Aran Sei

புலம் பெயர் தொழிலாளர்களை உத்தர பிரதேச அரசு கையாண்டது பற்றிய ஆய்வு – ‘ஹார்வர்ட்’ ஆய்வு இல்லை, ஹரியானா ஆய்வு

Image Credit : thewire.in

டந்த வாரம், உத்தர பிரதேசத்திலும், இந்தியாவின் பிற பகுதிகளிலும் இதுவரை இல்லாத வகையில் கொரோனா தொற்று தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நேரத்தில், ‘புலம் பெயர்ந்தோர் நெருக்கடியை யோகி ஆதித்யநாத் அரசு கையாண்ட விதத்தை ஒரு ஹார்வர்ட் ஆய்வு பாராட்டியது’ பற்றி பல செய்தி நிறுவனங்கள் பரபரப்பான செய்திகளை வெளியிட்டன.

இந்தச் செய்தி நிறுவனங்களில் பல யாருக்கும் தெரியாதவையாகவோ, அல்லது பாரதிய ஜனதா கட்சியுடன் வெளிப்படையாக அடையாளப்படுத்துபவையாகவோ இருந்தன. இதனை வெளியிட்ட ஒரே தேசிய நாளிதழ் இந்துஸ்தான் டைம்ஸ் மட்டுமே. லக்னோ தேதியிட்டு வெளியான இந்தச் செய்திக்கு, “தொற்று நோய் பரவலின் போது புலம் பெயர்ந்தோர் நெருக்கடியை யோகி ஆதித்யநாத் அரசு கையாண்ட விதத்தை ஹார்வர்ட் ஆய்வு பாராட்டுகிறது” எனத் தலைப்பிடப்பட்டிருந்தது.

மற்றவர்களைப் போலவே, இந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழும், இந்த ஆய்வின் தலைப்பு, எழுதியவர், இணைப்பு, செய்முறை போன்ற விவரங்களை தரவில்லை. அது கொடுத்திருந்த ஒரே தகவல் “இது அரசால் பகிரப்பட்டது” என்பது மட்டுமே. மற்ற ஊடகங்கள், இதனை உத்தர பிரதேச அரசின் பெயர் குறிப்பிடப்படாத செய்தித் தொடர்பாளர் மூலம் பெற்றதாகக் கூறினர்.

“யோகி ஆதித்யநாத் அரசாங்கம், புலம்பெயர் தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்தல், உணவுப் பொருட்கள் தொகுப்புகளை வழங்குதல், சுகாதார நிலையங்களை நடத்துதல் என பல்முனை நோக்கங்களுடன் வேலை செய்ததாக அந்த செய்தித் தொடர்பாளர் கூறினார்,” என டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டிருந்தது. டைம்ஸ் நவ், டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழை வெளியிடும் பென்னட் கால்மன் நிறுவனத்திற்குச் சொந்தமானது. இதே வாக்கியம், இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியிலும், அரசு சார்பு செய்தித் தளமான ஸ்வராஜ்யா பத்திரிகையின் செய்தியிலும் இடம் பெற்றிருந்தது.

Image Credit : thewire.in
ஹரியானாவின் குர்கானில் உள்ள “போட்டித் திறனுக்கான நிறுவனம்” (IFC) தயாரித்த, உத்தர பிரதேசம் பற்றிய அறிக்கையின் முகப்பு – Image Credit : thewire.in

தற்போது அந்த ஆய்வின் நகல் ஒன்று தி வயர் வசம் உள்ளது. விவாதத்தில் உள்ள இந்த 72 பக்க ஆய்வறிக்கையின் ஒரு பிரச்சினை என்னவென்றால், “அது ஹார்வர்ட் அறிக்கை இல்லை, ஹரியானா அறிக்கை” என்பதே. அதுமட்டுமின்றி, அது சொல்லிக் கொள்ளும்படியான ‘ஆய்வாகவு’ம் இல்லை. ஒரு ஆய்வறிக்கையில் நாம் எதிர்பார்க்கக் கூடிய நூல்/கட்டுரை குறிப்புகள், அல்லது கள அடிப்படையிலான ஆதாரங்கள் எதுவும் அதில் தரப்படவில்லை. ஆய்வறிக்கை கூறுவதாக உத்தர பிரதேச அரசாங்கம் சொல்லிக் கொண்ட சில கூற்றுகள் இந்த ஆய்வறிக்கையில் இடம் பெறவே இல்லை என்பது இன்னும் மோசமானது.

எடுத்துக்காட்டாக இந்துஸ்தான் டைம்ஸ்,

“அரசு பகிர்ந்து கொண்ட, ஹார்வர்ட் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வின் படி, ‘உத்தர பிரதேசத்தின் யோகி ஆதித்யநாத் அரசு புலம்பெயர்ந்தோர் நெருக்கடியை திறமையாகக் கையாண்டது’ என்று கூறியிருந்தது.

எனினும், இந்த வாக்கியம் ‘ஆய்வறிக்கையின்’ எந்த இடத்திலும் காணப்படவில்லை.

இந்தச் செய்திகள் யாவும், உத்தர பிரதேச அரசு அதிகாரி ஒருவர் ஊடகவியலாளர்களுக்கான ஒரு வாட்ஸ்அப் குழுவில் பகிர்ந்த ஒரு தகவலின் அடிப்படையில் வெளியிடப்பட்டவை என்று ஆல்ட்நியூஸ் தெரிவிக்கிறது. இந்த ஊடகங்களில் பல, அரசு வெளியிட்ட செய்தியிலிருந்து எளிதாக வெட்டி ஒட்டி அதைத் தங்கள் சொந்தச் செய்தியாக மாற்றி வெளியிட்டுள்ளன.

இந்த ஊடகங்களில் ஏதாவது ஒன்று, உத்தர பிரதேச அரசின் கூற்றுகளை சரிபார்க்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தால், விவாதத்தில் உள்ள ஆய்வறிக்கை ஹார்வர்ட் அல்லது அதன் கல்லூரிகள் அல்லது துறைகளால் தயாரிக்கப்பட்டதல்ல என்பதையும், அது ஹரியானாவின் குர்கானில் இருந்து செயல்படும் “போட்டித் திறனுக்கான நிறுவனம்” (IFC) தயாரித்தது என்பதையும் அவர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள்.

கொரோனா & புலம் பெயர்ந்தோர் நெருக்கடிக்கான தீர்வு: உத்தர பிரதேசம் பற்றிய ஒரு அறிக்கை‘ என தலைப்பிடப்பட்ட அறிக்கையின் ஆசிரியர்கள் அமித் கபூரும் மனிஷா கபூரும். அமித் கபூர் ஐஎஃப்சி யின் ‘கௌரவ தலைவர்’ மற்றும் ‘திங்கர்ஸ்’ என்ற இதழின் தலைமை ஆசிரியர். மனிஷா கபூர் அந்த நிறுவனத்தில் ஒரு ‘மூத்த ஆராய்ச்சியாளர்’. இந்த ஆசிரியர்கள், இதற்கு முன், உத்தர பிரதேசம் குறித்து வேறு எந்த ஆய்வுப் பணியையும் செய்துள்ளதாகத் தெரியவில்லை.

இந்த அறிக்கையில், ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்ட பிற ஆய்விதழ் கட்டுரைகள், தரவு ஆதாரங்கள், மற்றும்/அல்லது செய்தித் தாள் கட்டுரைகள் ஆகியவை பற்றிய விபரங்களைத் தரும் குறிப்புகளோ, புத்தக பட்டியலோ இல்லை. உத்தர பிரதேச அரசு, கொரோனா தரவுகளின் தேடல் தளம் ஒன்று மற்றும் (அடையாளம் குறிப்பிடப்படாத) சின்மய் தும்பே என்ற ஆய்வாளரின் புலம்பெயர் ஆய்வுகள் ஆகியவற்றையே தரவுகளுக்கான முக்கிய ஆதாரமாக இந்த அறிக்கை பட்டியலிட்டுள்ளது. இதில் 12 அடிக்குறிப்புகளும் உள்ளன, அவற்றில் பெரும்பாலானவை உத்தர பிரதேச அரசாங்கத்தின் அறிவிப்புகள் பற்றிய பத்திரிகை செய்திகளே.

Image Credit : thewire.in
அறிக்கையின் முதல் பக்கத்தில் உள்ள ஒரு அடிக்குறிப்பு ‘ஆய்வின்’ போது அதன் ஆசிரியர்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறது – Image Credit : thewire.in

அந்த அறிக்கையின் முதல் பக்கத்தில் உள்ள ஒரு அடிக்குறிப்பு ‘ஆய்வின்’ போது அதன் ஆசிரியர்களுக்கு உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறது. கேட்ஸ் அறக்கட்டளையின் நிதி உதவிக்கும், இந்த ஆய்வில் “கருத்தாக்கத்திலிருந்து முடிவு வரை” வழிகாட்டிய உத்தர பிரதேச அரசின் மையமான பாத்திரத்துக்கும் ஆய்வாசிரியர்கள் வெளிப்படையாக நன்றி தெரிவித்துள்ளனர். உத்தர பிரதேச அரசின் பேரிடர் மேலாண்மைக்கான செயலாளர் திரு சஞ்சய் கோயல் “அறிவார்ந்த கருத்துக்களை” ஆய்வாளர்களுக்கு வழங்கி உள்ளார்.

“கருத்தாக்கம் முதல் முடிவு வரை வழிகாட்டியதற்கு” மட்டுமின்றி, ஆய்வறிக்கையின் தொடக்க நிலை வரைவுகள் தொடர்பாக ஆலோசனைகள் வழங்கிய உத்தர பிரதேச முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசகர் கே.வி. ராஜூவுக்கு இதில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. “பல்வேறு துறைகளுடனும் ஒருங்கிணைத்து இந்த ஒட்டு மொத்த நிகழ்முறையையும் நடத்தவும் சாத்தியமாக்கவும்” செய்த, கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்திக்கு இதில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அவனிஷ் அவஸ்தி, யோகி ஆதித்யநாத்துக்கு நெருக்கமாக அறியப்படுபவர், “முதலமைச்சரின் வலது கரம்” என்றும், “குட்டி முதலமைச்சர்” என்றும் அழைக்கப்படுபவர்.

இந்த ‘ஆய்வு’ அரசு எப்படி செயல்பட்டது என்பது பற்றிய அதிகாரபூர்வ கூற்றுக்களின் தொகுப்பாகவே உள்ளது. அந்தக் கூற்றுகள் அப்படியே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளனவே தவிர, அரசின் கொள்கைகள் களத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என்பதைப் பற்றி ஆய்வறிக்கை மதிப்பிடவில்லை. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கல்வியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோருடனான நேர்காணல்கள் எதுவும் இதில் இல்லை. அரசு இந்த புலம்பெயர்ந்தவர் பிரச்சினைகளை கையாள்வதில் இருந்த பிரச்சினைகளாக ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டிய அறிக்கைகள் எதுவும் இந்த ஆய்வில் இடம் பெறவே இல்லை.

இந்த ஆய்வு உத்தர பிரதேச அரசின் ஆசி பெற்றதாகவே தெரிந்தாலும், ‘ஹார்வர்ட்’ அறிக்கை என்ற பிரச்சாரம் அம்பலமாகி விடும் என்ற பயத்தால் மட்டுமின்றி, அறிக்கை உத்தர பிரதேச அரசின் மீது பாராட்டு மழை பொழியவில்லை என்பதாலும் ஆய்வறிக்கையை பரவலாக சுற்றுக்கு விட வேண்டாம் என்று உத்தர பிரதேச முதலமைச்சரின் அலுவலகம் முடிவு செய்திருக்கலாம்.

“ஊடகங்கள் சொல்வது போல, உத்தர பிரதேச அரசு பிற மாநிலங்களை விட புலம்பெயர்ந்தவர் நெருக்கடியை திறமையாகக் கையாண்டது என்ற முடிவுக்கு எங்கள் ஆய்வு வந்தடையவில்லை. இந்த அறிக்கை, பல்வேறு மாநிலங்கள் இந்த நெருக்கடியை எவ்வாறு கையாண்டன என்பது குறித்த ஒப்பீட்டு அறிக்கை அல்ல. இது உத்தர பிரதேச அரசு எடுத்த முயற்சிகளை ஆவணப்படுத்துதலும் அதிலிருந்து சில நுண்ணறிவுகளை பெறுவதும் ஆன ஆய்வுதான்,” என ஆல்ட் நியூஸிடம் அமித் கபூர் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஆய்வில் உள்ள சில விவரங்களும், பெறப்பட்டுள்ள முடிவுகளும் மிகவும் சந்தேகத்திற்கிடமானவை என்பதை மறுக்க இயலாது. எடுத்துக்காட்டாக, முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதும், அதற்குப் பிறகும் தங்கள் மாநிலத்திற்கு திரும்ப விரும்பிய புலம் பெயர் தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்ததாக உத்தர பிரதே அரசை இந்த ஆய்வறிக்கை பாராட்டுகிறது. ஆனால் கள உண்மைகள் இதைவிட மேலும் சிக்கலானவை.

அறிக்கை எதை புறக்கணிக்கிறது

புலம்பெயர்ந்தவர் நெருக்கடியின் போது உத்தர பிரதேச அரசு சிறிது காலத்துக்கு, மாநிலத்தின் குறிப்பிட்ட சில இடங்களில் போக்குவரத்து வசதிகளை ஏற்பாடு செய்திருந்தாலும், அதன் செயல்பாடு ஒரே சீராக இருக்கவில்லை. ஒரு கட்டத்தில். தாங்களாகவே பேருந்துகளை ஏற்பாடு செய்து கொண்டு உத்தர பிரதேசத்துக்கு திரும்பிய அந்த மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோரை மாநிலத்திற்குள் நுழைய உத்தர பிரதேச அரசு அனுமதி மறுத்து விட்டது. இதனை இந்த ஆய்வு புறக்கணித்திருக்கிறது. சில புலம் பெயர் தொழிலாளர்கள் மீது அவர்களை ‘கிருமி நீக்கம் செய்வதற்காக’ வேதி மருந்துகள் பீய்ச்சி அடிக்கப்பட்டன.

பிற மாநிலங்களிலிருந்து உத்தர பிரதேசத்துக்கு திரும்ப விரும்பி, வழியின்றி சிக்கித் தவித்துக் கொண்டிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, காங்கிரஸ் கட்சி பேருந்துகளை ஏற்பாடு செய்த போது உத்தர பிரதேச அரசு அதற்கு அனுமதி வழங்க மறுத்து விட்டது. அத்துடன் தானும் பேருந்துகளை ஏற்பாடு செய்யவில்லை.

உத்தர பிரதேச அரசின் பொதுப் போக்குவரத்து முற்றிலும் செயல்படாத நிலையில், மேற்கு உத்தர பிரதேசத்துக்கு டெல்லியிலிருந்தும், நோய்டாவிலிருந்தும், காசியாபாதிலிருந்தும் கால் நடையாகவே தங்கள் ஊருக்குத் திரும்பிய தொழிலாளர்களின் அவலங்களை தி வயர்-ம் ஆவணப்படுத்தி உள்ளது.

அடுத்து, இந்த ‘ஆய்வு’, உத்தர பிரதேச அரசு கொரோனாவுக்காக 503 மருத்துவமனைகளை நிறுவியதாக கூறுகிறது. இந்தத் தகவலுக்கான ஆதாரம் எதையும் குறிப்பிடவில்லை. இந்தத் தகவல் உண்மை என்றால், உத்தர பிரதேசத்தின் மக்கள் தொகை 20.4 கோடியாக இருக்கும் நிலையில், மாநிலத்தில் நான்கு லட்சம் பேருக்கு ஒரு மருத்துவமனை மட்டுமே உள்ளது. உத்தர பிரதேசத்தில் தற்போது நோய்த் தொற்று வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அரசாங்கம் எந்த வகையிலும் தயாராக இல்லை என்பதை இது காட்டுகிறது.

கால்நடையாக ஊர் திரும்பிக் கொண்டிருந்த அல்லது வழியில் சிக்கிக் கொண்டிருந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவுப் பொருட்களைக் கொடுத்ததாகவும், சமூக சமையற் கூடங்கள் மூலம் உணவு தயாரித்துக் கொடுத்ததாகவும் உத்தர பிரதேச அரசை அந்த ஆய்வறிக்கை பாராட்டி உள்ளது. மேலும் கூகுளுடன் இணைந்து சமூக சமையற்கூடங்களின் இருப்பிடங்களை மின்னணு முறையில் குறித்ததற்காகவும் அது அரசை பாராட்டுகிறது. ஆனால், இவ்வாறு மின்னணு முறையில் இடங்களை குறிப்பதன் பயன்களையும், அவை பயனளித்தால் யாருக்கு பயனளிக்கும் என்பதையும் ஆய்வறிக்கை குறிப்பிடவில்லை.

புலம்பெயர் தொழிலாளர்கள் உணவுப் பொருட்கள் வழங்கப்படாமல் தவித்துது குறித்து பல செய்திகள் வெளியாகி இருந்தாலும் அவை எதுவும் இந்த ஆய்வில் குறிப்பிடப்படவில்லை. கனிகா ஷர்மா, அமான், தேஜேஷ் ஜி என், க்ருஷ்ணா ஆகிய மாணவர்கள் பராமரித்து வரும் தரவுகள் கொரோனா காலத்தில் உத்தர பிரதேசத்தில் குறைந்தது ஏழு பேர் பட்டினியால் உயிரிழந்ததாகக் கூறுகின்றன.

ஜார்கண்ட்டிலிருந்து வந்த புலம் பெயர் தொழிலாளர்கள் மீரட் அருகில் தவித்துக் கொண்டிருந்த போது நல்லெண்ணம் கொண்டவர்களிடமிருந்தே உதவிகள் வந்தனவே அன்றி அரசிடமிருந்து உதவிகள் வரவில்லை என்பதை தி வயரும் ஆவணப்படுத்தியிருந்தது. உண்மையில், நாடெங்கும் பெரும்பாலான சமூக சமையலறைகள் தனிநபர்களாலும், அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்களாலும்தான் நடத்தப்பட்டன, அரசாங்கங்களால் அல்ல.

கொரோனா பரிசோதனை மையங்களையும், தனிமைப்படுத்தப்படுவதற்கான வசதிகளையும் செய்ததாக அரசாங்கத்தை பாராட்டுகிறது இந்த ‘ஆய்வு’. சில புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு இந்த வசதிகளின் நிலைமைகள் மோசமாக இருந்ததைப் பற்றிக் குறிப்பிட மறந்து விட்டது, ஆய்வறிக்கை. உத்தர பிரதேச அரசு வழங்கிய வேதியியல் கிருமி நாசினியை தெளிக்கும் பணியில் இருக்கும் போது குறைந்தது ஒரு பணியாளர் உயிரிழந்துள்ளார். ஆகஸ்ட் மாதத்தில் ஆக்ராவில் ஒரு தலித் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஐந்து வயது குழந்தை, குடும்பத்தினருக்கு வேலை இல்லாததாலும், மானிய விலையில் உணவுப் பொருட்களை வாங்க குடும்ப அட்டை இல்லாததாலும் பட்டினி கிடந்து இறந்து போனது.

உண்மையில், தரவு தளத்தின்படி கொரோனா காலகட்டத்தில் உத்தர பிரதேசத்தில் தான் வைரஸ் அல்லாத உயிரிழப்புகள் அதிகமாக நடந்துள்ளன. நாட்டில் வைரஸ் அல்லாத காரணங்களால் இறந்த 991 பேரில் 207 பேர் அல்லது 20% பேர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பும் வழியில் விபத்துக்களாலும், உடல் சோர்வினாலும் உயிரிழந்தனர்.

இந்த ‘ஆய்வு’ கூட உத்தர பிரதேச அரசு இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று மென்மையாகசுட்டிக் காட்டுகிறது. “ஏற்கனவே உள்ள திட்டங்கள் மூலமும், புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டுள்ளதன் மூலமும் உத்தர பிரதேச அரசு தொழிலாளர்களுக்கு சொந்த ஊருக்கு அருகிலேயே பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், ஒரு நீண்ட கால அடிப்படையிலான வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் திட்டத்தை உருவாக்க வேண்டும். அந்தத் திட்டம் மாநிலத்தின் தற்போதைய வலிமை களையும், தொழிலாளர்களின் திறன்களையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்,” என்று அது முடிவு சொல்கிறது.

ஹார்வர்டு பெயரை பயன்படுத்தியது தவறு

“போட்டித்திறன் நிறுவனம்” தன்னை, ஹார்வர்டு வணிகக் கல்லூரியின் “போர்தந்திர மற்றும் போட்டித்திறன் நிறுவனத்தின்” (ISC) உலகளாவிய வலைப்பின்னலின் இந்திய இணைப்பு கூறிக் கொள்கிறது. இருந்தாலும், ஐஎஃப்சிய, ஐஎஸ்சி இரண்டுமே உத்தர பிரதேசம் பற்றிய அறிக்கையை ‘ஹார்வர்டு’ ஆய்வு எனக் குறிப்பிடுவது தவறு என ஆல்ட் நியூஸிடம் தெரிவித்துள்ளனர். அறிக்கையின் அட்டையில் ஹார்வர்டு முத்திரையை போட்டிருக்கக் கூடாது என்றும் அதை நீக்கப்படும் என்றும் ஐஎஃப்சி கூறியுள்ளது.

ஐஎஃப்சி அறிக்கையை, மிகையாக விளம்பரப்படுத்த தன்னால் இயன்ற அனைத்தையும் செய்ததற்காக உத்தர பிரதேச அரசை குறை சொல்ல முடியாது. ஆனால், நாட்டின் முன்னணி பத்திரிகைகளில் பொய்யான மற்றும் தவறான கருத்துக்களை உருவாக்கும் செய்திகளை வெளியிட வைக்க முடிவது ஒரு எச்சரிக்கை மணியை அடிக்கிறது.

இவ்வாறு ‘ஹார்வர்டு’ என்ற பொய்யான உரிமை கோரலுக்கு எதிராக ஏராளமான ஆதாரங்கள் பொது வெளியில் இருந்தாலும், இந்த அதிகாரபூர்வ ஏமாற்று வேலைக்கு பலியான எந்த ஒரு ஊடகமும் தங்கள் வாசகர்களுக்கு அதிகாரபூர்வ விளக்கம் அளிக்க இதுவரை முன்வரவில்லை.

thewire.in இணைய தளத்தில் வெளியான கபீர் அகர்வால் எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்