Aran Sei

ரூத் ஜின்ஸ்பர்க் : அமெரிக்க உச்சநீதி மன்றத்தில் பெண்ணுரிமை போராளி

மெரிக்க பெண்ணுரிமை இயக்கத்தின் போராளி தனது போராட்டத்தை நிறுத்திக் கொண்டார் (1933- 2020)

1970-களில் பெண்ணுரிமைக்கான போராட்டங்கள் அமெரிக்காவை ஆட்கொண்டிருந்த காலம்.

  • க்ளோரியா ஸ்டெய்னம், ப்ளேபாய் நிறுவனத்தின் உடலை காட்சிப்படுத்தும் குழுவில் ஊடுருவி தன்னையே உரமாக்கி அதன் அடிமைத்தனங்களை அம்பலப்படுத்தும் வேலையைச் செய்து கொண்டிருந்தார்,
  • பெட்டி பிரைடென், பெண்ணுரிமைக்கான கொள்கை அறிக்கை ஒன்றை, ‘பெயரிடப்படாத பிரச்சினை’ என தலைப்பிட்டு எழுதிக் கொண்டிருந்தார்.
  • ஆனால், அப்பிரச்சினைக்கு பெயரிட்டு, விளக்கி, விவாதித்து அமெரிக்க உச்சநீதி மன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல தீர்ப்புகளை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார் ஒரு பெண்.

‘பேர் போன RBG’ (The Notorious RBG) என பிற்பாடு அன்போடும், உரிமையோடும் அடைமொழி பெற்ற ரூத் பேடர் கின்ஸ்பர்க்தான் (Ruth Bader Ginsburg) அவர்.

சட்டக் கல்லூரி மாணவராக ருத் பாடர் ஜின்ஸ்பெர்க்
சட்டக் கல்லூரி மாணவராக ரூத் பாடர் ஜின்ஸ்பர்க்

18 செப்டம்பர் 2020 அன்று புற்றுநோயின் தாக்கத்தால் இறந்து போன RBG, அமெரிக்க சமூகநீதிக்கான போராட்ட அடையாளங்களில் ஒருவர். அவரது பிடிவாதமான விடாமுயற்சி கொண்ட போர்க்குணம்தான் ‘The Notorious RBG’ என்ற அடைமொழியை அவருக்கு பெற்றுக் கொடுத்தது.

அதிகாரத்தின் துவாரங்களில் ஒழிந்து வாழும் அமெரிக்க பிற்போக்குவாதிகளுடனான சமரசமற்ற போராட்டம் மட்டுமல்ல, அவரை 1999-லிருந்து ஐந்து முறை தாக்கி கடைசியில் 2020ல் வெற்றி பெற்ற புற்றுநோயுடனான அவரது போராட்டமும் சேர்ந்துதான் அவரை அமெரிக்க போராட்ட மரபின் அடையாளமாக்கியுள்ளது.

அமெரிக்க இளைய சமுதாயத்தின் கலாச்சார அடையாளமாகவும் ஆக்கியுள்ளது.

1970-ல் பெண்களுக்கென்றே தனிச்சிறப்பான சட்டப்பத்திரிகை ஒன்றை அமெரிக்காவில் முதல் முறையாக உருவாக்கி வெளியிட்டவர்களில் ஒருவர் RBG.

1972-ல் பெண்களின் உரிமைகளுக்கென ஒரு அமைப்பை (ACLU – American Civil Liberties Union) உருவாக்கி செயல்பட்டார். அவ்வமைப்பின் மூலம் 1973-லிருந்து 76 வரை 6 முக்கிய வழக்குகளை உச்சநீதிமன்றத்தில் நடத்தி ஐந்தில் வெற்றி பெற்றார்.

  • பணியிடங்களிலும், சமூகத்திலும் பாலின சமத்துவம் பேணும் தீர்ப்புகள்,
  • நீதிமன்ற பணிகள் மற்றும் ராணுவம் உள்ளிட்டு அரசு சார்ந்த பல்வேறு அமைப்புகளில் நிலவிய பாலின சமத்துவமின்மையை ஒழிக்கும் தீர்ப்புகள்,
  • பெண்களுக்கு கிடைத்த அதே அரசு சலுகைகள் கைம்பெண்களுக்கும் கிடைக்க வழி செய்யும் தீர்ப்பு,
  • முடிதிருத்தும் கடைகளில் பெண்களும் வேலை செய்யும் உரிமை,
  • ஆண்-பெண் இருவருக்கும் மது அருந்துவதற்கான வயது வரம்பை ஒன்றாக்கிய தீர்ப்பு என பலவற்றை பெற்றுத் தந்தார் RBG.

பாலின சமத்துவத்துக்கான தனிப்பட்ட வழக்குகளில் வென்றெடுக்கும் தீர்ப்புகள் என்றில்லாமல் அடிப்படை மாற்றங்களுக்கான வகையில் தனக்கென ஒரு செயல் தந்திரத்தை வடிவமைத்துக் கொண்டார் RBG.

RBG – துவண்டுவிடாத போர்க்குணம்.
RBG – துவண்டுவிடாத போர்க்குணம்.

பாலுறவு (sex) என்ற சொல்லுக்குப் பதில் பாலினம் (gender) என்ற சொல் பயன்பாட்டை பரவலாக்கியது, பாலின சமத்துவமின்மை ஆண்களுக்கும் எதிரானது என்பதை புரியவைக்கும் வழக்குகளை எடுத்து ஆளுகை செய்தது, நீதிபதியாக பதவியேற்பதற்கு முன்பு ACLU-விலிருந்த காலகட்டத்தில் திட்டமிட்டு ஒவ்வொன்றாய் என 200-க்கும் மேற்பட்ட பெண்ணடிமைத்தன சட்டசரத்துக்களை வெட்டி நீக்கும் தீர்ப்புகளை வழக்காடி வென்றது என கட்டம் கட்டமாக முன்நகர்ந்து சென்றார்.

அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியான பிறகு, மனநலம் பாதிக்கப்பட்டோரின் நலன் காக்கும் சட்டம், ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமண உரிமைகள், எல்லை கடந்து அமெரிக்கா வந்தோருக்கான சட்டபாதுகாப்புகள், ராணுவத்தில் பணிபுரியும் பெண்களுக்கான சம உரிமைகள், பேறுகால உரிமைகள் என தொடர்ந்து சமூக நீதிக்காக செயல்பட்டு வந்தார்.

1993-ல் இவரை அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழுவின் (8 பேர் கொண்ட குழு மற்றும் தலைமை நீதிபதி இந்த 9 பேரின் ஓட்டெடுப்பு அடிப்படையில்தான் அங்கு தீர்ப்புகள் முடிவு செய்யப்படும்) நீதிபதிகளில் ஒருவராக அப்போதைய அமெரிக்க அதிபர் பில்கிளின்டன் இவரை நியமித்தார்.  அப்போது முதல், 87 வயதில் புற்றுநோயின் தாக்குதலுக்கு மறைந்த காலம் வரை அமெரிக்க முற்போக்கு சிந்தனைகளின் உறுதியான காப்பரணாக செயல்பட்டார்.

தற்போதைய வலதுசாரி பிற்போக்கு அதிபரான டிரம்பின் ஆட்சிக் காலத்தில் தீவிரமாக முன்னுக்கு வந்துள்ள பிற்போக்கு சக்திகள் நீதித்துறையை முழுமையாக கைப்பற்றிவிடுமோ என்ற அச்சத்தில், தான் இறப்பதற்கு சில நாட்கள் முன்பு கூட ‘புதிய அதிபர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை நானே நீதிபதியாக தொடர வேண்டும் என மனது பேரவா கொள்கிறது’ எனச் சொன்னார்.

ருத் பாடர் ஜின்ஸ்பர்க் - பெண்ணுரிமை போராட்ட ராணி
ரூத் பாடர் ஜின்ஸ்பர்க் – பெண்ணுரிமை போராட்ட ராணி

RBG-யோடு சக நீதிபதியாக பணிபுரிந்த, மறைந்த நீதிபதி அன்டோனின் ஸ்கேலியா அவரைப் பற்றி குறிப்பிடும் போது, ‘சமூகச் சட்ட முறைமைகளில் அவர் ஒரு புலி’ என்கிறார்.

சமூகநீதிக்கு விரோதமாக பெரும்பான்மை நீதிபதிகள் தீர்ப்பு வழங்கிய ஒரு சில வழக்குகளில் RBG வெளிப்படையாக தனது எதிர்க்கருத்துக்களை மக்களிடம் முன் வைத்தார். அத்தகைய தீர்ப்புகளை ஜனநாயகத்தின் பிற அங்கங்கள் மூலம் மாற்றுவதற்கு போராடினார்.

உதாரணமாக, குட் இயர் டயர் நிறுவனத்தில் வேலை பார்த்த பெண், பாலின அடிப்படையில் தனக்கு சம்பளம் குறைத்து தரப்பட்டதை எதிர்த்து 1999-ல் வழக்கு தொடர்ந்து கீழமை நீதிமன்றத்தில் வெற்றி பெற்றிருந்தார். அவ்வழக்கு உச்சநீதிமன்றக் குழுவிடம் வந்த போது வறட்டுத்தனமான காலவிவரக் குறைபாட்டைக் குறிப்பிட்டு, தீர்ப்பை நிறுவனத்துக்கு சாதகமாக்கினர் குழுவிலிருந்த பெரும்பான்மை நீதிபதிகள். இதனை எதிர்த்து பொதுவெளியில் முழங்கிய RBG-யின் ஆக்ரோசமான குரலை ‘நீதிக்கான குலைநடுங்கச் செய்யும் ஆவேசமான குரல் அது’ என பாதிக்கப்பட்ட பெண் இன்றும் கூட நினைவு கூர்கிறார். நீதிபதிகள் குழுவின் ஆண் நீதிபதிகளுக்கு பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் குறித்து பாராமுகம் என குத்திக் காட்டியிருந்தார் RBG.

2013ல், சிறுபான்மை கருப்பின மக்களின் வோட்டுரிமையை காக்கும் சட்டசரத்துக்களை, தான் பங்கேற்ற உச்சநீதிமன்றக் குழுவானது பெரும்பான்மை அடிப்படையில் நீக்கிய போது மிகக் கடுமையான சொற்களில் தனது எதிர்க்கருத்தை பொது வெளியில் வைத்தார் RBG. ‘தர்மத்தின் பாதை நீண்டது ஆனால் உறுதியான, இலக்கை அடையும் போராட்டத்தின் மூலம்தான் அதை நீதியின் பக்கம் வளைக்க முடியும்’ என்ற மார்டின் லூதர் கிங்ன் வார்த்தைகளைக் குறிப்பிட்டு, ‘இன்று அந்த உறுதியான, இலக்கை அடையும் போராட்டம் நீதிமன்றத் தீர்ப்பால் முறிக்கப்பட்டுவிட்டது’ என்றார் RBG.

கடந்த ஜூலை 2020-ல், அரசு காப்பீட்டு திட்டத்திலிருந்து பெண்களுக்கான கருத்தடை சிகிச்சைக்கான காப்புகளை நீக்கக் கோரிய வழக்கில், புற்றுநோய் சிகிச்சையிலிருந்த RBG, மருத்துவமனை படுக்கையிலிருந்தவாறே வழக்கு விசாரணையில் பங்கேற்றார். டிரம்ப் அரசு, மத நம்பிக்கைகளின் அடிப்படையில் பெண்களுக்கான கருத்தடை உரிமைகளை காப்பீட்டிலிருந்து நீக்கக் கோரி தொடர்ந்த இவ்வழக்கில் டிரம்ப் அரசுக்கு சாதகமான தீர்ப்பு வழங்கிய நீதிமன்றக் குழுவை கடுமையாக விமர்சித்தார் RBG.

அமெரிக்க வரலாற்றில் இவர்தான் இரண்டாவது பெண் உச்சநீதிமன்ற நீதிபதி என்ற தகவல், பேருக்கு முன்னேறிய சமூகமாக தோன்றினாலும் பல்வேறு பிற்போக்குத்தனங்களின் உறைவிடமாய் அமெரிக்க சமூகம் இருப்பதைக் காட்டுகிறது. அதே வேளையில் ‘RBG’க்கு அளித்துள்ள அங்கீகாரத்தின் மூலம் அப்பிற்போக்குத்தனங்களுக்கு எதிரான நம்பிக்கையையும் அச்சமூகம் விதைக்கிறது.

அமெரிக்க அதிகாரமட்டத்தின் உயரடுக்கில் RBG-ன் மறைவு உருவாக்கியுள்ள வெற்றிடம் மிகக் கெடுவாய்ப்பான சூழலுக்கு அமெரிக்கச் சமூகத்தை தற்போது தள்ளியுள்ளது. பிற்போக்கு டிரம்ப் அரசு இந்த வெற்றிடத்தை யாரை வைத்து நிரப்ப உள்ளது என்ற கேள்விதான் அமெரிக்க தாராளவாத சிந்தனையாளர்களை பதட்டமடையச் செய்துள்ள விசயம்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்