Aran Sei

நாம் கதைகளால் வீழ்த்தப்பட்டவர்கள் – ஸ்டாலின் ராஜாங்கம்

தீபாவளி,ஓணம் என  ஒவ்வொன்றுக்குமான காரணமும் கதையாக தான் வழங்கப்படுகிறது. முதலில் நாம் இந்த கதைகளிலிருந்து வெளியேற வேண்டும். அதனை மாற்றுக்கதையாடல்களை உருவாக்கியே எதிர்கொள்ள முடியும். ஏற்கனவே நிலவிய வரலாற்றின் மீது ஒரு கதையை உருவாக்கி பொருத்துவது மூலமே அவற்றை தனதாக்கியிருக்கிறது வைதீகம். நாம் வாளால் வீழ்த்தப்பட்டோம் என்பதை விட கதைகளால் வீழ்த்தப்பட்டோம் என்பதே சரியாக இருக்க முடியும்.

கதைகள் ஆதாரங்கள் சார்ந்து அமையாததால் சடங்குகள், கதைகள், நம்பிக்கைகள் என்கிற வரிசையை உள்மெய் வாசிப்பு என்னும் அணுகுமுறை சார்ந்து விளக்குகிறார். கதைகளானது ஒரு பெயரிலிருந்து தொடங்குகிறது. பெயரை விளக்குவதிலிருந்து தனக்கான அர்த்தத்தை அது  கட்டமைக்கிறது. அதனால்தான் அயோத்திதாசர் பெயரை உடைக்கிறார். உடைந்த பின்னால் அதில் கிடைக்கும் ஓவ்வொரு பெயரையும் தனித்தனி அர்த்தத்தில் வாசித்து இணைப்பது மூலம் அதுவரை வழங்கி வந்தவற்றிற்கு மாற்றான அர்த்தத்தை முன்வைக்கிறார். அயோத்திதாசர் மருவுதல் என்கிற வார்த்தையை கையாள்வதில்லை. மாறாக திரிபு/திரித்தல் என்கிற வார்த்தையையே கையாள்கிறார். பண்டிதரின் ஆய்வில் கதையை மட்டுமில்லாமல் பெயர்கள், ஒன்றிற்கான வேறு பெயர்கள், குழுப் பெயர்கள், நாள்கோள் பெயர்கள், அவற்றின் எண்ணிக்கை,சடங்குப் பொருட்கள் என ஆய்வுக்குள் கொணரப்படாத விசயங்களுக்கு அழுத்தம் தரப்பட்டிருக்கின்றன.

ஜெய்பீம்: வதையுறும் வாழ்வும் நீதிக்கான பயணமும் – தமிழ்ப்பிரபா

ஓணம் பண்டிகையின் அடிப்படையாக விவாதிக்கிற விசயங்களில் ஒன்று மரணம். மனிதகுல வரலாற்றில் மரணமும் அதையொட்டிய சடங்குகளும் முக்கியமானவையாக இருந்திருக்கின்றன. மரணம் நிகழ்ந்த நாளும் அதை நினைவுகூரும் சடங்குகளும் பண்பாட்டு வரலாற்றில் முக்கிய நாட்களாக மாறியிருக்கின்றன. மனிதனால் இதுவரையிலும் விடுவிக்க முடியாத புதிர்களில் முதன்மையானது

பிறப்புக்கும் இறப்புக்கும் இருக்கும் அமானுஷ்ய தன்மை தான். இறந்தோரை அப்படியே விட்டுச்செல்வதிலிருந்து மாறி அடக்கம் செய்யக் கற்றுக் கொண்டதிலிருந்தே  மனிதனின் ஆதிநாகரிகம் தோற்றம் கொண்டது. அதுவரை தன்னோடு உயிரோடு இருந்த ஒருவரின் உடல் எந்த அசைவும் அர்த்தமும் இல்லாமல் போவது ஏன்? அதற்குப் பின்னர் உயிர் என்னவாகிறது? என்கிற இருத்தலியல் சார்ந்த கேள்விகளே பிணத்தை  மதிப்போடு அடக்கம் செய்ய வைத்தது. இதன்படி இறப்புச்சடங்குகளே மனிதனின் ஆதிச் சடங்குகள். சாவுச்சடங்குகள் மனித வரலாற்றில் தொன்மையானவை மட்டுமல்ல மனித உணர்ச்சியோடும் நேரடித் தொடர்புடையவை. அதனால் தான் உலகின் எல்லா பண்பாடுகளிலும் சாவுச் சடங்குகள் முக்கியத்துவம் பெற்றுள்ளன. இனி இல்லாமல் போகப்போகிற மனிதனுக்கு வாழும் மனிதர்கள் செய்யும் கடைசி மரியாதை என்பதால் அச்சடங்குகள் கேள்விக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன.வழிபாடு மற்றும் சமயத்திற்கான முந்து வடிவங்கள் இவை.வழிபடுதெய்வமும் வழிபடும் இடமும் இதை ஒட்டியே உருவாகியின. இறந்தவருடைய ஆவி/அவரின் கடந்த கால இருப்பு தன்னை அச்சுறுத்தும் என்று அஞ்சி வணங்க தொடங்கிய  இவ்வழிபாடு, தங்கள் குழுவிற்காக போராடி இறந்துபட்ட வீரர்களை -நோய் தீர்த்த வைத்தியர்களை – நெறிபடுத்திய தலைவர்களை / துறவிகளை முன்னோடிகளாக கருதி வழிபடுவதாக மாறியிருக்கிறது. இவர்களை அடையாளப்படுத்துவதற்கு  புதைத்த இடத்தில் கல் பொருத்தினார்.

தமிழ்நாடு நாள்: தமிழ் நிலத்தின் எல்லைகள் சுருக்கப்பட்ட அரசியல் வரலாறு – சூர்யா சேவியர்

இன்றைக்கும் சாவுக்குரிய  குறியீடுகளில் கல்  முக்கியமாக இடம்பெறுவதைப் பார்க்கிறோம். இன்றைய இந்தியாவிலுள்ள பழங்கோயில்கள் பலவும்  இறந்தோரை புதைத்து வழிபடத்தொடங்கி பிறகே கோவில்களாக மாறியிருக்கின்றன. அதிலும் சிவன் என்கிற பெயரே இறந்தோரை வழிபடத் தொடங்கியதிலிருந்தே உருவாகத் தொடங்கியிருக்கிறது. இன்றைக்கும் இறந்தோரை சிவனடி சேர்ந்தார் / சிவகதி அடைந்தார் / சிவலோக பதவி என்று சொல்லுவதை பரவலாக பார்க்கிறோம். இதற்கு சிவனிடம் சேர்ந்தார் என்ற பொருளில்லை.மாறாக இறந்தவரே சிவன் தான் என்பதே பொருள். புதைவிடத்தில் நடப்பட்ட கல்லே சிவலிங்கமாக மாறியது என்ற குறிப்புகளை ஆய்வாளர்கள் குறிப்பிட்டு இருக்கிறார்கள். சிவன் சுடலை பூசியவனாக அறியப்படுவதும் சுடுகாட்டில் இருப்பவனாக சொல்லப்படுவதும் இவ்வாறு பெற்ற வளர்ச்சி தான். மாசிமாத அமாவாசை நாளில் தென் தமிழகத்தில் குலதெய்வ கோயில்களை வணங்குவதும் வட தமிழகத்தில் சிவனுக்கான மயானக் கொள்ளை விழா நிகழ்வதும் அமைகிறது. இறந்தோருடனும் மயானத்துடனும் தொடர்புடைய அந்நாளிற்கு சிவராத்திரி என்று பெயரிட்டிருக்கிறோம்.

இவ்வாறு இறந்தோரை நினைவுகூரும் பெயரில் சிவன் என்ற பெயர் அடையாளம் வருவது குறிப்பிடத்தக்கது. மாடன் (சுடலை) வழிபாடு மரணத்தோடு தொடர்புடையது என்று கூறியிருக்கும் தொ.பரமசிவன் வைதீகத்தால் உட்செரிக்கப்பட்ட சுடலைமாடன் தான் சிவன் என்று கூறியிருப்பதும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. சைவப் பெருங்கோயில்கள் பலவும் துறவிகள் அல்லது சமயத் தலைவர்களின் சமாதிகளின் மேல்தான் கட்டப்பட்டுள்ளன என்றும் அவர் கூறியிருக்கிறார் .

சிலப்பதிகாரத்தில்  கண்ணகிக்கு சிலை வைப்பது என்ற முடிவுக்கு இணையானதாக சிலைக்கான கல்லை எடுத்து வருவதும் எடுத்துவரும் இடமும் பின்னர் அக்கல்லிற்கு விரிவாக சடங்குகள் ஆற்றுவதும் முக்கியமானவையாக காட்டப்பட்டுள்ளன. மக்களின் நம்பிக்கைகளில் நடுவீடு என்ற அமைப்பும்,வீட்டுவிசேஷ நாட்களில் அவர்களுக்கு படைப்பதையும் இன்றைக்கு பார்க்கிறோம். இறந்தோரின் படங்கள் அல்லது வேறு அடையாளங்களை வைத்து வழிபடும் இடமே வீட்டின் நடுவீடு.இவ்விடத்தில் தான் மனிதனுடைய சாவு பற்றிய யோசனையை பௌத்தம் முறைப்படுத்தி இருக்கிறது என்பதை நினைவுப்படுத்திக் கொள்ளவேண்டும். பௌத்த சமண மரபில் இன்றைக்கும் நல்லது கெட்டது ஆகிய இரண்டையும்  பவுர்ணமி அமாவாசை நாட்களுக்கு நகர்த்தி வைத்திருக்கிறார்கள். அதுவே வைதிக மரபிற்கும் மாறியிருக்கிறது. இப்போதும் அமாவாசை நெருங்குகிற போது வீட்டில் வயதானவர்கள் நோயுற்று இருந்தால் குடும்பத்தினர் பயப்படுவது வழக்கம். இழப்பை எப்போதும் அமாவாசை நாட்களிலும் நிறைவை பெளர்ணமி நாட்களிலும் நினைவுகூர்வர். ஆடி அமாவாசை, தை அமாவாசை, மாசி அமாவாசை, புரட்டாசி அமாவாசை போன்ற நாட்களை இன்றைக்கும் இறந்தோரை நினைவு கூரும் நாட்களாக அனுசரிக்கிறார்கள். பண்டிகைகளும் இவ்வாறுதாம். தீபாவளி போதி(கி) ஆகிய பண்டிகைகள்  இறந்ததை நினைவு கூறுவற்தாகவே கொண்டாடப்படுகின்றன. சித்ரா பௌர்ணமி, வைகாசி பௌர்ணமி, கார்த்திகை பவுர்ணமி போன்றவை புத்தர் பிறப்பு – ஞானம்- இறப்பு என்று பரிபூரணத்தை அடைந்த நாட்களாகவே இருக்கின்றன.

‘டாக்டர் அம்பேத்கரின் மதமாற்றம் உலக மக்களின் சிந்தனையை தூண்டும்’ – அறிஞர் அண்ணா

அயோத்திதாசர் மக்களிடையே புழங்கும் சடங்குகளுக்கு பெளத்த நோக்கில் மறு விளக்கம் தந்து வந்திருக்கிறார். அவற்றில் சாவுச் சடங்குகளின் முக்கியத்துவத்தை/அர்த்தத்தை அதிகம் எழுதி இருக்கிறார்.

நரக- அசுரன் (நரகாசுரன்) இறந்த நாளாக கருதப்படும் தீபாவளிக்கு நிகரானது கேரளத்தின் ஓணம். அங்கு மாபலிச்சக்கரவர்த்தி இறந்ததை ஒட்டி நினைவுகூரப்படுகிறது. இரண்டு பண்டிகையிலும் குறிப்பிடும்படியான ஒற்றுமை வேற்றுமைகள் உண்டு. இரண்டு இடத்திலும் இருவரையும் விஷ்ணு அவதரித்து அழித்ததாக கூறப்படுகிறது. ஆனால் நரக – அசுரனை மக்கள் கெட்டவனாகவே கருதி தீபாவளி கொண்டாடுகிறார்கள். ஆனால் ஓணத்திற்கான கதையில் விஷ்ணுவால் கொல்லப்பட்டவதாக கூறப்பட்டாலும் மக்கள் அவன் வரவுக்காக கொண்டாட்டத்தை மேற்கொள்கிறார்கள். கதை தரும் அர்த்தம் ஒருவாறு இருந்தாலும் மக்களின் நினைவு கூறல் வேறு மாதிரியாக இருக்கிறது. இந்த இடைவெளி தான் முக்கியமானது. ஆராய்வதற்குரியதாகிறது. அழிக்கப்பட்டவனை மக்கள் ஏன் மீண்டும் அழைக்க வேண்டும்?

இவ்விடத்தில் தான் கதைக்கும் நடைமுறைக்குமான இடைவெளி மீது வாசிப்பை நிகழ்த்த வேண்டும். கதையின் மூலம் உருவாகும் வரலாறு என்னும் அத்தாரிட்டியை மக்களின் பண்பாட்டு நடைமுறையிலிருந்து எதிர்கொள்ளும் முயற்சி இது. இத்தகையதொரு வாசிப்பு முயற்சியை பண்பாட்டு நிகழ்வுகள் மீது அயோத்திதாசர் நடத்தியுள்ளார். அதனை முறையியலாக மாற்றும் போது பண்பாட்டு நிகழ்வுகளை மேலும் நுட்பமாக புரிந்துகொள்ள வழியேற்படும். உதாரணத்திற்கு ஒன்றை இங்கு குறிப்பிட்டுச் சொல்லலாம்.’சிரவண’ என்ற சொல் பயன்பாடு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. அச்சொல் கேரளத்திலும் தமிழகத்திலும் எந்தெந்த தருணங்களில், எந்தெந்த அர்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது என்பதை விவரிக்கிறது இந்நூல்.அச்சொல்லிலிருந்து அடுத்தடுத்த விசயங்களுக்கு விரிந்துச் செல்கிறது. ஓண நாளில் தமிழக கோயில்கள் சிலவற்றில் சிரவண விரதம், சிரவண தீபம் என்ற பெயரில் நீத்தார் நினைவுகூரல் நடப்பது கூறப்படுகிறது. சிரவணம் என்பதே திருஓணம் என்று திரிக்கப்பட்டுள்ளது.அதன் தொடர்ச்சியில் மாவல்ய அமாவாசி, நடுவீடு, இறப்புச் சடங்கில் பாதம் வைத்து வணங்குதல், அவற்றோடு பெளத்த மரபுக்கு உள்ள தொடர்பு, இலக்கியங்களில் உள்ள கோட்டம், அப்படியே திருவள்ளூர் வீரராகவர் கோயிலில் நிகழும் இறந்தார் நினைவுகூரல் என்று அங்கும் இங்கும் தாவி ஒரு இணைப்பை தேடிக்கொண்டுள்ளது. தொடர்பே இருக்க முடியாது என்று கருதுபவற்றிற்கு இடையேயும் தொடர்பு இருக்க முடியும் என்று உணர்த்துவதே ஆய்வு.

அமித்ஷா கூறும் நாட்டுப்பற்றும் முன்னேற்றமும் – ஹிட்லரை நினைவு படுத்துகிறதா?

எல்லாவற்றிலும் மொழியை  முதன்மையாக வைத்து பார்க்கும் போக்கு இங்கிருக்கிறது. இது இருபதாம் நூற்றாண்டில் செல்வாக்கு பெற்ற பார்வையாகும்.மொழி முதன்மைவாத சட்டத்திற்கு ஏற்ப எந்தவொரு பண்பாட்டு நிகழ்வையும் வெட்டி ஒட்டி அதற்குள் அடக்கும் போக்கு உருவானது. மொழி முதன்மை வாதத்திற்குள் அடங்காத எத்தகைய அர்த்தங்களையும் கணக்கிலே எடுக்காமல் ஒதுக்கி விடப்படும். ஒருக்கட்டத்தில் பண்பாட்டு ஆய்வுகளில் இது வலிந்த பார்வையாக மாறிப்போனது. ஓணம் கேரளத்தில் கொண்டாடப்படுவதால் அது மலையாள மொழி பேசுவோரின் அடையாளமாக மட்டுமே அறியப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை தமிழர் திருநாள் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் குறிப்பட்ட மரபுகள் குறிப்பான மொழிகள் சார்ந்ததாக மட்டுமே புரிந்து கொள்ளப்படுகிறது அல்லது அவ்வாறே மாறியும் போகின்றன. அவ்வாறு வரையறுப்பதன் மூலம் பண்பாட்டில் மொழி தவிர்த்த பிற கூறுகளின் இடம் மறைக்கப்படுகிறது. ஆனால் மக்களின் வழக்கம் அவ்வாறில்லை. ஓணம் கேரளாவில் நிகழ்ந்தது என்றால் தமிழகத்தில் அதன் எச்சம் ஏன் இருக்கிறது? இதனை எவ்வாறு புரிந்து கொள்ளப் போகிறோம் என்பதே இங்கெழும் கேள்விகள்.அந்த பின்னணியில் தான் இந்த நூலில் கூறப்பட்டுள்ள கேரள ஓணம் பண்டிகையின் தமிழகத்தொடர்பை புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்த தொடர்புக்கான பொது இணைப்பாக பெளத்தம் இருக்கிறது. இங்கே மொழியை மட்டுமே அடிப்படையாக வைத்து எல்லாமும் உருவாகவில்லை . பண்பாடு தான் முதன்மையானது. சமயம் தான் மொழித் தாண்டியும் தொடர்புகளை உருவாக்க வல்லது. சடங்குகள், நம்பிக்கைகள், வழிபாடுகள் தான் அடிப்படையானது. இவை குறிப்பிட்ட மொழி பேசுபவர்களுக்கிடையே கட்டுப்படாதது. இவற்றையே பின்னர் சமயம்  தன்னுடையதாக்கியது. எனவே பண்பாட்டு ஆய்வுகளில் சடங்குகளும் சமயத்தொடர்பும் முக்கியமானவையாக பார்க்கப்பட வேண்டும்.

அதேவேளையில் சடங்குகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் பிந்தைய வடிவம்தான் சமயம். வரலாற்றின் ஒரு காலக்கட்டத்தில் தான் சமயங்கள் வலுப்பெற்றிருக்க முடியும். சமயத்தின் ஆரம்ப கட்டத்தில் பெரும் இறுக்கம் இல்லாதிருந்து காலப்போக்கிலேயே நிறுவனப் பண்புக்கு மாறிவந்திருக்க வேண்டும். பெளத்தத்திற்கும் இதுவே பொருந்தும். அதேவேளையில் பௌத்தம் வரலாறு முழுவதும் நிறுவனப் பண்பு கொண்டிருந்ததைப் போன்ற வரலாறு காட்டப்படுகிறது. வெகு மக்களிடையே அது இணக்கத்தையும் நெகிழ்வுத்தன்மையையும் பேணியிருக்கிறது.ஆசியப் பகுதியின் தொன்மை கால இனக்குழு சமூக  வாழ்முறையை அது முறைப்படுத்தியிருக்கிறது. புத்தருடைய வாழ்க்கை கதையில் கூட அதற்கான உதாரணத்தைப் பெறலாம். அவர் போரை மறுத்து அகிம்சை பேசினார். தொடக்க கால இனக்குழு சமூகங்களிடையே ஓயாது போர் நடந்ததை முடிவுக்கு கொணரும் போக்கு இது. மக்களை சமூகமாக மாற்றுவதற்கான ஒழுங்குகளே பெளத்தத்தின் அடிப்படை அறங்களாக இருப்பதை பார்க்கலாம். வழிபாட்டு மரபுகளையும் நம்பிக்கைகளையும் கூட முறைப்படுத்தி அது தக்க வைத்தது. இதன்படியும் இந்திய பண்பாட்டு வரலாற்றை வாசிக்க முடியும். அந்த பின்னணியில் தான் மாவலியின் வெகுமக்கள் நினைவு தக்க வைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வாய்ப்புக்கேடாக வைதீகம் அவற்றை திரித்து போலச் செய்து கொண்டது. அந்த திரிபையும் போல செய்தலையும் உள்மெய் காணும் பணியில் நாம் ஈடுபட வேண்டியுள்ளது.

கட்டுரையாளர் – ஸ்டாலின் ராஜாங்கம், எழுத்தாளர்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்