எனக் கேட்டு, அவனுடைய அம்மாவும் சகோதரியும் கைப்பேசியில் தன்னை அழைத்ததாக, 43 வயதான முகம்மது கனி கூறுகிறார். குளிராக இருப்பதால், அது அவன் உடல்நலத்தை பாதிக்கும் என அவர்கள் கவலைப்பட்டனர். அவன் புல்வாமாவில் இருப்பதாகவும், மாலையிலோ அல்லது மறுநாள் காலையிலோ வந்துவிடுவதாக அவன் அவரிடம் கூறியதாகவும் அவர்களுக்கு பதிலளித்துள்ளார். அவனது கைப்பேசி போதிய மின் சக்தி இல்லாமல் செயலிழக்கலாம் எனவும் அவன் கூறினான் என்கிறார் தந்தை கனி.

Image Credit : scroll.in
அஜாசின் படத்தைக் காட்டும் அவரது தந்தை – Image Credit : scroll.in

அஜாஸ் கனியும் அத்தர் வானியும் ஏற்கனவே ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள்தான். கனியின் தம்பி தஜாமுல் அத்தரின் வகுப்பில் தான் படிக்கிறான். அத்தர் வானி அடிக்கடி கனி வீட்டிற்கு வருவது வழக்கம். “அவர்களது குடும்பத்துடன் எங்களுக்கு நல்ல உறவு இருந்தது.” என்கிறார் முகம்மது கனி.

தனது குடும்பத்தினரிடம் பேசும் போது அஜாஸ் கனி தான் தனியாக இல்லை என்றும் அத்தர் தன்னுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் பிறகு அஜாஸ் கனி வீடு திரும்பாததால் அவரது குடும்பம் கவலையில் ஆழ்ந்தது. “நாங்கள் அவனை இரவு முழுவதும் அழைத்தோம். ஆனால் அவனுடைய கைப்பேசி அணைக்கப்படிருந்தது. மறுநாள் காலை எனக்கு ராஜ்போரா காவல் நிலையத்திலிருந்து எனது மகனைப் பற்றி விசாரித்து ஒரு அழைப்பு வந்தது. அவர்கள் அஜாஸின் புகைப்படத்தை அனுப்பக் கூறினர்.”

“புகைப்படத்தைப் பகிர்ந்த ஒரு சில நிமிடங்களில் என்னை ஸ்ரீ நகர் காவல் நிலைய கட்டுப்பாட்டு அறைக்குச் செல்லுமாறு கூறினர். அங்கு சென்றதும் அங்கிருந்த அதிகாரி என்னை “அடையாளம் காட்ட உள்ளே வருமாறு கூறினார்” நான் அவர்களிடம் “என்ன அடையாளம்?” என்று கேட்டேன். அவர் சில உடல்கள் கட்டுப்பாட்டு அறைக்குக் கொண்டு வரப்பட்டிருப்பதாகக் கூறினர். நான் அறைக்குள் நுழைந்ததும் அத்தர் மற்றும் கனியின் உடல்களை கண்டேன்.” என்று கூறினார் கனி.

ஜனவரி 1-ம் தேதி வெளியிட்ட, லாவேபோரா நிகழ்வு குறித்த காவல்துறையின் இரண்டாவது அறிக்கையில், தொலைபேசித் துறையின் ஆவணங்களுடன், நவீன தொழில்நுட்பங்கள் மூலம் அந்த மூவருடைய குடும்பத்தினர் கூறுவதை சரிபார்த்ததாகக் கூறுகிறது.

குடும்பத்தினர் கூறுவதற்கு மாறாக அஜாஸும், அத்தரும் ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான ஹைதர்போராவுக்கும் அங்கிருந்து நிகழ்வு நடந்த லாவாய்போராவுக்கும் சென்றிருக்கின்றனர் என்று தெரிவிக்கின்றனர். “அவர்கள் இருவரும் தீவிரவாத சார்புடையவர்கள் என்றும், லஷ்கர் இ தொயிபா பயங்கரவாதிகளுக்கு (தற்போது எதிர்ப்பு முன்னணி என்று அழைக்கப்படுகிறது) உதவி உள்ளனர். ” என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.

ஜனவரி 1-ம் தேதி அறிக்கை அஜாஸ் கனிக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பிருப்பதை, போலீஸ் காவலில் இருக்கும் போரிடாத போராளி ஒருவர் உறுதி செய்துள்ளார் என்று கூறுகிறது. அவர் கடந்த ஜூன் மாதம் மீஜ் (பாம்போர்) என்னுமிடத்தில் நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட லஷ்கர் இ தொயிபாவின் ஃபைசல் முஸ்டாக் பாபாவுடன் கனிக்கு தொடர்பிருப்பதாக கூறியுள்ளதாக” போலீஸ் கூறியுள்ளது.

பாபா பக்கத்து கிராமத்தில் வசித்து வந்ததாக உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். அவர்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியும் என்றாலும் அவர்கள்”நெருக்கமானவர்கள்” அல்ல என கிராமத்தினர் கூறுகின்றனர்.
“போராளிகளுடனோ கொல்லப்பட்ட தியாகிகளுடனோ தொடர்பில்லாத ஒருவரை இந்த தெற்கு காஷ்மீரில் காட்டுங்கள் பார்க்கலாம்?” என்கிறார் தன் பெயரை வெளியிட விரும்பாத பாத்ரிகாம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர்.

காவல்துறையின் கூற்றுக்களைக் கேட்டு கனியின் குடும்பம் அதிர்ச்சியுள்ளது. “அவன் தீவிரவாதியாக இருந்தால் 35 நாட்கள் வீட்டிலேயே தங்கி இருப்பானா? போரிடாத போராளியாக இருந்தால் எப்படி வீட்டிலேயே இருக்க முடியும். காவல்துறைக்கு ஏதாவது சொல்ல வேண்டும். அம்ஷிபோரா போலி என்கவுன்டர் விவகாரத்தில், போலீஸ் கொல்லப்பட்டவர்கள் மீது துப்பாக்கிகளை வைத்து விட்டு, பின்னர் அது போலீஸ் நடத்திய போலி என்கவுன்டர் என்று நிரூபிக்கப்படவில்லையா? எங்களுக்கு இது போலி என்கவுன்டர்தான். எங்கள் குழந்தைகள் காலையில் வீட்டை விட்டு சென்றார்கள். கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் அப்பாவிகள். எங்களுக்கு நீதி வேண்டும். வேறெதுவும் வேண்டாம்.” என்கிறார் முகம்மது கனி.

“எப்போதும் வேலையில் சுறுசுறுப்பாக இருப்பான்”

சோபியன் மாவட்டத்தைச் சேர்ந்த துர்க்வங்கம் கிராமத்தின் 23 வயதான ஜுபைர் அகமது லோன் குடும்பத்தாரும் நீதியைத்தான் கேட்கின்றனர். டிசம்பர் 29-ம் தேதி தனது மகன் ஜுபைர் லோன் வீட்டை விட்டு போனதாகக் கூறுகிறார் அவரது தந்தை குலாம் முகம்மது லோன். அவர் கட்டுமானத் தொழிலில் இருந்தார். “மாலையில் தன் சகோதரனை அழைத்து தான் இரவில் தாமதமாகவோ அல்லது மறுநாள் காலையிலோ திரும்பி வருவதாகக் கூறியதை” நினைவு கூர்கிறார் குலாம் லோன்.

அதுவே கடைசியாக அவர்கள் லோனிடமிருந்து கேட்ட குரல். பிறகு அவரை தொடர்பு கொள்ள தீவிர முயற்சி செய்தனர். ஆனால் அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. ஜுபைரைப் பற்றிய தகவல் வழக்கமில்லாத வழியில் வந்தது.

“உள்ளூர் முகாமிலிருந்து ஒரு இராணுவ அதிகாரி என் மூத்த மகனை அழைத்து அவனது தம்பி என்கவுண்டரில் கொல்லப்பட்டதாகத் தகவல் கூறினார்.” என்கிறார் லோன்.

அவரது ஐந்து மகன்களில் கடைசி மகன் ஜுபைர். அவனுக்கு தீவிரவாத வேலைகளில் ஈடுபட முடியாத அளவு வேறு வேலைகள் இருந்தன என்கிறார் அவர். இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவன் தனது வேலையை அவனுக்கு எவ்வளவு முக்கியமானது என கருதினான் என்பது தெரியும். காவல்துறை என்ன வேண்டுமானாலும் கூறலாம். எனக்குத் தெரியும் எனது மகன் அப்பாவி.” என்கிறார் லோன்.

அத்தர், அஜாஸ் போன்றில்லாமல் ஜுபைரின் தீவிரவாத தொடர்பு குறித்தோ செயல்கள் குறித்தோ காவல்துறை விரிவாகக் கூறவில்லை. லாவேபோரா வருவதற்கு முன், குறைந்தது மூன்று மாவட்டங்களுக்காவது அவன் சென்று விட்டு இறுதியாக அங்கு வந்துள்ளான். “ஜுபைர் முதலில் புல்வாமாவுக்கும், பின் அனந்தநாக்கிற்கும் அதன்பின் சோபியானுக்கும் அங்கிருந்து புல்வாமாவுக்கும் பின்னர் லாவேபோராவுக்கும் வந்துள்ளார்” என காவல்துறை அறிக்கைக் கூறுகிறது.

காவல்துறையின் இந்த கதையை அவர் குடும்பத்தினர் ஏற்கவில்லை. லோன், ஸ்ரீநகர் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்பதுடன் அங்கு உறவினர்கள் ஒருவரும் இல்லை. அவன் பெரும்பாலான நேரத்தை சோபியானிலேயே கழித்திருக்கிறான். மிக அதிக தூரம் சென்றது என்றால் பக்கத்தில் உள்ள புல்வாமா மாவட்டத்திற்கு பயணம் செய்ததுதான்.” என்கின்றனர் அவர் குடும்பத்தினர்.

Image Credit : scroll.in
மோதல் நடந்த இடத்தில் – Image Credit : scroll.in

லோன் குடும்பம் வாழும் துர்க்வங்கம் கிராமம் சோபியானிலேயே மிகவும் கொந்தளிப்பான கிராமங்களில் ஒன்றாகும். இந்த நிலையிலும், ஜுபைர் ஒரு நாளும் பாதுகாப்புப் படைகளுடன் சிக்கலை மேற்கொண்டதில்லை என்பதுடன், அவன் மீது எந்த வழக்கும் இல்லை.

“கல்லெறிதகளும் போராட்டங்களும் இங்கு பொதுவாக நடப்பதுதான். இந்தப் பகுதியின் பல பையன்கள் போராளிகளாவும், தியாகிகளாகவும் ஆகி இருக்கிறார்கள். ஆனால் அவன் ஒரு போதும் இதற்கு ஆதரவாக இருக்கவில்லை.

ஜம்மு காஷ்மீர் காவல்துறையில் அவனது அண்ணன்கள் வேலையில் இருந்ததும் இதற்கு ஆதரவாக இருந்தது. “பல குடும்பங்களையும் பாதுகாப்பு படையினர் துன்புறுத்திய போதிலும் அவர்கள் இந்த வீட்டிற்குள் எப்போதும் வந்ததில்லை. அவர்களுக்கும் இந்த குடும்பத்தினரின் மீது நல்லெண்ணமே உள்ளது.” என்கிறார் என்கிறார் ஜுபைரின் மாமா அப்துல் காலித் லோன்.

“அறிவிப்புகளே இல்லை”

இந்த என்கவுன்டர் லாவே போராவில், ஸ்ரீநகர்- பாராமுல்லா நெடுஞ்சாலையில் உள்ள தனியார் கட்டிடத்தில் நடந்துள்ளது. இந்தக் கட்டிடம் நீண்ட காலமாக கைவிடப்பட்டு கிடக்கிறது என்கிறார் பெயர் கூற விரும்பாத உள்ளூர்வாசி. அங்கு ஒரு ஸ்நூக்கர் விளையாடுமிடம் இருந்தது. இளைஞர்கள் அங்கு விளையாடப் போவார்கள். ஒரு துணை மருத்துவ கல்லூரியின் விடுதியாகவும் ஒரு ஆண்டுக்கு முன்பு அது பயன்படுத்தப்பட்டது.

டிசம்பர் 29 மாலை “என்கவுன்டர்” துவங்கிய போது என்ன நடந்தது என சரியாகத் தெரியவில்லை என்று கூறும் அங்கு வசிக்கும் மக்கள், “எந்த அறிவிப்பும் செய்யவில்லை அல்லது பாதுகாப்பு படையினர் அக்கம்பக்க வீடுகளில் உள்ளவர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான முயற்சியையும் எடுக்கவில்லை.” என்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்.

“எங்களை வீட்டை விட்டு கூட போகச் சொல்லவில்லை. அடுத்து என்ன நடக்கும் என எங்களுக்குத் தெரியவில்லை. ‘நீங்கள் எங்கள் கட்டளைகளை பின்பற்றும் வரை உங்களை நாங்கள் எதுவும் செய்ய மாட்டோம்’ என்று படையினர் கூறினார்கள்.” என்கிறார் அவர்.

உள்ளே இருந்த மூவருக்கும் சரணடைய பல வாய்ப்புகள் கொடுத்ததாக காவல்துறையும், இராணுவமும் கூறுவது குறித்து அங்கு வசிப்பவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். “தீவிரவாதிகளை சரணடைய கூறுவது அல்லது அது போன்ற வேறு எதையும் நாங்கள் கேட்கவே இல்லை” என்கிறார் ஒருவர். அது போலவே துப்பாக்கிச் சூடு இரவில் நிறுத்தப்படவில்லை. இரவு முழுவதும் துப்பாக்கி சூடு நடந்தது. அதிகாலை இரண்டு மணிக்கு சிறிது நேரம் மட்டுமே அமைதியாக இருந்தது. மீண்டும் 3:30 மணிக்கு பெருத்த வெடி சத்தத்துடன் துப்பாக்கிச் சூடு தொடர்ந்தது.” என்றார் அவர்.

கொஞ்சம் பின் நோக்கிச் சென்று, ஒரு மாதத்திற்கு முன் இராணுவம் நெடுஞ்சாலைப் பகுதியில் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அங்கு வசிக்கும் பலரும் நினைவுபடுத்தினர். அந்த இடத்தில் இருந்த ஒரு கடைக்காரர், இராணுவ படை வீரர்கள் குழு ஒன்று தன்னிடமும், கடை ஊழியர்களிடமும் அடையாள அட்டை காட்டக் கூறினார்கள் என்பதை நினைவு கூர்ந்தார்.

“இராணுவம் வந்து எங்களிடம் அடையாள அட்டை காண்பிக்கக் கூறியது. நாங்கள் அடையாள அட்டையை காட்டியபடி இருப்பதை காணொளி எடுத்தனர் இது விசித்திரமாக இருந்தது.” என்கிறார் அவர்.
நவம்பர் மாதம் போராளிகள் தாக்குதலால் இரண்டு இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது ஒரு வேளை இந்த நடவடிக்கையைத் தூண்டியிருக்கலாம். அந்தத் தாக்குதல் இங்கிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ள ஸ்ரீநகரின் புறநகர் பகுதியான அபான்ஷா சௌக்கில் நடந்தது.

அந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பின் 02 ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் படை பிரிவினர் அந்தப் பகுதி மக்களை ஒட்டு மொத்தமாக அடித்து துன்புறுத்தினர் என்று அபன் ஷா மக்கள் கூறுகின்றனர். ஆனால் இதனை இராணுவம் மறுத்துள்ளது.

இதற்கிடையில் இந்த என்கவுண்டரால் வீடு திரும்ப முடியாத இந்த பகுதியில் வசிக்கும் ஒருவர், “எப்போதும் இது போல் என்கவுன்டர் நடந்தால் உடனடியாக ஸ்ரீநகரில் இணையத்தை முடக்கி விடுவார்களே. ஏன் இப்போது அவ்வாறு செய்யவில்லை?” என்று கேட்கிறார்.

“நான் என் வீட்டில் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா எனத் தெரிந்து கொள்ள இரவு முழுவதும் அவர்களை அழைத்துக் கொண்டே இருந்தேன். இது போன்ற என்கவுன்டர் சமயங்களில் வழக்கமாக செய்வது போல இணையம், கைப்பேசி செயல்பாடுகள் அனைத்தையும் நிறுத்திவிடுவார்களோ என கவலையோடு இருந்தேன். ஆனால் அவர்கள் அப்படிச் செய்யவில்லை. இது வழக்கத்திற்கு மாறானது.” என்று கூறினார்.

– சஃப்வாத் ஜர்கர்

scroll.in தளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்