Aran Sei

ஆர்எஸ்எஸ்-ன் யுபிஎஸ்சி ‘யாகம்’ – சீ.நவநீத கண்ணன்

யு.பி.எஸ்.சி ஆணையத்தால் நடத்தப்படும் குடிமைப்பணி தேர்வுகளில், இந்தாண்டு வெற்றி பெற்று தேர்வான 829 போட்டியாளர்களில் 476 பேர் “சம்கல்ப்” என்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் இணைந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றுள்ளனர் என்ற தகவல் தெரிய வந்துள்ளது.

சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் சிறுபான்மையினர் வெற்றி பெறுவதை ‘யு.பி.எஸ்.சி ஜிகாத்’ என்று மோசமாக வடஇந்திய ஊடகங்கள் சித்தரிக்கும் வேளையில், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஆர்.எஸ்.எஸ் பின்புலத்தில் இயங்கும் இப்பயிற்சி நிறுவனமானது சத்தமில்லாமல் “தூய்மை தேசியவாத” கருத்துடையவர்களைத் தயார்படுத்தி பயிற்சி வழங்கி, அவர்களை ஆட்சிப்பணி அதிகாரத்திற்கு அனுப்பி வைக்கும் பாலமாக செயல்பட்டு வருகிறது.

யு.பி.எஸ்.சி. எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட 26 ஆட்சிப் பணிகளுக்கான குடிமைப்பணி தேர்வுகள் (சிவில் சர்வீசஸ்) ஆண்டு தோறும், முதல்நிலை (Preliminary) முதன்மை (Mains) மற்றும் நேர்முகத் தேர்வு (Personality Test- Interview) என 3 கட்டங்களாக நடத்தப்படுகின்றன.

அதில் “தங்கள் அறக்கட்டளையால் நேர்முகத் தேர்வுக்காக பிரத்தியேகமாக நடத்தப்படும் ‘நேர்காணலுக்கான வழிகாட்டி நடைமுறைத் திட்டத்தில் (Interview Guidance Program)’ பங்குபெற்று பயிற்சி பெற்றவர்களில் 61% பேர் கடந்தாண்டு தேர்வாகியுள்ளதாகவும், கடந்த சில ஆண்டுகளிலும் இதே நிலையிலான தேர்ச்சி விகிதம் தொடர்வதாகவும்” சம்கல்ப் நிறுவனத்தின் இணையதளத்தில் பதிவிட்டுள்ளனர்

மேலும் இந்நிறுவனத்தின் சார்பில், செம்டம்பர் 20-ம் தேதியன்று நடைபெற்ற பாராட்டு விழாவில், மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், நாகலாந்து ஆளுநர் மேதகு R.N. ரவி ஆகியோர் காணொளி காட்சி வாயிலாக கலந்துக்கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினர்.

சம்கல்ப் – துவக்கமும் பயணமும்

1986-ல் ‘சங் பரிவார்’ அமைப்பினால் ஈர்க்கப்பட்டு, டெல்லி உட்பட வடஇந்தியாவில் சில நகரங்களில் பள்ளிக்கூடங்களை நடத்திக்கொண்டு, இளம்தலைமுறை ஆசிரியர்களுக்கு “தேசியவாத மனநிலையை (Rashtriya Bhawna)” கற்பிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் சம்கல்ப் அறக்கட்டளை.

90-களின் தொடக்கத்தில் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சியின்போது, அமைப்பில் இருந்த முக்கிய நிர்வாகிகளிடையே வழக்கமாக நிகழும் கலந்துரையாடல் போது ஒரு கருத்து தோன்றுகிறது,

“கூடிய விரைவிலோ அல்லது பின்னரோ, நாம் அதிக இடங்களில் வெற்றி பெற்று பாஜக ஆட்சி உறுதியாக அமையும்; ஆனால் அப்போது நாம் ஆட்சி அமைக்கும்போது, ஆட்சிப் பணியின்மூலம் வந்த அனைவரும் நம் கருத்துகள், சித்தாந்தங்களுக்கு மாறாக, ‘ஜே.என்.யூ’ வகையிலான சோசலிச இடதுசாரி சார்புடைய அல்லது மையவாத கருத்துக்களுடையவர்கள் உயர் அதிகாரிகளாக இருப்பார்களேயானால், நாம் இத்தகைய கடினமாக உழைத்து ஆட்சி அமைத்ததற்கான அர்த்தம் ஒன்றுமில்லாமல் போய்விடும்; ஆகையால் நாமே யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றிப் பெற விரும்பும் ‘ஆர்.எஸ்.எஸ். கொள்கையால் ஈர்க்கப்பட்ட இளம் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுக்கும் (Swayamsevaks), தேச நலனின்பால் அக்கறை கொண்ட தேசியவாத கருத்துகளால் நாட்டை கட்டமைக்க விரும்பும் இளம் தன்னார்வளர்களுக்கும்’ பயிற்சி வழங்க தனியாக ஒரு பயிற்சி நிறுவனம் தொடங்குவது இன்றியமையாதது” என்கிறார் பாஜகவின் மூத்த தலைவரும் மிசோரம் மாநில ஆளுநராக இருந்தவருமான A.R.கோலி .

பின்பு இதனை கருத்தில் கொண்டு ஆர்.எஸ்.எஸ். செயல்பாட்டாளரான ‘சந்தோஷ் தனேஜா’ அவர்கள் 1996-ம் ஆண்டு ‘சம்கல்ப் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்ததை’ ஆரம்பிக்கிறார். அப்போது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவில் இருந்த பல முக்கிய தலைவர்கள், நிலம் கட்டமைப்பு வசதி உட்பட அனைத்து வகையான உதவிகளும் அளிக்கின்றனர்.

முதன்முதலில் 1996-97-ம் ஆண்டில் 26 சிவில் சர்வீசஸ் ஆர்வலர்களுக்கு பயிற்சியளித்ததில், 14 பேர் யு.பி.எஸ்.சி.யில் தகுதி பெறுகின்றனர்; எனினும் அந்த ஆண்டு மதிப்புமிக்க பதவியான ஐ.ஏ.எஸ்.-ல் மட்டும் யாரும் தேர்வாகவில்லை (ஒருவர் மட்டும் ஐ.பி.எஸ். அதிகாரியாகிறார்).

பிறகு அடுத்த ஆண்டே அந்தத் தடையை உடைத்து, பயிற்சி அளித்த 84 நபர்களில் 13 பேர் ஐ.ஏ.எஸ். ஆகின்றனர், 59 பேர் மற்ற பதவிகளுக்கு தகுதியடைகின்றனர்.

2000-ம் ஆண்டிற்கு பிறகு, பன்மடங்கு உயர்ந்து டெல்லியில் 4 மையங்கள் உட்பட வடஇந்தியாவில் பல்வேறு நகரங்களில் 25-க்கும் மேலான கிளைகளையும் தென்னிந்தியாவில் கோவை உட்பட 5 நகரங்களில் கிளைகளை நிறுவி ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வருடந்தோறும் பயிற்சி வழங்கிவருகின்றன. முதல்நிலைத் தேர்விற்கு ரூ 30,000 கட்டணமும் முதன்மை தேர்விற்கு ரூ 20,000 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

மேலும் இவ்விரு தேர்வுகளிலும் தேர்ச்சியடைந்து நேர்முகத் தேர்விற்கு தயாராகிறவர்களுக்குதான் IGP (நேர்காணல் வழிகாட்டி நடைமுறை) என்னும் மாதிரி நேர்காணல் பயிற்சி 45 முதல் 60 நாட்கள் வரை வழங்கப்படுகிறது. இந்த சிறப்பு நேர்காணல் பயிற்சி பெற, சம்கல்ப் நிறுவனத்திலேயே முதல் இரு தேர்வுநிலைகளுக்கு பயிற்சி பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதில்லை என்பதும் மற்ற பயிற்சி நிறுவனங்களை ஒப்பிடும்போது குறைந்த அளவிலான கட்டணமே வசூலிக்கப்படுவதும், போட்டியாளர்கள் இந்த பயிற்சி நிறுவனத்தை நாடுவதற்கான காரணமாகப் பார்க்கப்படுகிறது.

ஆனால், 2010-க்கு பின் இப்பயிற்சி திட்டத்தின்கீழ் பயிற்சி பெறும் மாணவர்கள் தேர்வில் அடையும் வெற்றி விகிதம் 50%-க்கும் மேல் இருப்பதும், 2015-க்கு பிறகு இது 60%-க்கும் மேல் உயர்ந்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

ஆண்டு தோறும் யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றிப் பெற்ற இந்நிறுவன மாணவர்களை வாழ்த்த பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ்.யின் முக்கிய தலைவர்கள் கலந்துக் கொள்வது வழக்கம். அதன்படி சென்றாண்டு ‘உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆர்.எஸ்.எஸ்.-ன் மிக முக்கிய நிர்வாகியுமான கிருஷ்ண கோபால் ஆகியோர் கலந்துக்கொண்டனர்; கிருஷ்ண கோபால் சம்கல்ப் அறக்கட்டளையின் வழிகாட்டிகளில் ஒருவர்’ என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்கல்ப் நிறுவனம் பற்றி ஆர்.எஸ்.எஸ். ஊழியர் ஒருவரின் கருத்து:

‘த பிரிண்ட் (The Print)’ ஆங்கில பத்திரிக்கை இது தொடர்பான செய்தி வெளியிட்டதில், சம்கல்ப் பயிற்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஆர்.எஸ்.எஸ். ஊழியர் ஒருவர் கருத்து தெரிவித்ததைப் பதிவுசெய்துள்ளது; அதில் அவர் “நீங்கள் சம்கல்ப் அறக்கட்டளையை மற்ற ஆர்.எஸ்.எஸ்-வுடன் இணைந்த அல்லது தொடர்பில் இருக்கும் கட்சி மற்றும் அமைப்புகளான பாஜக, விஷ்வ இந்து பரிஷத், ஏ.பி.வி.பி, பாரதிய மஜ்தூர் சங் போன்றவற்றைப் போல் கருதாமல், சம்கல்பை ஆர்.எஸ்.எஸ் நேரடி கட்டுப்பாட்டிலுள்ள ஆர்.எஸ்.எஸ். கொள்கையால் ஈர்க்கப்பட்டு தொடங்கி இயங்கிவருகின்ற அமைப்பாகவே கருதலாம்” என்கிறார்.

“பாஜக ஒரு வல்லமைமிக்க அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், தேசியவாத கருத்துக்களுடையவர்கள் ஆட்சிப்பணி அதிகாரிகளாக உருவெடுக்கவேண்டிய தேவையை சம்கல்ப் நிறைவேற்றுவதாகவும்; இப்போது பல தேசியவாதிகள் உயர் அதிகாரத்தில் இருக்கிறார்கள், ஆனால் இது அன்றைய காலகட்டத்தில் சாத்தியமில்லை” என்று தெரிவித்துள்ளார். அதேசமயம் சம்கல்பில் சேரவிரும்பும் சிவில் சர்வீஸ் ஆர்வலர்கள் ஆர்.எஸ்.எஸ். மற்றும் அதன் துணை அமைப்புகளை சார்ந்திருக்கவேண்டிய அவசியமில்லை என்றும், ஆனால் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் அமைப்புகளுடன் நல்லுறவில் இருக்கின்ற ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகளிடம், இம்மாணவர்கள் கலந்துரையாடல் நடத்துவதன்மூலம், வாழ்நாள் முழுவதும் இத்தொடர்புகள் ஒருவித பிணைப்பை அவர்களிடத்தில் ஏற்படுத்தி, அவர்களின் தேசநலன் சார்ந்த சிந்தனையை தேசியவாத கருத்துகள்மூலம் செலுமைப்படுத்த முடியுமென்று நம்புவதாக” கூறியுள்ளார்.

முன்னாள் இந்நாள் குடிமைப் பணி அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களின் கருத்துகள் இவ்விவகாரம் தொடர்பாக கருத்துதெரிவித்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், “முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளில் வென்றவர்கள் நேர்முகத் தேர்விற்கு தயாராகும் இடைப்பட்ட 2-3 மாதங்களில் சில பயிற்சி நிறுவனங்கள் நடத்தும் ‘மாதிரி பயிற்சி நேர்காணல்களில் (Mock Practice Interviews) பங்கேற்பது வழக்கம்தான் எனவும், அதில் அதிகப்படியானவர்கள் ‘சம்கல்ப்’ நிறுவனத்தில் நேர்காணலுக்காக பயிற்சிப் பெற்றிருக்கக்கூடும், அதனால்தான் இந்தளவிற்கான வெற்றி விகிதத்தை அவர்கள் அடைந்திருப்பதாகவும்” அவர் தெரிவித்தார்.

“ஆகவே உண்மையாகவே முதல்நிலை, முதன்மை, நேர்காணல் ஆகிய மூன்று தேர்வுகளுக்கும் இந்த பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று, தேர்வானவர்கள் எத்தனை பேர் என்ற முழுவிவரம் தெரிந்தால்தான், இதில் முழு முடிவிற்கு வரமுடியும் என்றவர், அநேகமாக அவர்கள் நடத்தும் மாதிரி பயிற்சி நேர்காணல்களில் தற்போது பணியில் இருக்கும் மூத்த மற்றும் ஓய்வுபெற்ற ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கலந்துக்கொண்டு, போட்டியாளர்களுக்கு அவர்களின் ஆளுமை தொடர்பான குறை-நிறைகளை எடுத்துக்கூறுவதால், இந்நிறுவனத்தில் பயிற்சி பெறும் தேர்வர்கள் அதிகளவில் சோபித்திருக்கக்கூடும்” என்றார்.

அதேசமயம், “அசுர பலத்தில் வெற்றிப் பெற்று, பெரும்பான்மை அரசியலை மேற்கொள்ளும் ஒரு அரசு, கட்டாயம் யு.பி.எஸ்.சி. போன்ற அதிகாரத்துவம் மிக்க மற்றும் சக்தி வாய்ந்த முக்கிய அதிகாரிகளை நியமிக்கும் தேர்வுமுறைகளில், அவர்களின் தலையீடு இருக்கும் என்பதை மறுக்கமுடியாது; எனினும் யு.பி.எஸ்.சி. எவ்வித பக்க சார்பற்ற தன்னாட்சி அமைப்பாக இருக்கும்வரை, அதன் நம்பகத்தன்மையை இழக்காது” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

அவர் பேசியதை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்ததில், “2018-ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் பங்கேற்று, வெற்றிப் பெற்ற முதல் 20 தேர்வர்களில் 13 பேர் தங்கள் நிறுவனத்தில் நடத்தப்பட்ட பிரத்யேக நேர்காணல் வழிகாட்டி பயிற்சியில் பங்கேற்று பயிற்சிப் பெற்றதாக சங்கல்ப் நிறுவனம், தனது டிவிட்டர் பதிவில் அப்போது பதிவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து இன்னும் ஆய்ந்ததில், 2018-ம் ஆண்டு நடந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகளில், நேர்முகத் தேர்வில் மட்டும் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 15 தேர்வர்களில் 10 பேர் சம்கல்ப் நிறுவனத்தில் பயிற்சி பெற்றிருப்பது தெரியவந்துள்ளது

(அவர்களில் பெரும்பாலானோர் அகில இந்திய அளவிலான தரவரிசையில் பின்தங்கியிருப்பதும், முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் பெற்றிருப்பதும் பார்க்கமுடிகிறது).

இது தற்செயலாக நடந்ததா என்பது குறித்து, சவில் சர்வீஸ் தேர்வில் சமீபத்தில் வென்று, தற்சமயம் பணியில் இருக்கும், பெயர் குறிப்பிட விரும்பாத மற்றொரு குடிமைப்பணி அலுவலர் ஒருவர் கூறுகையில்,

“யு.பி.எஸ்.சி. நேர்முகத் தேர்வு நடத்தும் குழுவில் உயர்சாதியினரின் ஆதிக்கம் இருப்பதாகவும், ஓ.பி.சி/ எஸ்.சி/ எஸ்.டி/சிறுபான்மை பிரிவு போட்டியாளர்களைத் தனித்தனியாக அழைப்பதும், நேர்காணல் கேள்விகள் கேட்பதிலும் இப்பிரிவினருக்கு பாரபட்சம் காட்டுவதாகவும்” தெரிவித்தார். மேலும் 2015-ல் யு.பி.எஸ்.சி. உறுப்பினராகவும் அதன்பின் 2018-ல் யூ.பி.எஸ்.சி. தலைவராகவும் நியமிக்கப்பட்ட ‘அரவிந்த் சக்சேனா’, அதற்குமுன் நாட்டின் உட்சபட்ச உளவு அமைப்பான ‘ரா (RAW)’ வில் முக்கிய பொறுப்பில் இருந்ததாகவும், இதற்கு முன்பு இந்தளவிற்கு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டிலும் ஆளும் கட்சியில் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ‘ரா’ போன்ற உளவு அமைப்பில் இருந்து, அதுவும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறாத ஒருவர் நியமிக்கப்பட்டது இதுவே முதல்முறை எனவும்” கருத்து தெரிவித்தார்.

இதுதொடர்பாக முதன்முதலில் ட்விட்டரில் பதிவிட்ட டெல்லியை அடிப்படையாகக் கொண்ட பத்திரிகையாளர் விஜய்தா சிங் பதிவிட்டார். அவரைத் தொடர்ந்து மூத்த பத்திரிகையாளர் திரு.ராதாகிருஷ்ணனும் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.செந்தில்குமாரும் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டனர்.

மேலும் இதுதொடர்பாக மின்னம்பலம் யூட்யூப் சேனலில் பேசியுள்ள பொருளாதார நிபுணர் திரு. ஜெயரஞ்சன், ஒரு தனியார் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்று யு.பி.எஸ்.சி.க்கு தேர்வாகும் வெற்றியாளர்களைப் பாராட்ட, ஏன் ஆண்டுதோறும் மத்திய அரசின் முக்கிய கேபினட் அமைச்சர்களும் தற்போது அரசின் உயர் பொறுப்பில் இருப்பவர்களும் கலந்துக்கொள்கின்றனர் எனவும், அதிலும் அவர்கள் அதுவரை ஆட்சிப் பணிக்கு நியமிக்கப்படாத போது அதற்குள் அவர்களை வாழ்த்த வேண்டிய தேவை என்ன?? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆகவே இது தெள்ளத் தெளிவாக ‘அவர்களின் கொள்கை சார்ந்த அரசியலை வலுப்படுத்த உதவும் நபர்களையே, உயர்பதவிகளுக்கான அதிகாரத்துவத்தில் அமர்த்துவதற்கான ஏற்பாடாகப் பார்க்கப்படுகிறது.

ஜனநாயகத்தில் நாட்டை உண்மையாக ஆளும் எஜமானர்கள் ‘மக்களாகிய’ நாமாகவே இருக்கவேண்டும். ஆனால் நடைமுறை யதார்த்தத்தில் நாட்டை ஆள்பவர்கள் அரசியல்வாதிகளைவிடவும் அரசு அதிகாரிகளே என்றால் அது மிகையல்ல; ஏனெனில் அரசியல்வாதிகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் என்ற ஜனநாயக தேர்வுமுறை வைக்கப்பட்டு, அவர்கள் மக்களுக்கு ஊழியம் செய்ய தகுதி பெற்றவர்களா என்று அப்போது ஆட்சி செய்பவர்கள் தங்களை நிரூபித்துக் கொண்டும், முன்பு ஆட்சி செய்தவர்களுக்கும் புதியவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுக் கொண்டும் வருகின்றன.

ஆனால் ஒருமுறை மட்டும் தேர்வு எழுதி வெற்றிபெற்று, 30 முதல் 35 ஆண்டுகள் வரையிலும் அதற்கு மேலும், நாட்டின் மக்களின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் வல்லமை படைத்த, பல்வேறு நாட்டு நலன் சார்ந்த கொள்கை முடிவெடுக்கும் பல திட்டங்கள் சட்டங்கள் முதலானவற்றைக் கொண்டுவரும் சூத்திரதாரிகளாக இருக்கும் அரசு உயர் அதிகாரிகளான குடிமைப் பணி ஊழியர்கள், குறிப்பிட்ட ஒரு பயிற்சி மையத்தில் இருந்துமட்டும் பெருமளவில் வருவதும், அவர்களில் சிலரோ பலரோ குறிப்பிட்ட ஒரு அரசியல் சிந்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதும் ‘ஜனநாயகப் பரவலையும் பன்மைத்தன்மையையும் குலைத்து, ஒற்றைத்தன்மையுடைய தன்னலக்குழு சார்ந்த, ஏகபோக எதேச்சதிகாரத்துவத்திற்கு’ இட்டுச்செல்லும் ஆபத்து உள்ளது.

இது எவ்வாறு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சில ஆண்டுகளுக்கு முன்பு, இராணுவ அதிகாரத்துவம் கோலோச்சியதற்கு வழிவகை செய்ததோ, அதுபோல் நம் நாட்டில் இந்துத்துவ அதிகாரத்துவம் கோலோச்சுவதற்கு வழிசெய்யும் என்று அரசியல் விமர்சகர்கள் அபாய மணியை எழுப்புகின்றனர்.

References:

RSS-backed IAS institute has been quietly grooming ‘nationalist’ civil servants since 1986

https://www.dailyo.in/politics/sangh-parivar-rss-bjp-narendra-modi-civil-services-ias-krishna-gopal-nationalism-samkalp/story/1/11047.html

– சீ. நவநீத கண்ணன்
(கட்டுரையாளர் மருத்துவ இளநிலை மாணவர்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்