Aran Sei

அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம் – கை கொடுத்ததா ‘முத்ரா’ திட்டம்?

நாள்தோறும் அரசியல்வாதிகளின் மீது வேலைவாய்ப்பின்மை குறித்த அழுத்தம் அதிகரித்து வருகிறது. இது மாநில தேர்தல்களில் வேலைவாய்ப்பு முக்கிய பங்காற்றுவதிலிருந்து தெரிகிறது. பதினைந்திலிருந்து 29 வயதிற்குட்பட்டோருக்கு இடையே வேலையின்மை 2012ம் ஆண்டிலிருந்து 2018 க்குள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது 6% லிருந்து 18% ஆக உயர்ந்துள்ளது என்பதையும், பட்டதாரிகளுக்கிடையே வேலைவாய்ப்பின்மை 19% லிருந்து 36 சதவீதமாக உயர்ந்துள்ளது என்பதையும் காணும் போது அந்த அழுத்தம் ஆச்சரியமான ஒன்றல்ல.

பெருமளவிலான இளைஞர்கள் வேலைக்குத் தயாராகி வருவதும், தொடர்ந்து அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மையை அறியும் போதும், தங்கள் நியாயத்திற்காக இறுதியில் குரலெழுப்புவது இயல்பானது. ஆனால் இந்த அழுத்தங்கள் கொள்கை வகுப்பவர்களுக்கு கடத்தப்படவில்லை.

சட்டத்தை உருவாக்குபவர்கள், வாக்காளர்களிடமிருந்து வேலைவாய்ப்பினால் தோன்றும் அழுத்தத்தை கொள்கை வகுப்பவர்கள் மீது மாற்றுவதில்லை. கொள்கை வகுப்பவர்களான நிர்வாகத் தரப்பினர், கொள்கை ஆலோசகர்கள், கல்வியாளர்கள், உள்ளூர் பொதுமக்கள் ஆகியோர் வாக்காளர்களுக்கு ஓரளவு நல்ல வேலைகளைத் தரும் வாய்ப்புகளை உறுதிசெய்யும் முன்மொழிவுகளைத் தருவதை ஏளனமாக நினைக்கின்றனர். எனவே அரசுகளும் இவர்கள் உதவியை நேரடியாக கோருவதில்லை.

தனியார் நிறுவனங்களும் அரசைப் போலவே ஆட்குறைப்பு செய்து வருகின்றன. அரசும், தனியார் நிறுவனங்களும், வேலையாட்கள் அதிகமாகத் தேவைப்படும்  தொழில்களுக்கு வெளியிலிருந்து (outsourcing) ஆட்களைத் தேர்வு செய்கின்றனர். இதனால் ஓரளவு வேலைப் பாதுகாப்பைக்  கொடுத்து வந்த அத்தியாவசிய அரசுத்துறை மற்றும் தனியார் பெரு நிறுவனங்கள் அதனை நேரடியாகவே தவிர்க்கின்றனர். ஒப்பந்தத் தொழிலாளர்களை அமர்த்திக்கொள்வது, தொழிலாளர்களுக்கு ஆரம்பத்திலிருந்தே ஓய்வூதியம் மற்றும் வருங்கால வைப்பு நிதி மூலம் தங்கள் சேமிப்பை வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பைத் திருடிக் கொள்வதை அனைத்து மட்டங்களிலும் ஊக்குவிக்கிறது. ஜி20 நாடுகளிலேயே எந்த வித சமூகப் பாதுகாப்பும் இல்லாமல் வேலை செய்பவர்கள் அதிகமாக உள்ள நாடுகளில் 91 சதவீதம் அத்தகையவர்களைக்  கொண்ட நாடு இந்தியா மட்டுமே.

தற்போதைய வேலை வாய்ப்பின்மைக்கு அரசு கூறும் பதில் இரண்டு. ஒன்று அப்படி ஒரு பிரச்சினை இருப்பதையே மறுப்பது. அரசு வேகமாக தனது சொந்த புள்ளிவிவரங்கள் உட்பட அனைத்து தரவுகளையும் அழித்து விட்டது.

இரண்டாவதாக, மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும், இந்த பிரச்சனையை திசை திருப்பி, நாம் வேலைத் தேடுபவர்களை அல்ல வேலை கொடுப்பவர்களை உருவாக்க வேண்டும் என்றனர். அதாவது நிறைய வேலை தரும் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்பதே இதன் விளக்கம். ஆனால் யார் அல்லது எப்படி அந்த நிறுவனங்களை உருவாக்குவது?  மோடி அரசு கொண்டு வந்த  முத்ரா வேலைவாய்ப்புத் திட்டம்‌ போதுமான வேலைவாய்ப்பு தரும் நிறுவனங்களை உருவாக்க முடியாது என்பது மட்டுமல்ல, உருவாக்கவில்லை. இதனால் வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தீர்க்கப்படாமலே நீடிக்கின்றது.

சுய வேலை வாய்ப்பைப்பெருக்க அரசு கொண்டு வந்த முத்ரா திட்டம் போன்றவற்றிற்குப் பின்னரும் 2005-12 வரை, சுய வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள இளைஞர்களின் எண்ணிக்கை 81 லட்சத்திலிருந்து 63 லட்சமாக குறைந்து விட்டது. இது 2012-18ல் 49 லட்சமாக மேலும் குறைந்து விட்டது. இத்தனைக்கும் 95% முத்ரா கடன்கள் மிகச் சிறு தொழில்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.

அதே வேளையில், இன்று தங்களால் வேலை தர முடியாது எனக் கூறும் மக்கள் பிரதிநிதிகள் அதிகரித்து வருகின்றனர். அவ்வாறு,  அரசினால் வேலை வாய்ப்பை உருவாக்க முடியவில்லை எனில் இளம் பட்டதாரிகளை எப்படி உருவாக்க முடியும் என்ற மிகப் பெரும் கேள்வி எழுகிறது.

உண்மையில் இது ஒரு குயுக்தியான திருப்பத்தை ஏற்படுத்தி இலக்கை எட்ட முடியாத தூரத்திற்குத்  தள்ளி விட்டது. இது பிரச்சினையைத் தீர்க்கவில்லை. மாறாக மேலும் ஒரு புதிய பிரச்சினையை உருவாக்கி விட்டது. எப்படி ஒருவர் தொழில் முனைவோராக மாறுவது? எப்படி மற்றவர்களுக்கு வேலை தருவது?

இந்திய கொள்கை வகுப்போர், வேலை வாய்ப்பு பிரச்சினையை  ஏய்க்கவும், தவிர்க்கவும் முயலும்  இதே பாதையில் சென்றால், அரசியல்வாதிகளுக்குப்  பெருகி வரும் அழுத்தத்தை ஒதுக்கினால், இந்தியாவின் வேலைவாய்ப்பு விகிதம் தொடர்ந்து வீழும். இந்த வீழ்ச்சி அரசு வேலைகளை உருவாக்குவதற்கும், குறிப்பிட்டப் பிரிவினருக்கு இட ஒதுக்கீட்டு அளவை அதிகரிக்கவுமான அரசியல் அழுத்தத்தை மிகவும் தீவிரமாக அதிகரித்து விடும். ஆனால் இந்த அழுத்தங்கள் இன்னும் மிக மோசமாகி விடவில்லை என்பது கவனத்திற்குரியது. இந்தியா, வேலையின்மை பிரச்சனையால் மிகப்பெரும் சமூக அமைதியின்மையை இன்னும் சந்திக்கவில்லை.

வேலைகளைத் தர முடியவில்லை எனில் சட்டம் போடும் அரசியல்வாதிகள் நேரடியாக வருமானத்தை மாற்றும் திட்டங்கள் குறித்து வாக்குறுதி தருவர் அல்லது அதை உண்மையில் நடைமுறைப்படுத்தவும் செய்வர். தொடர்ந்து அரசு, வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை எனில் இந்த நிதிச்சுமை அதிகரிக்கும். இந்த நேரடி நிதி உதவி நீடித்தால், (வீட்டு வருமானத்தை விட இந்த நிதி மாற்றம் அதிகமானால்) அது இந்தியாவின் குறைந்த வேலை பங்கேற்பு விகிதத்திற்கு (LFPR) மேலும் எரியூட்டுவதாகவே இருக்கும். இதைத்தான் காங்கிரஸ் அரசு 2019ல் தேர்தல் அறிக்கையில் அறிவித்த இந்தியாவின் 20% ஏழை மக்களுக்கு மாதம் ஆறாயிரம் தரும், குறைந்தபட்ச வருமான உத்தரவாத திட்டம் (NYAY).

உலகின் குறைந்த வேலை பங்கேற்பு விகிதத்திற்கு (LFPR)அதாவது வேலைக்காக காத்திருக்கும்  வேலை செய்யத் தகுதியான மக்களின் தொகை 65%. இந்தியாவில் இது 2004 மற்றும் 2005ல் 43% ஆகவும், 2011-12ல் 38.6% ஆகவும், 2017-18 ல் 36.9% ஆகவும் இருந்தது. இது பெண்களின் தொகை அதிகரிப்பால் விளைந்தது. சட்டம் இயற்றுவோர் இந்தப் பிரச்சனையை சமாளிக்கும் விதமாக  ஒதுக்குவது மிகவும் ஆபத்தானது.

வேலை வாய்ப்புக்கான  தேவை அலை அதிகரித்து வருவதை அரசியல்வாதிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த அலை உண்மையானது. இது சமூக அமைதியின்மையாக மாறும் வரை காத்திருக்கக் கூடாது. எனவே அவர்கள் கொள்கை வகுப்பவர்களுக்கு அழுத்தத்தை அதிகப்படுத்தி இதற்கான தீர்வைக் காண வேண்டும்.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அரசியல் சக்திகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்து மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை (நூறு நாள் வேலைத் திட்டம்) கொண்டு வரச் செய்தனர். இது இந்த கொரோனா நெருக்கடியில் மக்கள் காவலனாக இருக்கிறது. புலம் பெயர்ந்தவர்கள் பிரச்சினையையும் இது கவனித்துக் கொண்டது. அதே போன்ற ஒரே அழுத்தம் மத்தி அரசிலிருந்து கிராம பஞ்சாயத்துகள் வரை இப்போது தரப்பட வேண்டும். அதன் மூலம் இந்தியா, பலன் தரும் வகையில் தனது வளர்ச்சிப் பாதைக்குள் திரும்பச் செய்ய வேண்டும். இதற்கு வேலைவாய்ப்பு விகிதம் எதிர்பார்த்த பலனை தருவதில் முக்கிய பங்காற்றும்.

இங்கே இன்னொன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எந்த ஒரு முதலீட்டுத் திட்ட முன்மொழிவும் அதனுடன் வேலை வாய்ப்பையும் உள்ளடக்கி இருக்க வேண்டும். வேலை வாய்ப்பை உருவாக்குவதை கட்டாயமாக்க வேண்டும். ஒரு திட்டம் அது உறுதி அளித்த வேலை வாய்ப்பை தரவில்லை எனில் அந்த திட்டம் செயல்படாத சொத்தாக வகைப்படுத்தப்பட வேண்டும்.

(www.thewire.in இணையதளத்தில் சந்தோஷ்மஹ்ரோத்ரா எழுதிய கட்டுரையின் மொழியாக்கம்)

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்