Aran Sei

சிறுபான்மையினர் மீது வெறுப்பை தூண்டும் அமெரிக்க இணையதளம் – பாஜக ஆதரவாளர்களின் செயல்திட்டமென ஆய்வில் அம்பலம்

மெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருந்து இயங்கிவரும் கிரீட்டெலி (Kreately) என்ற இணையதளம் தொடர்ந்து சிறுபான்மையினர் மீதான வெறுப்பை தூண்டி வருவதாகவும், இந்நிலையில் அந்த இணையதளத்தின் பின்னணி குறித்து ஆய்வொன்றை ஆல்ட் நியூஸ் மேற்கொண்டு அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளது.

ஆல்ட் நியூஸின் வெளியிட்டுள்ள அந்த ஆய்வின் முடிவுகள்;

கிரீட்டெலி இணையதளம் வெளியிட்டுள்ள தவறான தகவல், சதி கோட்பாடுகள் மற்றும் வெறுப்பூட்டும் செய்திகள் ;

அண்மையில் கிரீட்டெலி இணையதளம் இடது சாரிகளும் இஸ்லாமியர்களும் இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற முயற்சி செய்து வருவதாகக் குறிப்பிட்டு கட்டுரை வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, ”இஸ்லாம் ஜனநாயகத்திற்கு ஆபத்து, இந்திய முஸ்லீம் மனநிலை ஒரு முன்னோட்டம், இஸ்லாம் எப்படி இந்தியாவை விரைவில் கைப்பற்றப் போகிறது, நீங்கள் நினைப்பதை விட விரைவாக அதன் அறிக்கைகள், ஜிகாத்-முஸ்லீம் பெண்களின் காதலுக்கான ஐந்து வழிமுறைகள், பாதிக்கப்பட்ட இந்துக்களின் தலைவிதி மற்றும் இந்துக்களுக்கு மிகவும் பயங்கரமான சூழ்நிலை – ஒரு எச்சரிக்கை” போன்ற இஸ்லாமிய வெறுப்பை தூண்டும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையிலுமான எண்ணற்ற கட்டுரைகளை வெளியிட்டுள்ளது.

மேலும், அந்த இணையதளத்தின் இன்ஸ்டாகிராம் கணக்கில் முழுக்க முழுக்க இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த பெண்மீது ஆதிக்க சாதிகள் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட சம்பவத்தைத் தவறாகச் சித்தரித்து பதிவிட்டுள்ள கிரீட்டெலி இணையதளம், பாலியல் வன்புணர்வு நடக்காதபோது அதைப் பாலியல் வன்புணர்வு என்று இடது சாரிகளும் ஜிஹாதிகளும் திட்டமிட்டே உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யா நாத்தின் புகழை கெடுக்கும் வகையில் பரப்பியுள்ளனர். மேலும், பெண்ணின் குடும்பமே பெண்ணின் உடலை எரித்ததாக தலித்துகளுக்கு எதிராகவும் செய்தி வெளிடிட்டுள்ளது.

இதே போன்று கல்வான் தாக்குதலில் 100 சீன ராணுவ வீரர்கள் இறந்ததை அந்நாட்டின் ராணுவம் ஒப்புக்கொண்டதாகவும் போலியான செய்தியும் வெளியிட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது பாஜகவை விமர்சிப்பவர்களையும் தவறாகச் சித்தரிக்கும் வேலையிலும் , அவர்களைக் குறித்து கீழ்த்தரமாகப் பதிவிடும் வேலையிலும் கிரீட்டெலி இணையதளம் ஈடுபட்டுள்ளது.

மேலும், உண்மையை உறுதிப்படுத்தியுள்ளோம் என்றபெயரில் ‘நாத்திகர் குடியரசு’ அமைப்பின் நிறுவனர் அரவின் நவாபி தாயின் இறந்த உடலோடு உறவுகொள்ளவில்லை என்று அருவருக்கத்தக்க செயலிலும் ஈடுபட்டுள்ளது.

அரவின் நவாபி குறித்து இந்தப் பதிவை டெல்லி பாஜக தலைவர் கபில் மிஸ்ரா தனது டுவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

கிரீட்டெலி இணையதளத்துக்கு பாஜகவின் கபில் மிஸ்ராக்கும் என்ன தொடர்பு?

கடந்த மே 2020 தொடங்கப்பட்ட இந்த இணையதளம் அலெக்சா வின் தரவரிசையில் ( மக்கள் பயன்படுத்துவதின் அடிப்படையில் ) 10,000 இடத்திற்குள் வந்துள்ளது. இணையதளம் தொடங்கப்பட்டு ஒரு வருடம் கூட நிறைவடையாத நிலையில் 10,000 இடத்திற்குள் வந்திருப்பதற்கு காரணம் பாஜகவின் கபில் மிஸ்ரா தொடர்ந்து கிரீட்டெலியின் பதிவுகளையும், கட்டுரைகளையும் பகிர்ந்து வந்ததும், அதற்கு ஊக்கமளித்ததும் மட்டுமே காரணமாகும்.

மேலும் ,கிரீட்டெலி இணையதளத்தில் கபில் மிஸ்ராவை குறித்து , இந்துக்களின் குரல் என்று குறிப்பிட்டும் உள்ளது.

இந்நிலையில், ஆல்ட் நியூஸ் மேற்கொண்ட ஆய்வில், கிரீட்டெலி இணையதளத்தின் உரிமையாளராகச் சச்சின் சித்லிங்கியா கண்டறியப்பட்டார். இது அமெரிக்க பங்கு மற்றும் பரிவர்த்தனை கமிஷன் தகவலின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு தேர்தலின்போது பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டுமென சச்சின் சித்லிங்கியா கேட்டுக்கொண்டார். அதுமட்டுமல்லாது பாஜகவிற்கு ஆதரவாக குரல் எழுப்பியும் வந்துள்ளார்.

மேலும், இந்த இணையதளத்தின் முதன்மை ஆலோசகர் விஜயா விஸ்வநாதன் அதன் மற்றொரு நிறுவனர் விக்ரம் திகோ போன்றோர்கள் பாஜகவின் ஆதரவாளர்கள் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

கிரீட்டெலி இணையதளத்தில் எழுதக்கூடிய எழுத்தாளர்களும் இந்துத்துவ சிந்தனை உடையவர்களாகவும்,பாஜக ஆதரவாளர்களாகவும் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், அமெரிக்காவை மையமாக கொண்டு செயல்படும் கிரீட்டெலி இணையதளம் பாஜகவின் ஆதரவோடு செயல்பட்டு வருகிறது. கபில் மிஸ்ராவின் தொடர்ச்சியான பிரச்சாரத்தின் காரணமாக சில மாதங்களிளிலேயே இந்தியாவில் வலது சாரி அமைப்புகளின் மத்தியில் இந்த
தளம் பிரபலமாகிவிட்டது.

கிரீட்டெலி வலைத்தளம் சிறுபான்மையினரை குறிவைத்து அருவெறுக்கத்தக்க, வெறுப்பூட்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகிறது என்று ஆல்ட் நியூஸ் அறிக்கை கூறுகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்