Aran Sei

பாலாவின் ‘வர்மா’ : அபத்தம், ஆணாதிக்கம், அடிமுட்டாள்தனம் -நவநீத கண்ணன்

ந்த நேரத்தில் ‘வர்மா’ எனப் பெயரிட்டார்களோ, துருவ் விக்ரம் நடிப்பில் பாலாவின் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கப்பட்டு, தயாரிப்புப் பணிகள் முழுவதும் முடிந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் கிடப்பில் போடப்பட்டு, ரசிகர்களால் ‘வருமா வருமா’ என எதிர்பார்க்கப்பட்டு ஒரு வழியாக தி அல்லி (‘The Ally’) என்ற ஓடிடி (OTT) தளத்தில் வெளியாகிவிட்டது பாலாவின் ‘அர்ஜுன் ரெட்டி’ வெர்சனான ‘வர்மா’.

(இது தவிர ஈடி ஷ்ரேயஸ் (ET Shreyas) மற்றும் ஷெமாரூ மீ (Shemaroo me) ஆகிய இரு ஓடிடி தளங்களிலும் இப்படத்தை ரூ.140 செலுத்தி 6 மணி நேரத்திற்குள் பார்த்துக் கொள்ளலாம்)

80 வருடங்களுக்கு மேலான தமிழ் சினிமா வரலாற்றில், இதுவரை எந்தப் படத்திற்கும் நடந்திராத ‘சம்பவமாக’, முழுப் படத்தையும் எடுத்துவிட்டு அது திருப்திகரமாக இல்லை என்ற காரணத்திற்காக, மீண்டுமொருமுறை அதே நாயகனை வைத்து வேறொரு இயக்குநர் மூலம் முழுப்படமும் எடுக்கப்பட்ட ‘வரலாற்றுச் சாதனை’ இப்படத்தையே சாரும்.

வர்மாவிற்குப் பின்னர் எடுக்கப்பட்ட ‘ஆதித்ய வர்மா’ படம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பு வெளியாகி ஓரளவிற்கு ஓடியது; ஆனால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத காரணத்தினாலும், நடிகர் விக்ரமிற்கும் (இவ்விரு படங்களின்) தயாரிப்பாளருக்கும் ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரணமாகவும் பாலாவின் வர்மாவை ஓடிடி-யில் வெளியிட்டிருக்கிறது தயாரிப்பு நிறுவனமான ஈ4 என்டர்டெய்ன்மென்ட் (E4 Entertainment).

சரி, அப்ப முதலில் எடுக்கப்பட்ட வர்மா, கைவிடும் அளவிற்கு என்ன அவ்வளவு மோசமாகவா உள்ளது? பார்ப்போம்….

இப்படத்தின் கதையானது நாம் அனைவருக்கும் அறிந்ததே…. அதாவது முரட்டுத்தனமான ஆணாதிக்கவாதியும், குடி-போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையான ஒரு ‘திறமைமிகு’ மருத்துவரின் (கதாநாயகன்) வாழ்வில் நடக்கும் காதல், காதல் தோல்வி, வலி, துன்பங்கள், உள்ளிட்டவற்றின் தொகுப்பை, நாயகனின் ஒற்றைப் பார்வையிலிருந்து மட்டும் பதிவு செய்திருப்பதே இப்படத்தின் கதையம்சம்.

இது தெலுங்கில் வெளியாகி சக்கைப்போடு போட்ட ‘அர்ஜுன் ரெட்டி’ என்றொரு மாபெரும் காவியத்தின் அதிகாரபூர்வ ரீமேக் என்று அறிவிக்கப்பட்டு எடுக்கப்பட்டது.

Credits: Cinema Vikatan

முதலில் அர்ஜுன் ரெட்டி படம் வெளியாகும்போதே, அது மருத்துவ உலகத்தினரிடமும், பெண்ணியவாதிகளிடமும், நல்ல சினிமா விரும்பிகளிடமும் எதிர்ப்புகளைச் சந்தித்து, சில கண்டனக் குரல்களை எதிர்கொண்டது; ஆனால் இளைஞர்களிடம் பெற்ற பெரும் வரவேற்பின் காரணமாக அந்த சலசலப்புகள் வெளியே தெரியாமல், பிளாக்பஸ்டர் (Blockbuster) வெற்றி அடைந்து.

இந்தியில் ‘கபீர் சிங்’ என்ற பெயரில் வெளியாகி அங்கேயும் நல்ல கல்லா கட்டியது. அந்த நம்பிக்கையில்தான் முன்னணி நடிகரான விக்ரமும், தன் வாரிசை திரையுலகில் அறிமுகப்படுத்த இப்படத்தைத் தேர்வு செய்து, அதனை இயக்க தன் திரையுலகில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமான ‘சேது’வை இயக்கி தேசிய விருது வாங்கித் தந்த இயக்குநர் பாலாவை வைத்து, தன் மகனையும் லாஞ்ச் செய்ய விரும்பினார்.

உண்மையில் சேதுவிற்கும் அர்ஜுன் ரெட்டிக்குமே பாத்திரப் படைப்பிலும் சரி, கதையம்சத்திலும் சரி, பல ஒற்றுமைகளை நம்மால் காணமுடியும். அது ஒருபுறமிருக்கட்டும், பாலா இப்படத்தை இயக்கி இருப்பதால் ஏதேனும் புதுமை செய்திருப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது; ஆனால் இப்படம் முழுவதும் அபத்தங்களும் ஆணாதிக்கச் சிந்தனைகளும் அடிமுட்டாள்தனங்களுமே எஞ்சியிருக்கின்றது; அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்….

படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே, வர்மா கதாபாத்திரத்தை ஒரு பெண் ‘செக்ஸ்’ வைத்துக்கொள்ள அழைப்பது போலவும், அவர்கள் உடலுறவு கொள்ளப்போகும் நேரத்தில், அந்தப் பெண்னைத் திருமணம் செய்யப் போகிறவர் கதவைத் தட்ட, உடனே வர்மாவை அந்தப் பெண், கையெடுத்துக் கும்பிட்டு வீட்டைவிட்டுப் போகும்படி கேட்பார்; அதற்கு வர்மாவோ, அவர் ‘ஆண்குறியை’ கும்பிடும்படி கேட்பதாகவும் அந்தப் பெண்ணும் தயங்காமல் அவ்வாறு வணங்குவதாகவும் அமைந்திருக்கும் அக்காட்சி. இது எம்மாதிரியான மலிவான மனப்பான்மையுடைய காட்சி என்பது பாலாவிற்கே வெளிச்சம்.

அடுத்து இரண்டாம் பாதியில், மருத்துவத்துறையையே கேலிக்கூத்தாக்குவதாய்ச் சில காட்சிகள் வரும். அதாவது எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான (Orthopaedic surgeon) நாயகன், பிரசவம் பார்ப்பதாக அமைந்திருக்கும் அக்காட்சி.

பொறுங்கள் முக்கிய ட்விஸ்டே இனிதான்… பிரசவத்தின் போது குழந்தையின் தலை திரும்பி, தலைக்குப் பதில் கால் முதலில் வெளியே வருவதாகச் செவிலி சொல்கிறார்; இதனை மருத்துவத்தில் ‘Breech Presentation (புட்டப்பிறப்புத் தோற்றம்) என்பர், மிகவும் சிக்கலான பிரசவம்.

அப்போது தாயின் பிறப்புறுப்பிலிருந்து சிசுவின் கால் வெளியே வருவதை ‘மாஸ்க்’ கூட அணியாமல் உற்று நோக்குகிறார் நம் ‘மருத்துவ’ நாயகன். அப்போது தன் அறுவைச் சிகிச்சை உடையிலேயே வைத்திருக்கும் ‘சிகரெட் லைட்டர்’ ஒன்றை வெளியே எடுத்து, அதைப் பற்றவைத்து சிசுவின் பாதத்தில் சூடு வைக்கிறார். உடனே குழந்தை வலி தாங்காமல், ரிஃப்ளெக்சிவாக காலை உள்ளே இழுத்துக்கொள்கிறது. அது மட்டுமல்லாமல் அதே வேகத்தில் ஒரு ‘குட்டிக் கரணம் அடித்து வயிற்றில் மீண்டும் தலைகீழாகப் பழைய நிலைக்குத் திரும்பிவிடுகிறது; குழந்தையும் பிறகு ‘சிசேரியன்’ இன்றி சுகப்பிரவத்தில் பிறக்கிறது; தாய் சேய் இருவரும் நலம்.

இத்தகைய அதி அற்புதக் காட்சியைப் படம்பிடித்து, காட்சிப்படுத்தி, சோகமான இசையைச் சேர்த்து அதை வெளியிட்டும் இருக்கிறார்கள். ‘இவ்வளவு எளிமையாக இந்தச் சிக்கலான பிரசவத்தைக் கையாளமுடியும்’ என்று இதற்குமுன் தெரியாமல் போய்விட்டதே என்று மகப்பேறு மருத்துவர்கள் புலம்புகின்றனர்… நகைச்சுவை தவிர்த்து, ‘பிரசவத்தின்போது செய்யப்படும் நடைமுறைகள் பற்றிய எவ்விதப் புரிதலுமின்றி (ஒரு ‘கூகுள்  சர்ச்’ கூட பண்ணாமல்) எப்படி மேம்போக்காக நாயகத்தன்மையைத் தூக்கிப் பிடிக்க, இத்தகைய அபத்தமான காட்சியை அமைத்திருக்கின்றனர்’ என்ற கேள்வியைத் தவிர்க்க முடியவில்லை.

நல்ல படியாக இப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை; என்னதான் பிரவத்தின்போது ஏற்படும் தாய்-சிசு மரணங்களைத் தமிழகம் கணிசமான அளவில் குறைத்தாலும், இன்னமும் சில கிராமப்புறங்களில் வீட்டுப் பிரசவம் பார்ப்பது நடந்துகொண்டுதான் உள்ளது; ஒருவேளை திரையரங்கில் இப்படம் வெளியாகியிருந்தால், வீட்டுப் பிரசவம் பார்க்க நினைக்குற கூட்டம், இக்காட்சியைப் பார்த்து ‘லைட்டரும் கையுமாக’ பிரசவம் பார்க்கும் அபாயம் ஏற்பட்டிருக்கும்.

அதுபோக இப்பிரசவத்தை உச்சக்கட்ட குடிபோதை மயக்கத்தில் செய்ததற்காக மருத்துவ அலட்சியப் புகாருக்கு நாயகன் உள்ளாவார். அப்போது வர்மா பேசும் வசனமாக, தான் இதுவரை 484 அறுவைச் சிகிச்சைகள் செய்திருப்பதாகவும், அதில் ஒன்று மூளை மைய நரம்பியல் அறுவைச் சிகிச்சை என்றும், 20 இதயமாற்று அறுவைச் சிகிச்சை என்றும், அனைத்தும் 100% வெற்றியடைந்ததாகவும், அனைத்துமே குடிபோதையில்தான் செய்ததாக தான் செய்த ‘சாதனை செயலை’ நியாயப்படுத்துவார்.

முன்பே சொன்னதுபோல், ஒரு எலும்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர், எவ்வாறு பிரசவம் பார்ப்பார் என்பதற்கு எப்படி பதில் இல்லையோ, அதுபோல்தான் மூளை அறுவைச் சிகிச்சையும் இதய மாற்று அறுவைச் சிகிச்சையும் எவ்வாறு செய்ய முடியும் என்பதற்கும் பதில் இல்லை; இந்த உண்மை ரகசியத்தை பாலா அவர்கள் மருத்துவ உலகத்தாரிடம் முன்பே பகிர்ந்துகொண்டிருந்தார் என்றால், இந்த வருடத்திற்கான மருத்துவ நோபல் பரிசை ‘மருத்துவர் வர்மா’ தட்டிச் சென்றிருப்பார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

இவை தவிர மூலமுதல்படமான அர்ஜுன் ரெட்டியில் இடம்பெற்றிருந்த ஆணாதிக்க, சில இடங்களில் பெண் வெறுப்பு, கதாநாயகியை அவள் விருப்பமின்றி முத்தமிடுவது, அடிப்பது முதலான அப்படத்தில் வரும் காட்சிகள் சற்றும் குறையாமல், இன்னும் சொல்லப்போனால் அதைவிட அதிகமாகவே இதில் இடம் பெற்றிருக்கின்றன.

உதாரணமாக, நாயக கதாபாத்திரம், ‘பத்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஈஸ்வரி ராவிடம்’ நடந்துகொள்ளும் அனைத்துக் காட்சிகளையுமே சொல்லலாம் (அர்ஜுன் ரெட்டியில் இப்பாத்திரம் இருக்காது). மேலும் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில், வர்மா தான் செய்த தவறுகளை உணர்ந்து, நாயகியிடம் மன்னிப்பு கேட்பதுபோல் காட்சி அமைந்திருக்கும்; அர்ஜுன் ரெட்டி படத்தில், கதாநாயகி நாயகனை சில அடிகள் அடித்துவிட்டுதான், அவனை ஏற்றுக்கொள்வாள்.

ஆனால் இதிலோ, வர்மா “என்னை மன்னிச்சிட்டியா??” என்று நாயகியிடம் கேட்க, பக்கத்தில் நின்றிருக்கும் ஈஸ்வரி ராவ் கதாபாத்திரம் “அதெல்லாம் அவ மன்னிச்சிட்டா… அந்த குருவாயூரப்பனே தப்பு பண்ணாலும், மன்னிக்குறதுதான் பொம்பளங்க குணம்…” என்று ஒரு பெண் பாத்திரத்தின் வழியாகவே நாயகன் செய்த தவறுகளை தண்டனைகளின்றி மன்னிப்பதாக, ஆணாதிக்கத்தை நியாப்படுத்த முயல்கிறார் இயக்குநர் பாலா.

சரி அப்ப இந்தப் படத்தில் உருப்படியாக ஒன்றுமே இல்லயா… வெகுசில மட்டும் உள்ளது!

இடைவெளையில் நாயகி தந்தையின் உயர்சாதி பெருமையை வெளிப்படையாகக் கேள்வி கேட்பது, பத்மா கதாபாத்திரத்தில் நடித்த ஈஸ்வரி ராவ்வின் நடிப்பு, பிறகு தொழில்நுட்ப விசயங்களான ஒளிப்பதிவு, பின்னணி இசை உள்ளிட்டவை சிறப்பாக அமைந்திருந்தாலும், மிதமிஞ்சிய அபத்தங்களும், லாஜிக் ஓட்டைகளும், ஆணாதிக்க வன்மங்களும், நாடகத்தனமான ரசனை குறைபாடான காட்சி அமைப்புகளும் பெருமளவில் இருப்பதால், அவை பெரிதாக நம்மை ஈர்க்கவில்லை.

மேலும் பாலாவின் படங்கள் பொதுவாகவே ஆணாதிக்கத் தன்மையுடையதாகவும் ‘ராவாக’வும் இருப்பினும், சில குறிப்பிட்ட காட்சிகளில் கதாபாத்திரங்களின் வாயிலாக மெல்லிய உணர்வுகளை வெளிப்படுத்தி, அதைப் பார்வையாளருக்குக் கடத்துவார். ஆனால் இப்படத்தில் அது சுத்தமாக மிஸ்ஸிங்.

60, 70, 80, 90-கள் எனப் பல காலங்களாக, தமிழ்சினிமா ஆணாதிக்கச் சிந்தனையின் ஊற்றுக்கண்ணாகவே இருந்துவந்துள்ளது. அது அப்படங்களின் வெற்றிக்கான ‘மைலேஜ்’ ஆக இருந்தும், பல படங்கள் அந்த ஃபார்முலாவைப் பின்பற்றி வெளிவந்து வெற்றியடைந்தும் உள்ளன. அவை “பொண்ணுனா எப்படி இருக்கணும் தெரியுமா.. அடக்கவொடுக்கமா குத்துவிளக்காட்டம் இருக்கணும்.. என்பதில் தொடங்கி, பொம்பள அதிகமா ஆடக்கூடாது..” என்பது போன்ற ‘ பெண்கள் இப்படிதான் சமூகத்தில் வாழவேண்டும் என்ற சமூக- கலாச்சார விழுமியங்களைத் தன்னகத்தே கொண்டு வெளிவந்தன.

2000-த்திற்கு பிறகு, அது மெல்லக் குறைந்து, ஆண்களால் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும், பெண்ணியம் சார்ந்தும் சில உரையாடல்கள் திரைப்படங்களில் வரத் தொடங்கின; எனினும் முழுமையாக இன்னும் எதுவும் மாறவில்லை; இன்றும் அனைத்துப் படங்களிலும் ஏதேனும் ஒரு பாடலிலோ, நகைச்சுவைக் காட்சியிலோ அல்லது வசனத்திலோ மெல்லிய/பட்டவர்த்தனமான ஆணாதிக்கமோ, பெண்ணிய வெறுப்போ இல்லாமல் இருப்பதில்லை. அது சமூகத்தின் பொதுப் புத்தியின் எச்சங்களின் நீட்சியாகவோ அல்லது இத்தகைய சிந்தனை வறட்சியான காட்சிகள் சமூகத்தின் பொதுப் புத்தியில் தாக்கத்தையோ ஏற்படுத்துகிறது.

ஆனால் ‘வர்மா’ படம் மாதிரியான படம் நெடுகிலும் ஆணாதிக்க மனப்பான்மையும், மருத்துவம் போன்ற தொழில்முறை படிப்பைப் பின்னணியாகக்கொண்ட கதைக்களத்தில் கல்லூரி, விடுதி, மருத்துவமனை என அனைத்திலும் நடைமுறை வாதத்திற்கு முரணான காட்சிகள் பல அமைத்து கொச்சைப்படுத்துவது, சமூகத்தின் நலனிற்கு எதிராக அமையும் வாய்ப்புள்ளது என்பதைப் படைப்பாளிகள் உணரவேண்டும்!

உணர்வாரா பாலா மாமா….

(கட்டுரையாளர் நவநீத கண்ணன் மருத்துவ இளங்கலை மாணவர்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்