Aran Sei

கொரோனா ஊரடங்கு தளர்வும் பொதுப் போக்குவரத்தும் : ஷியாம் சுந்தர்

க்டோபர் மாதத்துக்கான ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு பெரிய அளவு மாற்றங்களை செய்யவில்லை. ஹோட்டல்களில் இரவு 8 மணி வரை அமர்ந்து சாப்பிடலாம் என்பதற்குப் பதிலாக இரவு 9 மணி வரை சாப்பிடலாம் என்பது மட்டும்தான் குறிப்பிடும்படியான தளர்வு.

சென்னையில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் புறநகர் மின்சார ரயில் சேவைகளை இயக்குவதற்கு இன்னும் அனுமதி தரவில்லை.

மெட்ரோ ரயில்கள் கடந்த மாதத்திலிருந்து ஓடத் தொடங்கி விட்டன. முதலில் ஏசி இல்லாமல் இயக்கப்பட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளுடன் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டன. இப்பொழுது அந்தக் கட்டுப்பாடுகளும் நீங்கி ஏசி வசதியுடன் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுவது பல பயணிகளுக்கு உதவியாக அமைந்துள்ளது.

ஆனால் மெட்ரோ ரயில் பெரும்பாலான தடங்களை இன்னும் இணைக்கவில்லை. மெட்ரோ ரயிலுக்கான கட்டணங்களும் அதிகமாக உள்ளன.

அரசு இப்பொழுது பல கட்டுப்பாடுகளை விதித்து பேருந்துகளை இயக்கி வருகிறது. பேருந்துகள் இயக்கப்பட்ட ஆரம்ப காலத்தில் நடத்துநர்களும் கட்டுப்பாடுகளை மதித்து பேருந்துகளை இயக்க உதவினர்.

ஒரு இருக்கையை விட்டு ஒருவர் அமர வேண்டும் என்று அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி ஒரு பேருந்தில் 25 நபர்கள் மட்டும்தான் பயணம் செய்ய முடியும். ஆனால் காலை நேரத்தில் இயக்கப்படும் பேருந்துகளில் 60 முதல் 80 நபர்கள் வரை கூட பயணம் செய்வதை பார்ப்பது சாதாரண காட்சியாகி விட்டது.

இப்பொழுது பெரும்பாலான அலுவலகங்கள் இயங்க தொடங்கி விட்டதால் பயணியர் பயணம் செய்வது அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. அதனால் எந்தக் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்க முடியாத சூழ்நிலையே நிலவுகிறது.

பெரும்பாலான நேரங்களில் அரசுப் பேருந்துகளில் கட்டுப்பாடுகள் காற்றில் பறக்க விடப்படுவதை நாம் பார்க்கிறோம். தினமும் பிஸியான நேரத்தில் மக்கள் பேருந்துகளில் படிக்கட்டில் தொங்கி பயணம் செய்யும் காட்சிகளை இப்போது தினசரி காண முடிகிறது.

புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டால் கணிசமான பயணிகள் மின்சார ரயிலில் பயணம் செய்யத் தொடங்குவர். அதனால் பேருந்துகளில் ஓரளவிற்கு கூட்டத்தை கட்டுப்படுத்த முடியும். வேலைக்குச் செல்லும் அனைவராலும் டாக்ஸி அல்லது ஆட்டோவில் செல்வதற்கு முடியாது.

புறநகர் மின்சார ரயிலில் குறைந்த பட்சமாக ஐந்து ரூபாய்க்கு பயணம் செய்ய முடியும். நகரத்திலேயே குறைவான செலவில் பயணம் செய்வதற்கு மின்சார ரயில்களை மக்கள் பெரிதும் நம்பி இருக்கிறார்கள். வேலைக்குச் செல்வதற்கும் மாதாந்திர கட்டணம் செலுத்தி குறைந்த கட்டணத்தில் பயணம் செய்ய மக்களுக்கு துணையாக இருப்பது புறநகர் மின்சார ரயில்கள் தான்.

மேலும் புறநகர் மின்சார ரயில்கள் அதிக வழித்தடங்களை இணைக்கின்றன. கும்மிடிப்பூண்டி முதல் செங்கல்பட்டு வரை, அரக்கோணம் முதல் சென்னை சென்ட்ரல் வரை பல தடங்களை இணைத்து மக்களுக்கு பயணிப்பதில் பெரிதும் உதவுவது புறநகர் மின்சார ரயில் சேவைதான்.

இந்தச் சூழ்நிலையில் மக்களுக்கு பெரிதும் உதவும் மின்சார ரயில்களை தொடர்ந்து இயக்காமல் இருப்பது பேருந்துகளில் கூட்டம் சேர்ப்பதற்குத் தான் உதவும். பல மாநிலங்களில் புறநகர் மின்சார ரயில்கள் இயங்க தொடங்கி விட்டன. அதனால் புறநகர் ரயில்களை விரைவில் இயக்குவது பெரிதும் பயன்தரும்.

ஷியாம் சுந்தர்

மேலும் இரவு நேர பேருந்துகள் இயக்கப்படவில்லை. தனியார் பேருந்துகளுக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதால் தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்னும் தமது பேருந்துகளை இயக்கவில்லை. அரசுப் பேருந்துகளில் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு விட்ட பிறகு தனியார் பேருந்துகள் மட்டும் கட்டுப்பாடுகளை ஏற்க வேண்டும் என்று அரசு ஆணை இடுவது கூட்ட நெரிசலை அதிகரிக்கத்தான் உதவுகிறது.

அதனால் அதிக பேருந்துகள் இயக்குதல், தனியார் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்தல், புறநகர் ரயில் சேவையை இயக்குதல் போன்ற நடவடிக்கைகளை அரசு எடுப்பது தான் பேருந்துகளில் கூட்டத்தை குறைக்க உதவும், கொரோனா நோய்த் தொற்றையும் தடுக்க உதவும்.

– ஷியாம் சுந்தர்
(கட்டுரையாளர் ஐ.டி துறையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்து வருபவர்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்