Aran Sei

பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் மீண்டும் இணையும் அமெரிக்கா- சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வாழ்த்து கூறி வரவேற்ப்பு

டந்த 2015ஆம் ஆண்டு, பாரீஸ் நகரில் உலக நாடுகள் ஒன்றிணைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டனர்.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியிடப்படும் கார்பன் நச்சுவாயுக்களால், புவி வெப்பமயமாதல் அதிகரிக்கிறது என்ற அடிப்படையில், அதனை கட்டுப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபை நேரடியாக எடுத்த முயற்சியால், இந்த பாரிஸ் ஒப்பந்தம் வெற்றிகரமாக அப்போது கையொப்பமானது.

அமெரிக்காவின் 46வது அதிபரானார் ஜோ பைடன் – வரலாறு படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ்

இந்த ஒப்பந்தத்தில் பல உலகின் பல நாடுகள் கையெழுத்திட்டிருந்தன. அதில் அமெரிக்காவும் அடங்கும். ஆனால், பின்வந்த நாட்களில், இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்காவின் பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது எனக்கூறி, அப்போதைய அதிபர் டிரம்ப், அமெரிக்கா இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட, ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், தனது பிரச்சாரத்தின் போதிருந்தே, பாரிஸ் ஒப்பந்தத்துக்கு ஆதரவாக பேசி வந்தார்.

‘ஹவுடி மோடியின் விளைவு – இந்தியா அசுத்தமானது’

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அமெரிக்காவை பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணைக்கத் தயாராக இருப்பதாகவும், உலக அளவில் காற்று மாசுபடுவதை குறைக்க, முயற்சி மேற்கொள்ள இருப்பதாகவும் உறுதி அளித்திருந்தார்.

இந்த ஒப்பந்தத்தால், பொருளாதார சிக்கல்கள் ஏதேனும் இருக்குமா என்பது குறித்தும், அப்படி இருந்தால் அதை எப்படி சமாளிப்பது என்பது குறித்தும், துறைசார் வல்லுநர்களிடம் கலந்து பேசவுள்ளதாகவும், பைடன் பிரச்சாரத்தின்போது அறிவித்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற அடுத்த சில மணி நேரத்திலேயே, வெள்ளைமாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்திற்கு சென்ற ஜோ பைடன், `பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும்’ என அறிவித்தார். இதுதொடர்பான நிர்வாக நடவடிக்கைகளில் அவர் கையெழுத்திட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

‘நிவார்’ புயல் – இது பருவநிலை மாற்றத்தின் பேராபத்து – அருண்குமார் ஐயப்பன்

ஜோ பைடனின் இந்த உடனடி நடவடிக்கைக்கு, உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், சுற்றுச்சூழல் இயக்கங்களின் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

சுற்றுச்சூழல் மாசுபடுவதற்குக் காரணமான கார்பன் (கரியமில) வாயு உள்ளிட்ட பசுங்குடில் வாயு வெளியேற்றத்தில் (கிரீன்ஹவுஸ் எமிஷன்), உலகளவில் அமெரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது.

அப்படியிருக்கும்போது, அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து 2019 ஆம் ஆண்டு வெளியேறுவதாக அறிவுறுத்தது, கடும் விமர்சனத்தை உருவாக்கியது.

அதிக மாசுவை வெளியிடும் நாடுகளில், முதலிடத்திலிருப்பது சீனா. ஏற்கெனவே சீனா, அமெரிக்க உறவில் சிக்கல் இருந்த நிலையில், பாரிஸ் ஒப்பந்தம் அமெரிக்காவில் ஏற்படுத்திய பொருளாதார சிக்கல், இரு நாட்டுக்கும் இடையில் கூடுதல் பிரச்னைகளை உருவாக்கியதாகவும், அது தந்த கூடுதல் அழுத்தத்தில் பொருளாதாரம் மிகவும் நலிவடைந்து, இறுதியில் அமெரிக்கா விலகியது என்றும் அந்த நேரத்தில் விமர்சனங்கள் எழுந்தன.

இதுகுறித்து ஐக்கிய நாடுகளின் முன்னாள் சுற்றுச்சூழல் தலைமை அதிகாரி அந்த நேரத்தில் கூறும்போது, “சுற்றுச்சூழல் சார்ந்த நடவடிக்கைகளில், அமெரிக்கா எப்போதும் எல்லாவற்றிலும் இப்படி விலகி நிற்க முடியாது. தேவையான மாற்றங்களை, தேவையான நேரத்தில் அவர்கள் நிச்சயம் முன்னெடுத்துதான் ஆகவேண்டும்” என்றார்.

ஐ.நா.வின் பொதுச்செயலாளர் அந்தோனியோ மட்டும், பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவின் விலகலுக்கு வரவேற்பு தெரிவித்திருந்தார். அதேநேரம், சுற்றுச்சூழல் மோசமாவதை அவர் மறுக்கவில்லை. இதுகுறித்து அவர், “சுற்றுச்சூழல் சீரமைப்பில் நாடுகள் அனைத்தும், நெடுந்தூரம் செல்ல வேண்டியுள்ளது. சமூகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வேண்டியுள்ளது” என்று கூறியிருந்தார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும், அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து விலகியதற்கு பின், அடுத்த பத்து ஆண்டுகளுக்கு என்ன மாதிரியான காற்று மாசு ஒழிப்பு முன்னெடுப்பை எடுக்க போகிறது என்று கூறுமாறு அறிவுறுத்தினர். இருப்பினும் அதுகுறித்த முறையான திட்டம், டிரம்ப் அரசாங்கத்தால் அறிவிக்கப்படவில்லை.

இந்நிலையில் தற்போது இத்திட்டத்தில் அமெரிக்கா மீண்டும் இணைவதாக அறிவித்துள்ள ஜோ பைடன், 2050 ஆம் ஆண்டுக்குள், மாசில்லா அமெரிக்காவை உருவாக்கும் பாதையில் செயல்படவிருப்பதாக கூறியுள்ளார். அதற்கு என்ன மாதிரியான திட்டங்களை அமெரிக்கா முன்னெடுக்கும் என்பது பற்றி விரைவில் பைடன் அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஜோ பைடனின் இந்த முன்னெடுப்பு, அதிக சவால் நிறைந்ததாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய யூனியனின் முன்னாள் அதிகாரி கெல்லி அதுபற்றி கூறும்போது, “பைடனின் அரசு, பசுமை திட்டங்கள் – கார்பன் கட்டுபாடு – பொருளாதார மற்றும் வேலை இழப்புகள் என பல்வெஎறு விஷயங்களை கையாள வேண்டியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

மற்றொரு பக்கம், ஐரோப்பிய அரசு, பொருளாதார சிக்கலை சமாளிக்க சுற்றுச்சூழல் விஷயத்தில் தங்களுடன் இணைந்து செயல்படும் நாட்டை வெகுகாலமாக எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதற்கு முக்கிய காரணம், அவர்களுக்கும் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது. தங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த, வரும் ஜூன் மாதத்திலிருந்து கார்பன் வாயுவை வெளியிடும் பொருள்களின் விற்பனையாளர்களுக்கு வரி விதிக்க ஐரோப்பிய அரசு உத்தரவிட்டது.

இந்த ஐரோப்பிய அரசின் `கார்பன் வாயுவுக்கான வரி’ முன்னெடுப்பை, தங்கள் நாட்டின் பொருளாதார சிக்கலை சமாளிக்க அமெரிக்காவில் பைடனும் முன்னெடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. பைடன், பிரச்சாரத்தின்போது இதற்கான வாக்குறுதியை கூறியிருந்தது, இங்கே கவனிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் அமெரிக்காவும் ஐரோப்பாவும் இணைந்து செயல்படும்பட்சத்தில், கார்பன் வாயு வெளியிடும் பொருள்களின் ஏற்றுமதி விரைவில் குறையும் என வல்லுநர்கள் கூறிவருகின்றனர்.

(www.thewire.in இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்