Aran Sei

வரலாறு படைத்த கமலா ஹாரிஸ் – கருப்பினப் பெண்ணின் வேர்களைத் தேடி

சியாமளா கோபாலன், டொனால்ட் ஹாரிஸ்

மலா ஹாரிஸின் புலம் பெயர்ந்த பெற்றோர் தங்களுக்கென ஒரு குடும்பத்தையும், ஒருவர் மற்றொருவரையும், ஒரு கறுப்பின படிப்புக் குழுவின் (Black Study Group) மூலம் எவ்வாறு கண்டடைந்தனர் ?

டொனால்ட் ஹாரிஸும் சியாமளா கோபாலனும் உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்த ஆங்கிலேய காலனிகளில் வளர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் தனித்தனியாக பெர்க்ளிக்கு (Berkeley) வந்து, அவர்கள் வாழ்க்கையை செதுக்கிய ஒரு அறிவு ஜீவிகள் குழுவின் பகுதியாக மாறினர்.

1962-ன் இறுதியில் பெர்க்ளியில் கலிபோர்னியா பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே ஒரு ஒல்லியான, உயரமான, ஜமைக்காவில் பி.எச்.டி பட்டம் பெற்ற ஒரு மாணவர் ஒரு சிறிய கூட்டத்தின் முன் பேசி, ஒத்த கருத்துடைய தனது சொந்த நாட்டுக்காரர்களையும், அமெரிக்கர்களையும் ஈர்த்துக் கொண்டிருந்தார்.

அவர் அறையில் நிரம்பி இருந்த கறுப்பின மாணவர்களிடம், தான் ஜமைக்காவில் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை பார்த்தே வளர்ந்தவன் என்றும், அங்கு சிறுபான்மையான வெள்ளையர்கள் தாங்கள் பின்பற்றும் தீவிர சமூக ஏற்றத்தாழ்வை மறைக்க உள்ளூரில் ஒரு கறுப்பின மேல்தட்டு வர்க்கத்தை உருவாக்கும் விதத்தைப் பற்றியும் கூறிக் கொண்டிருந்தார்

தனது 24 வயதிலேயே பேராசிரியர் போன்ற தோற்றத்தைப் பெற்றிருந்த டொனால்ட் ஹாரிஸ், அவர் முன்பு பணியாற்றிய, ‘கிறித்துவ தேவாலய ஊழியர்‘ போலவே இருந்தார். ஆனால் அவரது கருத்துக்கள் கூர்மையானவையாக இருந்தன. கூட்டத்தில் இருந்த ஒரு பெண், உரை முடிந்தவுடன் அவரிடம் வந்து தன்னை அறிமுகம் செய்து கொண்டார்.

அவர் புடவை அணிந்து செருப்பு போட்டிருந்த சிறிய உருவம் கொண்ட இளம் இந்திய அறிவியலாளர். அமெரிக்காவில் உள்ள இனம் பற்றிய அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த இன்னும் ஒரே வெளிநாட்டு மாணவரும் அவர்தான்.. அங்கிருந்த ஆண்கள் பெண்கள் அனைவருடனும் ஒப்பிடுகையில் தோற்றத்திலேயே வித்தியாசமானவராக இருந்ததாக நினைவு கூர்கிறார் ஹாரிஸ்.

சியாமளா கோபாலன், ஹாரிஸ் பிறந்த அதே ஆண்டில் உலகின் மறுபகுதியில் வேறு ஒரு பிரிட்டிஷ் காலனியில் பிறந்தவர். ஆனால் ஒரு மூத்த அரசு அதிகாரியின் மகளான அவர் காலனி ஆட்சியைப் பற்றி இன்னும் பாதுகாப்பான கருத்துக்களைக் கொண்டிருந்தார். ஹாரிஸின், பேச்சு பல கேள்விகளை அவருக்குள் ஏற்படுத்தியது. அவரிடம் கேட்க வேண்டியது நிறைய இருந்தது.

“அது எல்லாம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கொஞ்சம் கவர்ச்சியாகவும் இருந்தது என்று கூட துணிந்து சொல்வேன்” என்று நினைவு கூர்கிறார், ஹாரிஸ். தற்போது 82 வயதான ஹாரிஸ், ஸ்டான்ஃபோர்டின் ஓய்வு பெற்ற பொருளாதாரப் பேராசிரியர். “தொடர்ந்த சந்திப்புகளில் நாங்கள் மீண்டும் பேசினோம், பலமுறை பேசினோம். அதற்குப் பிறகு நடந்தவை தற்போது வரலாற்றின் ஒரு பகுதி ஆகி விட்டது“ என்கிறார் அவர்.

அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினரான கமலா ஹாரிஸ் தன் பெற்றோர்களின் காதல் கதைகளை அடிக்கடி கூறுவார் . அவர்கள் இருவரும் அமெரிக்க சிவில் உரிமைகள் இயக்கத்தால் வார்த்தெடுக்கப்பட்ட கருத்தொருமித்த இணைகள். அமெரிக்காவின் பாரம்பரியமான நொடித்துப் போன புலம் பெயர்ந்த மக்கள் வரவேற்க்கப்படும் கதையின் ஒரு வேறுபட்ட வடிவமே அது.

எனினும் இது 1960 கால பெர்க்லியைப் பற்றிய கடுகளவு விளக்கம் தான். அவர்கள் சந்தித்துக் கொண்ட சமூகம் முற்போக்கு அரசியலின் எரிதழலாக இருந்தது. தொழிற்சங்க இயக்க இடதுசாரி தலைமையும் ஆரம்பகால கருப்பின தேசிய வாத சிந்தனையாளர்களும் ஒன்று இணைந்த காலம் அது.

இது கருப்பின இளம் பட்டதாரிகளின் ஒரு அலையை கொண்டு வந்தது. அவர்கள் டெக்சாஸ் மற்றும் லூசியானா மாநிலங்களில் குத்தகைக்காரர்களாகவும், அடிமைகளாகவும் இருந்த பெற்றோர்களின் வழிவந்தவர்கள். அவர்கள் காலனிய ஆதிக்கத்தை வென்ற நாடுகளிலிருந்து வந்தவர்களுடன் கலந்துரையாடினர்.

1962-ல் இந்த படிப்புக்குழு உறுப்பினர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து ஆஃப்ரோ அமெரிக்க சங்கத்தை உருவாக்கினர். அதன்மூலம் கறுப்பின ஆய்வுகள் என்ற படிப்புக்கு வழி செய்தனர். மேலும் அது ஆப்ரிக்கர்களின் பாரம்பரியத்தைக் கொண்டாட க்வான்சா (Kwanzaa) விடுமுறையை அறிமுகம் செய்தது. அத்துடன் கருஞ்சிறுத்தைகள் கட்சியை (Black Panther party) நிறுவுவதற்கான வேலையையும் செய்தது.

இந்த 60-களின் தீவிரம் வடிந்த பிறகும் கூட அது உருவாக்கிய சமூகம் நிலைத்திருந்தது.
இந்தக் கட்டுரைக்காக கருத்து கூற மறுத்து விட்ட கமலா ஹாரிஸ், 2020-ம் ஆண்டின் ஜனநாயகக் கட்சியின் மிதவாதத் தலைவர்களில் ஒருவராகவும், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் களத்திலும் இருந்தார். அவர், தனது அரசியல் பார்வையை தீர்மானகரமாக நடைமுறைக்கேற்ற வகையில் அமைத்துக் கொண்டுள்ளார்.

“நான் இந்த சமூகத்தை மறு சீரமைப்பு செய்யப் போவதில்லை. நான் மக்களை நடு இரவில் எழுப்பும் பிரச்சினைகள் மீதே கவனம் செலுத்தப் போகிறேன்” என்கிறார் கமலா. துணை அதிபர் வேட்பாளராக இருப்பது உட்பட பிரபலமான தருணங்களிலும், பெர்க்ளியில் தனது பெற்றோரின் நட்பு வட்டத்தின் நீடித்த தாக்கத்தை நினைவு கூர்கிறார். அவரது பெற்றோரைப் பொறுத்தவரையில் அந்த நட்பு வட்டம் அவர்களது ஒட்டுமொத்த வாழ்வையும் மாற்றியது.

பல பத்தாண்டுகளாக ஜமைக்கா, இந்தியா போன்ற பிரிட்டஷ் காலனிகளில் சிறப்பாக படிக்கும் மாணவர்களை மேல்படிப்பிற்காக பிரிட்டனுக்கு அனுப்பி வைப்பதுதான் வழக்கம். ஆனால் ஹாரிஸூம், சியாமளா கோபாலும் வித்தியாசமானவர்கள். இருவருக்கும் அமெரிக்க கல்வி வேண்டும் என்பதற்கு ஒரு கட்டாய காரணம் இருந்தது ‌

சியாமளாவுக்கு பெண் என்பது ஒரு பிரச்சினை. நன்கு படித்த, தமிழ் பார்ப்பன குடும்பத்தில் பிறந்த சியாமளா உயிரி வேதியியல் படிக்க விரும்பினார். ஆனால், இந்தியப் பெண்களுக்கு அறிவியல் கல்வி அளிப்பதற்காக ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட இர்வின் சீமாட்டி கல்லூரியில் அவர் மனையியல் பட்டப்படிப்பில்தான் சேர வேண்டி நேர்ந்தது.

அவரது அப்பாவும் அண்ணனும் அவரை அதற்காக கேலி செய்து நோகடிப்பது வழக்கம். “மனையியலில் இரவு சாப்பாட்டிற்கு தட்டுக்களை எப்படி வைப்பது எனச் சொல்லித் தருவார்களா ?” என்றெல்லாம் கிண்டலடித்துள்ளனர். சியாமளா கோபப்பட்டு சிரிப்பார். பின்னர், ”நான் என்ன படிக்கிறேன் என்று உங்களுக்குத் தெரியாது” என்று கூறுவார்.

ஆனால் அவர் ஒரு திட்டம் வைத்திருந்தார். பிரிட்டன், இந்தியா போலன்றி அமெரிக்காவில் உயிரி வேதியியல் படிக்க முடியும் என அவரது சகோதரர் அவரிடம் கூறியிருந்தார். சியாமளா அமெரிக்காவில் படிக்கப் போகும் தனது முடிவை தந்தையிடம் கூறினார். அவருக்கு பெர்க்ளியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைகழகத்தில் படிக்க இடம் கிடைத்திருக்கிறது.

அவரது தந்தை ஆச்சரியமடைந்தார், ஆனால் மறுக்கவில்லை. அவர் கவலை மட்டும் பட்டார். நாங்கள் யாரும் இதுவரை வெளிநாட்டில் படிக்கவில்லை. அமெரிக்காவில் எனக்கு ஒருவரையும் தெரியாது என்பது மட்டுமே. கவலைப் படாதீர்கள் என்றார் சியாமளா. அவரது அப்பா முதலாண்டு படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக்கொண்டார்.

மகாராணி எலிசபெத் டெல்லி லேடி இர்வின் கல்லூரி
1961-ல் பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் டெல்லி லேடி இர்வின் கல்லூரிக்கு வருகை தந்த போது (அங்கு சியாமளா கோபாலன் மனையியல் பட்டம் பெற்றார்)

1961-ல் எட்டாயிரம் மைல்களுக்கு அப்பால் இதேபோல் ஒன்று ஹாரிஸூக்கும் நடந்தது‌ . அவர் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற விரும்பினார். அவருக்கு பிரிட்டிஷ் காலனி அரசின் பெருமைமிகு கல்வி உதவித்தொகை கிடைத்தபோது எல்லோரும் அவர் இங்கிலாந்து சென்று படிப்பார் என்று நினைத்தனர். அதற்கு முன் உதவித் தொகை பெற்றவர்கள் அதைத்தான் செய்தார்கள்.

ஆனால், ஹாரிஸ் இங்கிலாந்து போக விரும்பவில்லை.. அவரது ஆரம்பக் கல்வி மிகுந்த கீழ்ப்படிதலுடன், “ஆளும் பிரிட்டானியா” என்று கூட்டாக பாடுவது போன்ற பிரிட்டிஷ் கலாச்சாரத்தில் அவரை ஊற வைத்திருந்தது. அவர் அப்போதே, பிரிட்டிஷ் சமூகத்தின் மாறாத வீண் பகட்டு, ஆடம்பர விழாக்கள், வகுப்புகள் எல்லாம் ஜமைக்காவின் தோட்டத் துறை சமுதாயத்துக்கு எவ்வாறு கட்டாயமாக திணிக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர் அறிந்திருந்தார்.

அதனால் அவர் அமெரிக்கா செல்ல முடிவு செய்தார்.

இளம்பருவ ஹாரிஸ் அமெரிக்காவை ஒரு உற்சாகமான இடமாக அறிந்திருந்தார். அமெரிக்கா உயிரோட்டமாகவும், இன ரீதியாக சமூக ரீதியாக புதிய, சக்திமிக்க கலப்பு சமூகமாக அன்று தனக்கு தெரிந்ததாக அவர் கூறுகிறார்.

சிவில் உரிமைக்காக தெற்கு மாநிலங்களுக்கு மாணவர்கள் பயணம் செய்வது தொடர்பான ஒரு செய்திக் கட்டுரை மூலம் பெர்க்ளி கலிபோர்னியா பல்கலைக் கழகம் அவர் கண்ணில் பட்டது.
அதுபற்றி மேலும் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் அந்த பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என முடிவு செய்ய வைத்தது என்று அவர் கூறுகிறார்.

மான்செஸ்டர் பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய ஒரு மேற்கிந்திய பொருளாதார பேராசிரியரின் ஒப்புதல் கடிதம் ஜமைக்கா கல்வி அமைச்சகத்துக்குக் கிடைத்தது மிகப் பெரும் மகிழ்ச்சியாக இருந்ததாக நினைவுகூர்கிறார்.

ஜமைக்கா
ஹாரிஸ் பிறந்தது பிரிட்டிஷ் காலனியாக இருந்த ஜமைக்காவில் (அங்கு 1953-ல் பிரிட்டிஷ் மகாராணி வருகை தந்தார்)

ஒரு குழுவாக இணைதல்

சியாமளா கோபாலன் உடனடியாக முக்கியமான நட்பு வட்டாரத்தில் சேர்ந்து கொண்டார்.‌
வகுப்புகளுக்காக தனது பெயரை பதிய வரிசையில் நின்றிருந்த போது அவருக்கு அடுத்து நின்றிருந்தவர் அமெரிக்காவின் ஓக்லாந்தைச் சேர்ந்த கருப்பின மாணவரான செட்ரிக் ராபின்சன். 1960-ல் 20,000 மாணவர்களில் நூறு பேருக்கும் குறைவானவர்களே கருப்பின மாணவர்கள்.

ராபின்சனின் தாத்தா அலபாமாவிலிருந்து, 1920-களில் இனவெறி காரணமாக வெள்ளையர்களால் தூக்கிலிடப்படுவதிலிருந்து (Lynching) தப்பித்து வந்தவர். அவரது குடும்பத்தில் கல்லூரியில் சேரும் முதல் நபர் ராபின்சன். “கருப்பின குழந்தைகளாக இருந்ததால் கல்லூரியில் சேர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது கூட தெரியாமல் இருந்தார், அவர்” என்று நினைவு கூர்கிறார் அவரது விதவை மனைவி எலிசபெத்.

வரிசையில் தனக்கு முன்னால் நின்றிருந்த சியாமளா அவர் கவனத்தைக் கவர்ந்தார். ராபின்சனை விட இரண்டு வயது மூத்த சியாமளா எப்போதும் புடவையே அணிந்து வந்தார். அவரது நண்பர்கள் அவரை அரச பரம்பரையிலிருந்து வந்தவர் என நினைத்தனர். அப்படித்தான் அவரது நடை உடை பாவனைகள் இருந்தனர். ராபின்சன் தனது பெயரை பதிவு செய்தபோது, பதிவாளர், அவரும் ஆப்பிரிக்காவிலிருந்து வந்திருக்கும் பட்டதாரி எனக் கருதி “உங்களுக்கும் உங்கள் நாடே கட்டணத்தைச் செலுத்துகிறதா?” என பணிவாகக் கேட்டார். ராபின்சன் இதை மிகவும் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டார்.

2016-ல் காலமாகிவிட்ட ராபின்சன், தனது ஆராய்ச்சி படிப்பின் போதும், கலிபோர்னியா பல்கலை கழகத்தில் (சான்டா பார்பராவில்) படிக்கும் போதும், இதற்கிடையில் ஐந்து புத்தகங்களை எழுதிய போதும் இந்தக் கதையை சொல்வார்.

அவரும் சியாமளாவும் வாழ்நாள் நண்பர்களாக ஆகினர்.

அவரது மிகவும் பிரபலமான “கறுப்பு மார்க்சியம். கறுப்பின பாரம்பரியத்தை உருவாக்குதல் (1983)” என்ற தனது பிரபலமான புத்தகத்தில் தனது கருத்துக்களை உருவாக்கிய தனது பழைய நண்பர்களை பட்டியலிட்டுள்ளார். அவர்களில் சியாமளாவைத் தவிர மற்ற அனைவரும் கருப்பினத்தவரே.
அவர்கள் இருவரும் கருப்பின அறிவுஜீவிகளின் படிப்புக் குழுவுடன் இணைந்து, மானுடவியல் படித்துக் கொண்டிருந்த மேரி ஏக்னஸ் லூயிஸ் வீட்டில் சந்தித்து வந்தனர்.

இந்தக் குழுவே பின்பு ஆஃப்ரோ – அமெரிக்க கழகமாக அறியப்பட்டது. Black Power (கருப்பின அதிகாரம்) அதிகார இயக்கத்தின் அடித்தளமாக இருந்தது‌. இது வெறும் பொழுது போக்கு படிப்புக்குழுவாக இருக்கவில்லை. படிப்பதற்கான புத்தகங்கள் ஒதுக்கப்பட்டன. அதை நிறைவேற்றாதவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. ஒருமுறை இருத்தலியல்வாதம் (existentialism) பற்றிய விவாதத்தின் போது அவ்வாறு படித்து வராததற்காக ஹூய் நியூட்டன் (Huey Newton) கடிந்து கொள்ளப்பட்டார் . பின்னாளில் அவர்தான் கருஞ்சிறுத்தைகள் கட்சியைத் துவங்கியவர்களுள் ஒருவர். அடுத்த முறை வரும்போது அவர் முழுத் தயாரிப்புடன் வந்தார் என நினைவு கூர்கிறார்.

கருஞ் சிறுத்தைகள்
கலிபோர்னியா ஓக்லாந்து நீதிமன்றத்துக்கு வெளியில் கருஞ்சிறுத்தைகள் உறுப்பினர்கள் – 1968ல்

பிற்காலத்தில் சமூகவியல் பேராசிரியர் ன மார்கோஸ் தாஷில். இந்த குழுக்களின் கூட்டங்களில்தான் தர்ஷில் அமெரிக்க கருப்பின கலாச்சாரத்தின் ஆப்பிரிக்க வேரை முதலில் அவர் கண்டார்.

“நாங்கள் ஒரு புதிய மொழியை உருவாக்கினோம். அதன் முதல் புதிய சொல் ‘ஆஃப்ரோ அமெரிக்கர்’ என்பது. அதற்கு முன் நான் என் வாழ்க்கையில் இதை கேட்டதே இல்லை. தோற்றுவாய் இல்லாத நீக்ரோ என்பதாக நாங்கள் இருக்கப் போவதில்லை. நாங்கள் எங்கள் பாரம்பரியத்தால் அறியப்படுவோம்” என்றார் தாஷில்

“நாங்கள் எல்லோரும் ஒருமைப்பாடுவாதிகளாக (integerstionist) வளர்ந்தோம். வெள்ளைக்காரர்களின் கல்வி நிறுவனங்களில் படிக்க அனுமதிக்காக போராடினோம். இது ஒரு புரட்சிகர திருப்பம் எங்களுக்குள் கருத்து வேறுபாடு உண்டு. ஆனால் எல்லா கருத்து வேறுபாடுகளும் மோசமானவை அல்ல” என்று திருமதி தாஷில் கூறுகிறார்.

இந்தக் குழு பிற்காலத்தில் ஆப்பிரிக்க வழி வந்தவர்களுக்கு மட்டும் என்று தனது உறுப்பினர் சேர்க்கைக்கு வரம்பிட்டுக் கொண்டது. ஒரு கருப்பின உறுப்பினரின் வெள்ளைக்கார இணையை குழுவில் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டது.

ஆனால் முன்னாள் காலனிய நாட்டைச் சேர்ந்தவர் என்ற அடிப்படையிலும், நிறத்தின் அடிப்படையிலும் சியாமளாவை சேர்த்துக் கொள்வதில் சிரமமிருக்கவில்லை. அவர் அங்கிருந்த சகோதர, சகோதரிகளில் ஒருவராகவே அவர் இருந்தார். அது ஒருநாளும் பிரச்சினையை உருவாக்கவில்லை. அவர் அவர்களில் ஒருவராக ஏற்றுக் கொள்ளப்பட்டார்.

தான் விட்டு வந்த மிகவும் வேறுபட்ட கலாச்சார பின்னணி குறித்து சியாமளா பேசுவார். அவர் ராபின்சனிடம் தன்னை பெண் கேட்டு அணுகிய ஒருவரைப் பற்றிக் கூறினார். அதைத் தொடர்ந்து அவரது உறவினர்கள் ஜாதகக் கட்டுகளுடன் அலைய ஆரம்பித்தனர் என்பதையும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு மாணவர்கள் அதிகமாக சேர ஆரம்பித்தனர். அவர்கள் புதிதாக விடுதலை பெற்ற நாடுகளின் வெள்ளையரல்லாத மேல்தட்டு வர்க்கத்தினராக இருந்தனர். அவர்கள் தங்களுக்குள் எளிதாக கலந்தனர்.

“அவர்கள் எங்கெங்கிருந்தோ வந்தனர். உலகைப் பற்றிய விரிந்த பார்வை கொண்டிருந்தனர். அவர்கள் அறிவு சுதந்திரத்தை விரும்பினர்.” என்கிறார் அப்போது அங்கு பணியாற்றிய வரலாற்று ஆசிரியர் நெல். ஐ. பெயின்டர் (78).

பெர்க்ளியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழக வளாகம் 1960ல்
பெர்க்ளியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழக வளாகம் 1960களில்

1961-ல் ஹாரிஸ் அங்கு வந்தவுடன் இந்தக் குழுவோடு இணைந்து கொண்டார். “ஆரம்பத்தில் ஒரு நாளில் ஒரு கருப்பின கலைத்துறை மாணவர் கையால் வரைந்த ஒரு தட்டியைப் பிடித்துக் கொண்டு நின்றிருப்பதை பார்த்தார். அது தென் ஆப்பிரிக்காவில் ‘இனவெறிக் கொள்கை’யை (Apartheid) எதிர்த்து ஒரு தனி மனிதர் நடத்திய போராட்டமாக இருந்தது. அந்த மாணவர் கென்னத் சிம்மன்ஸ். அவரும் திருமதி லூயிசும், திரு ராபின்சனும் சேர்ந்து ஆஃப்ரோ அமெரிக்க கழகத்தின் வழிகாட்டியாக இருந்தனர். கென்னத் சைமன் என்கிறார் பெயின்டர்.

ஹாரிஸ் இந்தக் குழு ஒரு பாலைவனச் சோலையாக இருந்தது என்றும், அது ஆப்பிரிக்க-அமெரிக்க வாழ்வின், உண்மையான கலப்படமற்ற அதன் செழுமையையும் சிக்கலையும் செல்வச் செழிப்பையும், ஏழ்மையையும், நம்பிக்கையையும் விரக்தியையும் உண்மைத் தன்மையோடு அறிமுகப்படுத்தியது” என்கிறார்.

இந்தக் குழுவில்தான் 1962-ம் ஆண்டில் தனது எதிர்கால மனைவியை சந்தித்தார் ஹாரிஸ்.
“நாங்கள் பேசினோம். அடுத்தடுத்த கூட்டங்களில் அடிக்கடி பேசினோம். ” என்கிறார் ஹாரிஸ். அடுத்த ஆண்டு அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

“அதுவரை நான் இந்தியாவிற்கு திரும்புவதையே எதிர்பார்த்திருந்தேன். நான் இங்கு நிரந்தரமாக தங்குவதற்காக வரவில்லை. அது வழக்கமான பழைய கதைதான். நான் இங்கு ஒருவர் மீது காதலில் விழுந்தேன். நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். குழந்தைகளும் பிறந்து விட்டன.“ என்று பல ஆண்டுகளுக்குப் பிறகு சியாமளா ஒரு பேட்டியில் கூறி உள்ளார்.

டான் ஹாரிஸூம், சியாமளாவும் ஒரு தனித்துவமான தம்பதியினராக நின்றனர். இருவரும் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். நன்கு படித்த அறிவில் நம்பிக்கை கொண்டவர்கள். “ஒதுங்கியே வாழும் பண்புடைய படிப்பில் அதிக கவனம் செலுத்தக்கூடியவராக இருந்தார் ஹாரிஸ். உற்சாகமாக, துருதுருவென இருந்தார் சியாமளா“ என்கிறார் அவர்களோடு சமகாலத்தில் வாழ்ந்த 76 வயதாகும் ஆன்னி வில்லியம்ஸ்‌

“அவர் மீது ஒரு அரச சாயல் இருந்தாலும் சியாமளா மக்களுக்கானவர். இதோ இங்கே ஒரு பெண் இருக்கிறார். அவர் ஒரு ஆழ்ந்த பழுப்பு நிறம் கொண்டவர், ஆனால், அவரால் இன அடிப்படையில் ஒன்றிலிருந்து வேறு ஒன்றிற்கு எளிதாக மாற முடியும்.” என்கிறார் ஆன்னி.

“ நாங்கள் அதிகமாக விவாதம் செய்வோம். பல நாடுகளின் அரசியல் பற்றிய விவாதங்களாக இருக்கும். சியாமளா நன்கு விவாதம் செய்வார். அவரது வாதங்கள் அனல் பறக்கும். முற்போக்கானதாக இருக்கும். ஆனால் எந்த வகையிலும் மார்க்சியமாக இல்லை. அதேசமயம் அவரது கணவர் ஹாரிஸ் , புரட்சிக அரசியல் பொருளாதாரத்தில் ஆர்வமுடையவர். ஆனால் அமைதியாக பொறுமையாக விவாதம் செய்பவர். சந்தேகமே வேண்டாம். அவர்கள் ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகினர். அன்பு காட்டினர்.” என்கிறார் இந்தியாவில் பிறந்து அமெரிக்காவில் குடியேறிய பொருளாதார வல்லுநர் மேக்நாத் தேசாய்.

1960-களில் காலனிய ஆதிக்கம் உலகெங்கும் வீழ்ச்சி அடைந்து வந்தது. ஒரே ஆண்டில் 17 ஆப்பிரிக்க நாடுகள் விடுதலை அடைந்தன‌ . அதே ஆண்டு அதேசமயம் நியூயார்க்கின் ஹார்லெம் ஃபிடல் காஸ்ட்ரோவை கைவிரித்து வரவேற்றது. அவர் அங்கு மால்கம் எக்ஸ், சோவியத் யூனியன் அதிபர் நிகிதா குருச்சேவ், இந்திய பிரதமர் நேரு ஆகியோரை சந்தித்தார்.

பெர்க்ளி சிவில் உரிமைகள் போராட்டத்தில் சியாமளா கோபாலன்
பெர்க்ளி சிவில் உரிமைகள் போராட்டத்தில் சியாமளா கோபாலன்

“நாங்கள் எதுவும் நடக்கும் என நினைத்தோம்‌ அரசுகள் வீழ்கின்றன. இடதுசாரி அரசாங்கங்கள் ஆட்சியை கைப்பற்றுகின்றன‌. இது உண்மையில் மாறிக் கொண்டிருக்கும் உலுக்கப்பட்டிருக்கும் ஒன்றுதான் என்று தோன்றியது“ என்கிறார் தேசாய்.

“அமெரிக்காவின் சிவில் உரிமைக்கான போராட்டத்திற்கும் வெளி நாடுகளில் தேச விடுதலைக்கான போராட்டங்களுக்குமிடையே தொடர்பு இருப்பதை இந்தக் குழுவில் இருந்த பலரும் உணர்ந்தனர்.” என்கிறார் குழுவின் உறுப்பினரும் வாழ்நாள் குடும்ப நண்பருமான லா ப்ரீ.

“கியூபா புரட்சியை ஆதரிப்பவர்களுக்கும் சிவில் உரிமைப் போராளிகளுக்கும் இடையே கண்ணுக்குத் தெரியாத உறவு இருந்தது‌. காங்கோ விடுதலைப் போராட்டத் தலைவர் லுமும்பாவுக்கும், அல்ஜீரிய புரட்சிக்கும், அது எளிதாக நகர்ந்து சென்றது. மக்கள் தங்களை ஒரு போராட்டத்துடன் மட்டும் அடையாளம் செய்து கொள்ள விரும்பவில்லை.

1963-64-ல் அமெரிக்க வெளியுறுவுத்துறைத் தடையையும் மீறி குழு உறுப்பினர்கள் ஐந்து பேர் சேர்ந்து மாணவர்கள் சங்கம் மூலமாக கியூபாவுக்குச் சென்று, அங்கு ஆப்பிரிக்க-கியூப மக்கள் ஃபிடல் காஸ்ட்ரோ அரசால் எவ்வாறு நடத்தப் படுகிறார்கள் என பார்த்து வரச் சென்றார்கள்

ஹாரிஸ், சியாமளா ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில் அந்த பயணம் குறித்து முதன்முதலில் கேட்டதை திருமதி வில்லியம்ஸ், ஜேம்ஸ் எல் லேசி ஆகிய இருவரும் நினைவு கூர்கின்றனர்,
திரு. லேசி (85), “தேசியவாதிகள் என்று நம்மை அழைத்துக் கொண்ட நாங்கள், கியூபா மற்றும் தென் அமெரிக்க, மத்திய அமெரிக்க மக்களை அவர்கள் பணியை மேலும் தொடர உற்சாகமூட்டுவதை ஆதரித்தோம்.” என்று பதிவு செய்கிறார்கள்.

திரு. ஹாரிஸ், அயல்நாட்டு மாணவர்கள் என்ற அடிப்படையில் விதிமுறைகளுக்கு உட்பட்டு, எங்கள் ஆய்வக குடியுரிமைக்கு பாதகம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதால், கியூபா தொடர்பான எந்த செயல்பாட்டிலும் நாங்கள் இறங்கவில்லை. என்று கூறுகிறார்.

அந்த இளம் தம்பதியினர் வாழ்க்கையில் சிவில் உரிமைகள் தொடர்பான போராட்டங்கள் முக்கிய பங்கு வகித்தன.

கடந்த மாதம் நடந்த ஜனநாயக தேசிய மாநாட்டில் உரையாற்றிய செனட்டர் கமலா, “எனது பெற்றோர்கள் மிகச்சிறந்த அமெரிக்க வழியில் காதலித்தனர். 1960 சிவில் உரிமைப் போராட்டங்களில் நீதிக்காக நடை போட்டனர்.“ என்று கூறினார்.

வலுவான இடதுசாரி மாணவர் இயக்கங்களைக் கொண்ட நாடுகளிலிருந்து வந்த வெளிநாட்டு மாணவர்கள் இங்கு சிவில் உரிமைக்கான இயக்கங்கள் துடிப்பாக செயல்படுவதால் அவர்கள் சொந்த நாட்டில் இருப்பது போன்றே உணர்ந்தனர்.“ என்கிறார் அப்போது பெர்க்ளியில் பணியாற்றி வந்த, ஹாரிஸ் தம்பதியினருடன் நட்பாய் இருந்த அமர்த்தியா சென் (86).

“திடீரென அமெரிக்கா ஒரு புதிய நாடு என்ற உணர்வே இல்லாமல் போய்விட்டது. அவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். அமெரிக்க சமூகத்தில் வேர் விட்டு வளர்ந்தனர்”.

‘அந்த பிணைப்புகள் கிராமமாக மாறின’

1964-ல் முதல் குழந்தை கமலா பிறந்தபோது அரசியல் அலை மீண்டும் மாற ஆரம்பித்தது. வெள்ளை இன மாணவர்கள் முழுமூச்சுடன் எதிர்ப்பில் இறங்கினர். 1950 கால நிறுவனங்களையும், முறைகளையும் நிராகரித்தனர். மூன்றாம் உலக நாடுகளின் விடுதலைக்கான ஆதவு பேச்சு சுதந்திரத்துக்கான அரசியல் உரிமைப் போராட்டங்களுக்கு வழி விட்டு விலகியது.

1964 பேச்சுரிமை போராட்டம்
பெர்க்ளி கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் நடந்த பேச்சுரிமைக்கான போராட்டம் அக்டோபர் 1964ல்

எங்கிருந்தோ வந்த சினிமா நடிகர் ரொனால்ட் ரீகன் தூங்கிக் கொண்டிருந்த பிற்போக்கு வாக்காளர்களை தட்டி எழுப்பி ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கலிபோர்னியா கவர்னரைத் தோற்கடித்தார்.

இல்லினாய்ஸில் இரண்டு பல்கலைக்கழகங்களில் குறுகிய கால ஆசிரியராக ஹாரிஸ் பணி ஏற்றுக் கொண்ட அவர்களது திருமணத்தில் விரிசல்கள் ஏற்படத் தொடங்கின. ஹாரிசுக்கு விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் நிரந்த பேராசிரியர் பதவி கிடைத்த போது சியாமளா தனது குழந்தைகளுடன் மேற்கு பெர்க்ளியிலும், ஓக்லாந்திலும் தங்கி விட்டார்.

குடும்பத்தில் ஏற்பட்ட இந்தப் பிளவு அவர்களது 5 வயது மகளுக்கு வெளிப்படையாகத் தெரிந்தது.
”என் பெற்றோர் ஒருவரை ஒருவர் மிக அதிகமாக நேசிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் தண்ணீரும் எண்ணெயும் போல் ஆகிவிட்டதாக தோன்றியது.” என 2018-ல், எழுதினார் கமலா ஹாரிஸ்.

“ஒரு வேளை அவர்கள் இன்னும் சிறிது வயதானவர்களாக, இன்னும் சிறிது உணர்ச்சி பூர்வமாக பக்குவப்பட்டவர்களாக இருந்திருந்தால் அவர்களது திருமணம் நீடித்திருக்கலாம்.”

“ஆனால் அவர்கள் மிகவும் இளையவர்களாக இருந்தனர். என் தந்தை மட்டுமே என் தாயின் ஒரே “பாய் ஃப்ரண்ட்.”.

திரு. ஹாரிஸ் ஒரு பேராசிரியராக வெற்றிகரமாக பிரபலமானவராக ஆனார். ஆனால் அவரது திருமண வாழ்க்கை தேங்கி போனது..

ஹாரிசும் கமலாவும்
ஹாரிஸ், கைக்குழந்தையான தனது மகள் கமலாவுடன் (1965ல்)

சியாமளா 1972-ல் விவாகரத்துக்கு பதிவு செய்த போது ஆராய்ச்சி அறிவியலாளராக இருந்தார். அந்தப் பிளவு அவரை மிகவும் கோபப்படுத்தியது. பல வருடங்களாக ஹாரிசுடன் அவர் பேசவே இல்லை.

கமலா ஹாரிஸ் தன் பெற்றோர் இருவரையும் தனது பள்ளி பட்டமளிப்பு விழாவிற்கு அழைத்த போது அவரது தாய் வர மாட்டார் என்றே அஞ்சினார் என நினைவு கூர்கிறார்.

“அவர் விவாகரத்து ஆனதில் மிகவும் மனவருத்தத்துடனே இருந்தார் ஏற்கனவே அதற்கு தன்னை தயார் படுத்திக் கொண்டிருந்தாலும் அதற்குப் பின் ஹாரிசுடன் பேச விரும்பவில்லை. நீங்கள் ஒருவரை காதலித்து அது பின்னர் கசப்பானதாக மாறிவிட்டால், அவர்களுடன் பேசுவதைக் கூட விரும்ப மாட்டீர்கள்.” என்கிறார் அவரது சகோதரர் பாலசந்திரன்.

தன் பெண் குழந்தைகளுடனான தொடர்பே முற்றிலும் துண்டிக்கப்பட்டதில் ஹாரிஸ் மிகவும் மனமுடைந்து போனார்.

தேர்தல் பரப்புரையின் போது கமலா தந்தையைப் பற்றி மிகச் சிறிதளவே பேசியிருக்கிறார். அவர் ஏற்கனவே பேட்டிகளை மறுத்து விட்டதோடு, “புகழ் தேடும் செயல்பாடு எனக்கு பிடிக்கவில்லை.. நான் மிகவும் சிரமப்பட்டு அதிலிருந்து விலகி உள்ளேன்.” என்று பதிலளித்தார்.

“விவாகரத்திற்குப் பிறகு அவர் தொடர்பில் இருக்கவில்லை” என்கிறார் கமலா ஹாரிசின் மருமகள் மீனா ஹாரிஸ். “கருப்பின உணர்வு தொடர்பான அவர்களது அனுபவம் பெர்க்ளியிலும் ஓக்லாந்திலும் வளர்க்கப்பட்டதிலிருந்து பெறப்பட்டது. மேற்கிந்திய தீவுகளின் பார்வையில் அல்ல.” என்கிறார் அவர்.
வெற்றிடத்தை கமலா ஹாரிசின் நண்பர்கள் நிரப்பினர். தன் தாய் தனியாக இரு குழந்தைகளை வளர்க்க அரும்பாடுபட்டதாக கமலா ஹாரிஸ் கூறுகிறார். குழந்தைகளை பார்த்துக் கொள்வது,, தேவாலயத்திற்கு செல்வது, காப்பு பெற்றோராக இருப்பது, பியானோ வகுப்புகள் என்று ஆதரவு ஆஃப்ரோ அமெரிக்க சங்கத்திலிருந்து கிடைத்தது.

திரு லாப்ரியால் அறிமுகம் செய்யப்பட்ட ரெஜினா ஷெல்டன் அந்த இளம் குடும்பத்தின் தூணாக இருந்து பாதுகாத்தார். அவரது குழந்தைகள் காப்பகத்தின் மாடியிலேயே அவர்களுக்கு தங்க இடம் கொடுத்தார்‌.

சியாமளாவைப்பற்றி கமலாவின் குழந்தை பருவ தோழி கரோல் போர்ட்டர் (56) கூறுகையில், “சியாமளா அதிக நேரம் உழைத்தார். தனது மகள்களைப் பற்றி பெரிய கனவுடன் இருந்தார்.”
“அவர் உல்லாசமாக வாழவில்லை. புலம்பெயர்ந்தவராக, ஐந்தடி உயரத்துடன், இந்திய உச்சரிப்பில் பேசும் ஒருவருக்கு இது போன்றவை நிகழும் போது, அது அவரை இறுகிப் போக வைத்து விடுகிறது.” என்கிறார்.

ஆனால் ஷெல்டன் தம்பதியினர் எப்போதும் நல்லாதரவாக விளங்கினர். சியாமளா வேலையை விட்டு திரும்ப நேரமாகிவிட்டால் குழந்தைகள் ஷெல்டனின் வீட்டில் தூங்கி விடுவார்கள். அல்லது ஷெல்டன் தனது குழந்தைகளை அனுப்பி அவர்களை தூங்கச் செய்வார்.

ஞாயிறு காலையில் ஷெல்டன் குழந்தைகளை அருகிலிருந்த கருப்பினத்தவரின் தேவாலயத்திற்கு அழைத்துச் செல்வார். இதைத்தான் சியாமளா விரும்பினார். “அவர்களை கருப்பின பெண்களாகவே வளர்த்தார். அவர்களை இரண்டுமாக வளர்க்க விரும்பினார். “ என்கிறார் போர்ட்டர்.

“ஹாரிஸ் குழந்தைகளிடம் படிப்புக் குழுவின் தாக்கம் இருந்தது. அதுதான் அவர்களை இந்தச் சூழலிலும் வாழ பழக்கியது. அந்தக் குழுவின் சிந்தனைகள் ஆழமானவை. கறுப்பினத்தவராக எங்கள் பிரச்சனைகளுக்கு அடியிலிருக்கும் காரணத்தை பார்க்க முனைந்தோம்‌ . அவற்றில் சில குழந்தைகளுக்கும் அந்தக் குடும்பங்களால் கடத்தப்பட்டன.” என்கிறார் தாஷீல்.

தனது புலம் பெயர்ந்த தாயின் சுவீகார குடும்பம், இனப்பாகுபாடு கொண்ட தெற்கிலிருந்து ஒரு தலைமுறை மட்டுமே விலகிய கருப்பின குடும்பம் . அதுவே தன்னை அரசியல்வாதியாக உருவாக்கியதில் வலுவான தாக்கம் செலுத்தியது என்று கமலா அடிக்கடி கூறுவார்.

கமலா ஹாரிஸ் கலிபோர்னியாவின் அரசு தலைமை வழக்கறிஞராகவும் பின்னர் அமெரிக்க மேலவை உறுப்பினராகவும் பதவியேற்கும் போது, திருமதி ஷெல்டனின் பைபிளின் மேல் கைவைத்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டார்.

கடந்த ஆண்டு எழுதிய ஒரு கட்டுரையில், ”எனது அலுவலகத்திலும், என்னுடைய போராட்டங்களிலும் நான் திருமதி. ஷெல்டனை என்னுள் சுமந்து செல்கிறேன்” என எழுதினார்.

– எல்லன் பேரி

(எல்லன் பேரி,நியூயார்க் டைம்ஸ் நியூ இங்கிலாந்து அலுவலகத்தின் தலைவர். இதற்கு முன்பு அவர் ரசியாவிலும், தெற்காசிய அலுவலக தலைவராகவும் இருந்தார். 2011-ல் சர்வதேச செய்தி சேகரிப்புக்காக புலிட்சர் பரிசு வென்ற ஒரு குழுவில் அவர் பங்கேற்றிருந்தார்.)

(www.nytimes.com இணையதளத்தில் வெளியான கட்டுரையின் மொழியாக்கம்)

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்