Aran Sei

க/பெ ரண சிங்கம் ரிலீஸ் : தமிழ்த் திரைப்பட வரலாற்றில் புதிய தொடக்கம்

Credit : ndtv.com

விஜய் சேதுபதி நடித்த `க/பெ ரண சிங்கம்’ தமிழ்த் திரைப்பட வரலாற்றில் சத்தமில்லாமல் ஒரு தொடக்கத்திற்கான விதையை விட்டுச் சென்றுள்ளது.

இந்தத் திரைப்படம் ஜீ (Zee) தொலைக்காட்சியின் கட்டணப் பிரிவு சேனல் ஆகிய ஜீ பிளக்ஸ் (zee plex) ஓடிடி (OTT) தளத்தில் அக்டோபர் 2 வெள்ளிக்கிழமை அன்று நேரடியாக ரிலீஸ் செய்யப்பட்டது.

இந்தத் திரைப்படத்தை ஏர்டெல், டாட்டா ஸ்கை செட்டாப் பாக்ஸ் வைத்திருப்பவர்கள் காண்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தைக் காண்பதற்கு 200 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை டெபிட் கார்ட் , கிரெடிட் கார்டு, நெட் பாங்கிங் போன்ற பல வழிகளில் செலுத்துவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு பல தமிழ்த் திரைப்படங்கள் நேரடியாக அமேசான் பிரைம் (Amazon Prime), நெட்ஃபிளிக்ஸ் (Netflix) போன்ற ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன. ஆனால் அப்பொழுது அந்தப் படங்களைப் பார்ப்பதற்கு அமேசான் பிரைம் சந்தாதாரராக இருந்தால் போதும். நேரடியாகப் படத்தைப் பார்ப்பதற்குத் தனியாக எந்தக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. ஆனால் முதல் முறையாகக் கட்டணம் செலுத்திப் பார்க்கும் முறையைப் பரிசோதனை அடிப்படையில் ஜீ பிளெக்ஸ் முயற்சி செய்துள்ளது.

இந்தப் படத்தை முதல் நாளில் 70 ஆயிரம் பேர் கட்டணம் செலுத்திப் பார்த்துள்ளதாகப் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். ஒருவரிடம் 200 ரூபாய் வசூலித்தால் முதல் நாள் வசூல் ஒரு கோடியே 40 லட்சம் ரூபாய் வருகிறது.

மேலும், இந்தப் படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. அதனால் விரைவில் மிக அதிகமான மக்கள் கட்டணம் செலுத்தி இந்தத் திரைப்படத்தைப் பார்ப்பார்கள் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

கட்டணம் செலுத்திப் படம் பார்க்கும் நடைமுறையைத் தென்னிந்திய சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் என்று இயக்குநர் ராம்கோபால் வர்மாவைக் கூறலாம். அவர் தனது பெயரிலேயே rgvworld.in என்ற இணையதளத்தைத் தொடங்கி தனது படங்களை அதில் ரிலீஸ் செய்யத் தொடங்கினார்.

இந்தக் கொரோனா காலத்தில் மிகவும் பிசியான இயக்குநராக ராம்கோபால் வர்மாவை இந்த ஓபன் தியேட்டர் வைத்துள்ளது. இந்த இணையதளம் வாயிலாகப் பல குறும்படங்களை வெளியிட்டு லாபம் ஈட்டினார். Naked, Climax, Power Star என்று பல திரைப்படங்களை அவர் தனது இணையதளத்தில் வெளியிட்டார்.

இந்தப் படங்களைப் பார்ப்பதற்கு 150 ரூபாயிலிருந்து 250 ரூபாய் வரை கட்டணம் வசூலித்தார். ஆபாசப் படங்களை எடுக்கிறார் என்று பலர் குறை கூறினாலும் மிகப்பெரிய வசூலை இந்தப் படங்கள் அவருக்குப் பெற்றுத் தந்தன. இதன் மூலம் இந்தத் நோய்த் தொற்றுக் காலத்தில் அதிகம் சம்பாதித்த இயக்குநர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

மேற்கத்திய நாடுகளில் இது போன்று கட்டணம் வசூலித்துப் படங்களை வெளியிடுவது பல ஆண்டுகளாக உள்ளது. இப்பொழுது க/பெ ரண சிங்கம் திரைப்படம் அதற்கான பிள்ளையார் சுழியைத் தமிழ்த் திரைப்படத்திற்குப் போட்டுள்ளது என்றே கூறலாம்.

தயாரிப்பாளர்களும் எவ்வளவு முயற்சி செய்தாலும் எவ்வளவு பெரிய நடிகரின் படமாக இருந்தாலும் படம் ரிலீசான அன்றே இணையவெளியில் வெளியிடப்படுவதைத் தடுக்க முடியாத சூழ்நிலையே உள்ளது. இவ்வாறு இணையத்தில் வெளியிடப்படும் படங்கள் அதன் தயாரிப்பாளர்களுக்கு எந்த லாபத்தையும் பெற்றுத் தருவது இல்லை. ஆனால் இணையத்தில் படம் வெளியிடுவதை இவ்வாறு சட்டபூர்வமாக ஆக்கும் பொழுது தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்பாக இந்த முயற்சி மாறியுள்ளது.

இப்பொழுது ஒரு திரைப்படம் தியேட்டரில் ஓடி லாபம் ஈட்டுவது மட்டுமன்றி ஓடிடி விற்பனை, சாட்டிலைட் விற்பனை, வெளிநாட்டுத் திரைப்பட விநியோகம், பாடல் வெளியீடு என்று பல முறைகளில் தயாரிப்பாளருக்கு லாபத்தைக் கொடுத்து வருகிறது. இப்பொழுது கட்டண சேனல் போல படத்தைத் திரையிடுவது லாபகரமாக முடியும் என்ற புதிய வியாபார யுக்தியை இந்தத் திரைப்படம் தயாரிப்பாளர்களுக்குக் காட்டியுள்ளது.

ஆனால் ஆண்டு சந்தா செலுத்தினால் அனைத்துப் படங்களையும் பார்க்கலாம் என்ற வாடிக்கையாளரின் எதிர்பார்ப்பு பிற்காலத்தில் மாறுவதற்கு வாய்ப்புள்ளது. அதனால் ஒரு வாடிக்கையாளர் ஒரு மாதம் கழித்து திரைப்படம் பார்ப்பதற்கு ஓடிடி தளத்திற்கும், படத்தை ரிலீஸ் அன்றே பார்க்க வேண்டுமென்றால் கட்டணம் செலுத்தியும் பார்க்கக் கூடிய சூழ்நிலை வரலாம்.

இதனால் தியேட்டர் வருமானம் பாதிக்கப்படும் என்ற எண்ணமும் பொதுவாக உள்ளது. ஆனால் டெக்னாலஜியில் மாற்றம் என்பதை ஒருவராலும் தடுக்க முடியாது. இந்த மாற்றத்திற்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்பவர்களே வியாபார ரீதியில் வெற்றி பெறுவார்கள்.

திரைப்படத்தைத் திரையரங்குகளில் காணும் அனுபவத்தை ஓடிடி தளங்களால் ஈடு செய்ய முடியாது. அதனால் திரையரங்குகள் வீழ்ச்சியடையும் என்பது ஏற்புடைய வாதம் கிடையாது.

இந்தத் திரைப்படம் மொத்தமாக எவ்வளவு வசூல் செய்யும் என்பதைப் பல படத் தயாரிப்பாளர்கள் ஆர்வமுடன் எதிர்நோக்கி உள்ளனர். வியாபார ரீதியில் வெற்றி பெற்றால் பல திரைப்படங்கள் இனி திரையரங்குகளிலும், ஓடிடி தளங்களிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகும் என்பதே களநிலவரமாக உள்ளது. மக்கள் திருட்டுத்தனமாக இணையதளங்களில் பார்க்காமல் கட்டணம் செலுத்திப் பார்த்தால் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்கும். மேலும் அனைத்துப் படங்களையும் பலர் திரையரங்குகளுக்குச் சென்று பார்ப்பது கிடையாது.

என்றாலும் தனது அபிமான நடிகர் நடித்த படம் அல்லது நல்ல படங்களை சிறந்த திரையரங்குகளில் பார்ப்பதற்குப் பலரும் விரும்புவர். அதனால் இனி திரையரங்குகளும், ஓடிடி தளங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கி போல செயல்படும் என்று நம்புவோம்.

– ஷியாம் சுந்தர்
(கட்டுரையாளர் ஐடி துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிபவர்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்