Aran Sei

” கொரோனா தவறாக கையாளப்பட்டதற்கான முக்கிய காரணம் மோடியின் தலைமைதான், அவர் தலைக்கனம் பிடித்தவர் ” – ராமச்சந்திர குஹா

Image credit : thewire.in

ப்போதைய கொரோனா நெருக்கடி தவறாக கையாளப்படுவதற்கான முக்கிய காரணம் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமை பாணிதான் என்று இந்தியாவின் மிகவும் மதிக்கப்படும் வரலாற்றாசிரியர்களில் ஒருவரும், பரவலாக படிக்கப்படும் அரசியல் விமர்சர்களில் ஒருவருமான ராமச்சந்திர குஹா கூறியுள்ளார். தி வயர் தளத்தின் கரன் தாப்பருக்கு வழங்கிய, கடுமையாக தாக்கும் கூர்மையாக விமர்சிக்கும் ஒரு நேர்காணலில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மோடியின் துதிபாடும் அமைச்சரவையையும், நாட்டின் எதிர்பார்ப்புகளை பொய்ப்பித்து விட்ட உச்சநீதிமன்றம் உள்ளிட்ட நிறுவனங்களையும், மோடி தன்னைச் சுற்றி திரட்டிக் கொண்ட ஆமாம்-சாமி அதிகாரிகளையும் குறை சொன்னாலும், முக்கியமான பழியும், பொறுப்பும் பிரதமர் மீதே உள்ளது என்று ராமச்சந்திர குஹா கூறுகிறார்.

“மோடி மாற முடியுமா?”, “அவரது ஆளுமை அதை அனுமதிக்குமா?” ஆகிய கேள்விகள் மூலம் அவர் மேலும் கடுமையான விமர்சனத்தை வைக்கிறார். மோடி மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே போல ஆக வேண்டும் என்கிறார் ராமச்சந்திர குஹா. உத்தவ் தாக்கரே, அவரது தந்தையால் முன் வைக்கப்பட்ட “பாசிச” நிலைப்பாடுகளிலிருந்து திட்டமிட்டு, வெற்றிகரமாக விலகிக் கொண்டுள்ளார். அதன் மூலம், மேலும் நடுநிலையாகவும் அரசியல் மையநீரோட்டத்தில் செயல்படுபவராகவும் ஆகியுள்ளார் என்பதை ராமச்சந்திர குஹா சுட்டிக் காட்டுகிறார்.

தி வயருடனான அவரது நேர்காணலில், கொரோனாவை தவறாக கையாள்வதற்கு பின்புலமாக இருக்கும் மோடியின் மூன்று குணங்களை ராமச்சந்திர குஹா குறிப்பிடுகிறார்.

முதலாவது, “நிபுணர்கள் மீதும் நிபுணத்துவம் மீதும் சந்தேகப்படுவது”.

மோடி “கல்வி மீது வெளிப்படையான இகழ்ச்சி” கொண்டுள்ளார் என்கிறார் ராமச்சந்திர குஹா. “ஹார்வர்டை விட கடின உழைப்பை மதிக்கிறேன்” என்ற மோடியின் கருத்து இதை எடுத்துக் காட்டுகிறது என்கிறார், அவர்.

தனக்கு நிபுணர்கள் தேவை இல்லை என்று மோடியே கூறியிருப்பதாக ராமச்சந்திர குஹா தெரிவிக்கிறார். நிபுணர்களை விட தனக்கு அதிகம் தெரியும் என்று மோடி நினைக்கிறார். தான் விரும்புவதை சொல்பவர்களை மட்டுமே மோடி தனது ஆலோசகர்களாக வைத்துள்ளார் என்று ராமச்சந்திர குஹா கூறுகிறார்.

நாடகங்கள் மீதும் காட்சிகள் மீதும் அவருக்கிருந்த நாட்டத்துக்குப் பதிலாக, நாட்டின் முன்னணி நோய்க்கிருமியியல் நிபுணர்களின் அறிவுரைகளின் அடிப்படையில் தனது கொள்கைகளை, பிரதமர் மோடி வகுத்திருந்தால் கொரோனா பெருந்தொற்றின் விளைவுகள் இவ்வளவு மோசமாக இருந்திருக்காது என்கிறார் ராமச்சந்திர குஹா.

தட்டுகளை தட்டுவது, ஏப்ரல் 5, 2020 அன்று இரவு 9 மணிக்கு விளக்குகளை அணைத்து விட்டு மெழுகு வர்த்தி ஏற்றுவது போன்றவை, “வெறும் வித்தை, மூடநம்பிக்கை” என்று ராமச்சந்திரா குஹா கூறுகிறார்.

இது தொடர்பாக ராமச்சந்திர குஹா குறிப்பிடும் மோடியின் இரண்டாவது குணம், “தனிநபர் வழிபாடு”.

எல்லா புகழையும் தனதாக்கிக் கொள்ளும் விருப்பம் மோடியிடம் உள்ளது என்கிறார் அவர். முந்தைய அரசுகள் செய்த நல்ல பணிகளை எல்லாவற்றையும் அவர் நிராகரித்து விடுகிறார். அவரது சொந்த அரசின் செயல்பாடுகளைப் பொறுத்தவரை, எல்லா பழிகளும் மாநில அரசுகள் மீதும் எதிர்க்கட்சிகள் மீதும் விழுவதை உறுதி செய்கிறார். ஏதாவது தவறாக நடக்கும் போது அவரது அமைச்சர்கள் அதற்கு விளக்கமளிக்க வைக்கப்படுகிறார்கள். நல்லபடியாக நடந்தவற்றுக்கான புகழை மட்டும் மோடி எடுத்துக் கொள்கிறார்.

மோடி தன்னைச் சுற்றி ஆமாம் சாமிகளையும் விசுவாசிகளையும் வைத்துக் கொண்டிருக்கிறார் என்கிறார் ராமச்சந்திர குஹா. அவர்களது அறிவும் செயல்திறனும் மோடியை விட சிறப்பாக இருக்கிறது என்ற காரணத்தால் பல ஐஏஎஸ் அதிகாரிகள் ஒதுக்கப்பட்டுள்ளார்கள். மோடி தற்பெருமையாலும், தலைக்கனத்தாலும் பாதிக்கப்பட்டுள்ளார் என்கிறார் ராமச்சந்திர குஹா. “அவர் தன்னைத் தானே நேசிப்பவராக உள்ளார்”

ராமச்சந்திர குஹா வரையறுக்கும் மோடியின் மூன்றாவது குணாம்சம், அவர் “மனதளவில் ஒரு குறுங்குழுவாத சங்கியாகவே இருப்பது”.

“முழுக்க முழுக்க மதவாத” அடிப்படையிலான மேற்கு வங்க தேர்தல் பிரச்சாரத்தையும், கும்பமேளா புனித குளியல்கள் நோய்த்தொற்றை பெருமளவு பரப்பும் நிகழ்வுகளாக இருக்கும் என்பதைத் தெரிந்தும் அவற்றை அனுமதித்ததையும் ராமச்சந்திர குஹா குறிப்பிடுகிறார். மோடி அரசு, சென்ற ஆண்டு தப்லீகி ஜமாத் நிகழ்வை பழித்து குறி வைத்ததை, ஹரித்வாரில் லட்சக்கணக்கான இந்துக்கள் கூட்டாக குளிப்பது குறித்து மௌனம் சாதிப்பதுடனும், அதை மறுப்பின்றி ஏற்றுக் கொள்வதுடனும் ராமச்சந்திர குஹா ஒப்பிடுகிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைப் பற்றி பேசும் போது, இந்த கொரோனா பெருந்தொற்று காலம் முழுவதிலும் அவரது இரண்டு முக்கியமான கவலைகள், மேற்கு வங்கத்தில் அதிகாரத்தை எப்படி வெல்வது என்பது குறித்தும், மகாராஷ்டிராவில் அரசாங்கத்தை கவிழ்த்து அதிகாரத்தை மீண்டும் எப்படி கைப்பற்றுவது என்பது குறித்துமே இருந்தன என்கிறார் ராமச்சந்திர குஹா.

இந்தியா கொரோனாவை தவறாக கையாண்டதற்கு முதன்மையாக பழிக்கப்பட வேண்டியவர் மோடிதான் என்பது மட்டுமின்றி, பொருளாதாரம், சமூகம், நாட்டின் சர்வதேச மதிப்பு ஆகியவை தொடர்பாக “நல்ல நாளுக்கு” பதிலாக நாம் “மோசமான நாளை” எதிர்கொண்டிருப்பதற்கும் மோடிதான் காரணம் என்று ராமச்சந்திர குஹா நேர்காணலை முடித்து வைக்கிறார்.

www.thewire.in இணையதளத்தில் வெளியாகியுள்ள நேர்முகம் பற்றிய கட்டுரையின் மொழியாக்கம்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்