Aran Sei

டிஆர்பி வழக்கில் ரிபப்ளிக் டிவியைக் காப்பாற்ற முயல்கிறதா யோகி ஆதித்யநாத் அரசாங்கம்?

ந்த மாதத் தொடக்கத்தில் மும்பையில் கண்டுபிடிக்கப்பட்ட டிஆர்பி மோசடி கும்பலை மத்தியப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அழுத்தம் தருவற்கு உத்தரப்பிரதேச அரசைத் தூண்டியது எது?

தொலைக்காட்சி மதீப்பிட்டுப் புள்ளிகள் (டிஆர்பி) வழக்கை மும்பை மாநிலக் காவல் துறையின் கையிலிருந்து பிடுங்கி மத்திய அரசு கட்டுப்படுத்தும் ஒரு விசாரணை நிறுவனத்திடம் ஒப்படைக்க உத்தரப் பிரதேச அரசு உதவு செய்கிறதா எனும் கேள்வி எழுந்துள்ளது.

கடந்த அக்டோபர் 8-ம் தேதியன்று செயற்கையாக டிஆர்பி புள்ளிகளை உயர்த்துவதற்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாகப் பல செய்தி நிறுவனங்கள் மீது மும்பை போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர்.

விசாரணையின் ஒரு பகுதியாக டிஆர்பி புள்ளிகளை மோசடி செய்ததாக மத்திய பாஜக அரசிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் ரிபப்ளிக் நிறுவனத்தின் பல உயர் அதிகாரிகள் விசாரிக்கப்பட்டனர்.

ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி இது மஹராஷ்டிரா (சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்) அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று குற்றம் சாட்டியிருந்தார். பாஜக தலைவர்கள் இது ஊடகங்களின் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என்று குரல் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் உ.பி அரசின் திடீர் தலையீடு பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஏனேனில் தங்கள் மாநிலத்தில் நடக்கும் குற்றங்கள் தொடர்பான விஷயங்களிலே கூட முன்னுரிமை கொடுக்காதது உ.பி அரசு இயந்திரம். இக்காரணத்தினால்தான் உத்தரப்பிரேதசம் தேசிய குற்ற ஆவணப் பணியகத்தின் தரவரிசையில் நாட்டின் பிற மாநிலங்களை விட முன்னிலையில் உள்ளது.

டிஆர்பி தொடர்பான சர்ச்சை பல்வேறு பரிணாமங்களைச் சந்தித்து தற்போது இந்த முழு விவகாரமும் சிபிஐ-யின் கைக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தச் செயல் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானதாகும். மத்திய அரசு தன்னுடய அரசியல் காரணத்திற்காக மாநில அரசின் பிரச்சனைகளில் தலையிடுகிறது.

“சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்பது விசாரணையில் இருந்தபோது அது கொலைதான் என்று ஒரு செய்தி நிறுவனம் மக்களுக்குச் சொல்வதுதான் பத்திரிகை தர்மமா “ என்று ரிபப்ளிக் டிவிக்குக் கேள்வி எழுப்பியிருக்கிறது மும்பை உயர்நீதி மன்றம்.

மேலும் ”ஒரு செய்தி நிறுவனம் சட்டத்தைத் தெரியாமல் நடந்துகொள்வது ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், நடந்திருக்கும் மரணத்தில் நீங்களே விசாரணையாளராகவும் வழக்கறிஞர்களாகவும் நீதிபதிகளாகவும் நடந்துகொண்டால் நாங்கள் எதற்கு இருக்கிறோம்? எங்கள் வேலை என்ன?“ என்று ரிபப்ளிக் டிவியைக் கடுமையாகச் சாடியுள்ளனர் மும்பை உயர்நீதி மன்ற நீதிபதிகள் என்று லைவ் லா  செய்தி  வெளியிட்டிருக்கிறது.

பாஜக அரசிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கும் ஒரு செய்தி நிறுவனத்திற்கு இது போன்ற அழுத்தங்கள் வருவதை விரும்பாத பாஜக, உ.பி அரசின் உதவியுடன் மூன்று அம்சங்களைக் கொண்ட திட்டத்தின்படி ரிபப்ளிக் டிவியை நீதி விசாரணையிலிருந்து தப்பிக்க வைக்க முயல்கிறது.

Photo Credt : The Hindu

திட்டத்தின் முதல் அம்சம் :

அக்டோபர் 17-ம் தேதி அடையாளம் தெரியாத நபர் லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் சேனல்களின் பெயரைக் குறிப்பிடாமல் சில செய்தி நிறுவனங்கள் டிஆர்பி புள்ளிகளை உயர்த்துவதற்காக லஞ்சம் கொடுப்பதில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார்.

காவல் துறையில் புகாரளித்த கமல் ஷர்மா தன்னை `கோல்டன் ராபிட்ஸ் கம்யுனிகேஷன் பிரைவேட் லிமிடட்’ எனும் பிரபலமில்லாத விளம்பர நிறுவனத்தின் இயக்குநர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். எந்த ஒரு செய்தி நிறுவனத்தின் பெயரையும் குறிப்பிடாமல் புகாரளித்த அவர் டிஆர்பி புள்ளிகள் சட்டவிரோதமான முறையில் உயர்த்தப்படுவதால் விளம்பரம் மூலம் வரும் வருமானம் பாதிப்படைந்துள்ளதாகக் குற்றம் சாட்டினார். அவருடைய குற்றச்சாட்டு மிகவும் தெளிவற்ற முறையில் இருந்தது.

பொதுவாக இது போன்ற பெயர் குறிப்பிடப்படாத புகார்கள் காவல்துறையினரால் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. பாலியல் வன்முறை, கொலை போன்ற கொடூரமான குற்றங்களுக்கே முதல் தகவலறிக்கையைத் (எஃப்ஐஆர்) தாக்கல் செய்வதில் தயக்கம் காட்டும் உ.பி அரசு, இது போன்ற ஆதாரமற்ற புகாரில் உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்தது எதனால்?

அது மட்டுமன்றி லக்னோவின் காவல் துறை ஆணையர் சுஜித் பாண்டே மற்றும் மாநிலத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் குமார் அவஸ்தி ஆகிய இருவரும் இவ்விகாரத்திற்கு அதிக முன்னுரிமை கொடுத்து வருகின்றனர்.

திட்டத்தின் இரண்டாவது அம்சம் :

புகாரளித்த 48 மணி நேரத்திற்குள்ளாகவே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய அரசிற்குக் கடிதம் எழுதியது உ.பி அரசு.

டிஆர்பி மோசடிக் கும்பல் பற்றிய மிகப் பெரிய குற்றச்சாட்டு எழுந்த மும்பையில் கூட உள்ளூர் காவல் துறையினாலேயே அந்த விவகாரம் கையாளப்பட்டு வந்தது. நியாயப்படி தேவைபட்டிருந்தால், மகாராஷ்டிரா அரசுதான் சிபிஐயை நாடியிருக்க வேண்டும்.

ஆனால் அவர்களே மாநிலக் காவல்துறையினரை வைத்து இந்த விவகாரத்தைக் கையாளும் போது உ.பி அரசு சிபிஐ நடவடிக்கையைக் கோர காரணம் என்ன?

செயற்கையான காரணிகளை உருவாக்கி அதன் மூலம் இந்த வழக்கை மாநில அரசின் கைகளிலிருந்து மத்திய அரசுக்கு மாற்றவே உதவி செய்திருக்கிறது உ.பி அரசு.

வியக்கத்தக்க விஷயம் இதில் என்னவென்றால் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றக் கோருவதில் அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் காட்டிய வேகத்தை  கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தில் நடந்த ஹத்ராஸ் கும்பல் பாலியல் வழக்கில் காட்டவில்லை. ஒரு வாரம் கழித்தே அந்த வழக்கு சிபிஐ யிடம் மாற்றப்பட்டது.

உ.பியில் ஆளும் பாஜக அரசின் எம்எல்ஏ வான குல்திப் சிங் செங்கார் குற்றம்சாட்டப்பட்ட உன்னாவ் கும்பல் பாலியல் வல்லுறவு வழக்கு பெரிய அளவில் மக்கள் போராட்டம் நடந்தும் கூட சிபிஐக்கு மாற்றப்படாமல் இருந்தது. பிரதமரின் தலையீட்டிற்குப் பின்னரே அது மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டத்தின் மூன்றாவது அம்சம்

மத்திய அரசின் பணியாளர் மற்றும் பயிற்சிக் கழகம் (டிஒபிடி) உ.பி அரசின் வரப்பெற்ற  சில மணி நேரங்களிலேயே டிஆர் பி வழக்கை சிபிஐக்கு மாற்றியது.

லக்னோவின் காவல் நிலையங்களில் பல கொடூரமான குற்றங்களைச் செய்தவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட எஃப்ஐஆர்கள் கேட்பாரற்றுக் கிடக்கும் நிலையில், இந்த வழக்கிற்குக் காவல் ஆணையர் இவ்வளவு முக்கியத்துவம் அளிப்பது ஏன்?

எஃப்ஐஆர் விவரங்களை ஊடகங்களுக்கு அளித்து பேட்டியளித்த காவல் ஆணையர் பாண்டே ”டிஆர்பி புள்ளிகளைச் சட்டவிரோதமான முறையில் உயர்த்துவது விரைவான மற்றும் அதிக லாபம் ஈட்டும் நோக்கம் கொண்டது. இது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் விளம்பரங்களுக்கும் இடையே இருக்கும் சமநிலையைக் குலைக்கும்“ என்று கூறினார்.

பாஜக மகாராஷ்டிராவில் ஆட்சியை இழந்த பிறகு, மகாராஷ்டிரா அரசு விசாரித்து வரும் வழக்கை மத்திய அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்வது இது மூன்றாவது முறையாகும்.

பீமா கோரேகான் வழக்கு – தேசியப் பாதுகாப்பு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது.
சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் – மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரித்து வருகிறது.
டிஆர்பி முறைகேடு – மத்தியப் புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரித்து வருகிறது.

மும்பை போலீஸின் விசாரணை தங்களை அம்பலப்படுத்தி விடுமோ என்று அஞ்சிக்கொண்டிருந்த ரிபப்ளிக் டிவி தற்போதுதான் நிம்மதி பெருமூச்சு விடத் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் எந்த மூலையில் ஒரு குற்றம் நடந்தாலும் அர்ப்பணிப்புடன் அதை எதிர்த்துப் போர் நடத்தும் உ.பி அரசிற்கு அவர்கள் நன்றி சொல்ல வேண்டும்.

கட்டுரை & படங்கள் – நன்றி thewire.in
மொழியாக்கம் செய்யப்பட்டது

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்