Aran Sei

சொற்களால் வானவில் சமைக்கும் மாயக்காரன் வண்ணதாசன் – கல்யான்ஜி கவிதைகளோடு ஒரு பயணம்

மிழ்க் கவிதை மரபில் மிக முக்கியமான கவிஞன் கல்யான் ஜி(வண்ணதாசன்). சிவ கல்யாண சுந்தரம் என்கிற இயற்பெயர் கொண்ட அவர், இடதுசாரி எழுத்து மரபைச் சேர்ந்த எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான தி.க.சி.(தி. க. சிவசங்கரன்)யின் மகனுமாவார்.  கவிதைகள், சிறுகதைகள் எழுதிவரும் வண்ணதாசன் ’ஒரு சிறு இசை’ எனும் சிறுகதை நூலுக்காக சாகித்ய அகாடமி விருதை 2016 ஆம் ஆண்டு பெற்றுள்ளார். இன்று அவரின் 75 வது பிறந்தநாள்.

******

தேவலோகத்துல ஏதோ ஒரு சின்னத்தப்பு பன்னுனதுக்காக பூமியில மனுஷனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு வண்ணதாசன் எழுத்து…” ‘சின்ன’ என்பதை அவ்வளவு அழகாக அழுத்திச் சொன்னான்”

மேற்கண்ட விஷயத்தை கவிஞர் இளங்கோ கவிஞர் இசையிடம் சொல்லி இசை தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அது மிகவும் “ச்ச்ச்சின்னத் தப்பாக” இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் எனக்கு இன்னொரு ஐயமுண்டு. அவர் ஏன் “மனுஷனாக” இருந்திருக்க வேண்டும். ஏன் மனுஷியாக இருந்திருக்கக் கூடாது. ஏனெனில் அவர் எழுத்தில் அவ்வளவு இனிமை. அவ்வளவு குளிர்மை. அவ்வளவு நுண்மை. கண்டிப்பாக “தனுமை” கதையைப் பெண் தான் எழுதி இருக்க முடியும் என்று வாசித்த அன்று இரவு வெகுநேரம் படுக்கையில் உருண்டு கொண்டிருந்தேன். ஒரு கவிஞனின் எழுத்தாளனின் மனம் எந்த எல்லைக்கும் நீளும் என்று சாக்குச் சொல்லித் தேற்றிக் கொண்டேன்.

கல்யாண்ஜி வரைந்த “நொடி நேர அரைவட்டம்” என்ற கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை “புரிதல்” என்று தலைப்புடன் துவங்குகிறது. இந்தக் கட்டுரையை இங்கே இப்படித் துவங்குவது மிகப்பொருத்தமாக இருக்கும்.

புரிதல்

ஒரு கூண்டைத் தொங்கவிட்டிருக்கிறேன்

ஒரு கூண்டை மேலும் புரிந்து கொள்ள.

ஒரு பறவையை மேலும் புரிந்து கொள்ளவும்.

கவிதையைக் கூட நாம் இப்படியே அணுகலாம். ஒரு பறவையிடம் பழகுவதைப் போல. அது நிலத்திலிருந்து செட்டையடித்து உந்தி எழுவது தான் கவிதைக் கணம். “கல்யாண்ஜி வீட்டில் வாழ்பவர்கள் மனிதர்களா அல்லது பறவைகளா” என்றொரு வினோதமான ஐயம் என்னுள் அடிக்கடி எழும். ஏனெனில் அவருடைய கவிதை உலகம் அவ்வளவு மென்மையானது. வெண்சிறகுகளையுடைய இனிய கீச்சல்களிடும் பறவைகளால் நிறைந்தது. அவர் கவிதைகளில் வரும் மனிதர்களைக் கூட “முதிய பறவை” “கருணைப் பறவை” என உருவகப்படுத்தி பறக்க விடுகிறார். இதோ “கருணைப் பறவை” என்றொரு கவிதை,

கருணைப் பறவை

இடுப்புத் துணி விலகி

எல்லாவற்றின் மேலும்

வெயில் விழ

ஈ மொய்த்துக் கிடக்கிறான்.

குப்பைக் காகிதம் பொறுக்கிப் போகிறவள்

விலகிப் போய்

துப்புரவுக் கிழவனிடம்

துணியை இழுத்துவிட

சாடை செய்து நகர்கிறாள்.

கருணையின் சிறகுடைய

ஒரு கரும்பறவை

குறுக்கே பறந்து மறைவது

இச் சிறு பொழுதில்தான்.

எத்தனை அழகான உணர்வு, எத்தனை எழிலான மொழிதல். என் வானம் ஒளிர்கிறது. எதிரே வெண்ணிற ஆடை அணிந்த ஒரு மனிதர். பார்த்துக் கொண்டேயிருக்க அவரது உயரம் கூடிக்கொண்டே போகிறது. அவர் முதுகின் விலா எலும்பிலிருந்து இரண்டு சிறகுகள் முளைத்தெழும்புகிறது. அவர் தானா.? கல்யாண்ஜி தானா.?

எளிய கவித்துமான குளிர்மை நிறைந்த உணர்வுகளை கவிதைப்படுத்துதல் என்பதே கல்யாண்ஜியின் ஆதார மொழிதலாக உள்ளது. கிட்டத்தட்ட அனைத்துக் கவிதையிலும் அன்பை, கருணையை முன் வைக்கிறார். அவை மீட்டலுக்குப் பின்பான வயலின் நரம்பின் மென்மையான அதிர்வாக அவருடைய அநேக கவிதைகளில் அதிர்ந்து கொண்டே இருக்கிறது.

அன்பு, கருணை, நன்றி போன்ற விழுமியத்திற்கெல்லாம் இன்று எந்த மதிப்பும் இல்லை என்று தோன்றுகிறதா.? அப்படித் தோன்றினால் நாம் நம்முடைய மனித குணத்தை இழந்து கொண்டிருக்கிறோம் என்று பொருள். ஒருவகையில் கவிதை என்பது மனிதனை தூய நிலையிலேயே வைத்திருப்பது. ஞானம் நிறைந்த நிலைநோக்கி உந்தித் தள்ளுவது. ஞானம் என்று சொல்லைக் கேட்டவுடன் நாம் பதறுகிறோம். ஞானம் என்பதை கவிதை என்றும் சொல்லலாம். இயேசுவை விட சிறந்த கவிஞரை நான் கண்டிலேன். இதோ அன்பின் படப்படப்பை நோக்கித் தள்ளும் ஒரு கவிதை,

“பார்த்துக்கொண்டே இருக்கிறேன்

பாசஞ்சர் ரயிலின் ஜன்னல் நகர்வில் இருந்து.

ஓரத்தில் நிற்கிற ஒரு குழந்தை கூட கை அசைக்கவில்லை இதுவரை.

பயமாக இருக்கிறது

பயணம் முடிந்து,

இந்தப் பாழில் இறங்க”.

வண்ணதாசனின் அநேக கவிதைகளில் ஒருவித ஜென் தன்மை உண்டு. ஞானம் என்பதை இங்கே பொருத்திப் பார்க்கலாம்.

கன்றுக்குட்டி பதறி ஓடுகிறது.

காய்ந்த புல் அதிர்கிறது.

ஒரு மைனா மட்டும் பறக்கிறது

ஆனந்தமாக

ரயில் சத்தத்தின் மேல்”

ரயில் சத்தத்தின் மேல் ஆனந்தமாகப் பறக்கும் ஒரு மைனா. எவ்வளவு எழிலான சித்திரம். இன்னொரு கவிதை,

மலர்கள்

“காற்று உதிர்க்கவில்லை

காற்றில் உதிர்கின்றன

மலர்கள்”.

கல்யாண்ஜியின் எந்தக் கவிதையை வாசித்தாலும் ஒரு கேள்வி என்னுள் எழும்.அவருடைய மனம் எதில் சமைக்கப்பட்டிருக்கும்.? ஏனெனில் அவரைப் போலொரு இலவம்பஞ்சு மனத்தை நான் கண்டதே இல்லை. ஒருவேளை நடிக்கிறாரா.?

இந்தக் கேள்வியைத் தொடர்ந்து கவிதைக்கு சில புரிதல்களை உண்டு பண்ணலாம். கவிதை என்பது ஒரு வித நடித்தல் தான். கவிதை குறித்த உரையாடலில் ஒருமுறை கவிஞர் நேசமித்திரன் சொன்னார், “ஒரு பாலகனும் ஒரு வயோதிகனும் ஒரு பைத்தியக்காரனும் ஒரு கவிஞனுக்குள் இருப்பது முக்கியம்”. அன்று இது எனக்குப் புதிய திறப்பாக இருந்தது. மொத்தக் கவிதைகளையும் இப்படி பிரித்துவிடலாமே என்று கூடத் தோன்றியது.

கவிதை எழுத ஒரு குழந்தை மனமும் ஒரு வயோதிக அனுபவ ஞானமும் ஒரு பைத்தியக்காரனின் பித்து மனமும் தேவை என்பது உண்மை. அதேபோல ஒரு கவிஞன் நல்ல நடிகனாக இருக்க வேண்டும். அவன் நடிப்பை ஏற்றுக் கொண்டால் தான் அந்தப் பாவனையைப் பழகிக்கொண்டால் தான் அவன் அங்கே வேறு மனத்திலிருந்து வேறொன்றை நிகழ்த்த இயலும்.

கவிதைக்குள் செல்ல வாசகனும் கூட நடிக்க வேண்டும். அவனும் பாத்திரமாக மாற வேண்டும். அப்போதுதான் அதைத் திறம்படச் சுவைக்க முடியும். கற்பனையில் திளைக்க முடியும். கவிஞன் சென்ற அதே உச்சநிலைக்கு நாமும் செல்வது. கீழேயுள்ள “அவசியமில்லை” என்ற கவிதையை நீங்கள் நீங்களாகவே வாசித்துச் சென்றால் அதில் எதுவுமே இல்லை. அப்படியா, அப்புறம் என்ன.? என்று கேட்டுவிட்டு மேலே செல்லலாம். ஆனால் பாறை உடைப்பவராக (other) மாறி இந்தக் கவிதையை வாசித்தால் நிச்சயம் கண்ணீர் முட்டிக் கொள்ளும்.

அவசியமில்லை

வழி நெடுக, பாறைகள்.

புதிய விதத்தில் ஆகாயம் பார்க்க

திறந்துவைத்திருக்கிறது தன்னை

ஒரு பாறை.

உச்சிக் குழிவில்

என்றோ பெய்த மழையின் தேங்கல்.

ஏதோ ஒரு பறவை உதிர்த்த

பூஞ்சிறகு மிதத்தல்

ஒரு உலர் சருகு.

எட்டிப் பார்க்கும்

இன்றைய மேக நகர்வு கூட.

அவசியமில்ல நமக்கு

எல்லாப் பாறையையும்

தகர்க்க.

ஒரு கட்டுரையின் நடுவே ஒரு வாசகன் தன் கவிஞருக்கு எழுதிய அந்தரங்கமான கடிதத்தை வைக்க முடியுமா என்பதைக் குறித்த தீர்க்கமான அனுமானம் என்னிடம் இல்லை. ஆனால் கல்யாண்ஜிக்கு எழுதுகிற கட்டுரையில் கடிதம் இல்லையென்றால் எப்படி,

*

நெஞ்சிற்கினிய கல்யாண்ஜி,

வாசித்தவற்றை நினைக்க நினைக்கச் சொற்கள் சுனையில் ஊறுகிற நீரைப் போல் ஊறித் ததும்புகிறது. சொற்கள் பட்டுப்போவதில்லை. அவை வளர்ந்து கொண்டே இருக்கின்றன. யாருடைய சொற்களைக் குடித்தோ உங்கள் சொற்கள் வளர்ந்ததைப் போல உங்கள் சொற்களைக் குடித்து என் சொற்களும் வளர்கின்றன. சிறு வயதில் வெல்வெட்டுத் துணியை முதன் முதலில் தொட்டுப் பார்த்த போது என்னுள் எழுந்த ஆனந்தப்பரவசம் அதை உங்கள் ஒவ்வொரு சொற்களும் மீட்டுத் தருகிறது. எனக்குப் பிடித்த உங்கள் கவிதை ஒன்றை இங்கே சொல்லலாம் என்று தோன்றுகிறது.

உங்களுக்குத் தெரியும்

எங்கள் வீட்டுத் தலைவாசல்

சிறியதும் இல்லை, பெரியதும் இல்லை.

சொப்பனத்தில் வந்த யானையை

வெளியே விரட்டுகிறோம் எல்லோரும்.

இவ்வளவு சின்ன வாசல் வழியாக

எப்படிப்போவேன் ? அழுகிறது.

“போகிற வாசலாக அல்ல,

வருகிற வாசலாக நினைத்துப் போ”

என்கிறோம்.

போய்விட்டது சிரித்துக் கொண்டே.

நினைவில் உங்கள் கவிதை ஒன்று எழுகையில் எங்கள் முன் நீல வானம் விரிந்து கிடக்கிறது. ஒளிமயமான மேகம் ஒன்று எங்கள் மேல் நிழலிட்டது. ஒரு பறவை உயரப் பறக்கிறது. காற்றில் ஒரு சிறு இறகு. கீழே வனாந்திரம். பசும் புல்வெளி. பூக்கள் அடர்ந்த தோட்டம். அசைந்து அசைந்து நடந்து வருகிறது ஒரு யானை. ஆமாம் அது சிரிப்பது போலத்தான் தெரிகிறது. அது நீங்கள் தான். நீங்கள் தானா.? என்றோ ஒரு நாள் சந்திக்கப் போகிறோம். சந்திக்காமலா இருக்கப் போகிறோம்.?

*

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் உள்ள ஏதேனும் ஒரு சாலைக்கு ஒரு தமிழ் கவிஞன் பெயரைச் சூட்ட வேண்டும் என்றொரு இனிய கற்பனை எனக்குண்டு. அப்படி நடக்க வாய்ப்பே இல்லை என்பதால் வேறு கற்பனை செய்ய வேண்டி இருக்கிறது.

கவிதைக்குள் கவிஞனால் போடப்படும் சாலைகள் காலத்துக்கு காலம் மாறிக்கொண்டே வருவன. சமகாலத்தில் போடப்படும் சாலைகள் ஒன்று போலவே தோன்றினாலும் அவை ஒன்றே அல்ல. முகுந்த் நாகராஜனின் சாலை துள்ளுகிற குழந்தைகள் நிறைந்தவை. வெய்யிலின் சாலை உயர்ந்து நீண்ட பனைகள் அடர்ந்தவை. இசையோ கவிதைகளை சாலையிலே கண்டடைகிறார். கல்யாண்ஜியின் சாலையில் ஆட்கள் வருவது குறைவு. அது பூ, மழை, குழந்தைகள், கதவு, வயலின், பறவை, இலை, வானம், சருகு, நட்சத்திரம், கடிதம், இறகுகள் போன்றவற்றால் நிறைந்திருப்பவை. இவை கவிதைக்குள் வருகையில் உயிர்ப்புடன் எழுகிறது. கல்யாண்ஜியின் கவிதை உலகு – எனக்குச் சொப்பன வாசல். அவருடைய சில கவிதைகளை வாசிக்கையில் என்னை நான் அவ்வளவு எளியனாக, எளியனில் எளியனாக உணர்கிறேன். என் முஷ்டிகள் தளர்கின்றன. அழுத்தமாய் இருக்கிற வெறுப்பை, இல்லவே இல்லாத அன்பு எங்கிருந்தோ சிறகு விரித்துப் பறந்து வந்து நிரப்பிக் கொள்கிறது.

அடிக்கடி. அடிக்கடி என்னுள் ஒரு விசித்திர கற்பனை எழும். கல்யாண்ஜியின் நெஞ்சகழ்ந்து பார்த்தால் அங்கொரு பறவை இருக்க வேண்டும் அல்லது மல்லிகைப் பூ. ஒரு கவிதையை வாசித்துவிட்டு ஒரே ஒரு குட்டி மல்லிகைப் பூவை கையிலேந்தி வெகுநேரமாய் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். எளிதாய் அதிர்ந்த அந்த மல்லிகைப் பூ கல்யாண்ஜியின் இதயமாகவும் இருக்கலாம். இதோ ஒரு கவிதை,

வைத்து விட்டு

விளையாடிவிட்டு வந்த சிறுவர்கள்

வீட்டு மேஜையில்

இரண்டு நூல்கண்டுகள்,

இரண்டு பட்டங்கள் வைத்துவிட்டுப் போனார்கள்

ஒரு வானம்,

சில மேகங்களை

வைத்துவிட்டுப் போனது

அவர்களின் கால் புழுதி.

குழந்தைகளின் கால் புழுதிக்கு பின்னால் ஒரு வானமே உண்டு. அதை நோக்கக் கண்களும் உண்டு. அது பொருந்திய கவிதை இது. நான் என் கட்டுரையை மூடிக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது. இன்று வண்ணதாசன் பிறந்தநாள். எனக்குப் பிடித்தமான அவரது கவிதைகளைப் பற்றி நண்பனிடம் பேசிக் கொண்டிருந்தேன். நண்பன் எங்களுடைய இன்னொரு நண்பனுக்கு அழைத்து அவனையும் இணைப்பில் இணைத்தான். நான் அப்போது இந்தக் கவிதையைச் சொன்னேன்.

“உலகத்தில்

இதுவரை ஒரே ஒரு

கூரான கத்தி தான்

உயிரோடு உள்ளது

அது

சாகாமல் இருப்பதற்காக

சாணை பிடித்துக் கொண்டே

இருக்கின்றன

லட்சோப லட்சம் கைகள்”

எளிய சொல்லால் இழைத்து இணைத்த எளிய கவிதை. என்னுடைய நிலைக் கண்ணாடியில் கத்தியை வைத்திருப்பவர்களுடைய முகங்கள் எல்லாம் ஒரே முகமாகத் தோன்றும் எனக்கு. மேலும் பூவை வைத்திருப்பவர்களுக்கும், அன்பைச் சொல்லுபவர்களுக்கும் பறவையைக் கொஞ்சுபவர்களுக்கும் ஒரே முகம் தான் – என்று பேசிக் கொண்டிருந்தேன். ஏதோ ஒரு உணர்வு எல்லாருக்குள்ளும் பரவியிருந்தது.

“இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்”

வேதகாமத்திலுள்ள ஒரு இறைவசனம் நினைவுக்கு வந்தது. வண்ணதாசன் எங்களுடன் இணைப்பில் இருந்திருக்கலாம் அல்லது பறவைக்கு உணவளித்துக் கொண்டிருந்திருக்கலாம்.

கட்டுரையாளர் ~ மனோஜ் பாலசுப்பிரமணியன், எழுத்தாளர்

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்